அன்புக்குரிய தோழமை இரா.காமராசிடமிருந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் புதுவரவு புகையிலை வரலாறும் வழக்காறும் என்னும் நூல்
என்னுடைய சிறுவயது பருவத்தில் பலசரக்குக் கடைகளில் ஒரு சரக்காக வெத்தலை பாக்கு விற்பனையும் இருக்கும். கடையின் முன்னர் இருக்கும் தூணில் சுண்ணாம்பு டப்பா கட்டிப் போடப்பட்டிருக்கும். யாழ்ப்பாண புகையிலையை வெட்டிக்கொடுக்க முரட்டு கத்தரிக்கோல் ஒன்று இருக்கும்.
புகையிலையின் நிறத்தைவிடவும் அடர்த்தி நிறைந்ததாக அதன் நிறம் இருக்கும். கிராமங்களில் தெருவில், ஊரடையில் அருகிலிருக்கும் வீடுகளில் வெத்தலைப்பாக்கு இரவல் கேட்கும் வழக்கம் பரவலாக இருந்தது.
பெரும்பாலும் சுண்ணாம்பு மட்டும் இரவில் இரவல் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவார்கள். அப்படியே கொடுத்தாலும் கத்தி போன்ற உலோ கங்களில் எடுத்துக் கொடுப்பார்கள். இரவுக்கும் சுண்ணாம்புக்கும் மனிதர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் பெண் தெய்வங்களுக்கும் இடையிலான உறவு குறித்த அழுத்தமான நம்பிக்கை பரவலாக இருந்தது.
எங்கள் பெற்றோர்க்கு வெற்றிலை வழக்கம் இருந்ததால் சிறுவயது பருவத்தில் என்னுடைய கரங்களில் அதிகம் புழங்கிய ஒன்றாக புகையிலை இருந்தது. அதிலும் எங்களுடைய தந்தையார் வெற்றிலையுடன் யாழ்ப்பாண புகையிலை சேர்த்துக்கொள்வார். தாயார் அங்கு விலாஸ் புகையிலை சேர்த்துக் கொள்வார். எனவே இரண்டும் நன்கு அறிமுகம். இரண்டின் வாசனையும் அதுபோல.
இந்தக் குறிப்பினை எழுதும்போது யாழ்ப்பாண புகையிலை வாசனையும் அங்குவிலாஸ் புகையிலையின் வாசனையும் நாசிக்குள் வந்து செல்கின்றன. யாழ்ப்பாண புகையிலையின் வாசமே ஒருவிதமான போதை ஏற்படுத்தும். இதற்கு நேர் எதிர்நிலையில் அங்கு விலாஸ் புகையிலை வாசனை. ஒருவிதமான ஒவ்வாமையை சிலருக்கு ஏற்படுத் தும். புகையிலையின் சேர்மானப் பொருட்கள் தரும் வாசனையும் புகையிலையைப் பொதிந்திருக்கும் வாழைத்தடையின் வாசனையும் கலந்துகட்டிய மணம் அங்குவிலாஸின் மணம். தட்டை புகையிலை என்றுதான் குறிப்பிடுவார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திக்கணங்கோடு என்னும் ஊர் இருக்கிறது. அரிஷ்டம் தயாரிக்கும் இடம். அரிஷ்டம் என்பது சாராயம் இல்லை. கள்ளும் இல்லை, டாஸ்மாக் அயிட்டமும் இல்லை. கிட்டத்தட்ட அவற்றோடு ஒப்பிட்டு பேசப்பட்டாலும் அரிஷ்டம் முற்றிலும் வேறானது. போதை சார்ந்தது என்றாலும் மருத்துவ குணம் கொண்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் ஒன்றாக அரிஷ்டம் இருந்தது. எளிய உழைக்கும் மக்களின் போதையின் தேவையை அரிஷ்டம் ஒரளவுக்கு நிறைவு செய்தது. அங்குவிலாஸ் புகையிலையின் மணம் கிட்டத்தட்ட அரிஷ்டத்தின் மணத்தை ஒத்திருக்கும்.
கடைகளில் போய் யாழ்ப்பாண புகையிலை வாங்கும் போது கடைக்காரர் முரட்டு கத்தரி கொண்டு நறுக்கித் தரும்போது தலைமுழுவதும் சடை பிடித்திருக்கும் பெண்ணின் சடையில் ஒரு துண்டை வெட்டித் தருவதுபோல் இருக்கும். புகையிலையின் இடையில் இருக்கும் நட்டு இன்னும் வித்தியாச மானது. காய்ந்த சுக்குபோல் இருக்கும் நட்டு வயதான பாட்டிகளுக்கு விருப்பமானதாக இருந்தது என்று நினைவு.
இரா.காமராசு அவர்களின் புகையிலை வரலாறும் வழக்காறும் என்னும் நூலை வாசிக்கும்போது இந்த நினைவுகள் எல்லாம் மீண்டும் மேலெழும்பி வந்தன. பண்பாடு தொடங்கி நன்றும் தீதும் வரை ஏழு இயல் களில் காமராசு அவர்கள் விரிவாக புகையிலை குறித்த காட்சி சித்திரத்தை வாசகன் மனக்கண்ணில் வரைந்து காட்டுகிறார். தாவர வழக்காறுகள் என்னும் வரையறுக்குள் நின்றுகொண்டு புகையிலை குறித்த பல்வேறு தரவுகளைத் தருகிறார். புகையிலையின் தாவரக்குணம், அதன் குடும்ப வரலாறு என்று ஆரம்பிக்கும் நூலாளர் புகையிலை நாகரிகச் சமூகம் அறிந்து கொண்டது. நாகரிகப்படுதலுக்கு முந்திய சமூகம் அதனை எப்படி தன்னுள் ஒன்றாகக் கொண்டிருந்தது. நாகரிகப்பட்ட மனித சமூகம் புகையிலையை பொருள்மதிப்புக்குரிய ஒன்றாக மாற்றியது என்பது பற்றி எல்லாம் விரிவாகப் பேசுகிறார்.
ஐரோப்பிய காலனிய மயமாக்கத்தில் எப்படி புகையிலையும் காலனியப்பட்டது, தமிழ்நாட்டுக்கு புகையிலையின் வருகை அதன் பயிர் உற்பத்தி முறை அதற்கான தட்பநிலை என்று அமைகிறது. புகையிலையை சந்தைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளையும் நூலில் விவாதிக்கிறார். குறிப்பாக திண்டுக்கல் அங்குவிலாஸ் நிறுவனத்தார் மேற்கொண்ட விளம்பர முறை தனித்துவமாக இருக்கிறது.
நூலின் மற்றொரு பகுதி இலக்கியம் சார்ந்தும், வழக்காறுகள் சார்ந்தும், நாட்டார் வழிபாடுகள் சார்ந்தும் புகையிலை சார்ந்த பதிவுகளை தொகுக்கிறார். குறிப்பாக சிற்றிலக்கிய வகைமை உருவானபிறகு அதன் பாடுபொருள்களுள் ஒன்றாக புகையிலை மாறியதைப் பதிவு செய்கிறார். பாரதியார், பாரதிதாசன் வரையிலும் அது எப்படி நீடித்து வந்தது என்பதும் நூலில் பதிவாகியுள்ளது. ‘பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்’ என்று சிறுவயதில் கேட்ட குறள் சார் ஒலிக்குறிப்பும் இப்போது நினைவில் வருகிறது.
பொடி, சிகரெட், பீடி, சுருட்டு என்று புகையிலையுடன் தொடர்புடைய பல்வேறு உபப்பொருட்களை நூலில் விவரிக்கிறார். மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட குமரி மாவட்டத்தில் மீனவர்கள் மத்தியில் சுருட்டு பிடிக்கும் வழக்கம் அதிகமாக இருந்தது. எங்கள் ஊரில் வயதான பெரிய வர்கள் சுருட்டு பிடித்தார்கள் .பொடி போடும் வழக்கம் ஆண்களிடமும் பெண்களிடமும் இருந்தது. பெண்கள் வாயிடுக்கில் பொடியை அழுத்தி வைப்பார்கள். நூற்றில் ஐம்பது ஆண்களுக்கு பயன் படுத்தும் கைக்குட்டையில் பொடிவாசம் அடிக்கும்.
சிகரட்டைப் பொறுத்தவரை வேறொரு அனுபவம் எங்களுக்கு இருந்தது. உள்ளூரில் கிடைக்கும் சிஸ்ஸர்,பனாமா, கோல்டு பிளாக், வில்ஸ், சார்மினார், பாசின்ஷோ பிராண்டுகள் போக வெளி நாடுகளின் ரோத்மென்ஸ், 555 சிகரெட்டுகளும் அந்தக் காலத்தில் நன்கு அறிமுகம். எங்களூரில் பகுதிக்குப் பகுதி ஆண்கள் அப்போது சிங்கப்பூர் வாசிகளாக இருந்தது இதற்கான பெருவாய்ப்பாக அமைந்தது. வெளிநாட்டு சிகரெட்டுகளில் இருந்து வெளியேறிய புகையின் மணத்தை இப்போது யோசிக்கும்போது காமராசு அவர்கள் நூலில் குறிப்பிடும் விர்ஜினியா புகையிலை ஓர்மைக்கு வருகிறது. அந்த சிங்கப்பூர் சபராளி மேனியில் பூசியிருக்கும் அத்தரின் வாசனையும் அவர் உபயோகிக்கும் வெளிநாட்டு சிகரெட் புகையின் வாசனையும் கலந்த மணம் அலாதியானது.
கேரளத்துடன் நெருக்கமாக இருக்கும் காரணத்தாலோ என்னவோ கன்னி யாகுமரி மாவட்டத்தின் கல்குளம் விளவங்கோடு வட்டாரத்தில் பெண்கள் பீடி வலிக்கும் வழக்கம் குறிப்பாக முஸ்லிம் சமூகத்து வயதான பெண்கள் பீடி வலிப்பார்கள். தீப்பெட்டி, லைட்டர் அதிகம் புழக்கப்படாத அந்தக்காலத்தில் அடுப்பு நெருப்பில்தான் பாட்டிகள் பீடி பற்றவைப்பார்கள். முன் வீட்டிலிருந்து அடுக்களை வரை சென்று பீடியைப் பற்றவைக்க சோம்பல் பட்ட பாட்டிகள் பெயர்த்திகளிடம் பீடியை கொடுத்து பற்ற வைத்துக்கொண்டு வரச்சொல்வார்கள். இந்த இடைவெளியில் பெயர்த்திகளும் பீடியை இரண்டு வலிப்பு வலிப்பார்கள்.
புகையிலை வரலாறும் வழக்காறும்
இரா.காமராசு, உயிர் பதிப்பகம்
நூலின் விலை: 200 | mob:9080514506
- எச்.ஹாமீம் முஸ்தபா