கலைஞர் பெருமக்கள் அரசனை நாடிச் சென்றபோது இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு புத்தாடைகளையும் பலவகையான உணவு வகைகளையும் வழங்கியுள்ளதை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. பேரரசுகளும் சிற்றரசுகளும் வள்ளல்களும் தன்னை நாடி வந்த கலைஞர்களின் வறுமை போக்கி உணவுடன் கூடிய பொருளுதவிகளையும் வழங்கியுள்ளனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை ஆகிய ஐவகை நிலங்களில் வாழ்ந்த பொருளுடைமைச் சமூகத்தை நாடிச் சென்றபோது அந்நாட்டு மக்களும் கலைஞர்களுக்கு உணவளிப்பதை அறமாகக் கருதியுள்ளனர். இவற்றை சிறுபாணாற்றுப்படை இலக்கியத்தின் வழி அலைகுடி சமூகங்களின் வாழ்வை எடுத்துக்காட்டுவதாய் இக்கட்டுரை அமைகின்றது.

இடப்பெயர்வு சொல்லும் பொருளும்

இடம்பெயர்தல் புலம்பெயர்தல் ஆகிய சொற்கள் ஒரே பொருளையே கொண்டுள்ளன. இது ஆங்கிலத்தில் 'Diaspora' என்று அழைக்கப்படுகிறது. Diaspora என்பது 'Dispeirein' என்ற கிரேக்கச் சொல்லினைக் கொண்டு உருவானதாகும். 'Diaspeirien' என்னும் சொல் சிதறுதல் அல்லது பரவுதல் என்னும் பொருளை குறித்து நிற்பதாகத் தெரிகிறது. வரலாற்று அடிப்படையில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இஸ்ரேவேலிருந்து பாபிலோனுக்கு வெளியேற்றப்பட்ட யூதர்களைக் குறிப்பதாக ’Diaspora’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பர் வ.ந. கிரிதரன் (கீற்று மின்னிதழ், 2013).migrating people'புலம்' என்ற தமிழ்ச் சொல் பல பொருள் தரும் ஒரு சொல்லாகும். அறிவு, இடம், ஒலி, புலன், திக்கு, நுண்மை, மேட்டு நிலம், காடு முதலிய பொருள்களை புலம் என்ற சொல் தருவதாக மதுரைத் தமிழ்ப் பேரகராதி (1956) குறிப்பிடுகிறது. வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, வேதம் முதலிய பொருட்களைத் தருவதாக பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (2016) குறிப்பிடுகிறது.

பண்டைக் காலத்தில் பல்வேறு சூழல் காரணமாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மக்கள் இடம்பெயர்ந்தனர். இந்நிகழ்வு புலம்பெயர்தல் (Diaspora) என்ற பொதுப்பெயரால் குறிக்கப்பட்டது. சாதாரண அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மனிதன் தனியாகவோ, குடும்பத்துடனோ, சிறு குழுக்களாகவோ தன் இருப்பிடத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவது இடப்பெயர்ச்சி அல்லது இடப்பெயர்வு ஆகும். இவை இடம்பெயர்தல் அல்லது புலம்பெயர்தல் (Diaspora) என்று முறைப்படுத்தப்படுகிறது.

இடப்பெயர்வும் புலம்பெயர்வும்

கல்வி கற்பது வேலை நிமித்தம் முதலான சொந்த விருப்பத்தின் அடிப்படையிலும் இயற்கைச் சீற்றத்தாலும் நாட்டில் ஏற்படும் போர் ஆகிய காலத்தின் கட்டாயத்தினாலும் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கோ அல்லது ஒரு நட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கோ செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. தங்கள் நாட்டிற்குள்ளே செல்வதை இடப்பெயர்ச்சி என்றும் தனது நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்குச் செல்லுவதைப் புலம்பெயர்வு என்றும் வழங்கப்படுகிறது.

இடப்பெயர்வுக்கான சூழலும் காரணங்களும்

இடம்பெயர்தல் தற்காலிகமாக இடம்பெயர்தல், நிரந்தரமாக இடம்பெயர்தல் என்று இரு வகையில் அமைந்துள்ளது. தற்காலிகமாக இடம்பெயர்தல் என்பது தாங்கள் கொண்டு சென்ற பொருள்களை ஓரிரு நாள்களில் விற்று விட்டு மீண்டும் தங்களிருப்பிடத்திற்கு வந்து விடுவதைக் குறிக்கும். சிலர் வணிகத்தின் பொருட்டு தங்களிருப்பிடத்தை விட்டு நெடுந்தொலைவு சென்று அங்கேயே தங்கி விடுவதும் உண்டு. இத்தகைய இடம்பெயர்தலைப் பிரிவு பற்றிக் குறிப்பிடும்போது தொல்காப்பியர், “ஓதல் பகையே தூதிவை பிரிவே” (தொல்.அக.27) என்ற நூற்பாவில் கல்விக்காகவும், பகைப்புலம் நோக்கிப் படையெடுக்கும் காரணமாகவும், பொருள் காரணமாகவும், தூது செல்வதற்காகவும் (பணி காரணமாக இடம் பெயர்தல்) இடம்பெயர்தல் உண்டு. அத்தகைய இடப்பெயர்வுகள் தற்காலிகமானவையாகும். அவ்வாறு இடம்பெயர்ந்து சென்றோர் தங்கள் மேற்கொண்ட பணி முற்றுப் பெற்றவுடன் மீண்டும் தம்முடைய இருப்பிடத்திற்குத் திரும்பி வந்துவிடுவர். மேற்படியான கருத்தியல்களில் இருந்து இடப்பெயர்வுக்கான பொருள் அமைப்பை எடுத்துரைக்க முடிகிறது.

இடப்பெயர்ச்சி - வரையறை

“ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது இடப்பெயர்ச்சி ஆகும். தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இடப்பெயர்வே வாழ்க்கை நியதியாக இருப்பினும் அவை இடப்பெயர்ச்சி மூலம் மாபெரும் துன்பத்தை அனுபவிப்பதில்லை. பழங்குடிகள் உணவு, உறையுள் தேடி இடம்பெயர்ந்தனர். இது உலக அளவில் நடைபெறக்கூடிய ஒன்று. இடப்பெயர்ச்சி கிராமங்களில் இருந்து நகரங்களுக்கும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்கின்றனர்” என்ற கருத்தை முனைவர் பா.சிங்காரவேலன் பதிவு செய்கிறார். (மக்கள் இடப்பெயர்ச்சி கதைகள், தேனி மாவட்டம்). இடம்பெயர்தல் என்பது தன் சொந்த நாட்டிற்குள்ளேயே ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் சென்று வசிப்பது எனலாம். இவ்இடப்பெயர்வு பெரும்பாலும் தொழிலை மையமாகக் கொண்டு குறிப்பிட்ட காலஅளவைக் கொண்டதாகும். தனிநபர், தனிக்குடும்பம் சார்ந்து நடைபெறுகின்றது. இக்கால அளவு தொழில்களின் தன்மைப் பொறுத்து மாறுபட்டுள்ளது. சான்றாக குமரி மாவட்டத்தைச் சார்ந்த பனையேரும் தொழிலாளிகள் பனையேற்றம் வரும் பருவகாலங்களில் தனிக்குடும்பங்களாக இடம்பெயர்ந்து அருகாமையிலுள்ள நெல்லை வ.உ.சி. மாவட்டங்களில் தங்கி வேலை செய்துவிட்டு பின்னர் அப்பருவ காலம் நிறைவு பெற்றபின் தன் சொந்தப் பகுதிகளுக்கு வருவார்கள். மேலும், தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரியும் பல குடும்பங்கள் தான் பணி செய்யும் இடத்தில் தங்கியிருந்து பணி செய்துவிட்டு பணிமூப்பு காலத்தில் தாங்கள் சொந்தப் பகுதிகளுக்கு வருவார்கள். இதனை நாம் இடப்பெயர்வாகக் கொள்ளமுடிகிறது. இடப்பெயர்வு திட்டமிட்டு செய்யக்கூடிய ஒன்றாகும். இங்கு “தனது ஊரை விட்டு பிற மாவட்டங்களுக்கு அல்லது பிற மாநிலங்களுக்குச் சென்று வாழ்வதை இடமாற்றம் அல்லது இடப்பெயர்வு  என்று சொல்லலாம்” என்ற மாரிமுத்து மணியின் கருத்து ஈண்டு மனங்கொள்ளத் தக்கது.(ஈழத்து புலம்பெயர் இலக்கியம் பன்முக வாசிப்பு, 2015 ப.12) சிங்காரவேலனின் ஆய்வுக்கருத்தியலும், மாரிமுத்து மணியன் எடுத்துரைத்துள்ள இடம்பெயர்வுக்கான சூழல்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள தொல்காப்பியத்தை ஒட்டி அமைந்துள்ளதால் பிரிவு என்பது இடப்பெயர்வுக்கான சான்றுகளாக அமைகிறது.

இடம்பெயர்தல் என்பது தொன்று தொட்டு மனிதனோடு பின்னிப்பிணைந்துள்ள ஒரு செயல்பாடாகும். இந்த இடம்பெயர்தல் என்பது பல்வேறு சூழ்நிலைகளில் இன்று நிகழ்வதைக் காணமுடிகின்றது. குறிப்பாக தொழில் வழியாலும் இயற்கை சீற்றங்களான வெள்ளப்பெருக்கு, பூகம்பம், கொல்லையடித்தல், நோய்களின் தாக்கம், பஞ்சம் ஆகியவற்றினாலும் அரசியல் சமூகக் காரணங்களாலும் இடம்பெயர்தல் நிகழ்கிறது. இந்த இடம்பெயர்தல் என்பது ஒரு கூட்டு செயல்முறையாகும். இந்த செயல்முறையானது மக்கள் குடியமர்வதற்காகவோ அல்லது வேறுபல காரணங்களுக்காகவோ மக்களின் இடம்பெயர்தல் இடம்விட்டு இடம் நிகழ்கிறது என்பதை முனைவர் சி.ஜஸ்டின் செல்வராஜ் பதிவு செய்துள்ளார் (சமூகப் பண்பாட்டு நோக்கில் இடம்பெயர்தல், 2022 ப.61). மேலும் மனிதன் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் புலம்பெயர்ந்து செல்லுதல் (நிலம்பெயர்தல்) வரலாற்றுக்கு முந்தையக் காலந்தொட்டு நிகழ்ந்து வந்துள்ளது. வரலாற்றுக் காலத்தில் போர், வணிகம், இயற்கை மாற்றம், இயற்கைப் பேரிடர் காரணமாக மக்கள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புலம்பெயர்ந்து சென்றனர். இவ்வாறு புலம்பெயர்ந்து செல்லும் மக்களைப் ‘புலம்பெயர்மக்கள்’ என்று சங்க இலக்கியம் அடையாளப்படுத்துகிறது. இதனை,

“புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உரையும்

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெரினும்”          (பட்டின. 217-218)

கிரேக்கம், ரோம், அரேபியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வணிகம் காரணமாக புகார் நகரில் வந்து தங்கி, பல மொழிகளைப் பேசும் மக்களைக் குறிக்க இச்சொற்றொடர் கையாளப்பட்டுள்ளது. இதே போன்று தமிழ் நிலப்பரப்புக்குள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நிலம்பெயர்ந்து சென்றவர்களைக் குறிக்கவும் இச்சொற்றொடர் சங்க இலக்கியத்தில் பயின்று வந்துள்ளது. “புலம்பெயர் புலம்பொடு கலங்கி” (நெடுநல். 5), “புலம்பெயர் புதுவீர்” (மலைபடு.350).

தேசங்கள் உருவானதற்கு பிந்தைய நவீன காலத்தில் ஒரு நாட்டிற்குள் இத்தகைய இடப்பெயர்வுகள் நடக்கின்றன. வணிகம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு இடப்பெயர்வுகள் குடியேற்றங்கள் நடக்கின்றன. ஆயின் இவை எல்லாம் இடப்பெயர்வுகள் என்ற அளவிலே கருதப்பட்டுள்ளன என்ற கருத்தை பேராசிரியர் பா. ஆனந்தக்குமார் முன்வைத்துள்ளார். (புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பனுவல்களும் மதிப்பீடுகளும், 2018, ப.9) மேலும், பிறந்து வளர்ந்து பரம்பரையாக இருந்த தங்கள் நிலப்பகுதியிலிருந்து அல்லது தேசத்திலிருந்து அகன்று/பெயர்ந்து வேறுநாடு சென்று நீண்டகாலமாகவோ குடியமர்தலை அல்லது குடியமராமல் அலைப்புண்டு திரிதலை இடப்பெயர்வு என்று குறிப்பிடப்படுகிறது. இரண்டு வேறு நாடுகள், இரண்டு வேறு மொழிகள், இரண்டு வேறு பண்பாடுகள் என்ற ஒருநிலை இந்த இடம்பெயர்வில் காணப்படும் நிலையாகும் என முனைவர் கா.சந்திரசேகரன் இடப்பெயர்வும் வரலாறும் என்ற கட்டுரையில் (ஏப்ரல். 2015) வரையறுத்துக் கூறுகிறார். மேற்கண்ட இடப்பெயர்வுக்கான காரணக்கூற்றை ஆராயும் போது பேராசிரியர் பா.ஆனந்தகுமார் சங்க இலக்கியத்தில் புலம்பெயர்ந்த மாக்கள் என்ற சொல்லுக்கு இடம்பெயர்தல் என்பதையும் கா.சந்திரசேகரன் இடப்பெயர்வுக்கான பொருளை அலைபுண்டு திரிதல் என்பதை வழக்காற்று மொழியின் அடிப்படையில் சுட்டிக் காட்டியுள்ளார்கள். இடம்பெயர்தல் பற்றி பல வல்லுநர்கள் பல்வேறு முறைகளில் வரையறுத்துள்ளனர். ஆகவே பழங்காலத்தில் மக்கள் உணவைத் தேடி இடம்பெயர்ந்தனர் பெரும்பாலான மக்கள் காடுகளில் வாழ்வதை தவிர்த்து நாகரிக வாழ்க்கையைப் பின்பற்ற தொடங்கிய போது வளமான நிலம் மற்றும் வளர்ப்பு விலங்குகளுடன் உறவை மேம்படுத்திக் கொண்டனர். இதன் விளைவாக மனித குலம் இடம்பெயர்தலில் ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றம் அடைந்து அவர்கள் கிட்டத்தட்ட நாடோடி வாழ்க்கையை கைவிட்டு நிரந்தர குடியிருப்புகளில் வாழத் தொடங்கினர். இந்நிலையில் மக்கள் வளம் மிகுந்த வேளாண்மை நிலத்தைத் தேடி, தொடர்ந்து குடி பெயர்ந்தனர். அதன் பின்னர் இடப்பெயர்வின் தன்மை காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறாக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை அறியமுடிகின்றது.

அலைகுடிச் சமூகங்கள்

சங்ககாலத்தில் அலைகுடிகள் என அறியப்பட்டவர்கள் பாண் சமூகத்தினர். கூத்தர், பாணர், பொருநர், விறலியர், துடியர், வயிரியர், கண்ணுளர், கோடியர், சென்னியர், இயவர், இனைஞர், குறுங்கூளியர், நகைவர், அகவர், அகவநர், அகவலன், வேலன், கட்டுவிச்சியர், கடம்பர், முழவன், பறையன் எனப் பல்வேறு பாண் குடியினர் குடும்பமாகவும் குழுவாகவும் மிதவைச் சமூகமாக இயங்கியுள்ளனர் என்பதை சங்க இலக்கியம் தெளிவுறுத்துகிறது. இவர்கள் பண்ணோடு பாடியும் இசைக்கருவிகள் இசைத்தும் ஆடல், கூத்து, நாடகம் நிகழ்த்தியும் தம் கலைத்திறனை வெளிப்படுத்தி மண்ணையும் மக்களையும் மகிழ்ச்சியுறச் செய்துள்ளனர், என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சங்க காலத்தில் ஒவ்வொரு திணையிலும் நிலையான குடிகள் வாழ்ந்து வந்துள்ளனர். ’’அத்தகைய திணைக்குடிகளையும், சீறூர் மன்னர்களையும், முதுகுடி மன்னர்களையும், குறுநில மன்னர்களையும், சிற்றூரில் வாழ்ந்த கிழார்களையும், ஆதரவுச் சமூகத்தாராக ஏற்றுக்கொண்டு, பாண் சமூகத்தார் அலைகுடிகளாக வாழ்ந்துள்ளனர்’’ என்பதை பக்தவத்சல பாரதி (சங்ககாலத் தமிழர் உணவு, 2021 ப.106) பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அலைகுடிச் சமூகங்களின் பின்புலங்கள்

சங்ககாலம் வீரயுகக் காலமாகும். அக்காலக்கட்டத்தில் உலகம் முழுக்க பாண் சமூகத்தாரின் தேவை இருந்துள்ளது. பாண் சமூகத்தார் குல வரலாறு சொல்லுபவர்களாக, குடிவழி பெருமை பேசுபவர்களாக, வம்சாவழியின் தொடர்ச்சியைக் கூறுபவர்களாக, முன்னோர்களின் வீரத்தீரச் செயல்களை எடுத்துரைப்பவர்களாக போர்க்களத்தில் மறவர்களுக்கு எழுச்சியூட்டுபவர்களாகவும், தலைவியின் ஊடலைத்தீர்க்கும் வாயில்களாகவும் செயல்பட்டுள்ள மரபினை, காணமுடிகிறது. பாணரின் மரபாக,

“நிலம் பெயர்ந்து உரைத்தல், அவள் நிலை உரைத்தல்

கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய” (தொல்.கற்பியல். 1115)

என்ற நூற்பாவின் படி, இடப்பெயர்வுக்கான காரணத்தை கூத்தர் பாணர் தாம் வாழுமிடத்திலிருந்து நெடுந்தொலைவு பயணம் செய்து தலைவன் இருக்குமிடம் அடைந்து தலைவி பற்றிய நிலையைப் பாக்களாக எடுத்துரைத்தல் என்பது கூத்தர்க்கும் பாணர்க்கும் உரிய பணிகளாக தொல்காப்பியர் வழியாக அறிய முடிகிறது.

சங்க காலத்தில் ஆடற் பாடல் கலைக்கும், நிகழ்த்துக் கலைக்கும், சடங்குசார் கலைக்கும், போர்க்கள வீரர்களின் எழுச்சிக்கும், தூது செல்வதற்கும் வாயில்களாக செயல்படுவதற்கும் பெரும் பங்காற்றியவர்கள் பாண் சமூகத்தார். பாணர்கள் பயணம் செய்தல், நாடு சுற்றுதல் என்பதை பாணர்களின் வாழ்வியல் கூறுகளாக எடுத்துரைக்க முடிகிறது. ஒவ்வொரு வகையான பாண் சமூகத்தாரும் நிலைக்குடியினருக்கு ஒரு குறிப்பிட்ட கலைச் சேவையை நிறைவு செய்தார்கள். இக்கலைச்சேவை மூலம் பாண் சமூகத்தார் சங்க காலத்தில் பல்வேறு திணைகளையும் பல நாடுகளையும் தம் பயணம் வழி இணைத்தார்கள் என்ற செய்தியை “இவர்கள் சிறூர் முதல் நகரங்கள் வரை சுற்றி வந்ததால் ஒரு நிலையில் ‘பண்பாட்டுத் தொடர்பாளர்கள்’ என்னும் நிலையிலும் பல்வேறு திணைகளுக்கிடையில் சுற்றித் திரிந்ததால் ‘சமயம் சார்ந்த கருத்துக்களை’ பரப்புவார்கள் என்னும் நிலையிலும் சிறு குடிகளுக்கும் பெருங்குடிகளுக்கும் இடையில் ஊடாடி வந்ததால் இக்குடிகளுக்கிடையில் பண்பாட்டுப் பாலம் அமைத்து பன்மைப் பண்பாட்டை ஏற்க செய்தார்கள் எனும் நிலையிலும் செயல்பட்டார்கள்” என்பதை பக்தவத்சல பாரதி (சங்க காலத் தமிழர் உணவு, 2021. ப.107) பதிவு செய்துள்ளார். பாணர்கள் சமூகத்தொடர்பாளர்களாக இருந்து அக்காலப் பண்பாட்டின் தளங்களில் குறிப்பிடத்தக்க செயல்களில் பங்காற்றியுள்ளனர் என்பதை தெளிவுறமுடிகின்றது.

சிறுபாணாற்றுப் படையில் அலைகுடிகள்

ஒய்மானாட்டு நல்லியக்கோடன் கிடங்கில் என்னும் தலைநகரில் வாழ்ந்தவன். அவனிடம் பரிசில் பெற்று மீண்ட சிறுபாணன் வேறொரு சிறுபாணனை அவனிடம் ஆற்றுப்படுத்தியதாக இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் சிறுபாணாற்றுப்படை இயற்றியுள்ளார். சிறுபாணாற்றுப் படையில் பாணர்களை ஆற்றுப்படுத்தும் போது வள்ளல் நல்லியக்கோடனின் நாட்டிலுள்ள மூன்று ஊர்களுக்குச் செல்லுமாறு பாணன் அறிவுறுத்தினான். அவை, நெய்தல் கரையிலுள்ள எயிற்பட்டினம் (இன்றைய மரக்காணம்), முல்லைத் திணைப் பட்டினமாகிய வேலூர் (இன்றைய உப்பு வேலூர்), மருதத் திணையிலுள்ள உழவர் ஊராகிய ஆமூர் (இன்றைய நல்லாமூர்). இந்த மூன்று திணைகளைக் கடந்து இறுதியாக ஓய்மா நாட்டின் தலைநகரான கிடங்கில் (இன்றைய திண்டிவனம்) செல்லுமாறு ஆற்றுப்படுத்தியுள்ளான்.

பண்டைக் காலத் தமிழ்ச்சமூகத்தில் தொடக்கத்தில் நிலத்தை நான்கு வகையாகப் பிரிந்து ‘நானிலம்’ எனப் பெயரிட்டனர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப்படும். பிற்காலத்தில் ஐவகை நிலங்களாக பாகுபடுத்தப்பட்டுள்ளதை மதுரைக்காஞ்சி எடுத்துரைக்கிறது. ஐந்நிலத்திற்கும் முதற், கரு, உரிப்பொருள் சுட்டப்பட்டுள்ளன. கருப்பொருளானது சில நேரங்களில் நிலத்திற்கு நிலம் மாறுபடும் தன்மைக் கொண்டது. பரிசில் பெற்று வந்த பாணன் பரிசில் பெற விரும்பும் பாணனிடம் இன்ன மன்னனிடம் செல் என்று வழிப்படுத்துவதன் மூலமாக அன்றைய காலகட்ட நில அமைப்புகளையும் அங்கு வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்களையும் உணர்த்தும் விதமாக சிறுபாணனின் பயணம் அமைந்துள்ளது.

சிறுபாணன் பயணம் நல்லுரிலிருந்து நல்லியக்கோடனைக் காணப் பாலைநிலப் பெருவழியில் சிறிய யாழையுடைய பாணன் தன்சுற்றத்துடன் பரிசில் பெறச்சென்றுள்ளான் என்பதை கீழ்வரும் பாடல் அடிகள் எடுத்துரைக்கிறது.

“வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப

வேனில் நின்ற வெம்பத வழிநாள்

கலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப்

பாலை நின்ற பாலை நெடுவழிச்

சுரண்முதல் மராஅத்த வரிநிழல் அசைஇ” (சிறுபாண் 8-12)

இளவேனிற் காலமானது முடிந்து சூரியன் கடுமையான கதிர்களை வீசிக்கொண்டு இருக்கும் படியாக முதுவேனிற்காலமானது ஆரம்பமானது. அத்தகைய முதுவேனிற்கால வெம்மையினால் பாலை நிலத்து கடப்ப மரமானது கோடுகோடுகளாயிருந்த நிழலை தந்தன. பாலைத் தன்மை நிலைப்பெற்ற அவ்விடத்தில் சிறுபாணன் தனது களைப்பு நீங்கும்படியாக அவனது சுற்றத்தோடு தங்கிச் செல்கிறான்.

நல்லியக்கோடனைக் காண மூன்று திணைகளையும் கடந்து சென்றால் பிறர் அறியாத வகையில் பல்வேறு வளங்களையும், உயர்வான மலைகளால் சூழப்பட்ட நிலத்தின் தலைவன் நல்லியக்கோடனை நாடிச் சென்றால் இல்லை என்று கூறாத அளவிற்கு பரிசு பொருட்களை வழங்குவான் என்று சிறுபாணன், தன் எதிர்பட்ட மற்றொரு பாணன் சமூகத்தை ஆற்றுப்படுத்தியுள்ளான். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் போன்ற நிலங்களைக் கடந்து அலைகுடிகளாக இடம்பெயர்ந்து நல்லியக்கோடனை நாடிச் சென்ற பாணனின் வறுமை நிலையினைப் போக்கி கொள்வதற்காக பாண் சமூகம் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து அலைகுடிகளாக வாழ்ந்துள்ளனர் என்ற செய்தியை சிறுபாணாற்றுப்படையின் மூலம் அறியமுடிகிறது.

முடிவுரை

சங்ககால மக்கள் காலம் காலமாக தாங்கள் வாழ்ந்த வாழ்விடப் பரப்பை விட்டு தன் வாழ்க்கை சூழலுக்கேற்ப மலைப்பகுதிகள், ஆற்றுப்பகுதிகள், நீர்நிலைகள், மேட்டுப்பகுதிகள், விவசாய நிலங்கள், கடல் பகுதிகள், பாலைவனப் பகுதிகள் என பிரிதொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர்.

இடம்பெயர்தல் என்பது சங்க இலக்கியங்களில் திணையின் அடிப்படையில் வணிகத்தின் போதும், பொருளீட்டலின் படியும், தூதுப் பிரிவின் போதும் திணைக்குடிகளும், அலைகுடிகளும் இடம் பெயர்ந்துள்ளதை அறிய முடிகிறது.

சிறுபாணர்கள் ஒய்மாநட்டு நல்லியக்கோடனை காண்பதற்காக நெய்தல், முல்லை, மருதம் முதலான திணைகளைக் கடந்து அலைகுடிகளாக வாழ்ந்துள்ளதை சிறுபாணாற்றுப்படையின் பாடலடிகள் எடுத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சங்க இலக்கியத்தில் புலம்பெயர்ந்த என்ற சொல் நிலம்பெயர்ந்தாகவே சமகால ஆய்வுப்போக்கு முன்வைத்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. பாணர்களின் வாழ்க்கை வறுமை நிலைப்பட்டதாகவும் உறைவிடங்கள் அற்று அலைகுடிகளாக வாழ்ந்துள்ளதை சிறுபாணற்றுப்படை எடுத்துரைத்துள்ளது. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று பரந்த உள்ளம் கொண்ட பாணர்களின் உள்ளத்தைக் காணமுடிகிறது.

பயணம் என்பது மனித வாழ்வில் ஓர் இன்றியமையாத செயல்பாடாகும். மனிதன் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லத் தொடங்கினானோ அன்றே பயணம் மேற்கொள்ளுதல் தொடங்கி விட்டது. ஆகவே சிறுபாணாற்றுப்படையில் காட்சிப்படுத்தும் பயணக் கூறுகள் இடம்பெயர்வாக கையாளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுபாணன் சிறுபாணாற்றுப்படையில் தன்னுடைய வறுமையை போக்குவதற்காகவே இடம்பெயர்ந்துள்ளான் என்பதை அறியமுடிகிறது .

பார்வை நூல்கள்

1. ஆனந்தகுமார்.ப, புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பனுவல்களும் மதிப்பீடுகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2018

2. காந்திதாசன்.க, சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2011

3. சந்திரசேகரன்.கா, இடப்பெயர்வும் வரலாறும், ஆய்த எழுத்து - காலாண்டிதழ், ஏப்ரல் 2015.

4. சாமுவேல் சுதானந்தா நல்லூர் நத்தத்தனாரின் சிறுபாணாற்றுப்படை, நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2019.

5. சீனிவாசன்.ச, புலம்பெயர் தமிழர்கள் (வாழ்வு - இருப்பு - படைப்பு), பாலாஜி இண்டர் நேஷனல் பதிப்பகம், புதுதில்லி, 2022.

6. சுப்பிரமணியன்.கா, சங்க கால சமுதாயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1982.

7. சுப்பிரமணியன்.ச.வே, (உரை) சங்க இலக்கியம் மூலமும் உரையும் பத்துப்பாட்டு, கோவிலூர் மடாலய பதிப்பு, சென்னை, 2022.

8. செல்வகுமாரன்.சு, ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் பன்முக வாசிப்பு, காவ்யா பதிப்பகம், சென்னை, 2015.

9. பக்தவத்சல பாரதி, பாணர் இனவரைவியல், அடையாளப் பதிப்பகம், சென்னை, 2015.

10. பக்தவத்சலபாரதி, சங்க காலத் தமிழர் உணவு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2021.

11. பவானந்தம் பிள்ளை.ச, பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2016.

12. மயிலை சீனி.வேங்கடசாமி, சிறுபாணன் சென்ற பெருவழி, தமிழ் பண்பாடு மறு பதிப்பு, 1961.

13. ஜஸ்டின் செல்வராஜ்.சி, சமூகப் பண்பாட்டு நோக்கில் இடம்பெயர்தல், தமிழ்த்தடம் ஆய்விதழ், நவம்பர் 2022.

14. இராசமாணிக்கனார். மா, பத்துப்பாட்டு ஆராய்ச்சி, சாகித்திய அகதாமி, சென்னை, 2016.

- கா.சிலம்பராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - 624 302