சக்கரவாளக் கோட்ட அமைவிடம்
மணிமேகலைக் காப்பியத்தில் சக்கரவாளக் கோட்டம் உரைத்தகாதை இடம் பெறுகிறது. சக்கரவாளம் என்பது உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு பூவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை ஆகும். அதில் மயனால் நிருமிக்கப்பட்ட சக்கரவாளக் கோட்டம் உள்ளது. இந்தச் சக்கரவாளக் கோட்டம் - பிணங்களை இடுகின்ற புறங்காட்டின் மதில் புறத்து உள்ளது"(6:201-204). எனவே சக்கரவாளக் கோட்டம் என்பது புத்தபிரானின் பாதபீடிகை உள்ள உவவனத்தின் மேற்றிசைக் கண்ணும் (6:21-25) சுடுகாட்டுக் கோட்டம் சக்கரவாளக் கோட்டத்தில் எயிற்புறமாக உள்ளது என மணிமேகலை காட்டுகிறது. இச்சக்கரவாளக் கோட்டத்தை நெடுநகரில் உள்ளோர் எல்லாம் சுடுகாட்டுக் கோட்டம் என்றே அழைக்கின்றனர்.
பெருந்தவமுடைய முனிவர் வாழும் பகுதி (மணி (15:31) அது துக்கத்தைப் போக்கும் குற்றமற்ற பெருந்தவத்தோர் உறையும் சக்கரவாளக் கோட்டம். அதன்கண் பசியால் துன்புற்றோர், அரும்பிணி உற்றோர்க்கு உணவளிக்கும் உலகஅறவி உண்டு என்பதை,
“துக்கந் துடைக்கும் துகளறு மாதவர்
சக்கர வாளக் கோட்டமுன் வாங்கலில்
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
உலக வறவி ஒன்றுண் டதனிடை
ஊரு ராங்கண் உறுபசி உழந்தோர்
ஆருமின்மையின் அரும்பிணி யுற்றோர்
இடுவோர்த் தேர்ந்தாங்க கிருப்போர் பலரால்
(மணி. 17: 75-82)
என்ற அடிகள் காட்டுகின்றன. கந்தபுராணம் சக்கரவாளக் கோட்டம் குறித்துக் கூறுகிறது இதனை,
சூழ்ந்து நிற்குஞ் சக்கரவாளச்சையம் (கந்த.பு.அண்டகோ.20)
என்ற அடியால் அறிய முடிகிறது.
அறத்தோர் புறத்தோர் வெளி
புறங்கடை, புறங்காடு, புறங்குடி ஆகியவற்றை இழிவாகச் சாத்தனார் கருதுகிறார். இவ்வெளிகளில் மாதவர் உறையும் பள்ளியோ, பீடிகையோ, அறவிகளோ இல்லை. அகத்துக்கு எதிரான பகுதியிலேயே அவை அமைகின்றன.
மணிமேகலை சமயக்கணக்கர் கூறிய திறங்களைக் கேட்டபின் வஞ்சி நகரை நோக்கினாள். அவளுக்குத் தன்தாய் மாதவி, சுதமதி அறவணவடிகள் ஆகியோர் நினைவு உண்டாயிற்று. உடனே வஞ்சி மாநகர்க்குள் சென்று அதன் புறஞ்சேரியும் அகழியும் அரணும் பல்வகைத் தெருக்களும் மன்றமும் கண்டாள். பின்பு பௌத்த ஞானிகள் உறையும் தவப்பள்ளி அடைந்தாள். அவள் செல்லும் வழியில் ஊருக்கு வெளியே புறஞ்சேரி அமைந்திருந்தது.
பசுவால் தாக்குண்ட பார்ப்பனன் ஒருவன் சரிந்த தன் குடலைக் கையிலேந்தி சமணர்களிடம் அடைக்கலம் கேட்கிறான். அறவோர் யாரும் உளரோ எனப் புறவோர் வீதியில் புலம்புகிறான். யாரும் காப்பாற்றாதபோது அகத்தோரான் மாதவர் உறைவிடத்தில் உள்ள சங்கதருமன் எனும் புத்த தவமுனி அவனைக் காக்கிறார். புறம் துன்பம் நிறைந்தது. அதற்கு எதிர்நிலையிலான புத்த மாதவர் உறைவிடம் இன்பம் தருவது என்ற கதையாடலை மணிமேகலை கட்டமைக்கிறது.
உதயகுமரனுக்கு அஞ்சிய மணிமேகலை பளிக்கறையினுள் புகுந்து ஒழிந்து கொண்டாள். அவளுடன் நின்ற சுதமதியிடம் மணிமேகலா தெய்வம் வாடி நிற்பதற்கான காரணத்தை வினவியது. உதகுமரன் மணிமேகலையை விரும்பி வந்தததைச் சுதமதி தெரிவித்தாள். மணிமேகலை இருக்கும் இடம் அறத்தோர் வனமென்பதால் தணியாத நோக்கம் கொண்ட அரசிளங்குமரன் அகன்றான். ஆயினும் புறத்தோர் வீதியில் அகப்படுத்தி விடுவான். எனவே முனிவர்களின் இருப்பிடமாகிய சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்லுக. சென்றால் ஒரு போதும் யாதொரு துன்பமும் அணுகாது" என்று மணிமேகலா தெய்வம் கூறியதை,
'அறத்தோர் வனமென் றகன்றன னாயினும்
புறத்தோர் வீதியிற் பொருந்துத லொழியான்
பெருந்தெரு வொழித்திப் பெருவனஞ் சூழ்ந்த
திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி
மிக்க மாதவர் விரும்பிருறையும்
சக்கர வாளக் கோட்டம் புக்கால்
கங்குல் கழியினுங் கடுநவை யெய்தா
தங்க நீர்ப் போமென் றருந்தெய்வ முரைப்ப"
(மணி. 6:19-26)
என்ற அடிகள் உணர்த்தும். மேற்கண்ட அடியினுள், ‘அறத்தோர் வனம்’ என்றது துறவிகளின் வாழ்விட வெளியேயாகும். புறத்தோர் வீதி என்பது அவர்களுக்குப் புறமாகவுள்ள இல்லறத்தார் வாழும் வெளியைச் சுட்டுகிறது. இங்கு அறத்தோர் புறத்தோர் வாழும் வெளியானது வனம் ஙீ வீதி என்று முரண்பட்டு அமைந்துள்ளது. இங்கு புறவெளி என்பது துன்பத்தின் அடையாளமாகவும், அகவெளி என்பது துன்ப நீக்கத்தின் அடையாளமாகவும், மணிமேகலை கருதுகிறது. மணிமேகலையை அகப்படுத்திக் கொள்ளும் வெளியாகப் புறவெளி விளங்குவதைப் 'பொருந்துதல் ஒழியான்' (மணி. 6:20) என்ற தொடர் சுட்டுவது கருதத்தக்கது. ஆனால் அறவோர் வனம் இதற்கு முரண்பட்டதாக உதயகுமரனால் மணிமேகலையை அகப்படுத்த முடியாத வெளியாகவும் விளங்குகிறது.
முனிவர்கள் உறையும் சக்கரவாளக் கோட்டம் புனித வெளியாகவும் புறத்தோர் வீதி புறவெளியாகவும் கொள்ளப்படுகிறது. புறவெளியின் துன்பத்தைத் தவிர்க்க பௌத்தப் புனித வெளியான சக்கரவாளக் கோட்டத்தை மணிமேகலை முன்வைக்கிறது. ஆடவரின் கொடுமைகளிலிருந்து சுதமதி, மணிமேகலை ஆகிய இரு பெண்களுக்கான புகலிடமாகச் சக்கரவாளக் கோட்டம் விளங்குகிறது.
வைதிகவெளி
மணிமேகலையில் காட்டப்படும் சக்கரவாளக் கோட்டத்தில் கோதமை, சார்ங்கலன் பாத்திரங்கள் வழியாக வைதிகவெளி சுட்டப்படுகிறது. வைதிகவெளி நெகிழ்வுத்தன்மை கொண்டதாகக் காட்டப்படுகிறது. ஒருவர் செய்யும் பாவத்தினைப் போக்க கழுவாய் செய்தல், சடங்குகள், வேள்விகள் ஆகியற்றின் மூலம் தத்தம் வினைகளைப் போக்கிக் கொள்ளலாம் என்பது வைதிக வினைக் கொள்கையாகும்.
இவ்வைதிக வினைக்கொள்கையானது சக்கரவாளக் கோட்டத்தில் கோதமையின் மூலம் வெளிப்படுகிறது. தன் மகன் சார்ங்கலன் இறந்ததால் அவனுக்கு உயிர் கொடுக்க சம்பாபதியைக் கோதமை வேண்டுகிறாள். அந்தணர்களின் நான்கு வேதங்களும் முடிவாகத் தேவர்கள் வரந்தருவர் என்பதை
நான்மறை யந்தணர் நன்னூ லுரைக்கும்
மாபெருந்தெய்வ நீயரு ளாவிடின்
(மணி. 6 : 169-170)
என்ற அடிகளில் கோதமை கூறுகிறாள். அதற்குச் சம்பாபதி, ஊழி முதல்வனான புத்ததேவன் நீங்கலாகச் சக்கரவாளக் கோட்டத்தில் உள்ள தேவர்களால் இறந்த உன் மகனின் உயிரை மீட்டுத் தருதல் இயலாது என்று கூறி வைதிக வினைக்கொள்கையை பௌத்தம் ஏற்காத நிலையை விளக்குகிறாள். மேலும் கோதமை தன் உயிர் கொண்டு மகன் உயிரை மீட்டுத் தருமாறு சம்பாபதியைக் கேட்கிறாள். அப்பொழுது சம்பாபதி அவ்வாறு செய்வது கொலை புரிவதை அறம் என்று கூறும் கொடுமையான தொழிலைச் செய்யும் மக்களின் துன்பம் தரும் பொய்யுரையாகும் என்பதை,
"ஆங்கது கொணர்ந்து நின் ஆரிடர் நீக்குதல்
ஈங்கெனக் காவதொன் றன்றுநீ யிரங்கால்
கொலையற பாமெனுங் கொடுந்தொழின் மாக்கள்
அவலப் படிற்றுரை யாங்கது மடவாய்"
(மணி. 6 : 160-163)
என்னும் அடிகளில் சம்பாபதித் தெய்வம் கூறி வைதிகத்தை மறைமுகமாகச் சாடுகிறது. யாகத்தில் உயிர்ப்பலி கொடுத்து அதன் மூலம் புண்ணியத்தைப் பெறுவது வைதிகக் கொள்கையாகும். அதனை எதிர்த்தே கொல்லாமை அறம் என்னும் பௌத்த சமய வெளியைச் சம்பாபதித் தெய்வம் நிலை நாட்டுகிறது.
மரபுவெளி மாற்றம்
சக்கரவாளக் கோட்டமுரைத்த காதையில் காடமர்ச்செல்வி பற்றிய குறிப்பு வருகிறது. காவல் உடைய மதில்கள் சூழ்ந்த பேய்கள் நடமாடுகின்ற அரிய இடத்தில் தளராத உள்ளத்தொடு உயிராகிய கடனைக் கொடுத்தவர்களின் தலைகள் தொங்குகின்ற நீண்ட மரங்கள் தாழ்ந்து புறத்தே சூழப்பெற்று பீடிகை ஓங்கிய முன்றிலை உடைய காடமர் செல்வியின் பெரிய கோயில் உள்ளது. காடமர்செல்வியின் கோயிலைக் காட்டும் சாத்தனார் தொடர்ந்து உயர்ந்த கோட்டங்களைக் காட்டுகிறார். இதனை
"உலையா உள்ளமோ டுயிர்க்கடன் இறுத்தோர்
தலைதூங்கு நெடுமரந் தாழ்ந்துபுறஞ் சுற்றிப்
பீடிகை யோங்கிய பெரும்பலி முன்றில்
காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்"
(மணி. 6 : 50-53)
என்ற அடிகளால் அறியலாம்.
புறவெளியான கானகத்தோடும் போர்க்கள வெளியோடும் தொடர்புடைய காடமர் செல்வியைச் சுடுகாட்டு வெளியோடு சாத்தனார் தொடர்புபடுத்துகிறார். பண்டை இலக்கியத்தில் முருகனோடும் தாய்த்தெய்வ மரபோடும் இணைக்கப்பட்ட காடமர் செல்வியைத் துன்பம் மிக்க வெளியெனக் கொள்ளப்படும் சுடுகாட்டுக் கோட்ட வெளியில் உறையச் செய்கிறார். பெண் தெய்வச் சமயநெறிக்கு எதிராக பௌத்த வெளியைக் காட்டுவதன் பொருட்டே இச்சித்தரிப்பு அமைகிறது.
கொற்றவை எதிர்ப்பு
மணிமேகலையில் நிலையாமையைச் சுட்டும் பொருட்டுச் சக்கரவாளக் கோட்டம் கூறப்பட்டுள்ளது. இறந்தோர் வெளியில் நால் வருணப்பாகுபாடு நிலவுவதைச் சக்கரவாளக் கோட்டம் வருகிறது. இச்சுடுகாட்டுக் கோட்டத்தில் இறந்தவர்களைப் புதைக்கும் இடங்கள் அவரவரின் தகுதிகளுக்குத் தக்கவாறு மாறுபடுகின்றன. இறந்தவர்களுக்கு எடுக்கும் கோட்டத்தில் தவத்தோர்க்கு முதலிடம் தரப்படுகிறது. அரசர், கணவன் இறந்தபின் அவர்களுடன் இறந்த கற்புடை பெண்கள், நால்வகை மரபினர் என்று அவர்களுக்கான புதைத்த இடத்தில் அவர்களின் தகுதிக்கு ஏற்ப குறுகிய வடிவிலும் உயரமான வடிவிலும் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வெளிகள் அக்காலச் சமூகப் படிநிலைகளைக் காட்டுகின்றன.
"அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த
குறியவு நெடியவுங் குன்றுகண் டன்ன"
(மணி. 6 : 54-58)
என்ற அடிகளில் அக்காலச் சமூகப் படிநிலைகள் காட்டப்பட்டுள்ளன. தவத்தோர், அரசர், பெண்கள், நான்கு மரபினர் என்று சமூகக் கட்டமைப்பைச் சக்கரவாளக் கோட்டம் உணர்த்துகிறது.
இதில் கணவன் இறந்தவுடன் இறந்த பெண்களின் நிலை சுட்டப்படுவதால் உடன்கட்டை ஏறும் வழக்கம் மணிமேகலை காலத்திலும் தொடர்ந்ததை அறிய முடிகிறது. அவரவர் தகுதிக்கேற்ப குறியவும், நெடியவும் கோட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் வருணப்பாகுபாட்டின் படியும் இறந்தவர்களுக்குக் கோட்டம் அமைத்தனர். எனவே அக்காலத்தில் வருணவெளியை மையமிட்டே சுடுகாட்டில் கோட்டம் அமைத்தனர் என்பது இதன் மூலம் புலனாகிறது. வருணவெளியைக் காட்சிப்படுத்தும் சாத்தனார் அதை விமர்சனம் ஏதுமின்றிக் கடக்கிறார்.
பௌத்தவெளி
இளமை, யாக்கை, செல்வம் ஆகியவை அழியக்கூடியவை. நிலையாதவை, நிலையில்லாத வற்றை நிலையென நினைத்து அவற்றின்மீது பற்றுக் கொள்வதால் வினைகள் ஏற்படுகின்றன. நமது உடல்தான் வினைகள் விளைவதற்கான அடிப்படை. இவ்வினையே நோய், முதுமை, பற்று முதலியவற்றிற்கும் பிற தீமைகளுக்கும் காரணம். எனவே வினை ஏற்படாதிருக்க பற்றற்று வாழ்தலே சிறப்புடையது. அப்பற்றற்ற வாழ்வை அடைய நிலையாமையைப் பௌத்தம் வலியுறுத்துகின்றது. இந்நிலையாமைக்கும் சுடுகாட்டிற்கும் தொடர்புகள் உள்ளன இதனைப் “போதி சத்துவர்கள் நிலையாமையை அறிதல் பொருட்டுச் சுடுகாட்டில் தங்க வேண்டும்” என்று வினய பீடகம் குறிப்பிடுகின்றது. இதன் அடிப்படையில் மணிமேகலைச் சுடுகாட்டுக் கோட்டமாகிய சம்பாபதிக் கோயிலை மணிமேகலைக் காப்பியத்தின் மையமாக அமைந்துள்ளது என்று லி.சிவகுமார் குறிப்பிடுவது சுட்டத்தக்கது. (தமிழ்ச்சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும், ப. 26.)
யாக்கை நிலையாமை
சக்கரவாளக் கோட்டமுரைத்த காதையில் உடலின் தன்மையைப் பற்றி விளக்கும் சாத்தனார் உடலை இழிவானதாகக் காட்டுகின்றார். உடல் என்னும் வெளியை இழிவானதாகவும் கீழானதாகவும் பௌத்தவெளி கட்டமைக்கின்றது. உடல் என்றால் என்ன என்ற கேள்விக்கு மணிமேகலை,
"என்புந் தடியும் உதிரமு மியாக்கையென்
றன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி"
(மணி. 6:107-108)
என்று குறிப்பிடுகிறது. இப்பகுதியில் உடலானது, எலும்பாலும் தசையாலும் இரத்தத்தாலும் (குருதியாலும்) ஆனது என்று குறிப்பிடுகின்றது. இரத்தத்தாலும் சதையாலுமான இந்த உடலில் இருந்து உயிர் நீங்கியவுடன் உடலானது புழுக்கள் குடியிருக்கும் இடமாக மாறிவிடுகின்றது. இந்த உடல் எனும் வெளிமாற்றத்தின் (இடமாற்றம்) மூலம் பௌத்தம் உடலை இழிவானதாக மாற்றியமைக்கின்றது.
ஆணுடல் வெளியைக் காட்டிலும் பெண்ணுடல் வெளி இழிவானதாகக் கட்டமைக்கப் படுகின்றது. ஆண்கள் காமத்தின் மூலம் பற்று கொள்வதற்கு அடிப்படையாகப் பெண்ணுடல்வெளி அமைகின்றது என்று சாத்தனார் கருதுவதன் மூலம் ஆணுடல் வெளியைக் காட்டிலும் பெண்ணுடல் வெளி இழிவு எனக் கட்டமைக்கிறார்.
இதனைச் சக்கரவாளக் கோட்டமுரைத்த காதையில் வெளிப்படுத்துகின்றார். புழுக்கள் அரித்துக் கொண்டிருந்த ஊன் பிண்டம் என்று பெண் உடல் வருணனை 109 அடி தொடங்கி 119 வது அடி வரை நீள்கிறது. யாக்கை நிலையாமையை விளக்கும் இக்கருத்துக்கள் மானிடர் யாக்கையின் மீது வைத்திருக்கும் பற்றினை அகற்றவும் மீளவும் பற்று கொள்ளாதிருக்கவும் வழி செய்கிறது. இது வெளிப்படையாக யாக்கை நிலையாமைத் தன்மையைக் கூறினும் சாத்தனார் விவரிப்பது ஒரு பெண்ணையே ஆகும். யாக்கை நிலையாமையை மட்டுமே கூறியிருந்தால் யாக்கையின் பொதுப் பண்பையே சுட்டியிருக்கலாம்.
ஆனால் பெண்ணை முன்னிலையாக்கிக் கூறியிருப்பது பெண்ணுடல் வெளி மீது இருக்கும் ஆசையை (பற்றினை) அகற்றுவதற்கே ஆகும். பெண் உடல்வெளி மீது கொள்ளும் காமமின்மையை முதன்மைப்படுத்தியே சாத்தனார் கூறியிருக்கின்றார். காமத்தை அழிக்கவும் உடல் மேல் இருக்கும் பற்றைப் போக்கவும் பெண்களின் உடல் வெளியைத் தீமைக்குரிய குறியீடாகவும் இழிவான வெளியாகவும் சாத்தனார் காட்டுகிறார். சிற்றின்பத்தையும் காமத்தையும் களைவதற்கே சுடுகாட்டுக் கோட்டத்தில் பெண் சித்தரிப்பு புனையப்பட்டுள்ளது.
செல்வம் நிலையாமை
செல்வம் நிலையில்லாத தன்மை வாய்ந்தது. செல்வத்திற்கும் வெளிக்கும் தொடர்புகள் உள்ளன. செல்வந்தர்கள் பெரிய இடங்களில் வாழ்கின்றனர். அதாவது பெரிய வெளியைத் தமக்குரியதாக வைத்துக் கொள்கின்றனர். ஆனால் ஏழைகள் எளிய குடிசைகளிலும் வீடுகளிலும் வாழ்கின்றனர். அவர்களுடைய வெளி சுருங்கியதாகவும் சிறிதாகவும் அமைகின்றது. இந்த வெளிமாற்றத்தை செல்வம் உருவாக்குகின்றது. ஆனால் இந்தச் செல்வம் மனிதனின் இறப்பிற்குப் பிறகு உடன் வருவதில்லை. இறந்த செல்வந்தனும் ஏழையும் நன்காட்டில் சமமாகவே எரிக்கப்படுகின்றனர். எனவே நன்காடு இந்த வெளிமாற்றத்தை நீக்கி ஏழையையும் செல்வந்தர்களையும் சமப்படுத்திவிடுகின்றது. இதனை வினைக்கோட்பாட்டின் மூலம் எடுத்துக்காட்டும் மணிமேகலை நல்ல அறங்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
இதனைத் தவநெறியில் தங்கியிருக்கின்ற துறவிகள் மிகவும் பெருத்த செல்வமுடையோர். மிகவும் அண்மையில் குழந்தைகளை ஈன்ற இளம் பெண்கள், இளஞ்சிறார், இளையவர், முதியவர் என்றெல்லாம் கருத மாட்டாதவன் எமன். கொடுந்தொழிலனனான அவன் அவ்வாறு பலரையும் கொன்று குவிக்க, அவர்களின் உடல்களை நெருப்பு தின்பதைக் கண்டு மிக்க பெருஞ்செல்வம் ஆகிய கள்ளையுண்டு விளையாடுதலைச் செய்து மேன்மை தரும் நல்லறங்களை விரும்பாமல் வாழ்கின்றவர்களும் மக்களில் இருக்கின்றார்கள். அத்தகையவர்களைக் காட்டிலும் அறிவற்றோர் வேறு யாரும் இருக்க முடியாது.
தொகுப்புரை
சக்கரவாளக் கோட்டத்தில் புறவெளி என்பது துன்பத்தின் அடையாளமாகவும், அகவெளி என்னும் அறவோர் வெளி துன்ப நீக்கத்தின் அடையாளமாகவும் மணிமேகலை கருதுகிறது. புறவெளியின் துன்பத்தைத் தவிர்க்க பௌத்தப் புனித வெளியான சக்கரவாளக் கோட்டம் முன்வைக்கப்படுகிறது. யாகத்தில் உயிர்ப்பலி கொடுத்து அதன் மூலம் புண்ணியத்தைப் பெறுவது என்னும் வைதிக வெளிக்கு மாற்றாகக் கொள்ளாமல் அறம் என்னும் பௌத்த சமவெளியைச் சம்பாபதித் தெய்வம் நிலைநாட்டுகிறது.
தாய்த் தெய்வ மரபோடு இணைக்கப்பட்ட காடமர் செல்வியைத் துன்பம் மிக்க வெளியான சுடுகாட்டுக் கோட்ட வெளியில் சாத்தனார் உறையச் செய்கிறார். பெண் தெய்வச் சமய நெறிக்கு எதிராக பௌத்தவெளியைக் காட்டுகிறார். மணிமேகலை காலத்தில் வருண வெளியை மையமிட்டு சுடுகாட்டுக் கோட்டம் அமைத்தனர் என்பது புலனாகிறது. காபாலிகம், விரதயாக்கையர், பிணந்தின்போர் ஆகியோர் சக்கரவாளக் கோட்டத்தில் புறச்சமயவாதிகளாகக் கருதப்படுகின்றனர். பௌத்த வெளியில் நிலையாமை தத்துவத்தை உணர்த்தவே சக்கரவாளக் கோட்டம் முன்வைக்கப்படுகிறது. ஆண் வெளியைக் காட்டிலும் பெண்ணுடல் வெளியை இழிவானதாக சாத்தனார் கட்டமைக்கிறார்.
துணைநூற்பட்டியல்
1. வேங்கடசாமி நாட்டார், ந.மு, மணிமேகலை, சாரதா பதிப்பகம், சென்னை - 14, நான்காம் பதிப்பு
2. பெருமாள். அ.கா, தமிழகப் பண்பாடு, நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
3. இராசமாணிக்கனார். மா, தமிழ்மொழி இலக்கிய வரலாறு, பூங்கொடி பதிப்பகம், சென்னை - 4, ஐந்தாம் பதிப்பு (1996)
4. தமிழச்சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும் (முனைவர் பட்ட ஆய்வே) லி. சிவக்குமார், (ஏப்ரல் 2019)
5. பட்டுச்சாமி ஓதுவார்.தி.(ப.ஆ), கந்தபுராணம், திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் பதிப்பு, மார்ச்சு- 1953.
- சு.சதீஷ்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (த), (பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது), திருச்சிராப்பள்ளி- 620 023.