ஒரு நாள் இரவு மணி பத்து. அலைபேசியில் அழைத்தார் ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம். அந்த நேரம் அவருக்கு உரையாடலுக்கானது. எனவே உரையாடலுக்கு அழைக்கிறார் என எண்ணி அலைபேசியை எடுத்தேன். நாளை காலை பத்து மணிக்கு உங்களைச் சந்திக்க உங்கள் இல்லம் வருகிறேன் என்றார். மறுநாள் காலை சரியாக பத்து மணிக்கு ஈரோட்டிலிருந்து புறப்பட்டு காந்திகிராமம் வந்து என்னைச் சந்தித்தார். வந்தவுடன் தான் ஒரு நூலை மொழி பெயர்த்திருக்கிறேன், அதை நீங்கள் படித்து சரியாக இருக்கிறதா என கருத்துக்கூற வேண்டும். அத்துடன் ஒரு அறிமுக உரையும் எழுதித்தர வேண்டும் என்று வேண்டினார். மிகவும் ஆர்வத்துடன் அதைப்பிரித்துப் பார்த்தேன். 1776இல் அமெரிக்காவில் வெளியான தாமஸ் பெயின் எழுதிய 'பொது அறிவு' என்ற அமெரிக்க விடுதலைக்கான எழுச்சி நூல். இந்த பழைய நூலை நீங்கள் எதற்கு தற்போது மொழி பெயர்த்திருக்கின்றீர்கள் என்றேன். பதில் கூறவில்லை, சிரித்தார். உடனே இந்த நூலை அச்சிட வேண்டும், எனவே எவ்வளவு சீக்கிரம் படித்துவிட்டு அறிமுக உரை எழுதித் தரமுடியுமோ செய்து தாருங்கள் என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
அவர் சென்றபின் அந்த நூலின் மொழிபெயர்ப்பைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது அந்தப் புத்தகத்தை நான் முதுகலை படித்தபோது தேர்வுக்காகப் படித்த ஞாபகம் வந்தது. இவற்றைக் கடந்து அதன் பொருள் புரிந்து அப்போது படிக்கவில்லை. மதிப்பெண் பெறவேண்டும் என்று படித்தது. தற்போது இந்தப் புத்தகம் ஏன் என்ற பின்னணியில் இந்த நூலைப் படிக்க ஆரம்பித்தேன்.
அமெரிக்க சுதந்திரப்போரை துவக்க, அதை நியாயப்படுத்த, அமெரிக்க சுதந்திரப் போருக்கு எதிரான மனநிலையில் இருந்த சமூகக் குழுக்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைக்க சரியான விளக்கங்களைக் கொடுக்க ஒரு சிந்தனையாளர், எழுத்தாளர் தேவை என்ற அடிப்படையில் தலைசிறந்த சிந்தனையாளராகிய தாமஸ் பெயினை அமெரிக்காவுக்கு இங்கிலாந்திலிருந்து அழைத்தார் பெஞ்சமின் பிராங்க்ளின்.
இவரின் அழைப்பை ஏற்று தாமஸ் பெயின் அமெரிக்காவுக்கு வந்து இறங்கினார். வந்தவுடன் அமெரிக்கா ஏன் சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக ஒரு சிறு நூலைத் தயார் செய்தார். குறிப்பாக அமெரிக்காவில் குவாக்கர்ஸ் என்ற சமூகக் குழுதான் இங்கிலாந்து அரசின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்று அமெரிக்க சுதந்திரப் போரில் ஈடுபட மறுத்தனர். அவர்களை இந்த சுதந்திரப் போரில் கலந்துகொள்ள வைப்பதுதான் இவருடைய அடிப்படை நோக்கமாக இருந்தது. தாமஸ் பெயின் எதையும் பெரிதாக எழுதமாட்டார். ஆனால் அவர் சிறிய நூலாக எழுதினாலும் (இவருடைய எழுத்துக்களை அனைத்தையுமே கட்டுரைகள் என்றுதான் கூறுவார்கள்) எளிமையான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். ஈட்டிபோல் மக்கள் மனதில் பதியும் ஆற்றல் கொண்டவை இவருடைய எழுத்துக்கள்.
தன் எழுத்து வலிமையால் அமெரிக்க மக்களைக் கொந்தளிக்கச் செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக அமெரிக்க மக்கள் ஒன்றிணைந்தனர், போராடினர், அமெரிக்காவுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது. இந்தப் புத்தகம் அமெரிக்க நாட்டில் உள்ள 13 காலனிகளின் மக்களின் சுதந்திர எழுச்சியைத் தூண்டுவதற்காக எழுதப்பட்டது. தற்போது இதை ஏன் மொழிபெயர்க்க வேண்டும்? இந்தக் கேள்வியுடன் அந்த மொழிபெயர்த்துத் தந்த அச்சுப்பிரதியை உள்வாங்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் புரிந்தது 249 ஆண்டுகளுக்கு முன் மன்னராட்சி முறையில் காலனியாதிக்க அரசாங்கத்தில் இருக்கின்ற மக்கள் விரோதப் போக்குகளையும், மக்களைச் சுரண்டி சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் பாங்கை அதில் விவரித்து அதை மாற்ற வேண்டியதன் அவசியத்தை அந்த சிறு நூலில் வலியுறுத்துகிறார். அந்த ஆட்சி முறையில் மன்னரில் தொடங்கி, நிர்வாகத்தில் இருக்கக்கூடிய அனைவரும் எப்படி மக்களின் உழைப்பைச் சுரண்டுவதும், மக்களை வாட்டி வதைத்து, மக்களின் உழைப்பில் சுகபோகம் அனுபவிக்கின்றனர் என்பதை விவரிக்கும்போது, நம் மக்களாட்சி மக்களுக்கானது என்று கூறிக்கொண்டு நம் அரசியல்வாதிகள் எப்படி சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள் என்பதை சுட்டுவதுபோல் இருக்கும். ஆட்சியில் இருக்கும் கட்சிகள், அரசுத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் எப்படி மக்கள் பெயரில் ஒரு மோசடியைச் செய்கின்றனர் என்பதை விளக்குவது போன்றே இருக்கும்.
சுதந்திரத்தின் வலிமை என்பதை மிக எளிமையாக விளக்கும் நூல். அரசு நடத்தும் அட்டூழியங்களை தோலுரித்துக் காட்டும் நூல்தான் இது. மன்னராட்சியில் மன்னன் அதிகாரத்தை தன் கையில் வைத்துக் கொண்டு மக்களின் வாழ்நிலை பற்றி எந்தவிதக் கவலையும் அற்று தன் சுகபோக வாழ்க்கைக்கு செயல்படுவதை விளக்கும்போது, சம காலத்தில் நம் ஆட்சியாளர்கள் வாழும் வாழ்வை படம்பிடித்துக் காட்டுவதைப்போல் இருக்கும்.
அரசு நல்லதே செய்யும் என்று எண்ணும் மக்களுக்கு அவர்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை மக்களுக்குப் புரிய வைக்கின்றார் தாமஸ் பெயின்.
நாம் மக்களாட்சியில் வாழ்வதாகவும், உலகிலேயே பெரிய மக்களாட்சியில் வாழ்வதாகவும் பெருமை பேசி மக்களை ஏமாற்றி வருகிறோம் என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்தால் நாம் புரிந்து கொள்ளலாம். நாம் இன்று பயணிப்பது மக்களாட்சிக்கு முற்றிலும் மாறுபட்ட திசையில் என்பது பலருக்குப் புரிவதில்லை. சுதந்திரம் என்பது, விடுதலை என்பது, சமத்துவம் என்பது, சுதந்திர நாட்டில் அரசு என்பது யாருக்கானது என்ற புரிதலை சாதாரண மக்கள் பெற இந்தப் புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.
அமெரிக்க காலனிகளில் வாழ்ந்த மக்கள் பலர், இங்கிலாந்தில் அரசர் இருக்கிறார், பாராளுமன்றம் இருக்கிறது, இவைகள் அனைத்தும் நம்மைப் பாதுகாக்கும். அது இல்லாவிட்டால் நம்மை யார் பாதுகாப்பது என்று சிந்திக்கும் ஒரு கூட்டம், மற்றொன்று, அரசர் இறைவனால் அனுப்பப்பட்டவர், அவர் தலைமை தாங்கி மக்களைக் காக்கும் அரசை எதிர்ப்பது பாவம் என்று எண்ணக்கூடிய கூட்டம். இந்த இரண்டும் உங்களைக் காப்பதாக எண்ணுகின்றீர்கள், உண்மை அதுவல்ல, இவர்களெல்லாம் மக்களைச் சுரண்டி அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளார். அவர் கேட்கிறார், இங்கிலாந்து என்பது தன் காலனிகளிலிருந்து சுரண்டி இங்கிலாந்து நாட்டை வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. காலனிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பதாக அல்லது காலனிகளில் வாழும் மக்களும் நம் மக்கள் என்றால் இப்படிச் சுரண்டி வளம் கொழித்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவார்களா என்று.
இந்த விளக்கத்தை நம் நாட்டில் நம் பாராளுமன்றம், சட்டமன்றங்கள் இருக்கின்றன, 77 ஆண்டு காலமாக நமக்காக செயல்படுவதாகத்தான் கூறுகிறார்கள். அப்படித்தான் சுதந்திரப் போராட்டத்தின்போது கூறினார்கள். சுதந்திரம் அனைவருக்குமானது, சமத்துவத்திற்கானது, அனைவர் மேம்பாட்டுக்கானது என்று. சுதந்திரம் அடைந்து நமக்கு ஒரு அரசமைப்புச் சாசனத்தை உருவாக்கி, அதுதான் வழிகாட்டி நமக்கு என்று கூறி மக்களை நம்ப வைத்தனர். அப்படித்தான் செயல்பட ஆரம்பித்தது அரசாங்கம். மக்களும் அதை நம்பினார்கள். 77 ஆண்டுகால பாராளுமன்றத்தால் விளைந்த விளைவுகளைக் கணக்கிட்டுப் பார்த்தால், ஒன்று தெளிவாகிவிடும். யார் பயன் அடைந்தவர்கள், யார் ஏமாந்தவர்கள் அல்லது புறக்கணிக்கப்பட்டவர்கள் என்று. இன்று அரசு 82 கோடி மக்களுக்கு விலை இல்லா உணவுப் பொருள் பொது வினியோகத் திட்டத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது புலப்படுத்தும் செய்தி என்ன? 82 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை அவர்களால் உறுதி செய்துகொள்ள முடியவில்லை. அவர்களின் வாழ்வு என்பது அந்த நிலையில் இருக்கிறது என்பதைத்தான் படம்பிடித்துக் காண்பித்துள்ளது.
அதே வேளையில் மீதமுள்ள 60 கோடி மக்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆக பாராளுமன்றமும் சட்டமன்றங்களும் நமக்காக இயங்குவதாக ஏழைகள் நம்பினர். நம் பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் சராசரி மனிதர்கள் அல்ல. அனைவரும் கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள். ஏதோ தமிழகத்தில் இரண்டு இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்கள் குடிசைகளில் வாழ்கின்றனர். இது விதிவிலக்கு. இதனால் சட்ட மன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் போக முடியாததற்குக் காரணம், அதற்கு முக்கியத் தகுதி பணம் வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள், எவராது அரசு தரும் சலுகைகள் வேண்டாம் என்று கூறினார்களா? ஒரு சில சட்டமன்றங்களில் நான்கு முறை இருந்த உறுப்பினர்கள் 4 ஓய்வூதியம் பெறுகின்ற வரலாறு இந்தியாவில் இருக்கிறதே. சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் வாங்கும் பென்சனுக்கு வருமானவரி கிடையாது. ஆனால் அரசு ஊழியர்கள் வாங்கும் ஓய்வூதியத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும். சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை, சலுகைகளை அவர்களே நிர்ணயம் செய்து கொள்வார்கள். எந்தக் கிரிமினல் குற்றம் செய்தவரும் பாராளுமன்றம் வரை சென்று விடலாம். ஆனால் ஒரு அலுவலகத்தில் எழுத்தர் பணிக்குக்கூட செல்ல இயலாது. அந்த அளவுக்கு நம் அரசியல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அல்லது வர்க்கத்தை பாதுகாக்கத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இன்றைய சூழலில் நாம் புரிந்துகொள்ள முடியும்.
அரசாங்கத்தை மக்கள் எதற்காக வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றால் நம்மை வெளிநாட்டினர் படையெடுத்து நம்மை அடிமைப்படுத்தி விடாமல் பாதுகாப்பதற்கே. ஆனால் அது செய்யும் கேடுகளுக்கு அளவே இல்லை. அது ஒரு கேடு என்றே கூற வேண்டும் என்கிறார் தாமஸ் பெயின்.
ஒரு கிராமப் பஞ்சாயத்து ஒரு ஆலமரத்தடியில் உள்ளூரில் உள்ள பண்பட்ட மனிதர்களின் ஒருங்கிணைப்பில் அந்த ஊர் மக்களின் பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்கும் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்து மக்களை உயர்த்திட முடியும். அதுதான் மேலானது. அதை எந்த மன்னரும் மக்களுக்குச் செய்ய முடியாது, அதை எந்தப் பாராளுமன்றமும் சட்டமன்றமும் செய்ய முடியாது.
இதற்காக அரசாங்கத்தை நிராகரிக்க முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும். மக்களை விடுதலை அடையச் செய்ய வேண்டும். என்ன விடுதலை, சிந்தனை விடுதலை வேண்டும். அப்பொழுதுதான் அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு மக்கள் வருவார்கள். அப்படி வருகின்றபோது மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் தண்டல்காரர்களாக மாறிவிடாமல் தடுக்க முடியும். இல்லையென்றால் அவர்கள் தண்டல்காரராக மாறிவிடுவார்கள். எந்த அரசாங்கமும் எளிமையாக மக்களுக்குப் புரியும் அளவில் கட்டமைக்கப்படல் வேண்டும். மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்படும் வகையில் அரசாங்கம் செயல்பட வேண்டும். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் பண்புள்ளவர்களாக, பண்பட்டவர்களாக, நியாயமானவர்களாக மக்கள்மேல் கரிசனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு அரசமைப்புச் சாசனம் என்பது மக்களுக்கு எளிதாகப் புரிய வேண்டும். இல்லையேல் அது மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிடும். இங்கிலாந்து அரசமைப்புச் சாசனம் எப்படி சிக்கலானது என்பதையும் விளக்குகிறார். அதை சரி செய்வது மிகவும் சிக்கலானது என்கிறார். இந்தப் பின்னணியில் நம் அரசமைப்புச் சாசனத்தை சீர்தூக்கிப் பார்த்தால், அது எவ்வளவு சிக்கலானது என்பதை நாம் உணரமுடியும். அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யத்தான் குழு ஒன்று போடப்பட்டது. அதன் பரிசீலனை அதன் பரிந்துரை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வைத்தே நம் அரசியல் எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணர முடியும்.
அரசாங்கம் மக்கள் அறியாமையில் இருந்தால், கேடுகளைத்தான் விளைவிக்கும். அவைகளை நாட்டு நலன் கருதி, தேசத்தின் மீது நம்பிக்கை கொண்டு மக்களை அறிவுடையவர்களாக தயார் செய்துவிட்டால் மக்கள் அரசுக்கு புத்தி புகட்டுவார்கள். அரசாங்கத்தை தங்களுக்கு கடமைப்பட்டவர்களாக மாற்றிவிடுவார்கள். அதற்கு அறிவார்ந்த சமூகமாக மக்களைத் தயார் செய்ய வேண்டும். மக்களின் தொடர் கண்காணிப்புத்தான் அரசை மக்களுக்குப் பணிந்து செயல்பட வைக்கும். மக்கள் அவ்வாறு புரிதல் அற்று இருக்கும்போது எந்த அரசாங்கத்திலும் உள்ளவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி சுகபோக வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுவார்கள். அதைத்தான் நாம் நம் மக்களாட்சியில் பார்க்கிறோம்.
ஒரு அரசாங்கம் ஒரு கடைநிலை ஊழியருக்கு சம்பளம் எவ்வளவு என்று நிர்ணயம் செய்யும், ஒரு ஆசிரியருக்கு எவ்வளவு என்று நிர்ணயம் செய்யும். ஆனால் ஒரு கம்பெனியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆண்டுக்கு 45 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். அந்த சம்பளத்தை அரசு நிர்ணயிக்காதா? அவர் எங்கேயிருந்து யார் உத்தரவில் சம்பளம் பெறுகிறார். அவரே அவர் கம்பெனியில் சம்பளம் நிர்ணயித்து எடுத்துக் கொள்கிறார். அவர் மூளையின் சக்தி கொண்டு லாபத்தை அள்ளிக் குவிக்கிறார். அதனால் எடுத்துக் கொள்கிறார். அதே நேரத்தில் அந்த லாபத்தில் அந்தக் கம்பெனியில் உழைத்த ஊழியர்களின் உழைப்புக்கு என்ன விலை, அதை அரசு கேட்காதா? இவைகளுக்கெல்லாம் அரசாங்கத்தில் பதில் இல்லை, இதிலிருந்து அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பொதுவாக அரசாங்கம் அளவற்ற அதிகாரங்களை வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி இருந்தால் அது மக்களுக்குப் பக்கத்தில் இருக்கும் உள்ளாட்சிக்குத்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மக்கள் அதிகாரம் பெறுவார்கள். மக்களுக்கு வெகுதூரத்தில் உள்ள அரசுக்கு அதிக அதிகாரங்கள் இருந்தால் அது மக்களுக்கானதாக, மக்கள்நேய அரசாக இருக்காது. மாறாக மக்களைச் சுரண்டும் அரசாகவே திகழும் என்று விளக்குகிறார். அது இன்றைய மக்களாட்சிக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
இந்தச் சிறிய நூல் விடுதலைக்கான நூல், சுயமரியாதைக்கான நூல், சமத்துவத்துக்கான நூல், மக்கள் செயல்பாட்டுக்கான நூல். இந்த நூல் எக்காலத்திற்கும் பொருந்தும் நூல். இன்றைய குழப்ப அரசியலில், எதிர்ப்பு அரசியலில், சந்தை அரசியலில், தேர்தல் அரசியலில் சிக்குண்டு அறத்தை இழந்து சிதிலமடையும் அரசியலை, மக்கள் அரசியலாக மாற்றிடத் தேவையான புரிதல் ஏற்படுத்தும் நூல். அனைவரும் படிக்க வேண்டிய நூல். இந்தச் சிறிய நூல் இன்று கடைகளில் இல்லை. அதனைக் கொண்டுவர ஒரு சிறு முயற்சி நடைபெறுகிறது. விரைவில் பொதுமக்கள் கைகளுக்கு வந்து சேரும்.
- க.பழனித்துரை, பேராசிரியர், காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)