“ஔவையார் ஒருவரா, இருவரா இல்லை பலரா என்னும் வினா இலக்கிய வரலாற்றில் அவ்வப்பொழுது எழுவது இயல்பாக இருந்து வருகிறது. பீடு பெறு புலவர் பெயரைப் பின் வந்தோர் சூடும் மரபைத் தமிழ் இலக்கியத்தில் நாம் காண்கிறோம். காப்பியர்கள், கபிலர்கள், பரணர்கள் பலரானபோது அவர்களைச் சிறு சிறு அடைமொழித் தொடுப்பால் மக்கள் வேறுபடுத்திக் கண்டனர். ஔவையார் என்ற பெயர் வேறுபடுத்தலுக்கு உட்படாத காரணத்தால் அப்பெயர் கொண்டிருந்த பலரையும் பாகுபடுத்திக் காண இயலவில்லை. எனினும், இலக்கியத்தில் வல்லவர்களாக இருந்த பலர் ஔவை என்று பெயர் கொண்டிருந்ததற்குச் சங்ககால ஔவையே மூல காரணம் என்று கருதுவோர் உண்டு”1 என்கிறார் பெ.சு.மணி. இக்கருத்தின்படி தொன்று தொட்டு வந்த எண்ணத்தின் படி “ஔவையார் ஒருவர், இருவர், மூவர் என்கிற வழக்கிலும் அவரது ஜாதி, பிறப்பு, வளர்ப்பு முதலிய ஆராய்ச்சியிலும் என் மனம் செல்லவில்லை. அது வீண் காலப்போக்காக முடியும் என்பது என் கருத்து”2 என்று வரகவி.

அ. சுப்பிரமணிய பாரதியும் தனது ‘ஔவை அருந்தமிழ்’ என்ற நூலில், ஔவை யார்? எத்தனைப் பேர்? என்று ஆராய மனமில்லை என்று கூறி ஔவையார் பாடலைப் பற்றி மட்டுமே ஆராய்கின்றார்.

அ.சுப்பிரமணிய பாரதி மட்டுமின்றி தி.சு.பாலசுந்தரம் பிள்ளையும் தனது ‘ஔவையார் திருவுள்ளம்’ என்ற நூலில் “ஔவையார் என்போர், அவர் எவராயிருந்தாலும் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் நல்ல தொண்டு செய்திருக்கின்றார்”3 என்று கூறி ஔவையைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள விரும்பாதவராகிறார்.

ஒருவரே

ஔவையைப் பற்றி தான் நடத்திய ‘செங்கோல்’ என்ற இதழில் கட்டுரை எழுதிய ம.பொ.சி, “ஔவையாரின் பெயரால் வழங்கிவரும் சிறந்த இலக்கியங்களை அப்பெருமாட்டியின் பெயரிலிருந்து பிரித்தெடுக்க நமக்குத் துணிவு வரவில்லை. அதனால் பொது மக்களைப் போலவே நாமும் ஔவையார் ஒருவர் என்றே கருதி அவர் பெயரால் உள்ள சிறந்த இலக்கியங்களைப் போற்றுவதே கடன் என்று நம்புகிறோம்”4 என்று கூறி ஔவை ஒருவரே என்கிறார்.

avvai 306“அவ்வையார் இருவர் இருந்தனர் மூவர் இருந்தனர் நால்வர் இருந்தனர் என்று சொல்வார் சொல்க. ஒருவர் இருந்தனர் என்பதற்கே ஆதாரம் ஏற்பட்டுள்ளது. சங்கத் தமிழ் நூல்களில் அவ்வையார் பாட்டுக்களென்று காணும் பாட்டுக்களை இயற்றியவர் அவ்வொருவர். தொல்காப்பிய உரையாசிரியர்களாற் காட்டப்பட்ட “இருடீர்” என்னும் வெண்பா அவர் பாடியதே எனலாம். மற்றைப் பிற்காலத்துப் பாட்டுகளையும் அவ்வையார் பெயரைக்கொண்ட மாதரொருவர் என்றாதல் வேறு புலவரென்றாதல் துணிந்துரைக்க ஏலாது. ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் என்னும் நூலுடையாரும் தமிழ் நாவலர் சரிதையாசிரியரும், அதனை யனுசரித்து அவ்வையார் வரலாறு எழுதிய பத்திராசிரியரும் அவ்வையார் ஒருவரே யிருந்தாரென்னும் கொள்கையினர். அவ்வையார் கபிலராதியோர் காலத்தும் அதற்குச் சற்றுப் பின்னும் வாழ்ந்திருந்தாரென்பதே செந்தமிழ்ப் பத்திராசிரியர் சித்தாந்தம். பிற்காலத்திலும் அவ்வையார் ஒருவர் இருவர் இருந்தாரென்பது ஆராய்ச்சி வல்லார் ஆவசியக மென்று கண்டது. அவ்வையார் பெயரால் வழங்கும் நூல்களையும், பாட்டுக்களையும் இயற்றினாரொருவர் வேண்டும், அவர் பிற்காலத்திலிருந்த அவ்வையார் ஒருவர் என்று ஆவசியகத்தின் மேல் வேறோருராதாரமின்றி எழுந்த கொள்கையைத் தழுவுதல் நெறியாகாது”5 என்று அனவரதம் பிள்ளையும் தனது ஔவையார் என்ற நூலில் ஔவையார் ஒருவரே என்கிறார்.

இருவரே

ஔவை பற்றிய ஆய்வில் வரலாற்றையும், பாடல்களையும் புலமைக் கண்கொண்டு மட்டும் ஆராய்ந்தால் போதாது. மனித சமுதாயம் மற்றும் சமய அடிப்படைகளைக் கொண்டும் ஆராய வேண்டும் என்ற அடிப்படையிலேயே அனவரதம் பிள்ளை, ம.பொ.சி போன்றோர் ஆராய்ந்து ஔவை ஒருவரே என்ற போதிலும் ஔவை ஒருவராகிய இருவர் என்று புலவர் புராணப் பாடலே கூறுகின்றது. ‘புலவர் புராணம்’ என்ற நூல் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பட்டதாகும். இந்நூல்,

“முன்னௌவை கலிவருட மூன்றாவதா யிரத்தாள்

பின்னௌவை நாலாவதா யிரத்திற் பிறந்திட்டா

ளன்னவடன் திருவடியி லடுத்தவள் போய்க்காத்தனா

லின்னவரைப் பிரியாமலே கமென்றார் பலர்தாமே”6

என்று ஔவையை இருவராகக் கூறுகின்றது. அதாவது முன்னாளில் தோன்றிய ஔவை கலிவருடம் மூன்றாயிரத்தில் வாழ்ந்தவர். பின்னாளில் தோன்றிய ஔவை கலிவருடம் நான்காயிரத்தில் தோன்றியவர் என்றும் கூறுகின்றது. தற்போது கலிவருடம் ஐந்தா­யிரம் நடப்பதாக நம்பப்படுகின்றது. இப்பாடலின் கூற்றுப்படி முதல் ஔவை சங்க காலத்திலும் பின் தோன்றிய ஔவை பதினோராம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இக்கருத்தையே ஔவை துரைசாமிப் பிள்ளை தமது நற்றிணை உரையில் “ஔவையார் என்று பெயர் தாங்கும் பெண்பாற்புலவர் இருவர் நம் தமிழகத்தில் இருந்துள்ளனர். அவருள் ஒருவர் சங்கத் தொகை நூற்காலத்திலும் மற்றவர் இடைக்காலத்திலும் வாழ்ந்தனர்”7 என்று இரு ஔவையார்களைக் குறிப்பிடுகின்றார். இதனையே கா. சுப்பிரமணியப் பிள்ளையும் தமது இலக்கிய வரலாற்றில் கூறுகின்றார்.

‘ஔவையார் சரித்திரம்’ எழுதிய சுப்பிரமணியாச்சாரியாரும் “இரண்டாம் ஔவை காலம் கி.பி. பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதி”8 என்று ஔவை இருவர் என்கிறார். ஔவையார் கவிதைக் களஞ்சியத்தைத் தொகுத்த ப.சரவணனும், “ஔவையார் என்ற பெயரில் வாழ்ந்தவர் என்பது வேறு. ஔவையார் என்ற பெயரில் படைப்புகளை வெளிப்படுத்தியது என்பது வேறு. இரண்டிற்குமுள்ள அடிப்படை வித்தியாசத்தை விளங்கிக் கொள்வது முக்கியமாகும். எனவே, ஔவையார் என்ற பெயரில் இருவர் மட்டுமே வாழ்ந்தனர் எனலாம். மற்றவர் எல்லாம் அவர்களது பெருமையால் வந்தவர்களே”9 என்கிறார். காலங்களை வைத்து தமிழண்ணலோ தனது ஔவையார் நூலில் ஔவையை ‘சங்க கால ஔவை, நீதி நூல் ஔவை’ என இருவராகக் கூறுகின்றார்.

மூவரே

ஔவையார் ஒருவரே இருவரே என்ற கருத்துகள் மட்டுமின்றி ஔவையார் மூவர் என்ற கருத்தும் ஆய்வாளர்களிடையே எழுந்துள்ளது. “ஔவை என்ற பெயருடைய புலவர் மூவர் என எண்ணவேண்டும். ஒருவர் சங்க ஔவை, மற்றவர் பிற்காலச் சமய ஔவைகள் என்போம்”10 என்கிறார் ‘ஔவை’ என்ற நூலில் டாக்டர்.மு.கோவிந்தசாமி. பி. ஸ்ரீ எழுதிய ‘ஔவையார்’ என்ற நூலின் முன்னுரையில் பெ.நா.அப்புசாமியும் “சங்க காலத்து ஔவை வேறு, மூதுரையை இயற்றிய ஔவை வேறு, கம்பன் காலத்தில் வாழ்ந்தவராகக் கூறப்படும் ஔவை வேறு என்பது உறுதி”11 என்று ஔவையாரை மூவராகக் குறிப்பிடுகின்றார். ‘தமிழ் தந்தப் பெண்கள்’ என்ற நூலில் சாலை இளந்திரையனும், சாலினி இளந்திரையனும், “கல்வியும் புலமையும் மிக்க பெண்கள் பலர் தமிழகத்தில் ‘அவ்வை’ என்னும் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தனர். இதனாலேதான் சங்க காலத்தில் ஓர் ஔவையைக் காண்கிறோம், இடைக்காலத்திலும் ஓர் ஔவையைச் சந்திக்கிறோம், பிற்காலத்திலும் ஓர் ஔவை இருந்திருக்கக் கூடுமோ என்று ஐயுறுகிறோம்”12 என்று ஔவையை மூவராகக் கூறுகின்றார்.

பலரே

சங்ககால ஔவை, பன்னிரண்டாம் நூற்றாண்டு இரண்டாம் ஔவை, நீதி நூல்கள் தந்த மூன்றாம் ஔவை, விநாயகர் அகவல், ஞானக்குறள் போன்ற வேதாந்த கருத்துக்கள் தந்த நான்காம் ஔவை என்ற நான்கு ஔவையார்கள் இருந்ததாக ஔவையார் தனிப்பாடல்கள் விளக்க நூலின் முன்னுரையில் புலியூர்க் கேசிகன் கூறுகின்றார்.

தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வரையறையில் எழுதிய மு.அருணாசலமும் ஔவையார் என்ற பெயரில் அறுவர் இருந்தனர் என்கிறார்.

1.           சங்ககால ஔவை   - கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

2.           இடைக்கால ஔவை - கி.பி. 10 ஆம் நூற்றாண்டு

3.           சோழர்கால ஔவை - கி.பி. 12 ஆம் நூற்றாண்டு

4.           சமயப் புலவர் ஔவை- கி.பி. 14 ஆம் நூற்றாண்டு

5.           பிற்கால ஔவை - 1. கி.பி. 16 - 17 ஆம் நூற்றாண்டு

6.           பிற்கால ஔவை - 2. கி.பி.17 - 18 ஆம் நூற்றாண்டு”13

மு.அருணாசலம் பத்து முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை நான்கு ஔவையாரைக் கூறினாலும் அவற்றில் இன்னார் பாடிய பாடல்கள் இதுவென்று தெளிவான கருத்துகள் இல்லை என்றே கூறலாம்.

மு. அருணாசலம் அவர்களின் கூற்றுப்படி தனிப்பாடல் இயற்றிய ஔவையாரும் ஒருவர் அல்லர் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

‘அவ்வையார் அன்று முதல் இன்று வரை’ என்ற நூலில் தாயம்மாள் அறவாணனும் ஔவையாரை அறுவராகவே குறிப்பிடுகின்றார்.

1.           சங்கப்பாடல்கள் பாடிய ஔவையார் (அதியமான், எழினி, பாரி, நாஞ்சில் வள்ளுவன், தொண்டைமான் காலத்தவர்)

2.           தனிப்பாடல்கள் எழுதிய ஔவையார் (கி. பி. 10 முதல் 13 நூற்றண்டு வரை)

3.           தனிப்பாடல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி எழுதிய ஔவையார் (கி.பி. 16 முதல் 17 நூற்றாண்டு வரை)

4.           விநாயகர் அகவல், ஞானக்குறள் பாடிய ஔவையார் (கி.பி 17,18 நூற்றாண்டுகள்)

5.           அசதிக்கோவை, பந்தனந்தாதி பாடிய ஔவையார் ( கி.பி. 18 நூற்றாண்டு)

6.           கல்வி ஒழுக்கம், பெட்டகம், வேழமுகம், கணபதி ஆசிரிய விருத்தம், சரஸ்வதி சிந்தனை பாடிய ஔவையார் (கி.பி 18 நூற்றாண்டு)

என்று அறுவராக பகுத்துக் கூறுகின்றார்.

தாயம்மாள் அறவாணனே தனது அவ்வையார் படைப்புக் களஞ்சியம் நூலில் ஔவையார் எண்மர் என்கிறார்.

1.           ஔவையார்-1-சங்கப்பாடல்கள் அகம், புறம், அதியமான் பொகுட்டெழினி, நாஞ்சில் வள்ளுவன் முதலானொர் பற்றிய பாடல் பாடியவர் - ஏறக்குறைய 2ஆம் நூற்றாண்டு.

2.           ஔவையார் -2 - மூவேந்தர், பாரி மகளிர், கம்பர், சேரமான் பெருமான் முதலியோர் பற்றிய தனிப்பாடல்கள் பாடியவர் - ஏறக்குறைய 10 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை

3.           ஔவையார் -3 - ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி பாடியவர் ஏறக்குறைய 12 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை

4.           ஔவையார் -4 - விநாயகர் அகவல், ஔவைக் குறள் பாடியவர் - ஏறக்குறைய 16 ஆம் நூற்றாண்டு

5.           ஔவையார்-5-அவ்வை நிகண்டு, பிடக நிகண்டு (கிடைக்கப்பெறவில்லை) எழுதியவர் - ஏறக்குறைய 16 ஆம் நூற்றாண்டு

6.           ஔவையார் -6 - அசதிக்கோவை, பந்தன் அந்தாதி, பெட்டகம் பாடியவர் ஏறக்குறைய 17ஆம் நூற்றாண்டு

7.           ஔவையார் -7 - கல்வி ஒழுக்கம், கணபதி ஆசிரிய விருத்தம், வேழமுகம் பாடியவர் - ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டு

8.           ஔவையார் -8 நீதி ஒழுக்கம், தரிசனப் பத்து பாடியவர் - ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டு

இவர் ஔவையார் பாடிய பாடல்களை வைத்துக் காலத்தைப் பகுத்திருப்பினும் ஒரே காலக்கட்டத்தில் அதாவது 16 ஆம் நூற்றாண்டில் மூன்று ஔவையார்களையும் 18 ஆம் நூற்றாண்டில் இரண்டு ஔவையார்களையும் கூறியிருப்பது முரணானது.

கால பேதம்

மேற்கூறியவற்றிலிருந்து ஔவை பற்றிய கால ஆராய்ச்சி ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வரமுடியாததாகின்றது என்றே கூறலாம். சங்க காலத்தில் ஔவை பெயரால் வழங்கப்பட்டு வருகின்ற பாடல்களும், தனிப்பாடல்களில் ஔவைப் பற்றி கூறப்படுகின்ற செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன போல இருந்தாலும் அவையெல்லாம் இக்காலத்தில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் செய்திகளைத் தனக்கேற்றவாறு மாற்றி கவிஞர்கள் புதுக்கவிதைகளிலும், ஹைக்கூ கவிதைகளிலும் எழுதுவது போலவே கர்ண பரம்பரையாகக் கேட்டு எழுதியதாகவே கருதலாம். ஔவையார் வரலாற்றை எழுதிய அனவரதம் பிள்ளை அவர்களும் “இப்பாட்டுகள் பிற்காலத்தன என்பதற்கு அவற்றின் நடையும் அவற்றிற் காணும் பிரயோகங்களும் துணை செய்யும். புறநானூறு முதலிய பழந்தமிழ் நூல்களில் உள்ள அவ்வையார் பாட்டுகளை வாசித்தவர் இப்பாட்டுகளை வாசிக்கும்போது எளிதில் பேதம் காண்பர். இலக்கணக் கவிஞர் நிட்டூரம், மெச்ச, பந்தயம், சுணங்கன், மூர்க்கன், காசினி, தாலி, உதாரன், சூரன், பாக்கியசாலி, கலியாணம் என்னும் சொற்கள் பிற்காலத்துப் பாடல்களிலேயே காணப்படும்”14 என்கிறார்.

தாயம்மாள் அறவாணன், கி.பி. 16, 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் நீதி நூல்களை இயற்றிய ஔவையார் என்கிறார். அதற்கு காரணங்களாக அவர் கூறுவன:

  • ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம் ஆகிய நூல்களில் காணப்படும் விநாயகர் வணக்கம் கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்கு பிற்பட்டது.
  • முதல் வரியையே நூல் பெயராக்கும் முறை பிற்காலத்தது.
  • எழுத்துகளை அகரவரிசையில் முன்னிறுத்திப் பாடும் முறை கலிங்க மக்களிடமிருந்து வந்தது. கலிங்கத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு 14 ஆம் நூற்றாண்டிற்குப் பின் வந்தது.

ஆனால், விநாயகன் என்பது புத்தருக்கு வழங்கப்படும் பெயர்களுள் ஒன்றாகும். புத்த மதத்தை அசோகர் பரப்பியதற்குக் காரணமாக அமைந்தது கலிங்கப்போரே. புத்தமதம் சங்க காலத்திலேயே தமிழகத்தில் வேரூன்றியது. இவை மட்டுமின்றி அகர வரிசைப்படி எழுதும் மரபை நிகண்டுகளில் காணலாம்.

மூதுரை எழுதிய ஔவையாரை மு. அருக்ணாசலம் 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்கிறார். தாயம்மாள் அறவாணனோ 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம், ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ என்ற மூதுரை 14 ஆம் பாடல். வான்கோழி இந்தியப்பறவை இனத்தைச் சார்ந்தது அன்று. அது ஐரோப்பிய பறவை. ஐரோப்பியர் வருகைக்குப் பின்தான் வான்கோழி தமிழகம் வந்திருக்க முடியும். ஐரோப்பியர் வருகை 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் தமிழகத்தில் நிகழ்ந்தது. எனவே, வான்கோழியைப் பற்றிப் பாடும் மூதுரை 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கிறார். ஆத்திசூடியும், கொன்றைவேந்தனும் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்கவே எழுதப்பட்டது. எனவே, இவையும் 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததே என்கிறார். இக்கருத்துகளை மறுக்க தமிழண்ணலின் பின் வரும் கூற்றுகளையே ஆதரமாகக் கூறலாம்.

“கொன்றை வேந்தனின் இறை வணக்கச் செய்யுளாகிய, ‘கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை என்றும் ஏத்தி தொழுவோம் யாமே’ என்பதைத் தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய பேராசிரியர், நச்சினார்க்கினியர் இருவரும் குறிப்பிடுவதோடு (தொல்.பொருள்.452) இளம்பூரணரும் பண்ணத்திக்கு (தொல்.பொருள்.483) உதாரணமாக எடுத்துக்காட்டுகிறார். பேராசிரியரும் (தொல்.பொருள்.384) ‘அட்டாலும்’ எனத்தொடங்கும் மூதுரைப் பாடலையும் காட்டாகக் காட்டியுள்ளார். இவ்வுரை ஆசிரியர்களுள் காலத்தால் முற்பட்ட இளம்பூரணர் கி.பி. 12 ஆம் நூற்றாண்டிற்குரியவர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் முறையே 13,14, ஆம் நூற்றாண்டுகளுக்குரியவர் என்பர் ஆய்வாளர்கள்.

கி.பி.13ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் மீது பாடப்பட்ட ‘குலோத்துங்க சோழன் கோவை’ நல்வழிப் பாட்டொன்றை ஆள்கிறது. ‘இட்டார் எப்போதும் இடுவார், இடார் என்றும் இட்டுண்கிலார், பட்டாங்கில் உள்ளபடியிதன்றோ’ என்பது ‘இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார், பட்டாங்கில் உள்ளபடி' என்ற ‘நல்வழி’ப் பாடலை அடியொற்றியுள்ளது.

கி.பி. 11ஆம் நூற்றாண்டினதென்று எண்ணப்படும் யாப்பருங்கல விருத்தியுரையும், ‘கொன்றை வேய்ந்த....’ எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்தை, ‘செந்துறை வெள்ளைப் பா’ என எடுத்துக் காட்டுகிறது (சூ. 69). இவற்றால் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நான்கு நீதி நூல்களையும் பாடிய இடைக்கால ஔவையார் சோழப் பேரரசு சிறப்புற்றுத் திகழ்ந்த கி.பி. பத்தாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தவர் என்பது போதரும்”15 என்கிறார் தமிழண்ணல்.

தமிழண்ணல் கூற்று மட்டுமின்றி மு. அருணாசலமும் “ஆங்கிலேயர் இந்தியா வந்தது 16 ஆம் நூற்றாண்டில் அதன் பின்தான் ‘டர்கி’ எனப் பெயருள்ள இப்பறவை இந்நாடு வந்தது. ஆகவே இப்பாடலுள்ள நூல் மிகவும் பிற்காலத்தது என்பது ஒரு சாரார் கூற்று. உண்மைவேறு. டர்கி என்பது துருக்கி. துருக்கியர் இந்தியா வந்தது

10 ஆம் நூற்றாண்டு என்பர். அப்போதே இப்பறவை துருக்கியர் வழியாக இங்கு வந்திருத்தல் வேண்டும்”16 என்று கூறி வான்கோழி என்ற பறவையின் பெயரை மட்டுமே கொண்டு இந்நூல்களை பிற்காலத்தது என்பதை மறுக்கிறார்.

ஔவையைப் பற்றிய கதைகளும், வரலாறு குறித்த ஆய்வும் காலம் பற்றிய பேதங்களும் ஒரு முடிவுக்கு வரமுடியாத ஆய்வாகவே தொடர்கிறது என்றே கூறலாம். “வினோதக் கதைகள் யாவும் தெனாலிராமன் பெயரால் வழங்கப்பட்டு வருதல் போல கட்டுரைகள் யாவும் ஔவையார் பெயரால் வழங்கப்பட்டு வரும்”17 என்பார் சுப்பிரமணிய ஆச்சாரியார். இங்கு கட்டுரைகள் என்பதை கட்டி உரைக்கப்படும் கதைகள் என்றே கொள்ளவேண்டும்.

‘தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம்’ என்று ஔவையின் பாடல்களை அமிழ்தம் என்றார் பாரதியார். அமிழ்தம் போன்ற நல்ல நெறிகளைக் கூறிய ஔவை அக்கற்பனையான அமிழ்தத்தை உண்டு சாகாவரம் பெற்றிருப்பாரோ எனில் அதுவுமில்லை எனலாம். கருநெல்லியை உண்டதால் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்திருப்பாரோ என்றால் அதுவும் சாத்தியமில்லை.

“வரலாற்றுச் சான்றுகளோடு முரண்படும் நிகழ்ச்சிகளும் சூழ்நிலைகளும் அமைகின்றன. அவற்றோடு புனை கதைகளும் இணைந்து விடுகின்றன. மேலும் ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் இடையே இருக்கும் ஒவ்வாமைகள்தாம் வரலாறு சாராத கூறுபாடுகளாக இருப்பதனை உணர்த்தி விடுகின்றன. நம்புவதற்கு அரிய நிகழ்ச்சிகளும் சூழ்நிலைகளும் தொடர்புறுத்தப் படுகின்றன. இயற்கைக் கடந்த நிகழ்ச்சிகளோடு இயற்கை மீறிய ஆற்றல்களும் மனிதர்க்கு உரியனவாய்ப் புனையப்பட்டு விடுகின்றன”18 என்ற கருத்தே ஔவையார் பாடல்களுக்கும் கதைகளுக்கும் பொருந்தும்.

அடிக்குறிப்புகள்

1.           பெ.சு.மணி, சங்க கால ஔவையாரும் உலகப்பெண்பாற் புலவர்களும், பூங்கொடி பதிப்பகம், சென்னை. ப.293

2.           வரகவி. அ. சுப்பிரமணிய பாரதி, ஔவை அருந்தமிழ், கே.பழனியாண்டி பிள்ளைக் கம்பெனி, சென்னை. ப.4

3.           பாலசுந்தரம் பிள்ளை, ஔவையார் திருவுள்ளம்,சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி ப.2

4.           ம.பொ.சி, ஔவை யார்? பூங்கொடிப் பதிப்பகம், சென்னை. ப.5

5.           அனவரதம்பிள்ளை, ஔவையார், வ.உ.சி. நூலகம், சென்னை. பக்.123,124

6.           வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், புலவர் புராணம், கலாரத்தினம் அச்சுக்கூடம், சென்னை ப.84

7.           ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை, நற்றிணை உரை, ப.498

8.           சுப்பிரமணிய ஆச்சாரியார், ஔவையார் சரித்திரம், ப.10

9.           ப.சரவணன், ஔவையார் கலைக்களஞ்சியம், இராஜராஜன் பதிப்பகம், சென்னை. ப.17

10.        டாக்டர்.மு. கோவிந்தசாமி, ஔவை, ப.4

11.        பெ.நா.அப்புசாமி, முன்னுரை, பி.ஸ்ரீ, ஔவையார், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை. ப.1

12.        சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், தமிழ் தந்த பெண்கள், ப.31

13.        மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, ப.459

14.        அனவரதம்பிள்ளை, ஔவையார், வ.உ.சி. நூலகம், சென்னை. ப.107

15.        தமிழண்ணல், ஔவையார், சாகித்ய அகாதெமி, புதுதில்லி பக்.56,57

16.        மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, ப.502

17.        சுப்பிரமணிய ஆச்சாரியார், ஔவையார் சரித்திரம், ப.43

18.        தி. லீலாவதி, ஔவையார் பாடல்கள், தமிழ் இலக்கிய கொள்கை, ப.273

- ச.முத்துச்செல்வி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரி, பட்டாபிராம், சென்னை - 72