இந்திய மக்களிடையே கடுமையான அமைதியின்மையும், சிந்தனையாளர்களிடையே தீவிர தேடல்களும் நிலவி வரும் காலகட்டத்தில் காந்தியடிகளின் நூற்றாண்டு எதேச்சையாக ஒன்றிணைகிறது. இதுபோன்ற சூழல் இந்திய வரலாற்றில் இதுவரை நாம் அறிந்திராத ஒரு சூழல் அல்ல. இந்திய தேசத்திற்கான பாதையை வகுத்தளித்த தலைவர்கள் இந்து மதப் புராணங்களில் பிரபலமாக அறியப்படும் அவதார புருஷர்களாக இருந்ததில்லை; உண்மையில், அவர்கள் சமூக கொந்தளிப்புகள் மற்றும் சிந்தனை வேள்விகளிலிருந்து முகிழ்த்தவர்கள்; உணர்வு போதமற்ற சமூக கொந்தளிப்புகளைக் கூட உணர்வுமிக்க சமூக நடவடிக்கைகளாக மாற்றி அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர்கள். இந்தியாவின் அண்மைக்கால வரலாற்றில் காந்தியடிகள் அத்தகையதோர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஆவார். இந்திய சமுதாயத்தின் மீது அவர்தம் தாக்கம் என்ன? அவர்தம் சாதனைகள் மற்றும் பின்னடைவுகள் என்னென்ன? காந்திய பாரம்பரியத்தில் பாதுகாக்கப்பட வேண்டியது எது? புறந்தள்ளப்பட வேண்டியது எது? இந்தக் கேள்விகள் யாவும் இந்தியாவின் நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தின் மீது முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அடிப்படையான கேள்விகளாக உள்ளன.

gandhi 246காந்தியடிகளின் பங்களிப்பை வரலாற்று நோக்கில் மட்டுமே மதிப்பீடு செய்திட முடியும். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு காலனியாக இந்தியா மாற்றப்பட்டதும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதார விளைவுகளில் இருந்துதான் இந்தியாவில் தோன்றிய நவீன தேசியவாத எழுச்சியின் சமூக பின்புலம் அறியப்படுகிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வெற்றி ஏனைய ஐரோப்பிய சக்திகளின் முந்தைய வெற்றிகளிலிருந்து வேறுபட்டதாகும். காரணம், அந்த வெற்றியானது இந்தியாவின் தொன்மைச் சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தை முற்றிலுமாக வேறொரு தளத்திற்கு நகர்த்தியது.

காரல் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி எழுதுகையில், “இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் இங்கிலாந்து உடைத்தெறிந்தது” என்று குறிப்பிடுகிறார். “புதிதாக எதையும் பெற்றிடாமல், தன்வசம் இருந்ததையும் இழந்து, ஏற்கனவே பீடித்திருக்கும் துயர நிலையில் மேலும் ஒரு வகையான சோகமும் இணைந்து கொண்டதோடு, பிரிட்டன் ஆட்சிக்கு உட்பட்ட இந்துஸ்தானை அதன் அனைத்து தொன்மையான மரபுகள் மற்றும் கடந்த கால வரலாற்றில் இருந்து முற்றாகப் பிரித்துவிட்டது.” பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முன் இந்தியா விழுந்து கிடந்தது. வரலாற்றின் பொற்காலத்திற்கு திரும்புவோம் என்ற கனவையும் சிதைத்து விட்டபடியால், 1857ம் ஆண்டு நடைபெற்ற கலகமும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகே, சுயபரிசோதனை என்னும் நடவடிக்கை தொடங்கியது. ஆம், இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம், அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் புதிய வடிவிலான நடவடிக்கைகள் குறித்து ஒரு புதிய பார்வைக்கான தேடல் தொடங்கியது. இந்திய தேசியவாதத்தின் முதல் கட்டம் என்பது பழமைவாதிகள் மற்றும் நவீனவாதிகளுக்கு இடையே நிலவிய ஆழமான வேறுபாட்டைக் குறிப்பதாக இருந்தது.

நவீனவாதிகள் பிரிட்டிஷாரை மேலோட்டமாக விமர்சித்தார்கள் என்பதோடு மட்டுமின்றி, மேற்கத்திய வாழ்க்கை முறை மற்றும் மேற்கத்திய வளர்ச்சி மாதிரியை முழு அளவில் போற்றுபவர்களாகவே இருந்தார்கள். பிரிட்டிஷார் மீதான விமர்சனத்தை மிஞ்சும் வகையில் இருந்தது அவர்களின் துதிபாடும் நடவடிக்கைகள். பிரிட்டிஷாரின் ஆதரவில் இந்தியா மேற்கத்தியமயமாவது என்னும் கண்ணோட்டம் பெருகியது. இந்த நவீனவாதிகளுக்கு நேரெதிராக இருந்தவர்கள் பழமைவாதிகள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளுக்கு பழைமைவாதிகள் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், மேற்கு உலகின் அனைத்தையும் மறுதலிப்பதோடு, பழமைவாத முறைகளை உறுதிப்பாட்டுடன் பின்பற்றுவது என்பது தான், அவர்களின் சமூகப் பார்வையாக இருந்தது. இந்திய சூழல் முன்வைத்த சவால்களை எதிர்கொள்ள இந்த இரு போக்குகளும் (நவீனவாதம், பழமைவாதம்) போதுமானவை அல்ல.

காந்தியடிகளின் புதிய பாதை

நவீனவாதிகள் மற்றும் பழமைவாதிகள் ஆகிய இரு தரப்பினரிடமும் மாறுபட்டு புதியதொரு கொள்கை முழக்கத்தோடு எழுச்சியுற்றார் காந்தியடிகள். சிந்தனை மற்றும் செயல்பாட்டுத் தளங்களில் மேற்கத்திய சவால்களை எதிர்கொள்வதற்கான புதியதொரு பாதையின் பிரதிநிதியாகவே அவர் விளங்கினார். அவரின் எழுத்துக்கள் (கட்டுரை உள்ளிட்ட படைப்புகள்) தொடக்க காலத்தில் மூட நம்பிக்கைகள் நிறைந்ததாகவே இருந்தன. இதுவே பலரும் காந்தியடிகளைப் பழமைவாதிகளில் ஒருவர் என்று வாதிட வழிவகுத்தது. எழுதப்பட்ட சூழல், எழுதுவதற்கு அடித்தளமாக விளங்கிய லட்சியங்கள் மற்றும் உந்துதல் ஆகியவற்றை மிக ஆழமாக உணராத பட்சத்தில், அவர்தம் எழுத்துக்களின் முக்கியத்துவம் மற்றும் உண்மையான பங்களிப்பை நாம் உணராமல் போய் விடுவதற்கான சாத்தியம் இருக்கிறது. மேற்கத்திய உலகத்தைப் போற்றும் அடிமைத்தனத்திற்கு எதிரான, இந்தியாவின் கடந்த காலத்தை இழிவுபடுத்தும் போக்கிற்கு எதிரான, தேசிய பெருமிதம், கண்ணியத்தை வலியுறுத்தும் கட்டுக்கடங்காத உந்துசக்தியாக, உயர் மத்தியதர வர்க்கத்தின் தேசபக்தியற்ற மற்றும் ஒட்டுண்ணித்தனமான வாழ்க்கை முறை மீதான ஒரு தார்மீக வெறுப்புணர்வாக, இந்தியச் சூழலின் பிரத்தியேக தன்மைகள் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் நலன்கள் என்னும் தளத்திலிருந்து இந்தியாவின் பிரச்சினைகளை அணுகும் முதல் முயற்சியாக காந்தியடிகளின் புதிய பாதை அப்போது உதயமானது.

சுயாட்சி என்பது பிரிட்டிஷார் நமக்கு வழங்கும் பரிசன்று; இந்திய சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்கள் தொடுக்கும் அறப்போரில் அவர்கள் படும் துன்ப துயரங்கள் மற்றும் தியாகத்தின் பயனாய் விளைவது தான் சுயாட்சி என்கின்ற எண்ணமும் அப்போது உதயமானது. மேலும், இந்திய சமூக அமைப்பை உள்ளிருந்தே அரித்துக் கொண்டிருந்த வகுப்புவாதம், சாதியம், தீண்டாமை, மூட சம்பிரதாயங்கள் போன்ற தவறான நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட அறைகூவல் அப்போது ஓங்கி ஒலித்தது. பின்னாளில் இந்திய வரலாற்றில் காந்தியடிகள் அடைந்த ஒப்பற்ற நிலைக்குக் காரணமாக இருந்த அனைத்து அம்சங்களின் விதைகளையும், அவரின் தொடக்க கால எழுத்துக்களில் நாம் காணமுடிகிறது. இந்திய சமுதாயம் எதிர்கொண்டிருந்த அனைத்து அடிப்படையான கேள்விகளை எழுப்பியது, இந்தியச் சூழலில் பழமைவாதம் மற்றும் தாராளவாத - முதலாளித்துவ போக்குகளின் பலவீனங்களை வெளிப்படுத்தியது ஆகியவற்றில் காந்தியடிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பு ஒளிர்கிறது.

வரலாற்றைப் பற்றிய தேர்ந்த சித்தாந்த பார்வை மற்றும் நவீன நாகரீக சமூகத்தின் மூலக்கூறுகள் மீதான விஞ்ஞானப் பார்வை இல்லாததால் பிரச்சினைகளைப் பற்றிய துல்லியமான மதிப்பீட்டை அல்லது அவற்றுக்கான ஒரு பயனுள்ள தீர்வை முன்வைக்க முடியாமல் அவர் முடங்கிப் போய் இருந்தார் என்பதை மறந்து போய் விடுவதற்கில்லை. எனினும், இந்திய சமூகச் சூழலில் அவர் ஆழங்கால்பட்டு இருந்ததும், அவருடைய உள்ளுணர்வின் அடிப்படையிலான கருத்துக்கள் மற்றும் அவற்றில் அவர் கொண்டிருந்த ஆழமான பற்றுறுதி காரணமாகவே தனது முன்னோடிகள், சமகாலத்தவர்கள் மட்டுமின்றி அவருடைய வழித்தோன்றல்களைக் காட்டிலும் சிறப்புக்குரியவராக காந்தியடிகள் திகழ்ந்தார்.

காந்தியத்தின் காலப் பொருத்தம்

இந்தியச் சூழல் பற்றிய அவரது அடிப்படையான நுண்ணறிவு, பழமைவாத மற்றும் தாராளவாத முதலாளித்துவப் போக்குகளுக்கு எதிரான அவரது விமர்சனங்களை எந்த நிலைப்பாட்டிலிருந்து அவர் மேற்கொண்டாரோ, அவை அனைத்தும் இன்றைய காலச் சூழலிலும் பொருத்தமுடையதாகவே உள்ளன. நமது தேசிய உயிரோட்டத்தில் இன்றும் கூட ஒரு வலுவான சக்தியை கட்டமைக்கக் கூடிய வல்லமை கொண்ட பழமைவாத, தாராளவாத, முதலாளித்துவ சிந்தனைகள் மற்றும் நடைமுறைகளை கருத்தில் கொண்டு காந்தியடிகளின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளை மறுமதிப்பீடு செய்வது ஓர் அவசர அவசியமாகும்.

இந்திய சமுதாய முன்னேற்றத்திற்கான அடிப்படைத் தேவைகள், கோடிக்கணக்கான மக்களின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றில் இருந்து இவ்விரு சிந்தனைப் போக்குகள் பிரிக்கப்பட வேண்டும் என்று இப்போது குறிப்பிடப்படுவது போல் காந்தியடிகளின் காலத்திலும் குறிக்கப்பட்டது. இந்தப் பின்புலத்தில் காந்திய பாரம்பரியம் இவ்விரு போக்குகளையும் எதிர்கொள்வதற்கான ஒரு அற்புதமான பொக்கிஷம் ஆகும். இன்றைய சூழலில் தேசம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தேசிய மற்றும் வெகுமக்கள் சார்ந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றால் பழமைவாத, தாராளவாத, முதலாளித்துவப் போக்குகளிலிருந்து பல்வேறு நிலைகளில் காந்திய அணுகுமுறை விலக்கப்பட வேண்டியது மிகவும் அடிப்படையான ஒன்றாகும். அத்தகு முற்போக்கான அணுகுமுறையைக் கட்டமைத்திட காந்திய சிந்தனையும் செயல்பாடும் ஒரு வலுவான ஆதரவுக்கரமாக விளங்கும்.

இன்று தேசம் எதிர்கொள்ளும் கேள்விகள் அனைத்திற்கும் காந்தியடிகளின் கருத்துகள் போதிய பதில்களைத் தருகின்றன என்று கூறுவதாகாது. அதே நேரத்தில், காந்தியடிகளின் அடிப்படைச் சிந்தனைகள் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டிராமல், இந்தியப் பிரச்சினைகளை எதிர்கொள்ள உருவாக்கப்படும் எந்தவொரு அணுகுமுறையிலும் அடிப்படையான குறைபாடுகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த பின்புலத்தில், பொருளாதார சமத்துவம், தொண்டு மற்றும் சிக்கனம், சுதேசி மற்றும் தன்னிறைவு ஆகிய லட்சியங்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட காந்தியடிகளின் சமரசமற்ற உறுதிப்பாட்டின் மீது நாம் நிச்சயம் கவனம் செலுத்தியாக வேண்டும்.

பொருளாதார சமத்துவம் தான் பொருளாதார மேம்பாட்டிற்கான காந்திய அணுகுமுறையின் அடித்தளமாக இருக்கிறது. பொருளாதார சமத்துவம் என்னும் கருத்தை வறுமைப் பகிர்மானம் என்று தாராளவாத முதலாளித்துவ அணுகுமுறை கொண்டோர் நையாண்டி செய்ததோடு அதனை நடைமுறை சாத்தியமற்றது என்றும் விரும்பத்தகாதது என்றும் கூறினர். பொருளாதார சமத்துவமின்மையே பொருளாதார மேம்பாட்டுக்கான ஓர் அவசியமான தேவை என்னும் அதீத கருத்தும் முதலாளித்துவ சிந்தனையாளர்களின் மத்தியில் நிலவுகிறது. ஆனால், அதற்கு நேரெதிராக அமைந்திருந்தது காந்தியடிகளின் கருத்து. தேசத்தின் பெருவாரியான செல்வ ஆதாரங்களை தங்களிடம் குவித்து வைத்திருக்கும் செல்வந்தர்கள் சிலரை ஒருபுறம் மட்டுப்படுத்துவதோடு, மற்றொரு புறத்தில் பட்டினியோடு அரைநிர்வாணக் கோலத்தில் தவிக்கும் கோடிக்கணக்கான ஏழை மக்களை உயர்த்துவது என்னும் ஓர் ஏற்பாடு இந்தியா போன்றதொரு ஏழை நாட்டின் பொருளாதாரத் திட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்க வேண்டும் என்று காந்தியடிகள் கருதினார்.

பொருளாதார சமத்துவம் என்னும் உறுதிமிக்க அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்படாத எந்த ஒரு பொருளாதாரத் திட்டமும் மணல் மீது எழுப்பப்படும் கட்டடம் போன்றதாகும் என்று காந்தியடிகள் முழங்கினார். மேலும் 5 லட்சம் கிராமங்கள், நூற்றுக்கும் குறைவான மாநகரங்களாலும், நகரங்களாலும் சுரண்டப்படுவதைப் பொருளாதார சமத்துவமின்மையின் உச்சகட்ட வெளிப்பாடு என்று அவர் கருதினார். கிராமங்களிலோ ஆதிக்க உயர் சாதியினர் தீண்டத்தகாதவர்களைச் சுரண்டினர். காந்தியடிகளின் கருத்துப்படி, அத்தகைய சுரண்டலின் மூலமாக சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மையானது ஒரு கொடூர வடிவத்தை அடைந்தது என்று கூறலாம். எனவே, கிராமங்கள் அவற்றின் சுயமான முயற்சியால் முன்னேறவும், தீண்டத்தகாதவர்கள் நெடுங்காலமாக அனுபவித்து வரும் கொடுமைகளிலிருந்து விடுபடவும் முழு ஆதரவு அளிப்பது தான் காந்திய பொருளாதார சமத்துவ கருத்தாக்கத்தின் முதன்மையான அம்சமாகும்.

மேலும், கிராமங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமத்துவம் என்ற அவரது கருத்து தாராளவாத முதலாளித்துவ அடிப்படையில் வலியுறுத்தப்படும் நலவாழ்வு நடவடிக்கைகள் மீது அமைந்திடவில்லை. மாறாக, உற்பத்தியில் ஆக்கபூர்வமான உழைப்பு என்னும் வெகு மக்களின் அடிப்படை உரிமை மீதுதான் அவரது சமத்துவக் கோட்பாடு எழுப்பப்பட்டுள்ளது.

தொண்டு மற்றும் சிக்கனம் என்னும் காந்தியப் பண்புகள் தாம் பொருளாதார சமத்துவத்தின் மறுபக்கம் ஆகும். வசதிபடைத்த வெகுசில செல்வந்தர்களை அப்படியே விட்டுவிட வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் வளர்ச்சியின் அடிப்படை இயந்திரங்கள் என்றும், பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அவர்களுக்கு பொருளாதார சலுகைகளை வழங்குவது அவசியம் என்றும் முதலாளித்துவ சிந்தனையாளர்கள் வாதிடுகிறார்கள். ஆனால், காந்தியடிகளோ ஏழை நாடொன்றில் வறுமையும், துன்பங்களும் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று திடமாக நம்பினார்; “கோடிக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்பட்ட வசதிகளை, உடமைகளை ஒதுக்கி வைப்பது என்ற மனப்பக்குவத்தை வசதிபடைத்தோர் ஏற்படுத்திக் கொள்வதோடு அந்த மனப்பான்மைக்கு இணங்க அவர்கள் தத்தம் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள வேண்டும்.“ என்று வலியுறுத்தினார். தேசத்துக்கான சேவை, பட்டினியால் வாடும் பல கோடி மக்களுக்கான சேவை - இந்தச் சேவை உணர்வுதான் பொருளாதார மேம்பாட்டுக்கான மிகச்சிறந்த பங்களிப்பை ஒவ்வொருவரும் செய்வதற்கான உந்து சக்தியை வழங்குகிறதேயன்றி பொருளாதார சலுகைகள் அல்ல என்று உறுதிபட உரைத்தார்.

சுதேசியும் சுயராஜ்யமும்

காந்திய சிந்தனையில் மூன்றாவதாக வருவது சுதேசியம் மற்றும் தன்னிறைவு ஆகும். பொருளாதார விடுதலை, அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை ஆகிய இரண்டு அம்சங்களும் காந்தியடிகளின் சுயராஜ்யக் கோட்பாட்டின் மைல் கல் ஆகும். இந்த விஷயத்தில் காந்திய அணுகுமுறைக்கும், தாராளவாத முதலாளித்துவ அணுகுமுறைக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி உள்ளது. தாராளவாத முதலாளித்துவவாதிகள் மேற்கத்திய கருத்துக்கள் மற்றும் மாதிரிகளின் சிறைக்கைதிகள் என்றாயினர். அவர்களிடம் படைப்பாற்றலும் இல்லை, படைப்பாற்றல்மிக்க வெகுமக்களின் மீது அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை. மறுபுறத்தில் காந்தியடிகளோ, துணிச்சல்மிகு புதுமையாளராக மட்டுமின்றி நம் மக்களின் ஆக்கப்பூர்வ ஆற்றலின் மீது பெரும் நம்பிக்கை உடையவராகத் திகழ்ந்தார்.

சுதேசி உணர்வு மற்றும் சுதேசி செயல் திட்டம் மூலமாக பொருளாதார சுயராஜ்யத்தை அடைந்திட முடியும் என்பதே அவரது கருத்தாகும். அதாவது, உள்நாட்டு அறிவாற்றலையும், தேசத்தின் பயன்படுத்தப்படாத மாபெரும் மனித ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலமாக, நேர்த்தியாக இருக்கும் அந்நிய பொருட்களுக்கு நிகராக பயன்படுத்தப்பட முடியாதவை என்றாலும்கூட உள்நாட்டு பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமாக, அனைத்திற்கும் மேலாக தேசத்தின் மனித ஆற்றல் மற்றும் இதர செல்வாதாரங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டுவதன் மூலமாக பொருளாதார சுயராஜ்யத்தை அடைந்திட முடியும்.

காந்தியடிகளின் பொருளாதார மேம்பாடு குறித்த பார்வையில், சுயராஜ்யம், சுதேசியம், பொருளாதார சமத்துவம் மற்றும் சிக்கனம் ஆகியவை ஒன்றையொன்று சார்ந்திருப்பவை ஆகும். எனவே, ஒன்றைப் புறந்தள்ளிவிட்டு, மற்றொன்றை அடைந்துவிட முடியாது. காந்தியப் பாரம்பரியத்தின் தேசிய மற்றும் ஜனநாயக உள்ளடக்கத்தின் இயல்பான வாரிசாகத் திகழ்வது சோசலிஸ்டு இயக்கமே ஆகும். எனவே, அதிலுள்ள இடைவெளியை இட்டு நிரப்பி, தற்கால சூழலுக்கு ஏற்ப முன்னெடுத்துச் செல்ல வேண்டியது சோசலிஸ்ட்களின் கடமையாகும்.

(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி 1969ல் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி, நியூ ஏஜ் ஏட்டிற்கு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

நன்றி: நியூ ஏஜ் வார இதழ்
தமிழில்: அருண் அசோகன்