தனது வாழ்நாள் முழுவதிலும் அதிகார மையத்தை நோக்கித் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தவர் வே. ஆனைமுத்து. அதிகாரம் ஓரிடத்தில் குவித்து வைக்கப்படுவதைக் கண்டித்ததோடு, அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தி அவரது வாழ்நாள் முழுவதும் போராடினார். தந்தை பெரியாரின் மாணாக்கராக அவருக்கு அக்கலை இயல்பாகவே பயிற்றுவிக்கப்பட்டிருந்தது.

தந்தை பெரியார் முன்னெடுத்த அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு, 18 மாதங்கள் சிறைப்பட்டார் ஆனைமுத்து. ஆனால் அந்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து முன்நகர்த்திச் செல்ல என்ன முயற்சியை எடுத்தோம் என்ற கேள்வியை பெரியாரின் 132வது பிறந்த நாளிலும் பற்றிக் கொண்டு முன்வைக்கிறார்.

நால்வருண ஏற்பாட்டையும், பழைய பழக்க வழக்கச் சட்டங்களையும், ஆகம விதிகளையும் பாதுகாக்கிற விதிகள் 13, 25, 372 ஆகியவற்றை அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்குங்கள் என்று கோரியே 26.11.1957-இல் அரசமைப்புச் சட்டத்தின் இந்தப் பகுதிகளை மட்டும் அச்சிட்டு எரிக்கச் செய்தார் பெரியார். நால்வருணம், பழக்க வழக்கம், ஆகமம் இவற்றைப் பாதுகாக்கும் சட்டத்தை 53 ஆண்டுகளுக்கு முன் எரித்தோம். அதன் காரணமாக, அச்சட்டப்பகுதியை நீக்குகிற முயற்சியில் எத்தனை தப்படி முன்னேறியிருக்கிறோம்? (சிந்தனையாளன் தலையங்கம் செப். 2010).

அதுமட்டுமன்று, இவற்றின் பாதுகாப்பை அப்படியே வைத்துக் கொண்டு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டமும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும் எந்த அளவுக்குப் பயன்படும் என்றும் வினா எழுப்புகிறார். எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்ற அவரது கேள்வி நியாயமானதுதானே?

அதனோடு ஒரு முக்கியமான கோரிக்கையையும் அன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு விடுக் கிறார். தமிழ்நாட்டில் ஓர் ஆண்டு முழுவதும் நடக்கின்ற சுயமரியாதைத் திருமணங்கள், இந்துத் திருமணங்கள் குறித்த புள்ளிவிவரம் இனியாவது தொகுக்கப்பட வேண்டும் என்பதே அது.

ஒற்றை ஆட்சி முறையைத் தொடர்ந்து எதிர்த்தும், இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் பிரச்சினை யைப் பற்றிப் பேசியும் எழுதியும் வந்தவர் ஆனைமுத்து. அவரது உரைகள் தொகுக்கப்பட்டு, ஆங்கிலத்தில் Federalism in Peril என்ற நூலாக வெளிவந்தன.

அரசியலமைப்பின் துணைகொண்டும், உயர்சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் நீதிமன்றங்களைத் துணையாகக் கொண்டும் ஒன்றிய அரசு தொடர்ந்து அச்சுறுத் தலை மேற்கொண்டு வருவதைச் சுட்டிக் காட்டி, அனைவரும் ஒன்றிணைந்து அதிகாரத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது நமது இன்றியமையாத கடமையாகும் என்று இந்நூலில் ஆனைமுத்து அழைக் கிறார். பன்மைத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அவர் காட்டிய உறுதியை இந்நூலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டதைக் கடுமையாக எதிர்த்த ஆனைமுத்து, மாநில அரசு ஒரு படிப்புத் துறையை மாநிலத்தில் அறிமுகப்படுத்துவதும், தலைமை ஆசிரியர் பதவிக்குத் தகுதிகாண் தேர்வு, மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதிகாண் தேர்வு, மருத்துவப் படிப்பில் தேறிய பின்னர் மருத்துவராகப் பதவி ஏற்றிட ஒரு தகுதித் தேர்வு என அடுக்கடுக்காகத் தகுதித் தேர்வுகள் என்பதும் 100-க்கு 85 விழுக்காட்டுப் பேராக உள்ள பிற்படுத்தப்பட்ட நாட்டுப்புற ஏழை மக்களுக்குப் பின்ன டைவே ஆகும் (சிந்தனையாளன் 01.10.2018) என்பது அவரது ஆணித்தரமான கருத்து.

தோழர் ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு தொடங்கும் இந்த வேளையில், அவருடைய கூட்டாட்சி, இடஒதுக்கீடு தொடர்பான சிந்தனைகள் அதிகமாக விவாதிக்கப்படவும், மக்களிடையே பரவலாக்கப்படவும் வேண்டும். அறிவுச் சமூகமாக தமிழ்ச்சமூகம் மலர, தமிழர் உரிமை பெற அவருடைய கனவுகள் நனவாக்கப்பட வேண்டும்.

- வெற்றிச்செல்வன்