ஆகஸ்ட் 15... இந்திய சுதந்திர தினம். இந்தத் தேதியை முடிவு செய்தவர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்கள்.
ஜனவரி 26... குடியரசு தினம். இந்தத் தேதியைத் தீர்மானித்தவர்கள் சுதந்திர இந்தியாவின் ஆட்சி பீடத்தை அலங்கரித்த நம் தேசத் தலைவர்கள். ‘இந்திய அரசமைப்புச் சட்டம்’ பிரகடனப்படுத்தப்பட்ட தேதி… நடைமுறைக்கு வந்த நாள் ஜனவரி 26, 1950.
இந்தத் தேதியில் சிறப்புமிக்க இச்சட்டத்தை அமல்படுத்தவும்… அதனை குடியரசு நாளாக அறிவிக்கவும்… ஒரு வலிமையான வரலாற்றுக் காரணம் இருந்தது.
1929 டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் மாநாடு லாகூரில் கூடியது. அம்மாநாட்டில் ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநாட்டின் நிறைவாக அன்றைய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக விளங்கிய ஜவகர்லால் நேரு நள்ளிரவில் மூவர்ணக் கதர்க் கொடியை ஏற்றி வைத்து ‘இது சுதந்திரக் கொடி’ என்று பிரகடனப்படுத்தினார். இனி ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதியன்று ‘சுயராஜ்ய தினம்’ கொண்டாடப்பட வேண்டுமென்று காங்கிரஸ் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
முடிவெடுத்தவாறு 1930ஆம் ஆண்டு ஜனவரி 26இல் ‘சுயராஜ்ய தினம்’ முதன் முதலாக நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
அதன் பிறகு சுதந்திரம் கிடைக்கின்ற வரை 17 ஆண்டுகள் அதே ஜனவரி 26இல் ஆண்டுதோறும் ‘சுயராஜ்ய தினம்’ கொண்டாடப்பட்டது.
அதன் விளைவாக விடுதலைப் போராட்ட வீரர்கள் பிரிட்டிஷ் காவலர்களால், ராணுவத்தினரால் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாகி பல்லாயிரக் கணக்கில் சிறைக்குள் அடைக்கப்பட்டனர்; வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.
‘சுயராஜ்ய தினம்’ கொண்டாடிய காரணத்திற்காக தியாகம் செய்த விடுதலை வீரர்களை நினைவூட்டவும், அவர்களுக்கு மரியாதை செய்கிற விதத்திலும் சுதந்திர இந்தியாவின் தலைவர்கள் ‘ஜனவரி 26’ஆம் தேதியை குடியரசு நாளாக அறிவித்தனர்.
இதற்கு மூலமாக விளங்குகிற ‘இந்திய அரசமைப்புச் சட்டம்’ உருவான வரலாற்றையும் அச்சட்டத்தின் முக்கிய அம்சங்களையும் ஓரளவேனும் கல்வியறிவுள்ள அனைத்துக் குடிமக்களும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு விடுதலைபெற்ற உலகின் முக்கிய நாடுகள் சிலவற்றின் அரசியல் அமைப்புச் சட்டங்கள், ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரகடனம் உள்ளிட்ட பல உலகளாவிய சட்ட ஆவணங்கள் நம் நாட்டுச் சட்ட உருவாக்கத்திற்கு முன்பு அலசி ஆராயப்பட்டுள்ளன.
அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட 296 தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிர்ணயசபை ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் ராஜேந்திரபிரசாத் தேர்வு செய்யப்பட்டார். இவரே முதல் குடியரசுத் தலைவரானார். அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு.
சட்டவரைவுக்குழுத் தலைவராக அண்ணல் டாக்டர் அம்பேத்கர் விளங்கினார். வரைவுச் சட்டத்தின்மீது 7635 திருத்தங்கள் அரசியல் நிர்ணய சபையில் கொண்டு வரப்பட்டன. 2473 திருத்தங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 20க்கும் மேற்பட்ட நாள்கள் தொடர்ந்து தீவிரமாக விளக்கம் – விவாதம் – கருத்துப் பரிமாற்றம் நடைபெற்ற பின்னர் சட்டம் இறுதி வடிவம் பெற்றது. அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு முத்திரை பதிக்கத்தக்கதாகும்.
1976ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 42ஆவது சட்டத் திருத்தத்தின் வாயிலாக அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இந்திய நாடு ‘மதச்சார்பற்ற நாடு’ என்றும் ‘சோசலிச நாடு’ என்றும் வரையறுக்கும் விதத்தில் இந்த இரண்டு சொற்றொடர்களும் சேர்க்கப்பட்டன. இதுவரை 104 திருத்தங்கள் அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்றைய சமூக மற்றும் அரசியல் சூழலில் அரசமைப்புச் சட்டத்தின் வரலாறும் அச்சட்டத்தின் அடிப்படைக் கூறுகளும் அச்சட்டம் வரையறுத்துள்ள குடிமக்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய அடிப்படை அறிவும் அவை பற்றிய விழிப்புணர்வும் அனைத்துக் குடிமக்களுக்கும் அவசியப்படுகிறது.
அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு அச்சட்டம் பற்றிய அடிப்படைப் புரிதலை மக்கள்மயமாக்க வேண்டும். தமிழில் இச்சட்டம் பற்றியான பல நூல்கள் பல கோணங்களில் வெளிவர வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.
‘அரசமைப்புச் சட்டம் மேன்மையானதாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் சட்டமும் மோசமானதாகி விடும். எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் எவ்வாறு இருக்கும் என்று இப்போது எதுவும் சொல்ல முடியாது. சாதி மத பேதங்களே நம்முடைய எதிரிகள். நாட்டிற்கும் மேலானதாக மதத்தை அரசியல் கட்சிகள் தூக்கிப் பிடிக்குமேயானால் நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக இன்னலுக்கு ஆளாகும்’ என்ற அண்ணல் அம்பேத்கரின் அக்கால மணிவாசகம் இன்று ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும்.
- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு