சென்னை 76 ஆவது டிவிஷன், காமராஜர் தெருவில் மாலா என்கிற துப்புரவுப் பணியாளர் காலையில் வழக்கும் போல் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, நடந்த சம்பவத்தை வீடியோ பதிவிட்டிருந்தார்கள். அது சமூக வலைத்தளங்களில் 2024 ஜுன் மாதத்தில் வைரலாகி இருந்தது. அதை சமீபத்தில்தான் பார்க்க நேர்ந்தது.
அநாகரீகமான செயலும் - வேதனை பதிவும்
மாலா வழக்கம் போல் தனது பணியிடத்தில் குப்பைகளை அள்ளிக் கொண்டிருக்கும் போது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருநபர், மாலா அள்ளிக் கொண்டிருக்கும் குப்பைகளின் பக்கத்தில் மூத்திரம் பெய்திருக்கிறார். அப்போது அந்த இடத்தில் குப்பை அள்ளிக் கொண்டிருந்த மாலா, "நாங்கள் இதைக் கைகளால் அள்ளிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் அதிலேயே மூத்திரம் பெய்வது சரிதானா? இது உங்களுக்கு நியாயமா?" என்று ஆத்திரத்தில் கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த நபர் தகாத வார்த்தைகளிலும், செவி கொடுத்து கேட்க முடியாத கொச்சையான வார்த்தைகளையும் பயன்படுத்தி மாலாவை கடுமையாக வசைமொழியில் திட்டியிருக்கிறார்.
அதுகுறித்து மாலா செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்த வீடியோ பதிவுதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. அந்த நிகழ்வு குறித்து மாலா தனது வேதனையை, "பொது மக்களுக்காக இப்படி ஒரு அசுத்தமான தொழிலை நாங்கள் முகம் சுளிக்காமல் செய்து வருகிறோம். என்னை அந்த நபர் கடுமையான வசை மொழியில், தவறு செய்த நபராக அவர் இருந்து கொண்டு என்னைத் திட்டும் போது, அதை பொதுமக்கள் கண்டும், காணாமலும் அமைதியாக இருக்கிறார்கள். அத்தனை நபர்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தும் ஒருநபர் கூட, 'நீ தவறு செய்து விட்டு, அந்தப் பெண்ணை ஏன் திட்டுகிறாய்?' என்று கேட்கவில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு அழுகையாக வருகிறது” என்று பதிவிட்டிருந்தார்.பெரும்பான்மையானவர்களின் மனநிலை
நாமெல்லாம் பயன்படுத்திய பொருள்களிலிருந்து அன்றாடம் குப்பைகள் உருவாகின்றன. அதை பொது வெளியில் குப்பைகளை கொட்டுவதற்குரிய இடத்தில் போடும் உரிமையைப் பொதுச் சமூகத்தினராகிய நாமெல்லாம் பெற்றவர்கள்தான். நாமெல்லாம் கொட்டும் குப்பைகளை சுத்தம் செய்வதற்காக பணியமர்த்தப்பட்டவர்கள் துப்புரவுப் பணியாளர்கள். அன்றாடம் நாம் உருவாக்கும் குப்பைகள் எதுவாக வேண்டுமானலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதை உரிய இடத்தில் கொட்டுவது ஒரு வகையில் மரியாதையான செயல். அல்லது அவர்கள் குப்பைகளை சேகரிக்க வரும் போது அவர்களிடம் கொடுப்பது இன்னொரு வகை. ஆனால் அந்தக் குப்பைகளை சுத்தம் செய்ய கடமைப்பட்டவர்கள் என்ற பொருளில் ஒரு துப்புரவுத் தொழிலாளி, குப்பையை அள்ளிக் கொண்டிருக்கும் போது, அந்தக் குப்பைகளில் என்ன அசுத்தம் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், அதைச் சுத்தம் செய்யும் அந்தப் பணியாளரின் முன்னிலையிலேயே கூட செய்வது சரிதானா? இது பெரிய அபத்தம் அல்லவா?
குப்பைகளை அள்ளிக் கொண்டிருக்கும் அந்தப் பெண் பணியாளர் முன்னிலையிலேயே ஒரு ஆண் சிறுநீர் கழிப்பது எதை வெளி காட்டுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக துப்புரவுப் பணி செய்யும் பணியாளர்களை சக மனிதர்களாக நினைக்காத போக்கும், அவர்களை அருவருப்பாக அல்லது இழிந்தவர்களாக நினைக்கிற மனநிலைதான் பெரும்பான்மையான நபர்களிடம் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் அவர்கள் அள்ளிக் கொண்டிருக்கும் குப்பையின் மீது, அந்நபர் சிறுநீர் கழிப்பதை கண்டிக்காமலும், குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்த அந்நபர் மாலாவை திட்டியதற்காகக் கண்டு கொள்ளாமலும் இருந்திருக்கிறது பொதுச் சமூகம். இது என்ன மாதிரியான மனநிலை?
ஜாதிய மனநிலையோடு அணுகுதல்
அமெரிக்கா உள்ளிட்ட முன்னேறிய நாடுகளில் துப்புரவுப் பணி என்பது, படித்தவர்கள் அனைவரும் செய்யக்கூடிய ஒரு அரசு வேலையாகத்தான் கருதப்படுகிறது. ஆனால் இந்தியா போன்ற சாதிய கட்டமைப்பை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டிருக்கும் நாடுகளில் துப்புரவுப் பணியானது குறிப்பிட்ட ஜாதிகளுக்குரிய பணி என்று ஆதிக்க மனநிலையோடு அணுகுவதுதான் இங்குள்ள சிக்கல். அதனுடைய வெளிப்பாடுதான் மாலா போன்ற எத்தனையோ பெண்கள் அவர்கள் அன்றாடப் பணியின் போது, பொதுச் சமூகத்தினரால் இதுபோன்ற சிக்கலுக்கு ஆளாகிறார்கள்.
துப்புரவுப் பணியாளர்களை கண்காணிக்கும் அரசு அதிகாரிகளும் ஜாதிய மனநிலையில் இருப்பதால், இவர்கள் பணியின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, சிக்கல்களை, களைவதற்காக எந்தவித முயற்சியும் அதிகாரிகள் மட்டத்திலிருந்து எடுக்கப்படுவதில்லை. அப்படியே அந்தப் பிரச்சினையை அதிகாரிகளிடம் சொன்னாலும் பிரச்சனைக்கு உள்ளான நபர்கள் மீதுதான் வேறொரு குற்றம் சுமத்தப்படும் போக்கும் பரவலாக நடக்கிறது இதை அந்தத் தொழிலை செய்யக்கூடிய மக்களின் தலைவிதி என்று எண்ணுகிற ஒரு குறுகிய கண்ணோட்டமும் ஒருவித காரணம்.
பாராபட்சமான அரசு நிர்வாகம்
துப்புரவுப் பணியாளர்களை அரசு ஊழியர்கள் என்ற உரிய அங்கீகாரத்தை பொதுச் சமூகம் கொடுப்பதற்கான வேலைத் திட்டத்தை எந்த அரசும் எடுக்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாக, அழுத்தமாகவே சொல்ல முடியும். அதோடு மற்ற அரசுப் பணியாளர்களுக்கான அங்கீகாரமும் மதிப்பும், துப்புரவுப் பணியாளர்களுக்கு ஏன் இல்லாமல் போனது என்பதை பெரிதாக அலசி ஆராய வேண்டிய தேவையும் இல்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல, இதை ஒரு குறிப்பிட்ட ஜாதிகள் மட்டும் செய்யக்கூடிய தொழிலாக கருதுவதனுடைய விளைவுதான். இன்னொரு பக்கம் ஆட்சியாளர்களும் ஜாதிய பின்புலத்தோடு இருப்பதால், ஒரு வகையில் மறைமுகமாக இதுபோன்ற செயலை ஊக்குவிக்கிறார்கள் என்றே விளங்கிக் கொள்ள முடிகிறது.
ஏனென்றால் மற்ற துறை சார்ந்து பணியமத்துவதில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்தையும் மிகச் சரியாக கடைபிடிக்கும் அரசு நிர்வாகம், இத்தகைய பணிகளில் ஏன் குறிப்பிட்ட சமூகங்களைத் தாண்டி மற்ற பொதுப் பிரிவினரோ அல்லது இதரரை பணியமர்த்தப்படுவதில்லை என்ற கேள்வி இயல்பாக எழுதுகிறது. மற்ற சமூகங்களை சேர்ந்தவர்கள் துப்புரவுப் பணிக்கு என அமர்த்தப்பட்டாலும், அவர்கள் நேரடியாக துப்புரவுப் பணி செய்வதில்லை. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுப் பணிகளில்தான் பணி அமர்த்தப்படுகிறார்கள். இதில் அதிகாரிகள் உள்பட அனைவரும் கூட்டு சேர்ந்தே செயல்படுகிறார்கள்.
அதை சரிசெய்ய கண்காணிப்பு செய்ய கையால் மலம் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டத்தின் படி கண்காணிப்பு குழு ஒன்றை உருவாக்கி பொறுப்படைய நபர்கள் தீவிரமாக கண்காணிக்க வழிவகை செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இத்தகைய செயல்களை ஜாதிய கண்ணோட்டத்தோடு செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்.
அதோடு பிற சமூகங்களை சார்ந்தவர்கள் அவர்கள் துப்புரவுப் பணிக்காக பணியமர்த்தப்பட்டிருந்தார்கள் எனில் அப்பணியை செய்வார்கள். இல்லையென்றால் பணியமர்த்தப்பட்டது ஒன்று, அவர்கள் செய்யும் வேலை வேறொன்றாகத்தான் இருக்கும். அல்லது இருந்து கொண்டே இருக்கும்.
கழிவை மேலாண்மை செய்வதில் போதாமை
ஊர், தெரு ஓரங்களில் குப்பைகள் அதிகமாக கொட்டப்படுவதற்கு அனைத்து விதமான ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட நிர்வாகங்களில் கழிவை மேலாண்மை செய்வதற்கான சீரிய திட்டமோ அல்லது அதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறையோ கையாளப்படுவதில்லை. குப்பைகள் கொட்டுவதற்காக எத்தனையோ இடங்களில் பெரிய, பெரிய இரும்பிலான குப்பைத் தொட்டிகள் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வைக்கப்படுகின்றன. அவை போதுமான அளவுகளில் அல்லது மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றது போல் வைக்கப்பட்டுள்ளனவா? என்றால் இல்லை. அதனால் குப்பைகளை வீட்டில் ஒரு அளவுக்கு மேல் வைக்க முடியாமல், அவரவரின் வீடுகளுக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு காலி நிலத்தில் குப்பைகளை கொட்டி விட்டு வரும் நெருக்கடிக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் வேண்டுமென்றேவும் செய்கிறார்கள். அப்படி என்றால் குப்பைகளை பொதுவெளியில் கொட்டுவதை தவிர்ப்பதற்கு அல்லது எந்தெந்த இடத்தில் பொதுச் சமூகம் குப்பைகளை கணிசமாக கொட்டுகிறார்களோ? அந்த இடத்தில் போதிய அளவு குப்பை தொட்டிகளை வைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு நிர்வாகம் செய்யப்பட வேண்டும்தானே?
அப்படிச் செய்யப்படாததின் விளைவுதான், அன்றாடம் பொதுச் சமூகம் வெட்ட வெளியில், பாதை ஓரங்களில், குடியிருப்புக்கு அருகில் குப்பைகளை கொட்டுகீறார்கள். அப்படிக் கொட்டப்படும் குப்பைகளை துப்புரவுப் பணியாளர்கள் கைகளால் அள்ளி அதைச் சுத்தம் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் குப்பைகளை அள்ளும் போது அந்தப் பணியாளர்களுக்கு உரிய கையுறை உள்ளிட்ட போதிய உபகரணங்களும் வழங்கப்படாமலும் தான் இருக்கின்றன.
ஆதிக்க அல்லது ஆணாதிக்க வெளிப்பாடு
பெரும்பாலும் ஊர்களில் ஒதுங்குப் புறமாக குப்பைகள் கொட்டப்படும் போது, அதன் மேலே சிறுநீர் கழிப்பதும் அல்லது ஒதுங்கி மலம் கழிப்பதும், சில அருவருப்பான கழிவுகளை அவ்விடத்தில் அப்புறப்படுத்துவதும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் துப்புரவுப் பணியாளர்கள், அந்தக் குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்துகிறார்கள். இவை எல்லாம் பொதுச் சமூகம் மற்றவர்கள் பார்க்காத நேரத்தில் செய்துவிட்டு போகும் அநாகரிகமான செயல் என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் சக மனுசியான ஒரு பெண், தன் அன்றாட அலுவல் பணிகளை செய்து கொண்டிருக்கும் போது, “நீ குப்பதானே அள்ளுற. உனக்கெல்லாம் என்ன மரியாதை? அல்லது உன்னெல்லாம் ஒரு மனுஷியாகவே நான் நினைக்கல' என்கிற மனப்போக்கில் மாலா என்கிற துப்புரவுப் பணியாளரின், கண் முன்னே குப்பையில் சிறுநீர் கழிப்பது எவ்வளவு பெரிய ஆதிக்க அல்லது ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடு? அதே வேலையை அந்த நபரின் வீட்டில் இருக்கும் பெண்களில் யாரேனும் ஒருவர் செய்யும் பட்சத்தில் அத்தகைய செயலை அவர் செய்திருக்கமாட்டார் அல்லவா? யாரோ ஒரு பெண்தானே? என்ற மனநிலையின் வெளிப்பாடுதான், அவர் அந்தச் செயலை துணிந்து செய்து விட்டு தகாத வார்த்தைகளில் வசைப்பாடி இருப்பதும்!
இந்தச் சம்பவத்தை காவல் நிலையத்தில் மாலா, உரிய முறையில் புகார் அளித்தும், அந்தப் புகாரைக்கூட காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மறுத்திருக்கிறது என்றால் இங்கே புகார் கொடுக்கப்படுவது யார்? யார் மீது கொடுக்கப்படுகிறது? என்பதை சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை உள்பட இச்சமூகம் அளவீடு செய்தே ஒவ்வொன்றையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இந்த அளவீட்டை கூட்டி கழித்தோ, அல்லது பெருக்கியோ அல்லது வேற என்னென்னமோ செய்து பார்த்தாலும் அது கடைசியில் ஜாதியாகத்தான் பல்லை இளித்துக் கொண்டு நிற்கப் போகிறது?
தாக்குதலுக்கு உள்ளாக்குதல்
சமீபத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தையும் இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் திமுக மாவட்ட செயலாளருமான மேயர் மகேஷ் அவர்கள், மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணி செய்யும் மூன்று பேரை சரமாரியாக அடித்து அசிங்கமாகப் பேசியிருக்கிறார். அது தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான துப்புரவுப் பணியாளர் ஒருவர் தங்கள் ஆதங்கத்தை பேசி, ஆடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி விட்டிருக்கிறார். அது செய்தி மற்றும் ஊடகங்களிலும் வெளியானது.
மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களை சரமாரியாக மேயர் மகேஷ் அடித்ததோடு மட்டுமில்லாமல், அவரது அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை புகார் அளிக்கவிடாமல் மிரட்டி வழக்கிலிருந்து தப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி இப்பிரச்சனையை வேறு ஏதேனும் அமைப்புகளிடம் விவரம் சொல்லி, இவர்கள் காவல் நிலையம் சென்று தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து தன்னுடைய புகழுக்குக் களங்கம் விளைவித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்த மூன்று துப்புரவுப் பணியாளர்களை பணியில் இருந்து தூக்கி விடுவதாக சொல்லி மிரட்டியும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சட்டத்திற்குப் புறம்பாக சஸ்பெண்டும் செய்துள்ளார். தாக்கப்பட்ட மூன்று துப்புரவுப் பணியாளர்களில் ஒருவர் தனது ஆதங்கத்தை பேசிய ஆடியோ பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியீட்டும் கூட நாகர்கோவில் காவல்துறை மற்றும் திமுக தலைமை இதுவரை கண்டு கொள்ளாதது ஏன்? சமூக நீதியை மூச்சுக்கு 300 முறை சொல்வது எல்லாம் வெறுமனே அரசியல் ஆதாயத்திற்காகத்தானா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள் ஆதித்தமிழர் கட்சியினர்.
மனிதநேயமான செயல்
சமீபத்தில் கேரளா மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்றில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய பெண் ஒருவர், தனது பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவரை அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்துக் காவலர்களும் ஒன்று சேர்ந்து வழியனுப்பும் காட்சி வீடியோ பதிவாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது. அதில் காவல் நிலையத்திலிருந்து அப்பெண்ணுக்கு உரிய மரியாதை செய்து முடித்ததும், அவர் வீட்டுக்குக் கிளம்பும் போது, அந்தக் காவல் துறை வாகனத்தில் முன் பக்கமாக ஏற்றிச் சென்று, அப்பெண்ணின் வீட்டில் கொண்டுப் போய் விட்டிருக்கிறார்கள்.
காவல் நிலையத்தின் பொறுப்பாளர்கள் உள்பட அனைவரும் உடனிருந்து இதைச் செய்திருக்கிறார்கள். அப்பெண் செய்த பணியை அங்குள்ள காவல் துறையினர் கணக்கில் கொள்ளவில்லை என்பது அவர்களின் செயல் வெளிப்படையாக காட்டுகிறது என்பதை இங்கு யாரும் சொல்லிப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. தன்னோடு வேலை செய்த சகப் பணியாளர் என்ற கண்ணோட்டமே அங்கு மேலோங்கியிருக்கிறது. இதுபோன்ற மனிநேயமிக்க செயல் எங்கேனும் ஒருசில இடத்தில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சமூகநீதி பேசும் தமிழ்நாட்டில் அதற்கான வேர் இன்னும் அழுத்தமாகத் துளிர்க்காமல்தான் இருக்கின்றன.
- மு.தமிழ்ச்செல்வன்