அன்புமிக்க செல்மாவுக்கு,
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்களின் 75ம் அகவை விழாவில், கோவையில் தம்பி கதிரைப் பார்க்கையில் அப்படியே கவிஞர் மீராவைப் பார்ப்பது போலவே இருந்தது.
இன்று மீண்டும் உங்கள் "கவிதை அப்பா' மூலம் அவரைக் கண் எதிரே காண்கிறேன்.
அண்ணனைப் பார்க்கும் போது சாயல் சார்ந்த, உடல்மொழியின் ஒத்த அசைவுகள் உண்டாக்கிய, குரலில் கூட ஒன்றுணர முடிந்த மீரா ஒரு மகிழ்வான மீள் வரவாக அந்த மைதானத்தில் வேப்ப மரத்தடியில் எங்களுடன் நின்றார்.
உங்கள் வரி ஒவ்வொன்றும் இழப்பின் துயரை உண்டாக்கி, அவர் சார்ந்த என்னுடைய பழைய ஞாபகங்களைக் கனக்கச் செய்கின்றன.
ஒரு மகளின் நினைவு மட்டுமே அப்பாக்களை இவ்வளவு உணர்வு பூர்வமாக அசைபோட முடியும்.
மீராவை அறிந்தவர்கள், சிவகங்கை வீட்டுக்கு வந்தவர்கள் உங்கள் 55,56ஆம் பக்கப் பதிவுகளைக் கண்ணீருடன் மட்டுமே புரட்டிச் செல்ல முடியும். அவருடைய மிதிவண்டியின் பின்புறம் நீங்கள் அமர, அவர் அழுத்திச் செல்லும் ஒரு சிவகங்கைச் சித்திரம், செழியனின் படப்பிடிப்பென என்னைச் சலனப் படுத்துகிறது.
உங்களைப் போல அப்பா மீது உயிரையே வைத்திருக்கும் மகளுக்கு ஒருமுறை என்ன, இன்னும் பலமுறை அந்த அப்பாக் கனவு வரும். தந்தை இசைத்த தாலாட்டைக் கேட்டு, நீங்கள் அயர்ந்துறங்கியிருப்பீர்கள் என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் அயர்ந்துறங்கும் மகள்களின் தலையை வருடி விட எல்லா அப்பாக்களுக்கும் பிடிக்கும்தானே.
உங்களுக்குள் ஓடும் எல்லா லயங்களையும் இசையாக்குங்கள்.
நீங்கள் அகழ்ந்தெடுக்கும் அத்தனை நினைவுகளையும் காளான் பூக்க விடாமல், கவிதைகளாக்குங்கள்.
அப்பாவின் நினைவுகள் தாண்டி, இனி நீங்கள் எழுதப் போகும் வரிகள் மேலும் அவரை, அவரின் பரம்பரை வீறுடன் நிலை நிறுத்தும். அவரின் எல்லையற்ற அன்பு, நவீன தமிழைச் செறிவாக்க அவர் கொண்ட அளப்பரிய அக்கறை எல்லாம் கதிரின் மூலமும் உங்களின் மூலமும் அடுத்த தலைமுறையின் தமிழ் வெளிக்குப் பரவட்டும்.
நான் அவர் வெளியிட்ட "புலரி' தொகுப்பின் மூலமாக, கவிஞனாக அடையாளம் காட்டப்பட்டவன். அவர் முதல் உச்சரிப்பில்லையேல், கல்யாண்ஜி என்கிற பெயர் பலர் காதுகளில் விழுந்தே இராது.
என்னை விடுங்கள். கி.ராஜநாராயணன் அவர்களை, அப்பா போல யாரால் கொண்டாடியிருக்க முடியும்.
நிறைய படைப்பாளிகள் மனதில், மீராவுக்கு அவரவர் செதுக்கிவைத்துக் கொண்டிருக்கும் ஒரு உற்சவர் சிலை இருக்கிறது. அந்தச் சிலைகள் எதுவும் அடைய வாய்ப்பற்ற ஒரு கருவறை அழகு நீங்கள் செதுக்கியதில் இருக்கிறது. ஒரு மகள் மட்டுமே அவள் செதுக்கும் அப்பாவின் சிலை நரம்புகளில் ரத்த ஓட்டம் உண்டாக்க முடியும்.