இசைத்த பொருளின் இருள் அதன் நுட்பம் வேண்டி நுகர நுகர கிழிபடும் இதய முனகலை இறக்கி வைக்க இயலாத இல்லாதவன் எங்கோ தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறான். விரட்டுவது அவன் நிழல். விடியவில்லை என்று புலம்பும் கதவுகளை முட்டி முட்டி உடைந்த தலையில் இருந்து கொம்புகளாய் சிதறும் நொறுங்குதல் தொடுவான வேடிக்கை. தொட்ட சிறகுகளும் விலகும் விதி இது. தொடாத உயரங்களை தோகை ஆக்கும் மனமே... தொட்டில் செய்து வெற்றிடம் ஆட்டும் கூத்தைக் கொண்டிருக்கிறது.

மன சுருக்கத்தின் மயக்க நிலை மல்லுக்கு நிற்கும்... மாடுகளின் வால் பிடித்து. மௌனத்தில் இருந்து எழும்பும் எல்லாமும் இசையாகுமா என்ன. இயக்க விதிகளின் பின்புற வெற்றிடத்தில் ஒன்றுமில்லாத ஒத்து ஊதலுக்கு வழி இல்லை. இன்னும் விளங்க வேண்டுமெனில் யுத்தம் விலகி அங்கே ஒன்றுமே இல்லை எனும் பொருளும் இல்லாமல் போக வேண்டும். வேண்டும் என்ற விருப்பமும் அற்ற வேர் பிடித்து வளர ஒரு வாக்கியம் மேல்நோக்கிய கூப்பாட்டில் குத்துக் காலில் இருந்து விலக ஆசீர்வதிப்போம். அதன் வழியே நிகழும் அவமதிப்பும் அதிரூபம் எனும் நினைப்பு மென்மையானது. மென்மையின் மறுதலிப்பில் வன்மை உருவாகுதல் இயல்பு. இயல்பில் இருந்து விடுபடுதலே இருத்தலின் நிதானம்.

உடல் கிழிய கத்தும் மணியோசையின் அதிர்வுக்கு பிறகு வந்து மோதும் பனி போல... அதுவாகவே விலகிவிடும் ஆவலின் அரூபம். முயக்க தத்ரூபத்தின் உந்துசக்தி உள்ளேயும் வெளியேயும் ஒரு ராட்சச ராட்டினம் போல சுழல்கிறது. சுழற்றிப் பார்க்கும் சூத்திரம் எங்கோ வெகு தொலைவில் அல்லது வெகு அருகில்... பிரபஞ்ச வலை கொண்டு இயங்கி பார்க்கிறது. இன்னமும் இருக்கிறது என்றால் இல்லாதவைகளை எதில் சேர்க்க. எதிலும் சேர்ந்து கொள்ளும் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக கழற்றி விடும் காரணத்தை கங்கென கொண்டிருக்கிறது காலமும்.

ஒன்று விமர்சனம் என்ற பெயரில் அதீதமாக திட்டி தீர்க்கிறார்கள். அல்லது பாராட்டு என்ற பெயரில் அதீதமாய் புகழ்ந்து தள்ளி விடுகிறார்கள். இன்றைய காலம் நிதானம் அற்ற தராசில் தள்ளாடுவதாகப் படுகிறது. நின்று நீளும் நித்திரைக்கு அருகே கனவு கை கட்டி நிற்பது போல ஒரு திரையின் முன் பின் நகர்தலின் நர்த்தனமே நம்பிக்கையாய் நங்கூரமிட்டிருக்கிறது. இயற்கையின் விதியை புரிந்து கொள்ள நடக்கும் முயற்சி தான் பரிணாமம். பூனை எலி விளையாட்டு போல தான் காலத்துக்கும் நடந்து கொண்டிருக்கும் இந்த மதில் நீண்டு கொண்டே போவது ஆச்சரியம். பேரதிசயம் நடக்கும் நாளில் சிந்தனை மட்டுமே சிரித்துக் கொண்டிருக்கும். செத்தொழிந்த சமூகமாய் மானுடம் இருக்கையில் மீண்டும் ஓர் ஒளியில் ஒரு செல் அமீபாவுக்கு முந்தைய அப்பன் பிறக்கலாம்.

முரண்களின் வழியே அரண் அமைத்துக் கொள்ளும் வாழ்வு இது. உள்ளொன்றும் அதனுள்ளொன்றும் அதனுள்ளொன்றும் என சாகும் வரை பல கட்டங்களை கொண்டிருக்கும் மானுடத்தின் மதிப்பு மிக மிக உயரமாக இருக்க காரணம் அவனின் புன்னகை தவழும் வெளிப்புறமே.முகத்தைக் கிழித்து உள் நுழைய முற்படும் எதற்கும் உதவாது எதுவும். வன்மத்தைக் கொண்டிருக்கும் வயதுக்குள் தன்னை குறுக்கிக் கொண்டிருக்கும் விலங்கின் ஸ்தூலம்... மிக மிக ஆபத்தானது. தள்ளி இருப்பது பிறகு. தாங்கி விடலாம் என்ற நினைப்பே அச்சத்துக்குள்ளானது.

சின்ன சின்ன விஷயங்களில் கூட ரசனை வெளிப்பட்டு கொண்டாட்டமாய் மாறலாம். ஆனால் முப்பது வயது அறியாமை... எட்டாங்கிளாஸ் கோப்பையைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு திரியக் கூடாது. அது அபத்தம். அபத்தங்களை ஊக்குவிக்கும் அறிவிலிகள் சுற்றிலும் இருக்கிறார்கள்.

மனிதர்கள் மறதியர்கள். வெகு சீக்கிரத்தில் எல்லாம் மறந்து விட்டு மரணித்தும் போவார்கள். மரணித்துக் கொண்டே இருக்கும் மானுடத்தின் வழியே ஞாபகம் போலொரு தோற்ற மயக்கத்தையாவது செய்து விடத் தான் இத்தனை அலைச்சல். இத்தனை துன்பியல். பிறகு நினைவுகள் குறித்து சொல்ல வேண்டுமானால்... எந்தக் காலத்தின் நினைவும் இந்தக் காலத்தின் மறதியாக ஆகி விடுதல் தான் அதன் போக்கு. உடன்படலாம். முரண் படலாம். விடுபட முடியாது.

- கவிஜி