அதிகாலை பொழுதிலும்
அந்திசாய்ந்த வேலையிலும்
நடையாய் நடக்கிறார்கள்.
ஒரு சிலரின் கையில் கம்பு
சிலரின் கையில் நாய்க்குட்டி
என அவரவர் விருப்பத்திற்கேற்ப
பிடிமானங்களுடன்
நடையாய் நடக்கிறார்கள்.
பெண்களின் பின்சரியும்
ஜடையைப்போல
முன்சரிந்த வயிறுகளைச் சுமந்தவாறு
நடக்கும் ஆண்களைப் பார்க்கையில்
வினோதமாயிருக்கிறது.
சர்க்கரை குறைக்க
கொழுப்பு குறைக்க
ரத்த அழுத்தம் குறைக்க என
அதிகரித்ததை குறைக்க
பெருங்கவலையோடு
நடக்கிறார்கள்.
அவர்களின் பின்னே
கையேந்தி யாசகம் கேட்டு
சுற்றிவருபவனின்
விலா எலும்புகளை
முறைத்துப் பார்க்கின்றன
நடைபயில்பவர்களின்
பிடியில் உள்ள நாய்கள்.
குறைத்தலாய் விரட்டுகின்றன குரல்கள்
" சில்லரை இல்லை போ"
- ப.கவிதா குமார் (
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
கொழுப்பு
- விவரங்கள்
- ப.கவிதா குமார்
- பிரிவு: கவிதைகள்