இசை சிகிச்சை என்பது ஒப்பீட்டளவில் சமீபத்தில் ஒரு தொழிலாக நிறுவப்பட்டாலும் இசைக்கும் சிகிச்சைக்கும் இடையேயான தொடர்பு புதிதல்ல. இசை சிகிச்சை என்பது ஒரு பறந்த துறை. மனித செயல்பாட்டின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட களங்களில் வாடிக்கையாளர் தேவைகளை நிவர்த்தி செய்ய இசை சிகிச்சையாளர்கள் இசை அடிப்படையிலான அனுபவங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இசை மருத்துவம் பொதுவாக மருத்துவமனைகள், புற்று மையங்கள், பள்ளிகள், மது மற்றும் போதைப் பொருள் மீட்புத்திட்டங்கள், மனநல மருத்துவமனை, முதியோர் இல்லங்கள், சீர்திருத்தப் பள்ளிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.lady listening musicஇசை சிகிச்சையை ஒலி குணப்படுத்துதல் என்றும் விவரிக்கலாம். இச்சிகிச்சை உடல் மற்றும் மனநலனை வழங்குவதை நலவாழ்வை மீட்டெடுக்க, பராமரிக்க, மேம்படுத்துவதற்கான நோக்கமாகக் கொண்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் மன அழுத்த நிவாரணம் முதல் மறதி நோய் வரை தங்கள் நோயாளிகளுக்கு உதவ இசை சிகிச்சையாளர்கள் தங்கள் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். பதட்டம், மனச்சோர்வு, மனநலக் கோளாறுகள் (ஸ்கிசேர்ஃப்ரினியா) கண்டறியப்பட்ட நோயாளிகளின் மீதான ஆய்வுகள் இசை சிகிச்சைக்குப் பிறகு மனநலத்தில் முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.

பல நூற்றாண்டுகளாகவே இசைக்கு நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்று நம்பப்பட்டு வந்திருக்கிறது. இது குறித்து இலக்கியத்தில் இசைக் கலைஞர்கள் போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற குற¤ப்பு வருகிறது. காயமுற்ற வீரர்களுக்குத் துன்ப வேதனையினை மாற்றி மனதிற்கு இதமளிக்கும் இசைக¢ கருவிகள் ஒலிக்கப்பட்டன. இத்துடன் யாழினால் பல்லிசை இசைத்தும், ஆம்பல் என்னும் குழலை ஊதியு¢ம், காஞ்சிப் பண்ணைப் பாடியும் மருத்துவம் செய்தனர் என்பதை

“தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ

வாங்கு மருப்பு யாழொடு பல்லியங் கரங்கக்

கைபயப் பெயர்த்து மையிழுது இழுகி

ஐயவி சிதறி ஆம்பல் ஊதி

இசைமணி எறிந்து காஞ்சி பாடி” (புறம் 28)

என்று புறப்பாடல் குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் உடலாலும் மனதாலும் துன்பமடைந்தவர் லட்சக்கணக்கானோர். அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இசை மருத்துவம் மருத்துவ மனைகளில் வழங்கப்பட்டது. இதற்காகவே இசைக் கலைஞர்கள் மருத்துவமனைகளில் பணியில் அமர்த்தப்பட்டனர். ஏனெனில் வலியைப் போக்க இசை ஒரு மாற்று மருத்துவமாக பயன்படுத்தப்பட்டது.

இசை மருத்துவம் என்றால் என்ன

இசை மருத்துவம் என்பது சரியான முறையில் இசையைப் பயன்படுத்தி பயிற்சி பெற்ற இசைக்கலைஞர்கள் மூலம் ஒருவரின் அறிவாற்றல், சமூக உணர்ச்சி மற்றும் உடற் செயல்பாடுகளைச் சீரான நிலைக்குக் கொண்டு வருவது ஆகும். இசையைக் கேட்கும் போதும் கவனிக்கும் போதும் நம் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன என்றாலும் எல்லா இசைகளாலும் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்தி விட முடியாது.

ஆனால் வாழ்க்கைச் சுழற்சியில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு தற்காலிக ஒய்வு (Pause Button) தேவைப்படுகிறது. மனதை லேசாக்குகிற, அமைதிப்படுத்துகிற தற்காலிக ஓய்வு அளிக்கும் அந்த இடத்தை இசையைத் தவிர வேறு எதனாலும் நிரப்ப முடியாது. இதுவே பலருக்கு மயங்க வைக்கும் மந்திரசக்தியாகவும் உள்ளது. மேலும் மூளையை நலமுடன் வைத்திருந்து மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது.

பெரும்பாலும் இசை மருத்துவம் இசைக் கருவிகள் மூலம்தான் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால் வார்த்தைகள் நம் எண்ணத்தைத் தூண்டுபவைகள். வார்த்தைகள் இல்லாமல் இசைக்கருவிகளின் ஒலியைக் கேட்கும் போது அது சிந்தனையைத் தூண்டுவதில்லை.

இசை மருத்துவம் இரண்டு வகையாக கொடுக்கப்படுகிறது. ஒன்று செயல் முறை. இம்முறையில் நோயாளிகள் இசை சிகிச்சையில் பங்கேற்க வேண்டும் அல்லது இசையை உருவாக்கும் செயலில் ஈடுபட வேண்டும். கிளாசிக்கல், ராக், ஜாஸ், நாட்டுப்புற இசை போன்ற பதிவு செய்யப்பட்ட அல்லது நேரலை வகைகளைக் கேட்பதை ஏற்றுக்கொள்ளும் இசை சிகிச்சை அடங்கும். (ரிசெப்டிவ் மியூசிக் தெரபி) இது மனநிலையை மேம்படுத்தலாம், மன அழுத்தத்தைக் குறைக்கலாம், வலியைக் குறைக்கலாம், தளர்வை அதிகரிக்கலாம், பதட்டத்தைக் குறைக்கலாம். இச்சிகிச்சையின் போது கார்டிசாலின் அளவு குறைகிறது என்பது ஒரு முக்கியமான அளவுகோல் ஆகும். இரண்டாவதான செயலற்ற முறையில் சிகிச்சை பெறுபவர் இசையை கவனித்தால் மட்டும் போதுமானது. இம்முறையே மருத்துவத்துறையில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வகை சிகிச்சை (ஆக்டிவ் மியூசிக் தெரபி) சுறுசுறுப்பான இசை சிகிச்சை என்று கூறப்படுகிறது. இதில் குரல் கொடுத்தல், பாடுதல், இசைக்கருவிகளை வாசித்தல் பாடல் எழுதுதல், இசையமைத்தல் அல்லது நடத்துதல் ஆகியவை அடங்கும். இதில் முதியவர்களுக்கு எளிதான கருவிகளை எப்படி வாசிப்பது என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதனால் அவர்கள் உடல் ரீதியான சிரமங்களை சமாளிக்க முடிகிறது. இது அனைத்துத் தரப்பினருக்கும் குறிப்பாக வயதானவர்கள், ஞாபக மறதி உள்ளவர்களின் நினைவைத் தூண்டுவதற்கு உதவுகிறது.

இசை சிகிச்சையில் உடல் மாற்றங்கள்

பேசும் சிகிச்சையை விட இசை சிகிச்சை மேம்பட்டதாக உள்ளது. ஏனெனில் இசையை கேட்டுக் கொண்டிருக்கும்போது மூளையை (நியோ கார்டெக்ஸ்) செயல்பட வைக்கிறது. இது மனிதர்களை அமைதி நிலைக்குத் தள்ளுகிறது. மேலும் திடீரென்று உணர்ச்சி வசப்படுவதையும் குறைக்கிறது. இசை கேட்பதால் மன அழுத்தம் குறையும். அவரவரின் வாழ்க்கை முறை விருப்பத்துக்கு ஏற்ப கேட்கலாம். அரைமணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை கேட்பது மிக நல்லது.

90 விழுக்காடு அமெரிக்கர்கள் தினமும் இசை கேட்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. இசை கேட்பது நல்லது. இசையை வாசிப்பது அதைவிட நல்லது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். ஏனென்றால் இசைக் கலைஞர்களின் மூளை பெரியதாகவும் இருந்து உணர்வு பூர்வமானவர்களாகவும் இருப்பார்களாம். இசையை கேட்பவர்களைவிட அதைக் கற்றுக் கொண்டு வாசிப்பவர்களின் மூளையில் சில நல்ல தாக்கங்கள் ஏற்படுகின்றன. மேலும் இசையைக் கற்றுக் கொண்டு உள்வாங்கி அதை வாசிப்பவர்களின் அல்லது பாடுபவர்களின் கவனிக்கும் திறன் அதிகமாகிறது. இதன் காரணமாக ஞாபக சக்தி இவர்களுக்கு அதிகரிக்கிறது. இசையைக் கேட்டு வாசிக்கும்போது கண், காது, கை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அதோடு இசைக் கலைஞர்களின் மூளை இயக்கம் சீராகவும் அதன் செயல்திறன் மற்ற சாதாரண மனிதர்களோடு ஒப்பிடும்போது கூடுதலாகவும் இருக்கிறது.

நமது உடலில் மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசால் ஹார்மோனின் அளவை இசை குறைக்கும். அதோடு மறைமுகமாக நோய் எதிர்ப்பு சக்தியைச் சீரான நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது. இசையைக் கேட்டால் மகிழ்ச்சியாக இருக்க உதவும். உடலில் டோபமின் (கரிம இரசாயனம்) அளவு அதிகரிக்கிறது. இதனாலேயேதான் இசையைக் கேட்கும்போது ஒருவித மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். இதுபோலவே மனிதர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தி நம்பிக்கை உணர்வை உண்டாக்கும் ஆக்சிடோசன் ஹார்மோனை அதிகரித்துச் செய்கிறது.

பொதுவாக இசையை இரண்டு வகைப்படுத்தலாம் ஒன்று முரசொலி (Beat) மற்றொன்று மெல்லிசை (மெலடி). முரசொலி உடல் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும், மெல்லிசை மனதை வருடி அமைதிப்படுத்தும். ஒவ்வொரு நோயாளியின் தன்மைக்கும் ஏற்ப குறிப்பிட்ட தாள லயத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு இசையைக் கேட்க வைத்தால் அவர்களின் குழப்பம், கோபம், சந்தேக மனநிலை போன்றவை எல்லாம் குறையும்.

நோய்க்கான இசை மருத்துவம்

மூளைச்சிதைவு (ALZHEIMERS disease)

ஒரு காலத்தில் மூளைச் சிதைவை சீர்படுத்த முடியாது என்ற நோயை இசையின் மூலம் சீராக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு. தசைகளில் ஏற்படும் வலிகளையும், புற்று போன்ற நாட்பட்ட நோய்களால் ஏற்படும் வலிகளையும் மறக்கடிக்க இசை உதவுகிறது. இத்துடன் இசை Dementia என்ற மறதி நோயை குணப்படுத்தவும் பயன்படுகிறது. இது போலவே கைகளில் நடுக்கம் இருக்கும் பார்கின்சன்ஸ் நோயாளிகளை குறிப்பிட்ட தாள லயத்தில் இசையை கேட்க வைக்கும்பொழுது அவர்களின் உடலில் சீரான இயக்கம் ஏற்பட வழி செய்கிறது. அந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் (ஹைப்பர் ஆக்டிவிட்டி) குழந்தைகளுக்கு அவர்களின் கவனத்தை ஒருங்கிணைக்கவும் சரளமாகக் குழந்தைகளை பேச வைக்கவும் வளர்ச்சி மற்றும் நடத்தையில் மாற்றங்களைக் கொண்டு வரவும் இசை சிகிச்சை பயனளிக்கிறது.

மனச்சிதைவு (Schizophrenia) நோய் உள்ளவர்களுக்கு காதுகளில் ஏதோ குரல் கேட்பது போன்ற பிரமை, மாயக் காட்சிகள் தோன்றும். அவர்கள் காதுகளில் ஹெட்போனை அணிந்து கொண்டு இசை கேட்டால் இந்தப் பிரச்சனைகள் குறையும். ஒரே வேலையைத் தொடர்ந்து செய்வதால் ஏற்படும் சலிப்புணர்வைப் போக்கவும் இசையை ரசிக்கலாம். இசை மருத்துவம் மனம் ஆழ்ந்த நிலைக்கு செல்வதற்கும் உதவுகிறது. முதிர்ந்த வயதில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஓய்வெடுக்கவும், வாழ்வில் ஒரு பரந்த சூழ்நிலையைச் சமாளிக்கவும் சிறந்ததாக இருக்கிறது.

இசை சிகிச்சையாளர்கள் தாள லயம் மற்றும் மெல்லிசையை பயன்படுத்தி மனிதர்களை கால்களைத் தட்ட அல்லது கைகளைத் தட்டச் செய்வதுடன் நடனமாடச் செய்து உடல் ரீதியான உளவியல் ரீதியான சோர்வை நீக்குகிறார்கள். இசை சிகிச்சை புலனுணர்வு வீழ்ச்சியைக் குறைக்கிறது. இசை மருத்துவத்தில் முதுமை, மறதி மற்றும் அல்சைமர் நோயாளிகளுக்கு அதாவது அற¤வுத்திறன் வீழ்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நினைவாற்றலை மேம்படுத்த மொசார்ட்டின் பியானோ இசை (Mozarts piano Sonata) ஒலிநாடாக்களை ஒரு மணி நேரம் கேட்க வைத்து அவர்களின் அற¤வுத்திறனைக் கூட்ட முடியும்.

மன அழுத்தம், மன இறுக்கம், கோபம் எளிதில் உணர்ச்சி வசப்படல் போன்ற நிலைகளைக் கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட மெலடோனின் என்ற வேதிப் பொருளை இசை அதிக அளவில் சுரக்கச் செய்து இவர்களுக்கு ஏற்படும் தூக்கம், பசியின்மை ஆகிய பிரச்சனைகளை தீர்த்து இம்மருத்துவம் மன அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளைவிட அதிகமாக உதவுகிறது. நல்ல இசை தசை நார்களை தளரச் செய்து உடல் இறுக்கத்தைக் குறைக்கிறது. ஒற்றைத் தலைவலி போன்ற கடுமையான வலி கூட இசையைக் கேட்கும் போது கட்டுப்படுகிறது.

இதேபோல மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இசையோடு சேர்ந்து பயிற்சி கொடுக்கும் போது அவர்களது உடலின் ஒருங்கிணைந்த இயக்கத்திறன் கூடுகிறது. பேசும் பயிற்சியை விட பாட்டுப் பயிற்சி அளிக்கும் போது விரைவாகப் பாட, பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.

தூக்கமின்மைக்கு இசை ஒரு அற்புதமான மருந்து. படுக்கச் செல்லுமுன் நல்ல இசையைக் கேட்பது ஆழ்ந்த தூக்கத்திற்கு வழியமைக்கிறது. ஆட்டிசம் என்பது மூளையில் ஏற்படக் கூடிய ஒரு வகைக் கோளாறு ஆகும். இவர்கள் உரையாடுதல், தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றில் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றாலும் இசையில் ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு வாய்மொழி மற்றும் வாய்மொழி அல்லாத தொடர்புகளை கற்றுத் தருவதற்கு இசை சிகிச்சை வழி வகை செய்கின்றன.

மன மயக்கத்தை உண்டாக்கும் இசை உடல் நலனையும் பாதிக்கிறது. கோவில்களில் தீ மிதித்தல், அலகு குத்திக் கொள்ளுதல் போன்ற நோய்களில் தாரை, தம்பட்டை கொட்டுவாத்தியங்கள் இசைக்கப்படுவது மனக்கிளர்ச்சியைத் தூண்டி உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு புதிய வேகத்தை மயக்கத்தை தருகிறது. இதனால் பயம் மறைகிறது. தன்னை மறந்த ஒரு ஆவேச நிலையையே இக்கருவிகள் உருவாக்குகின்றன. மேலும் தூக்கக் குறைவு, குறைந்த நேரத் தூக்கம், தூங்க¤யும் தூங்காதது போன்ற உணர்வு போன்றவற்றிலிருந்தும் இது காப்பாற்றுகிறது.

உடல் நலனை பாதிக்கும் இசை:-

எல்லா இசையும் நோயைக் குறைப்பதில்லை. ராக், மெட்டல் ராக் போன்ற துரித இசைகள் மனக்கிளர்ச்சியை உண்டுபண்ணுவதோடு இரத்த அழுத்தத்தையும் கூட்டுகிறது.

மன அழுத்தம், எரிச்சல், படபடப்பு, தலைவலி போன்ற பலவும் இந்த இசைகளைத் தொடர்ந்து கேட்கும்போது ஏற்படுகிறது. ஆகவே மன இறுக்கம், இரத்தக் கொதிப்பு, இதய நோய்கள், தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய இசையை முற்றிலும் விடுவது நல்லது. ஆகவே இசையில் ஒலியை எந்த அளவுக்கு நாம் கேட்க வேண்டும் என்பதும் எது நல வாழ்வுக்கு உகந்தது என்றும் நினைத்துப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.

நோய் தீர்க்கும் ராகங்கள்:

இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையில் சில ராகங்கள் நோய்களைத் தீர்க்கவும் குறைக்கவும் வல்லன. அவைகளாவன.

இந்துஸ்தானி ராகங்கள்

1. சோகானி ராகம் பொதுவாக தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைபாரத்தைக் குறைக்கும்.

2.           தோடி மற்றும் பூரியா ராகம் இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தவல்லது.

3.           யாமன் கமாஜ் ராகம்: மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்த ராகங்களைத் தொடர்ந்து கேட்கும் போது மனம் இலேசாகும்.

4.           அகிர்பைரவ் ராகம் முடக்குவாதம், மூட்டுவலி, இரத்த அழுத்தம், அஜீரணம் ஆகியவற்றை நீக்கும்.

5.           பைரவி ராகம் முட்டி வலி, மலச்சிக்கல், மூலநோய், தலைவலி ஆகியவைகளைக் குறைக்கும்.

6.           குணகாளி ராகம் பைரவி ராகத்தைப் போலவே வேலை செய்யும்,

7.           ஜவன்பூரி ராகம் மலச்சிக்கல், வாயுத் தொல்லைகள், அஜீரணம், பசியின்மை ஆகியவற்றைத் தீர்க்கும்.

8.           தீபக் ராகம் பசியின்மை, பித்தப்பைக் கற்கள், அஜீரணம் வாயுத் தொல்லைகளக் குறைக்கும்.

9.           தர்பாரி ராகம் தலைவலி, தலைபாரம், மன இறுக்கம், மனக்கலக்கங்களை கட்டுப்படுத்தும் மனதை அமைதிப்படுத்தும்.

10.        குஜாரி தோடி ராகம் எல்லாவகை இருமலையும் கட்டுப்படுத்தும்.

கர்நாடக ராகம்:

1.           பூபாளம் ராகம் அனைத்து விதமான நோய்களையும் கட்டுப்படுத்தும். மனதை மகிழ்ச்சியான நிலைக்குக் கொண்டு வரும். அதிகப்படியான சோம்பல், தூக்கம் இவற்றைக் குறைக்கும்.

2.           நீலாம்பரி ராகம் நிம்மதியான தூக்கத்திற்கு அருமையான ராகம். தூக்க மின்மையால் அவதிப்படுபவர்கள் படுக்கையில் படுத்துக் கொண்டு இந்த ராகத்தைக் கேட்டால் ஆழ்ந்த சுகமான தூக்கம் கிடைக்கும்.

3.           சாமா ராகம் மனதை ஒருமுகப்படுத்தும், பலவிதமான மனநோய்களைக் குறைக்கும்.

4.           பிலகரி ராகம் மன அழுத்தம், மன பாரம், சோகமான மனநிலை ஆகியவற்றை மாற்றும்.

5.           சகானா ராகம், புன்னகவராளி ராகம் இந்த இரு ராகங்களுக்கும் மனதைச் சாந்தப்படுத்தும் தன்மை உண்டு. மேலும் அதிகமான கோபம், ஆவேசம், வன்முறைகளில் ஈடுபடுதல் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்தும்.

6.           கேதாரம் ராகம் மன அழுத்தத்தைக் குறைக்கும், மனதை நல்ல நிலைக்குக் கொண்டு வரும்.

7.           மலையமாருதம் ராகம் அதிகப்படியான தூக்கத்தைக் குறைக்கும். சோம்பலை விரட்டிவிடும்.

8.           வஜவந்தி ராகம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை, மாலை இரு வேளையும் இந்த ராகத்தைக் கேட்டு வந்தால் நரம்புகள், தசைகள் வலுப்படும்.

9.           ஸ்ரீ ராகம் அஜீரணம் மற்றும் பல வகையான வயிற்றுக் கோளாறுகளையும் சரி செய்யும்.

இந்த ராகங்களெல்லாம் நோய் நீங்கவல்லது என்றால், வராமல் தடுக்கக் கூட தினந்தோறும் ஒரு அரைமணி நேரம் இதமான இசையைக் கேட்கலாம். தூங்கப் போவதற்கு முன் இசை தூங்க உதவக்கூடும் என்பது அறிவியல் பூர்வமான உண்மையும் கூட.

- டாக்டர். சு.நரேந்திரன், எழுத்தாளர், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.