தமிழ்ச்சூழலில் மானிடவியல் எனும் சொல்லாடலை உருவாக்கியவர் ஆய்வாளர் பக்தவத்சல பாரதி. புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது மானிடவியல் ஆய்வில் தீவிரமாக இயங்கி வருபவர். தமிழ் இலக்கியங்களை இனவரைவியல் அடிப்படையில் ஆராய்ந்தவர். மானிடவியல் கோட்பாடுகள், தமிழர் மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், பாணர் இனவரைவியல் முதலான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தவிர மானிடவியல் சார்ந்த நூல்களைப் பதிப்பித்தல், மொழிபெயர்த்தல் பணிகளையும் பக்தவத்சல பாரதி தொடர்ச்சியாகச் செய்து வருகிறார். பின்காலனியச் சூழலில் மானிடவியலை ஆராயும் நோக்கில் எழுதப்பட்ட இவருடைய புதிய நூல் ‘மானிடவியல் பேசுவோம்.’

manidaviyal pesuvomமானிடவியல் துறை பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வளர்ச்சி பெற்றது. காலத்தாலும் இடத்தாலும் அதன் எல்லைகள் மிக விரிந்தவை. மனித இனம், அதன் பண்பாடு, சமூகங்களின் அமைப்புகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், உறவுமுறைகள், மொழிக்கூறுபாடுகள் ஆகியவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு முழு மனிதனை அடையாளம் காண மானிடவியல் முயல்கிறது.

அதிகாரம், பொருளாதாரம், அரசியல், சமயம், பண்பாடு என்பவை தொடர்பான பிரச்சினைகளையும், இவை எவ்வாறு காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் தொழிற்படுகின்றன என்பன குறித்தும் பின்காலனியத் திறனாய்வு செயல்படுகிறது. மாற்று வரலாற்றை உருவாக்குதல்; திருப்பி எழுதுதல்; தன்சுயத்தை நிலைநாட்டும் பொருட்டு தன் வரலாற்றை எழுதுதல்; அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக சுதேசியத்தை நிலைநாட்டுதல் ஆகியவற்றையும் பின்காலனியச் சிந்தனை செய்கிறது.

விடுதலைக்குப் பின்னர் பின்காலனியச் சூழலில் நாகரிக அடிப்படையிலான உலகமுறைமை எழுச்சி பெற்றது. அதனால் இன்றைய தமிழ்த் திறனாய்வு நெறியில் மேலைக்கோட்பாடுகளின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகிறது. சங்க காலம், வேதாந்தம், சமணம், பௌத்தம், சைவ சித்தாந்தம் முதலானவை சுதேசி கோட்பாட்டுக்கு அடிப்படையான பண்டைய கோட்பாட்டு மூலங்கள். தொடக்க கால கோட்பாடுகள் தமிழ்ச் செவ்வியம், கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் முதலானவை. ‘இவ்வுலக வாழ்வில் கருத்தே முதன்மையானது பொருட்கள் இரண்டாம் தரமானவை என்கிறது கருத்துமுதல்வாதம்.’ இதனை பழைய எழுத்துகளில் ‘இலட்சியவாதம்’ என்கின்றனர். கருத்துமுதல்வாதத்திற்கு எதிரானது பொருள்முதல்வாதம். இன்பம் துய்த்தல், பொருள் தேடுதல், வாழ்வியல் ஆசை, புலனின்பம் ஆகியன மட்டும் மனிதனின் இலட்சியம் என்று கருதி மறுஉலகம் எதுவும் இல்லை என மறுக்கும் மக்கள்தான் சாருவாகர்களாக கொள்கையைப் பின்பற்றுபவர்கள். இந்தப் பொருள் தரிசனம்தான் உலகாயதம். இதுவே பொருள்முதல்வாதம் எனப்பட்டது. இனக்குழு மக்களின் அடிப்படை வாழ்வியல் சிந்தனை பொருள்முதல்வாதமே. இத்தகைய இனக்குழு பண்புகளைச் சங்க இலக்கியம் பேசுகிறது. இது ஆரம்பகால பொருள்முதல்வாதம்.

தொல்காப்பியம் இது தமிழின் முதல் அமைப்பியம் நூலாகக் கருதப்படுகிறது. தொல்காப்பியம் பெரும்பான்மை விளக்கமுறை இலக்கணமாக இருந்தாலும் விதிமுறை இலக்கணத்தையும் கொண்டுள்ளது. தொல்காப்பியத்தின் அமைப்பியல் கோட்பாட்டு வளர்ச்சிக்குப் பிறகு தமிழில் நிகழும் முயற்சி பொருள்கோடல் பற்றியதாகும். தமிழில் அடுத்து நிகழ்ந்த கோட்பாட்டு முயற்சி வரலாற்றியம். உ.வே.சா.வும் சி.வை.தா.வும் பழைய சுவடிகளைப் பதிப்பித்த பின்னர் பாடபேத ஆராய்ச்சியை அறிஞர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்வுமுறை முழுக்க முழுக்க சுதேசியானது. பிற்கால பனுவல் திறனாய்வுக்கு இது அடித்தளமிட்டது. இவ்வாறு சுதேசிக் கோட்பாடு நம்மிடையே காணப்படுகிறது என்றும் மேலைக்கோட்பாடுகள் இன்றி சுதேசியக் கோட்பாடுகளைக் கொண்டு தமிழில் ஆய்வு மேற்கொள்ள முடியும் என்பதை ‘அறிவுக் காலனியத்தில் சுதேசியம் பேசுதல்’ எனும் பகுதியில் பக்தவத்சல பாரதி பேசுகிறார்.

‘சுதேசிக் கோட்பாடுகளை நோக்கி’ எனும் இவ்விரண்டாம் பகுதியில் நமக்கான அறிவு உருவாக்கத்தில் சுதேசிக் கோட்பாடுகளை நோக்கிப் பயணிக்க வேண்டும். சுதேசிக் கோட்பாடுகளைக்கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனும் முயற்சியில் பல அறிஞர்கள் முயன்று வருகின்றனர். அவர்களுள் பேராசிரியர் க.பஞ்சாங்கம் முதன்மையானவர். இவரது பார்வையில் சுதேசிக் கோட்பாடு குறித்து பக்தவத்சல பாரதி விளக்குகிறார். கோட்பாடு என்பது தமிழில் நோக்குநிலை என்றனர். மேலைக் கோட்பாடுகள் ‘ஆயத்த கோட்பாடுகள்’. சில அறிஞர்கள் நீண்ட அனுபவத்தின் ஊடாக சுதேசிக் கோட்பாடு முயற்சிகளில் ஈடுபட்டனர். இத்தகைய முயற்சிகளை இங்கு நாம் ‘கோட்பாடுகளை ஆயப்படுத்துதல்’ என்கிறோம். இதில் ஆழங்கால்பட்டு முனைப்புடன் ஆய்வுகளைச் செய்து வந்தவர் க.பஞ்சாங்கம். கோட்பாடு என்பது மேலை அறிஞர்கள் மட்டுமே முன்வைக்க முடியும் என்பதில்லை. நம்மிடத்திலும் அறிஞர்கள் சிந்திக்கின்றனர் என்கிறார்.

வள்ளுவர் மற்றும் கார்ல் மார்க்ஸ் இவ்விருவரையும் ஒப்பியல் நோக்கோடு ‘உலகளாவிய முதல் தேசவழமை சாசனம்’ எனும் பகுதியில் ஆராய்கிறார். மனித குலத்தைப் பொதுவுடைமைச் சமூகமாக மாற்ற வேண்டும் என கனவு கண்டவர் கார்ல் மார்க்ஸ் என்றும் பொதுவுடைமைச் சித்தாந்தத்தை முதன்முதலில் முன்னெடுத்தவர் வள்ளுவர் என்றும் பக்தவத்சல பாரதி கூறுகிறார். மார்க்ஸ் இயங்கியல் பொருள்முதல்வாதத்தின்படி பொதுவுடைமையைக் கண்டார் என்றால், வள்ளுவர் தத்துவவியல் வாதத்தின்படி கண்டார் என்கிறார். உலகம் தழுவிய மானுடமே வள்ளுவரின் இலட்சியம். இதன் பொருட்டு அவர் உருவாக்கிய தன்னிகரில்லா கோட்பாடு ‘உலகளாவியம்’ அல்லது ‘பொதுமையாக்கம்.’ திருக்குறளில் குலம், குடி, பழங்குடி முதலான மானிடவியல் கூறுகளைக் கையாண்டுள்ளார் வள்ளுவர். உலகப் பொதுமையாக்கம் கூறிய வள்ளுவனின் குறளை பின்காலனிய நோக்கில் மானிடவியலோடு ஆராய்வதாக இப்பகுதி அமைந்துள்ளது.

கார்ல் மார்க்ஸ் தம்முடைய தொடக்க காலத்தில் மேற்கத்தியர் அல்லாத சமூகங்களின் பொருளீட்டும் முறையை ‘ஆசிய உற்பத்தி முறை’ எனக் குறிப்பிட்டார். மனித குலத்தில் ஆதியில் தோன்றிய புராதன சமூகத்தின் சிதைவால் ஆசிய உற்பத்திமுறை தோன்றியது. மனிதகுல வரலாற்றில் மார்க்ஸ் முன்னெடுத்த ஐந்து வகையான உற்பத்தி முறைகள் 1.புராதன முறை, 2.அடிமை முறை, 3.நிலமானிய முறை, 4.முதலாளித்துவ முறை, 5.பொதுவுடமை முறை. நிலமானிய முறையில் வேந்தர்கள் பிராமணர்களுக்குக் கொடுத்த நில தானங்கள் பிரமதாயம், பிரமதேயம், மங்கலம், சதுர்வேதிமங்கலம், தேவதானம், மடப்புரம், பள்ளிச்சந்தம் என்றெல்லாம் வழங்கப்பட்டதாக அறிய முடிகிறது. முடியாட்சிக் காலத்துக் கிராமங்களைக் காணும்போது பிரமதேயங்களைக் காட்டிலும் பழமையானவை வெள்ளான் ஊர்கள். இவ்வகை ஊர்களின் வளர்ச்சி முறையை ஆராய்வதால் தென்னிந்திய கிராமச் சமூகத்தின் வளர்ச்சியை அறிய முடியும். திராவிட உற்பத்தி முறையில் பொருளியல் சித்தாந்தம், உள்ளூர் சித்தாந்தம் பற்றி விளக்குகிறார். பொருளியல் சித்தாந்தம் தேசத்தையும், உள்ளூர் சித்தாந்தம் வாழ்வாதாரத்தையும் குறிப்பிடுகிறது. குடும்பத் திருமணமுறை, திராவிட உறவு முறை சார்ந்த உற்பத்தி முறை பொருளியல் இயங்கியலாக நிகழ்ந்து வந்துள்ளது. மார்க்ஸ் ஆசிய உற்பத்தி முறையையும், பிற அறிஞர்கள் திராவிட உற்பத்தி முறையையும் ஆராய்ந்தனர் என்பதை ‘ஆசிய உற்பத்தி முறையில் திராவிடமுறை’ எனும் நான்காம் இயலில் விரிவாக விளக்குகிறார் பக்தவத்சல பாரதி.

‘புழங்குபொருள் பண்பாடு’ எனும் கட்டுரையில், புழங்குபொருட்கள் நம் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்கிறது என்கிறார். நாம் அன்றாட வாழ்வில் இயற்கையிலிருந்து பெறப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு பயன்படுத்துகிற பொருட்களே புழங்குபொருட்கள். இயற்கையில் இருந்து கிடைக்கும் மூலப் பொருட்களைப் பயன்பாட்டுப் படைப்புகளாகவும், கலைப்படைப்புகளாகவும் உருவாக்கி அனுபவிக்கும் மானுட செயல்பாடுகள்தான் புழங்குபொருள் பண்பாடாகும். அவற்றுள் கைவினைப் பொருட்கள், கட்டடக்கலை ஆகியனவும் அடங்கும். மண், கல், இரும்பு, பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட புழங்குபொருட்கள் பண்பாட்டைத் தாங்கி நிற்பவை என்கிறார். புழங்குபொருட்கள் நம் மரபறிவைக் காட்டுபவை. இந்த மரபறிவு சுதேசி அறிவாகும். முக்காலி அடுப்பு, அரிக்கஞ்சட்டி, அப்பச்சட்டி, பிட்டுப் பானை, இடியாப்ப உரல், அறுவாய் பலகை, ஈயப் பாத்திரங்கள், உழி, துலா, மிதி கிணறு போன்ற பொருட்கள் மறைந்து விட்டன. இவை பண்பாட்டு அடையாளம் மற்றும் சமூக குழுக்களின் அடையாளம் முதலானவற்றை வெளிப்படுத்துகின்றன. இப்புழங்குபொருட்கள் பண்பாடுகளை மீட்டுருவாக்கம் செய்பவையாக அமைகின்றன.

‘மானிடவியல் பேசுவோம்’ என்ற இந்நூல் பின்காலனியச் சூழலை மானிடவியலுடன் பொருத்தி ஆராய்கிறது. மானிடவியலையும் பின்காலனியத்தின் தன்மைகளையும் இணைத்துப் புரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு உதாரணங்களுடன் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. பக்தவத்சல பாரதியின் மற்றொரு மிக முக்கியமான நூலாக இந்தநூல் இருக்கும்.

மானிடவியல் பேசுவோம், பக்தவத்சல பாரதி, அடையாளம் பதிப்பகம், விலை ரூ.210

- து. லோகபிரியா, முனைவர் பட்ட ஆய்வு மாணவி, மாநிலக் கல்லூரி, சென்னை.