14 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீர் மாநிலத்தில் ஒரு கருத்தரங்கில் பேசியதற்காக எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைகழக பேராசிரியர் ஷேக் உசைன் ஆகிய இருவர் மீதும் கொடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) கீழ் வழக்கு பதிவு செய்ய இரண்டு நாட்களுக்கு முன் அனுமதி வழங்கியுள்ளார், டெல்லி துணை நிலை ஆளுநர். மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு இதனை வன்மையாக கண்டிக்கிறது.arundhati roy 546மோடி தலைமையிலான ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் பேச்சுரிமை - கருத்துரிமை தொடர்ச்சியாக மறுக்கப்படும் மோசமான சூழல் நிலவுகிறது. கடந்த 2014 முதல் - மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து - 36 ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் 16 பேர் கொடூரமான ஊபா சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு சிறைக் கொட்டடியில் வாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர 28 ஊடகவியலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்பதை எண்ணும் போது சனநாயக இந்தியாவில் ஊடக சுந்திரம்/ கருத்துச் சுதந்திரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். உலக அளவில் ஊடக சுதந்திர குறியீட்டு அளவில் (Press Freedom Index) இந்தியா 161 இடத்தில் உள்ளதை Reporters Without Frontiers போன்ற பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் மிகுந்த ஆதங்கத்தோடு குறிப்பிடுவதை நாம் இங்கே சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.

நடுவண் அரசின் அடைக்குமுறைகளுக்கு எதிராகப் பேசுவோர், எழுதுவோர், மதவெறி அரசியலுக்கு எதிராக கருத்துக்களை முன் வைப்போர், மனித உரிமை தளத்தில் பணியாற்றுவோர் தேச விரோத வழக்குகளில் சிறை வைக்கப்படுவதும், நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்தப்படுவதும் அன்றாட நடைமுறை ஆகி விட்டது.

அந்த வகையில் 14 ஆண்டுகளுக்கு முன் பேசிய பேச்சுக்காக இப்போது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவு 13 ன் கீழ் எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அப்பட்டமான அரசியல் பழி வாங்கல் நடவடிக்கை இன்றி வேறு என்ன? இச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டால் ஆறு மாதங்களுக்கு ஜாமீனில் வெளி வர முடியாது. பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு பல ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் சித்திரவதைக்கு உள்ளாகும் 15 பேரும் கொடூரமான இந்த ஊபா சட்டத்தின் கீழ் சிறைக்குள் அடைக்கப் பட்டவர்களே . இந்த கொடூரமான சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, எந்தவிதமான விசாரணையும் இல்லாமல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் அநியாயமாக கொலை செய்யப் பட்டவர்தான் நம் ஸ்டேன் சுவாமி அவர்கள். கொடூரமான இச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் பல ஆண்டுகளாக ஓங்கி குரல் எழுப்பி வருகின்றன.

ஒரு சனநாயக நாட்டில் தனது கருத்துகளை பதிவு செய்யவும், அவற்றை அச்சமின்று வெளிப்படுத்தவும் குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்திய அரசமைப்பு சட்டம் 19 (1) (அ) பிரிவு இந்த அடிப்படை உரிமையை உத்திரவாதப் படுத்துகிறது. இதனை பறிக்கவோ, நசுக்கவோ எந்த அரசுக்கும் உரிமை இல்லை. கருத்துச் சுதந்திரம் என்பது சனநாயக நாட்டின் அடிநாதம் அதன் பிரிக்க இயலா ஓர் அங்கம். சர்வாதிகார நாட்டில் தான் கருத்துரிமைக்கும், பேச்சு சுதந்திரத்துக்கும் இடம் இருக்காது. பாசிச ஆட்சியில் தான் தனி நபர் சுதந்திரங்கள் முற்றிலுமாக மறுக்கப்படும். ஆனால் சனநாயகம் என்ற போர்வையில் நடைபெறும் இந்த மோடி ஆட்சியில் கொடூரமாக சனநாயக குரல்கள் நெரிக்கப் படுகின்றன. சுதந்திரமாக ஊடகங்கள் இயங்க முடிவதில்லை. எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுத முடிவதில்லை. மனித உரிமை ஆர்வலர்கள் அடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கருத்துரிமைக்கு அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இதை இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. அனைத்து சிவில் சமூக குழுக்களும் ஒன்றிணைந்து இந்த அடக்குமுறைக்கு எதிராக - அரசியல் பழி வாங்கலுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்!

- ஹென்றி திபேன், தேசியச் செயலாளர், மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு, இந்தியா (HRDA-India)