நிலத்தின் இதயத்தில் இருந்து நில்லாமல் எழுந்து வரும் இரும்பு என்று கூட சொல்லலாம். எறும்பென ஊரும் எதற்கும் கரும்பு வைத்தியம் அது.
பசித்த நேரத்தில் உள்ளங்கை அளவு ஒரு குத்து கடலை போதும்... கனத்த பசியைக் காணாமல் போகச் செய்ய. அதனால் தான் பேச்சிலர் அறையில் பெரும்பாலும் கடலை பாக்கெட்டுகள் காண கிடைக்கும். மற்றும் அதன் வீரியம் அறிந்தோருக்குத் தெரியும். சோர்வுக்கு இடையேயும் சுளீர் எனத் தெளிவு கிடைக்கச் செய்யும் நிலத்தின் குட்டி குட்டி மாத்திரைகள் அவை.
வேர் பிடித்து தொங்குவதால் வேர்க்கடலை. மல்லாட்டை என்றும் சொல்வார்கள். மணிலாக்கொட்டை என்பது தான் அது.
நிலத்துக்குள் இருந்து நாள்பட்ட இறுக்கத்தில் வெளிவரும் கடலையின் வடிவமே பிரமிப்பு தான். மேலே மொறு மொறு தோல். உள்ளே இரு இரு பருப்பு. மனிதன் உற்பத்தி செய்து பாக்ஸில் அடைப்பது போல மனிதனுக்காக உற்பத்தி ஆகி தடிமனான தோலுக்குள் அடைந்திருக்கும் கடலைக்காய்களை காண காண கண்களில் ஆர்வம் உருளும். சில காய் மூன்று பருப்பு கொண்டவையாக இருக்கும். விளையாட வைத்துக் கொள்வோம்.
தாவரத்தில் ஒரு வரம் இது. சோற்று தாமதத்தில் தருமே கரம்.
செடியை வேரோடு பிடுங்கினால் அடியே ஜடை பிடித்து தொங்கும் கடலைக்காய்கள்... மண்ணோடு மண்ணாக... பார்க்கவே பச்சை வாசத்தில் மய மயக்கும். கையில் கொத்தாக இருக்கும் செடியை காற்றினில் அசைத்தோ தரையில் பொத்தினாற் போல அடித்தோ மண்ணை உதிர வைத்து விட்டால்... ஒட்டிய மண்ணோடு ஈர பிசுபிசுப்பில் அப்போது தான் வரைந்து தொங்குவது போல தெரியும். பச்சைக் கடலையை பவ்யமாய் பிரித்து வாய்க்குள் போடுவதில் அப்படி ஒரு பேரானந்தம்.
பச்சையாய் நிறைய தின்ன கூடாது என்று பாட்டி அடிக்கடி திட்டும்.
வெறுங்கடலை பித்தம் ஏத்தும் என்பதால்... கருப்பட்டியோடு கடலை மிட்டாயாக தின்னப் பழக்கியது பண்டுவம். சிறு வயதில் கைகள் பிசுபிசுக்க... கடலை மிட்டாயைப் பாக்கெட்டில் இருந்து எடுத்து வாய்க்குள் திணித்துக் கொண்டே ஒளிந்து விளையாட்டு விளையாடிய நினைவு கமகமக்கிறது. கடலையை அம்மியில் போட்டு அரைத்து பொடியாக்கி அதனோடு வெல்லம் உதிர்த்து கலந்து சின்ன ஸ்பூனில் சீக்கிரம் சீக்கிரம் எடுத்து வாய்க்குள் போட்டதெல்லாம்... ஞாயிறு மாலைத் தின்பண்ட தீவிரம்.
பல நாட்களில் ட்ரவுசர் பாக்கெட்டில் வறுத்த கடலை தான் வயிறு பெருத்து தொங்கும். விளையாட்டு விளையாட்டாக இருந்தாலும்.. கையும் வாயும் சரி சமமாக நிரம்பிக் கொண்டே இருக்கும். திரை கட்டி போடும் சினிமாவுக்கு போகும் போதெல்லாம் கையோடு கடலை இருக்கும். இல்லை என்றாலும்... பேப்பரில் கடலை கட்டி விற்கும் பொட்டலங்களை வாங்க இயல்பாகவே ஒரு விருப்பம் குவிந்திருக்கும். இப்போது கூட வீதியில் கடலையை வறுத்தபடியே இரும்பு சட்டியை தட்டி தட்டி ஒலி எழுப்பிக்கொண்டே வரும் கடலைக்காரரை ஒரு கண்ணால் எட்டிப் பார்ப்பதை தவிர்க்க முடிவதில்லை. எப்போதாவது நிறுத்தி வாங்குவதும் தான் நிகழ்ந்து விடுகிறது.
டூரிங் டாக்கீஸ் போகும் போதெல்லாம் கடலைப் பொட்டலத்துக்கென்றே தனியாக காசு வைத்திருப்போம். இடைவேளையில் கடலை கடலையாய் கவனம் உருளுவதை... நினைத்தாலே இனிக்கிறது.
கையில் போட்டு அப்படி இப்படி தேய்த்து... அதன் தொலிகளை உதிர்த்து அப்படியே காற்றில் ஊதி விட்டு பிறகு வாய்க்குள் போடுவதில் இருக்கும் அனிச்சை... முறத்தின் கடைசி குத்து வரை நீடிக்கும். வேக வைத்து தின்பது... வறுத்து தின்பது.. அதில் மசாலா போட்டு தின்பது... கேரட் பீட்ரூட் துருவிப் போட்டு தின்பது என்று கடலையின் ரூபம் அவரவர் ருசிக்குத் தக்கது. இரும்பு சட்டியில்... மணல் போட்டு வறுப்பதை சிறு வயதில் பல சந்தேகத்தோடு பார்த்திருக்கிறேன். எங்கள் கடைக்காக பாட்டி அந்த வேலையைச் செய்கையில் கேள்வியோ கேள்வி தான். பாட்டிக்கு பதில் தெரியாது. அது அப்படித்தான் என்று சொல்லி விடும். இப்போது ஏன் என்று தெரிந்தாலும்... அப்போது ஏன் என்று தெரிய அடுப்பு பக்கமே நின்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்த காட்சி... ஒரு கருப்பு வெள்ளை நினைவில் கடலை வாசத்தை அள்ளி அள்ளி தெளிக்கிறது.
நீண்டு குவியும் அந்த பொட்டலமே ஒரு கலை நேர்த்தியைக் கொண்டிருக்கும். பேப்பரை எடுத்து பிரித்து ஒரு முனையில் இருந்து சரக்கென உள்நோக்கி ஒரு சுழற்று சுழற்றி.. மூன்று பக்கமும் அடைத்துக்கொண்ட காகித மூடாக்கை குவிந்த விரல்களுக்குள் கூமாச்சியாக நிறுத்தி... மேலிருக்கும் வாய் வழியாக கடலையை கொட்டி நிரப்புவது... ஆஹா... ஆவலாய் பார்த்துக் கொண்டிருக்கும் கண்களில் படபடவென உருளும் புறுபுறு நிறைவு.
பாட்டியோடு கடலைக் காட்டில் அலைந்து திரிந்திருக்கிறேன். பிடுங்கும் பயிர் மட்டுமல்ல அது.. பவள உருண்டையென பகல் நேர உணவும் அது. பசி தீர தின்றிருக்கிறேன். இருந்தும் கடலைச் செடியில் வரும் வாசனை என்ன என்பதை சொல்ல வார்த்தைக்கு அலைகிறேன். நினைவுகளின் அடுக்குகளில்... ஒவ்வொரு கடலையாய் உடைத்து பிரிக்கும் உணர்வுக்கு ஈடு என்ன என்ற சிலிர்ப்பு புன்னகையாய் வெடிக்கிறது.
- கவிஜி