இன்றைய பொருளாதார சூழ்நிலையில் உணவுப் பாதுகாப்பு என்பது உலகளாவிய பிரச்சினையாக இருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப எல்லோருக்கும் உணவு தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். முக்கியமாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உணவு பாதுகாப்பு என்பது தலையாயப் பிரச்சினையாக உள்ளது. மக்கள் தொகையில் இந்தியா மிகப்பெரிய நாடாக உள்ளது. உணவுக்கான உரிமையும், அரசின் கடமையும், குடிமக்களின் சமூகப் பொறுப்பும் உணவு பாதுகாப்பில் முக்கியத்துவம் பெறுகின்றன. 1940களில் உணவு உற்பத்தி மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. 1960களில் பசுமைப் புரட்சி வந்த பின்பும் உணவு உற்பத்தி பெருகிய அளவுக்கு, மக்களின் வாங்கும் சக்தி உயரவில்லை. சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் உணவுப் பாதுகாப்பு என்பது சவாலாகத்தான் இருந்து வருகிறது. இதன் முக்கியத்துவம் கருதியே அன்றே "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதி. உணவு என்பது மனிதன் உயிர் வாழ உட்கொள்ளும் அனைத்து உணவுகளும் அடங்கியது. தானிய வகைகள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், மாமிச உணவுகள் மட்டுமின்றி, சுத்தமான நீரும் காற்றும் கிடைக்கப் பெறுதல் வேண்டும். உணவு மனிதனின் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு உணவு தேவை பூர்த்தி அடையாத போது மற்ற தேவைகள் உருவாகுவதில்லை. இந்த உணவு ஊட்டச்சத்து மிக்கதாகவும், சரிவிகித உணவாகவும் கிடைக்கப் பெறுதல் வேண்டும். உடல் இயக்கத்திற்கும் ஆரோக்கியமுடன் வாழ்வதற்கும் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2400 கலோரி அளவுக்கு மேல் கிடைக்கப் பெறுதல் வேண்டும். சரி! இந்த உணவு சத்தானதாகவும் போதுமானதாகவும் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. கடுமையான மழை, இயற்கை சீற்ற காலங்கள் உணவு பாதுகாப்பிற்கு மிக பெரிய சவாலாக இருக்கிறது. ஒருபுறம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி, மறுபுறம் வெளி அங்காடியில் ரூ.40 முதல் ரூ.80 வரை அரிசி விற்கப்படுகிறது. அளவு சாப்பாடு ரூ.60; முழு சாப்பாடு ரூ.150 என்ற நிலை. அத்தியாவசிய உணவு பண்டங்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ப அமைப்புசாரா தொழிலாளர்களின் ஊதியம் உயரவில்லை. உணவு அல்லாத பண்டங்களுக்கான தேவை, பயன்பாடு பன்மடங்கு பெருகி வருகிறது. களனியை விட கணணியின் தேவை உயர்ந்து வருவதை பார்க்கலாம். முக்கியமாக கம்ப்யூட்டர், மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஒருவேளைை உணவு இல்லாமல் இருந்து விடலாம். ஒரு நாள் மொபைல் போன் பயன்பாடு இல்லாமல் இருக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. சுவர் இருந்தால்தானே சித்திரங்கள் வரைய முடியும். நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தால் தானே மற்ற விஷயங்களை அனுபவிக்க முடியும். நம் நாட்டில் உணவு பாதுகாப்பு திட்டங்கள், பொதுவிநியோகத் திட்டம், காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 என உணவு பாதுகாப்பு திட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் முழுமையான உணவு பாதுகாப்பு நிலை உருவாக வேண்டும்.
இன்றைய மருத்துவ வசதிகள் மனித உயிரை காப்பாற்றுவதற்கு போதுமானதாக இருக்கலாம். ஆனால் மனிதன் ஆரோக்கியத்தோடு வாழ்வதற்கு நல்ல சத்தான உணவு மிக அவசியம். ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டங்கள் முதியோர்க்கு மாற்றுத் திறனாளிகளுக்கு இருந்தாலும் அவர்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதுமான வருமானம் இருந்தும் உணவு சிலருக்கு கிடைப்பதில்லை; உணவு இருந்தும் வாங்கி சாப்பிட போதுமான பணம் இருப்பதில்லை; வருமானமும் உணவும் கிடைத்தாலும் அதனை வாங்கி உட்கொள்வதற்கும் உடல் ஏற்கும் திறனும், சுகாதார வசதிகளும் பெருக வேண்டும். பொருளாதார வளர்ச்சியில், வாங்கும் சக்தியில், அரிசி, கோதுமை, பால் மீன் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் இருந்தாலும் மனிதனின் உடல் ஆரோக்கியத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதை உலக பசி குறியீட்டு எண் மற்றும் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக பசி நிலையை அறிந்து கொள்ள உலகப் பசி குறியீட்டெண் ஆய்வு அறிக்கை வெளியிடப்படுகிறது. இதனை மதிப்பீடு செய்வதில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எடை, உடல் ஆரோக்கியம், உடல் உயரத்திற்கு ஏற்ப எடை, வயதிற்கு ஏற்ப உயரம் போன்றவை முக்கிய அளவுகோல்களாக உள்ளன.
2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி பட்டியலில் உள்ள 127 நாடுகளில் இந்தியா 105 ஆவது இடத்தில் உள்ளது. இது அவசர நிலையை குறிக்கிறது. இது பற்றி விமர்சனம் ஒரு புறம் இருந்தாலும் மறைமுக பசி(Hidden Hunger) நிலை உயர்ந்து வருகிறது என்பது உண்மை. அதாவது மனிதனுக்கு தேவையான சில நுண்ணூட்ட சத்துக்கள் தொடர்ந்து கிடைக்கப் பெறாத நிலை அதிகரித்து வருகிறது. ஒரு சில சத்துக்கள் கிடைக்கக்கூடிய உணவு பண்டங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும்.
ஒரு நாட்டின் உணவு பாதுகாப்பை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. அதாவது வேளாண் உற்பத்தி, காலநிலை வணிகம், ஏற்றுமதி இறக்குமதி, மழை, வருமானம், வேளாண் உற்பத்தி, உணவு தரம், சுகாதாரமான தண்ணீர் சுற்றுப்புறச் சூழல் அரசின் நிர்வாகம் அரசியல் நிலைப்பு தன்மை சமூக கட்டமைப்பு போன்ற பல காரணிகள் உள்ளன. எனவே ஒரு குறிப்பிட்ட காரணி மட்டும் உணவு பாதுகாப்பை உறுதி செய்து விடாது. இதன் பின்னணியை தெரிந்து கொள்வோம். உணவு பாதுகாப்பின் அவசியம் கருதி 1996 ஆம் ஆண்டு ரோம் நகரில் ஐநா சபையின் சார்பில் உலக உச்சி மாநாடு நடைபெற்றது. பட்டினி அல்லது பஞ்சம் என்ற அச்சுறுத்தலில் மக்கள் வாழ வேண்டிய அவசியம் இருக்காது என்பதுதான் இம்நாட்டில் கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பிற்கான தீர்மானம். உணவு பாதுகாப்பு என்பது நான்கு முக்கிய அம்சங்களை கொண்டதாகும். அவை 1. உணவு இருப்பு: அதாவது, இது நாட்டின் வேளாண்மை உற்பத்தி உணவு தானிய இருப்பு இறக்குமதி சம்பந்தப்பட்டவை. 2. உணவை அணுகும் திறன்: இது மக்களின் வாங்கும் சக்தி, வேலைவாய்ப்பு சம்பந்தமானதாகும். 3. உணவை உடல் ஏற்கும் திறன்: இது தூய்மையான குடிநீர், மற்றும் சுகாதார வசதி சார்ந்ததாகும். 4. நிலைப்புத் தன்மை : மேற் சொன்ன மூன்று அம்சங்களும் எல்லா காலங்களிலும் எல்லா சூழ்நிலையிலும் கிடைக்கப் பெறுதல் வேண்டும். உணவு பாதுகாப்பில் வேளாண்மை, கால்நடைத்துறை, மீன்வளம் முக்கிய பங்காற்றுகின்றது. நம் நாட்டில் நிலவளம், நீர் வளம், மனித வளம் போதுமானதாக இருந்தும் உணவு பாதுகாப்பில் முன்னேற்றம் அடைய வேண்டிய நிலையில் உள்ளோம். உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அந்த உடல் ஆரோக்கியத்திற்கு உணவு, உறக்கம் உடல் உழைப்பு மிக அவசியமாகும். அதற்கான சூழ்நிலை உருவாக வேண்டும்.
தனிக் குடும்ப கலாச்சாரங்கள் பெருகி வருவதால் சமூக அளவிலான உணவு பாதுகாப்பு பிரச்சனையும் அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம். பெரிய மாளிகை வீடுகளில் பணம் இருந்தும் உணவு இல்லாமல் கவனிக்க ஆள் இல்லாமல் சிரமப்படும் முதியோர் பலர் இருக்கின்றனர். சமூக விழாக்கள் சில நேரங்களில் உணவு பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இன்றும் கோயில்களில் அன்னதான திட்டம் பலருக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறது. கிடைக்கும் உணவை பகிர்ந்து உண்ணும் பழக்கமும் மனிதர்களிடம் வளர வேண்டி உள்ளது. தேவைக்கு மிகுதியான சத்துக்களை தொடர்ந்து உட்கொள்வதால் உடல் பருமனும், உடல் தேவை கேட்பது சில சத்துக்கள் கிடைக்காமல் சத்து குறைவும் ஏற்படுகிறது. உணவு சார்ந்த விழிப்புணர்வு பெருக வேண்டும். உணவு பாதுகாப்பின் அவசியம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். குடும்ப அளவிலான உணவுப் பொருளாதாரம் சமூகப் பொறுப்பாக மாற வேண்டும்.
ஐநா அமைப்பின் முன்னாள் பொது இயக்குனர் ஜாகுஸ் டையோப் கூறியது போல "பசி என்பது ஒரு தர்மப் பிரச்சினை அல்ல, இது ஒரு நீதிக்கான பிரச்சனை" என்று பார்க்க வேண்டும். மனித சமூகத்தின் மேன்மையை பசியில்லா நிலையை உருவாக்குவதன் மூலம் அடைய முடியும். இன்று ( அக்டோபர் 16) உலக உணவு நாள். இந்த நாளுக்கான கருப்பொருள்: "ஓர் சிறந்த வாழ்க்கைக்கும், எதிர்காலத்திற்கும் உணவுக் காண உரிமை" என்பதுதான். எனவே உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை பாதுகாப்பதில் அரசிற்கு மட்டுமல்லாமல், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக பொறுப்பு உண்டு. அரசின் திட்டங்களை சரியாக முழுமையாக பயன்படுத்தலாம். வீடுகளில் மாடித் தோட்டம் அமைத்து வீட்டுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். உணவுக்கான செலவை குறைக்கலாம். உணவை வீணாக்காமல், எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சத்தான போதுமான உணவு கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவோம். பசியில்லா ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்!
(அக்டோபர் 16, உலக உணவு நாள்)
- முனைவர் இல.சுருளிவேல், உதவிப் பேராசிரியர், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, டாக்டர் எம். ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், பொன்னேரி-601 204, திருவள்ளூர் மாவட்டம்