
உறவுமுறை கொண்டாடும் உயரத்தில்
நின்றதந்த நாவல்மரம்.
"மக்கா...
நவ்வாப்பழம் எனக்கொண்ணு
தந்துட்டுப் போலேய்...''
வயதான பாட்டியையும்
நாவூறவைக்கும் சுவை
வெளவால், குயில், அணிலென்று
வேட்டைத் துப்பாக்கிகளுக்கு
விதவிதமாய் குறிசொல்லும் அந்த நாவல்.
காக்கி நிக்கருக்குள்
ஒளித்துவைத்த பழங்கள்
நசுங்கிக் கறையாகி
பிரம்படி பெற்றுத்தந்தன தமிழாசிரியரிடம்.
நாவற்பழச்சுவையில்
பள்ளி மணியொலியைத்
தவறவிட்ட மணியின் காதுகள்
நாவற் பழம் போலவே சிவந்தன
தலைமையாசிரியரின் முறுக்கலில்.
அவ்வையாருக்குச் சுட்ட அந்த பழத்தை
ஊதிஊதித் தின்போம் முருகன்களாய்...
தன் பழம் கிடைக்காத பொழுதுகளில்
தொண்டை காற காற
கடித்துத்திரிவோம் செங்காய்களை.
தல்லல்பட்ட பழந்துடைத்தால்
சதைகள் வீணாகுமென்று
வாயில் போட்டு
உப்புக்கரிக்கும் மண்சுவை துப்ப
துவர்ப்பை விழுங்குவோம் லாவகமாய்.
இனிப்பையும் பழத்தையும் புறந்தள்ளும்
சின்னவள் இலக்கியாவுக்கும்
மிகப்பிடித்தம் இந்த நாவற்பழச்சுவை.
நாவலைக் குறிபார்க்கும் கற்கள்
திசைமாறித் தாக்கிட்டால்
சிந்தும் செந்நீரும் கண்ணீரும்.
ஆண்பூவா, பெண்பூவா என
விளையாட்டுக் காட்டும் முறியன்பச்சிலை
பழிந்து, எரிந்து புண்ணாற்றும்.
விடுமுறை நாட்களின்
உணவுவேளைகளில்
ஒவ்வொரு வீட்டிலிருந்தும்
நாவலிருக்கும் திசை நோக்கி
கூப்பிடு குரல்கள் எழும்பும்.
"கொமருப்பிள்ளையளுக்கு
வீட்டுக்குள்ள இருந்தா என்ன...
வெளையில என்னட்டி வேல...''
குரல்களின் கோபம் முதுகிலும் பதியலாம்.
வயதானவர்கள் மட்டும்
ஏதோ விலக்கப்பட்டவர்கள் போல
மரத்தைத் திரும்பப் பார்க்காமலே நடந்தார்கள்.
**************
பசியில் குழந்தைகளெல்லாம்
துடித்தழுதிருக்க...
வட்டிக்கடைக்காரன்
பெண்டாட்டியைப் பணயம் கேட்க...
உயிர்வெடிக்க ஏங்கினான் செம்புலிங்கம்.
முளைக்காத விதைகளை விற்றவர்கள்
அந்நிய கண்டத்தில் களித்திருக்க,
விலைக்கு வாங்கியவனோ
மானம் பெரிதென
தூக்குப் போட்டுக்கொண்டான்.
அந்த நாளின் பின்னே
மாறின எல்லாம்.
கிளையில்லா நாவல்மரத்தில்
ஏறியதெப்படி?, தொங்கியதெப்படி? என்று
அதிர்ந்து நின்ற ஊரில்
அடர்த்தியாய்க் கிளைபரப்ப
நிமிர்ந்து நிற்கும் நாவல் இப்போது
பேய்மரமாகிவிட, அதன்
நிழலில்கூடயாரும் ஒதுங்குவதில்லை
வயசாளிகளும்.