முனைவர் சாய்பாபா கல்லீரல் பாதிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய சிக்கல்கள் காரணமாக அகால மரணம் அடைந்தார். அவரது இறப்புக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. பொய்யாக புனையப்பட்ட வழக்கிலிருந்து அவரது பெயர் முற்றிலுமாக அகற்றப்பட்ட பிறகு, சிறையிலிருந்து விடுதலை பெற்ற ஏழு மாதங்களுக்குள் இறந்து விட்டார் என்பதுதான் மிகவும் துயரமான விடயமாகும். ஏறத்தாழப் பத்தாண்டுகள் காலம் சிறையில் அவரது உடல்நலம் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டதே அவரது அகால மரணத்துக்கு முழுமையான காரணமாக இருக்கலாம். அவருடைய ஒட்டுமொத்த உடல்நலப் புறக்கணிப்பே மிகவும் எளிய அறுவைச் சிகிச்சையான கல்லீரல் அகற்றம் கூட அவரது உயிரைப் பறித்துவிட்டது. அவர் கைதுசெய்யப்பட்ட போது மாற்றுத் திறனாளியாக இருந்தவர், அவர் சிறைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் பற்பல நோய்களுக்கு உள்ளாகி, போதுமான மருத்துவப் பராமரிப்பு அளிக்கப்படாததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியது.
மருத்துவப் பராமரிப்பு மறுக்கப்படுதல் அரசியல் சட்டத்தின் 21 வது பிரிவின்படி, மனித உரிமை மறுக்கப்படுவதற்குச் சமம் என உச்சநீதி மன்றம் அங்கீகரித்துள்ளது. மருத்துவப் பராமரிப்பு மறுக்கப்பட்டதால் நிகழ்ந்துள்ள சாய்பாபா மற்றும் பிறரின் மரணங்கள் இந்தச் சூழ்நிலையில் வைத்துப் பார்க்கப்படுவது முக்கியமாகும். 2021 இல் 83 வயதான அருள்தந்தை ஸ்டேன்ஸ்சாமி நீதிமன்றக் காவலில் உயிரிழந்தார். அவருக்கு கோவிட் தொற்று இருந்ததை கண்டுபிடிக்காமல், மருத்துவத் தலையீட்டுக்குப் போராடி அது கிடைக்க இருந்த நிலையில் இறந்து போனார். அதேபோல முனைவர் சாய்பாபா மீதான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இன்னொருவரான 35 வயது பாண்டு நரோட் சிறையில் தொற்றிய காய்ச்சலுக்குப் போதிய கவனம் செலுத்தப்படாமல் உயிரிழந்தார்.
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, பிணை வழங்குவதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவிக்கும் புலனாய்வு முகாமைகள், சிறை நிர்வாகிகள், மற்றும் நீதித்துறையின் ஒரு பிரிவினர் போன்றவர்கள் இப்படிப்பட்ட மூத்த, மாற்றுத்திறனாளி, மற்றும் நோயுற்றவர்கள் குறித்து அலட்சியமாக இருப்பது ஏன் என்று கேட்பது முக்கியமாகும். மக்களின் கண்ணியத்தையும் மருத்துவப் பராமரிப்பையும், தங்கள் நேசத்துக்குரியவர்களைச் சந்திப்பதையும் மறுத்து, பிணை விதியாகவும் சிறை விதிவிலக்காகவும் இருக்கும் வேளையில், அவர்களை முடிவற்ற காலத்துக்கு சிறையில் வைத்திருப்பதன் மூலம் அரசு ஏன் மக்களைத் தண்டிக்கிறது. சாய்பாபா மாற்றுத்திறனாளியாக இருந்தபோதும், அவரால் தனது கூர்மையான அறிவைக்கொண்டு அச்சமின்றிச் சிந்திக்க முடிந்தது, அவரது சிந்தனைகளை எழுத்துமூலம் அமைதியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்த முடிந்தது. அரசு அடிக்கடி அவரைத் தாக்கிவந்த போதும் அவர் சுதந்திரமான கருத்துக்களை வைத்திருந்தார். இதுவே அவரை தேச விரோதியாகக் குறிப்பிடப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது.
சட்டபூர்வமான மனித உரிமைகள் செயல்வீரத்தை, மாவோயிசம், பயங்கரவாதம், அல்லது தேச விரோதம் என்ற பெயரில் குற்றச் செயலாக்க முயற்சி செய்யும் அரசு இயந்திரத்துக்கு பலியானவர்களில் இன்னொருவர் முனைவர் ஜி.என்.சாய்பாபா.
2007 இல் முனைவர் பினாயக் சென் தொடங்கி 2014 இல் சாய்பாபா வரை, 2018 இல் பீமா கொரேகான் வழக்கு, 2020 இல் டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுச் சட்டம் தொடர்பான இயக்கம் மற்றும் ஜார்கண்ட், சட்டிஸ்கர், மராட்டியம், ஒடிசா ஆகியவற்றில் எண்ணற்ற பிற செயல்வீரர்கள் அனைவரும் அரச வன்முறைக்குப் பலியானவர்களே.
சொந்த மக்கள் மீதான இந்திய அரசின் பிரிவினரின் போர், 2005 இல் பஸ்தாரில் சால்வா ஜுடும் பரிசோதனையில் உச்சத்தை அடைந்தது. அப்போதைய முதலமைச்சர் சி.எம். ராமன் சிங் மற்றும் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் மஹேந்திர கர்மா ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் சால்வா ஜுடும் அந்தப் போரை நடத்தியது. இதைத் தொடர்ந்து, பழங்குடி மக்கள் தங்களுடைய நிலப் பறிக்கப்படுவதையும் இடம்பெயரச் செய்வதையும் எதிர்த்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தனர். இந்தச் சூழமைவில்தான் 2009 இல், மத்திய அரசால், அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் அவப்பெயர் பெற்ற பச்சை வேட்டை நடவடிக்கை (operation green hunt) தொடங்கப்பட்டது. செயல்வீரர்கள் இந்தச் சதியை அம்பலப்படுத்தினர். அப்போதுதான் முனைவர் சாய்பாபாவுக்குச் சோதனை வந்தது. இந்தப் பச்சை வேட்டை நடவடிக்கையை எதிர்த்து டெல்லியில் சாய்பாபாவும் பிறரும் ஆர்ப்பாட்டங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்தனர். நீதி கேட்டுக் குரல் எழுப்பியவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களில் சாய்பாபா தனியாளாக இல்லை. ஆனால் அவர் மீது குறி வைத்துத் தாக்குதல் தொடுக்கப்பட்டதற்கு காரணம் அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பேராசிரியரான அவருக்கு மாணவர்களின் ஆதரவு இருந்ததுதான். அவருடைய துணிச்சலை அரசு முகாமைகள் வெறுத்தன.
அரசு முகாமைகளில் சில பேராசிரியர் குறித்து அச்சம் கொண்டிருந்தன என்பது தெளிவாகும். 2014 இல் முனைவர் சாய்பாபா, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவரை மாவோயிஸ்டுகளுக்கு அறிமுகம் செய்துவைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்த அற்ப வழக்கில் அவருடைய பெயர் கூட முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கவில்லை. 2014 இலிலேயே அவருக்கு பத்து ஆண்டுகள் கடும் துன்பம் தொடங்கி விட்டிருந்தது. 2013 இல் கைதுக்கு முன்பு சாய்பாபா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையே சட்ட விதிமுறைகளை மீறிச் செய்யப்பட்டதாகும். அவருடைய கல்வியியல் சார்ந்த ஆராய்ச்சிப் பணியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. பின்னர் 2014 மே மாதத் தொடக்கத்தில் அவர் தெற்கு டெல்லி கல்லூரி வளாகத்தில் இருந்தபோது மராட்டிய காவல்துறை உளவுத் துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான் ஆட்சியில் இருந்தது. அவருடைய 90 விழுக்காடு உடல் ஊனத்தையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டு, மராட்டிய காவல்துறையும் நீதித்துறையின் ஒரு பிரிவும் சேர்ந்து நாக்பூர் உயர் பாதுகாப்புச் சிறையில், மிகவும் மோசமான தனி அறையில் அவரை அடைத்து வைத்தனர். ஒரு சிறையாளியாக அவருக்கு அளிக்க வேண்டிய நியாயமான எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. கழிவறை இல்லை, படுக்கை இல்லை, பிணை இல்லை. மருத்துவத்திற்கான பிணை கூட அளிக்கப்படவில்லை. 2016 இல் மருத்துவப் பிணை அளிக்கப்பட்ட போதும், அவரும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும் அமர்வு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்., அதற்குப் பிறகு விரைவிலேயே 2017 இல் கொடூரமான பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீண்டும் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார், அவருடைய வேலையும் பறிக்கப்பட்டது.
மரணப்படுக்கையில் இருந்த தாயாரைச் சந்திக்கக் கூட அவருக்கு பரோல் விடுப்பு வழங்கப்படவில்லை, அவருடைய தாயார் இறந்துவிட்ட போது அவருடைய இறுதிச் சடங்குகளை நடத்தவும் அவர் அனுமதிக்கப்படவில்லை. இதயமற்ற அரசு அவரை மனமுடையச் செய்தது. சிறை அதிகாரிகள், காவல்துறை, மராட்டிய உள்துறை மற்றும் நீதித்துறை ஆகியவை அவருடைய தாயார் அவருக்கு எவ்வளவு முக்கியமானவராக இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள மறுத்து விட்டனர். சாய்பாபா மீது நம்பிக்கை வைத்து, அவரது சுயமரியாதையை உருவாக்கிக் கொள்வதற்கு அவர் நல்ல கல்வியைப் பெறுவதை அவருடைய தாயார்தான் உறுதிப்படுத்தினார். சிறையில் அவருடைய உடல்நலம் படிப்படியாகச் சீர்குலைந்தது. நல்ல மருத்துவமனைகளில் மருத்துவப் பரிசோதனையும் பராமரிப்பையும் பெறுவதற்கு அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நாக்பூர் அரசு மருத்துவமனைக்கும் சிறைக்கும் அவர் மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டார். உடல்நிலை மற்றும் உடற்குறைபாடு காரணமாக மருத்துவமனை சென்றுவந்த ஒவ்வொரு முறையும் அவருக்கு கொடுங்கனவாக இருந்தது. வருகை தருவோரைப் பார்ப்பதோ வரும் தொலைபேசி அழைப்புக்களுக்குப் பதிலளிப்பதோ அவருக்கு மிகவும் கடினமானதாக ஆக்கப்பட்டன.
மிகவும் மோசமாக நடத்தப்பட்ட போதும், கவிதைகள் எழுதுவதையும் ஆழமான பார்வைகொண்ட கடிதங்களை எழுதுவதையும் அவர் தொடர்ந்தார். மாற்றுத்திறனாளி நபர்கள் சிறையில் எவ்வாறு நடத்தப்பட்டனர், மற்ற சிறையாளிகளுக்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பது பற்றிய கருத்துரைகளையும் எழுதினார். 2022 இல், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட இளைஞரான பாண்டு நரோட் சிறையிலேயே உயிரிழந்தார். அவரது உடல்நலப் பிரச்சனை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தது. ஸ்டான்ஸ் சாமி விடயத்தில் 2021 இல் நிகழ்ந்தது போல, மராட்டிய மாநில சிறைத்துறையும் உள்துறை அமைச்சகமும் அவரது இறப்பு குறித்து எந்தத் தீவிரமான விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இது சிறையிலிருந்த சாய்பாபாவுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.
2022 அக்டோபரில்தான் பாம்பே உயர்நீதி மன்றம் இருநீதிபதிகள் அமர்வு சாய்பாபாவுக்கும் மற்றவர்களுக்கும் எதிரான அரசுத்தரப்பு வழக்கை, நடைமுறைக் குறைபாடுகளின் காரணத்தால் தள்ளுபடி செய்ய முடிவுசெய்தது. மராட்டிய அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் இந்தத் தள்ளுபடிக்கு எதிராகத் தடையாணை பெற்றது. (முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு விடுதலை வழக்கில் இந்த விசாரணை சனிக்கிழமை நடத்தப்பட்டது. சாய்பாபாவின் சிறை வாழ்க்கை தொடர்ந்தது. இறுதியாக, 9 மாதங்கள் கழித்து, அந்த வழக்கு மறுவிசாரணைக்காக பம்பாய் உயர்நீதிமன்றத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. மார்ச் 2024 இல் உயர்நீதி மன்றம் மீண்டும் ஒருமுறை அரசுத்தரப்பு வழக்கை நடைமுறைக் குளறுபடிகளுக்காக அல்லாமல் தகுதி அடிப்படையில் தள்ளுபடி செய்தது. சாய்பாபாவும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவரும் 2024 மார்ச் 7 அன்று வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். நல்வேளையாக இம்முறை உச்சநீதி மன்றம் அவரது விடுதலைக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.
சாய்பாபாவின் இழப்பு மனித உரிமைகள் மற்றும் கல்வியியல் சமூகத்துக்குப் பேரிழப்பாகும். அவர் இதர பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு இயக்கங்களில் செயல்வீரராக இருந்தார். விவசாயிகள் இயக்கங்களுடன் பணியாற்றினார், இந்தியாவின் பழங்குடிப் பகுதிகளில் இந்திய அரசின் பிரிவுகள் மேற்கொண்ட கொடூரமான அடக்குமுறையை எதிர்த்ததுடன், தலித்துக்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகப் போராடினார். கல்வியல் அவரது செயல்வீரமாகவும் செயல்வீரம் அவரது கல்வியியலாகவும் இருந்ததாக அவர் தனது கல்வியலாளர்களிடம் எப்போதும் தெரிவித்தார். அவர் தனது செயல்வீரம் காரணமாக எப்போதும் தனது மாணவர்களை சிறந்தமுறையில் புரிந்துகொண்டு, சிறந்த முறையில் கற்பித்துவந்தார்.
அவரது இழப்பு அனைவருக்குமே குறிப்பாக அவரது இணையர் வசந்தாவுக்கு ஈடுசெய்ய இயலாததாகும். அவர் தனது கணவருக்கு நீதியைப் பெற்றுத்தருவதற்கு அனைத்து இடங்களிலும் போராடினார். கடிதங்கள், தாள்கள், சந்திப்புக்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கான உரிமை போன்ற சிறிய நிவாரணங்களுக்காகக் கூட அவர் போராட வேண்டியிருந்தது. அதேபோல அவருடைய மகளும் இந்தப் பத்தாண்டுகளும் கல்வியைத் தொடர்ந்தவறே அவருடைய விடுதலைக்காகப் பணியாற்றினார். இந்தக் கடினமான காலத்தை எதிர்கொள்வதில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. பத்தாண்டுகள் சிறைப்படுத்தல் மற்றும் விடுதலையில் ம.சி.உ.க. அவரது விடுதலைக்கான போராட்டத்தில் மற்றவர்களுடன் கூட்டாக ஆதரவளித்தது போலவே அவரது குடும்பத்துக்கும் ஆதரவளித்தது. பொது நிலைப்பாட்டை எடுத்ததோடு எங்கள் பத்திரிக்கைச் செய்திகள் மூலமாக அரசாங்கம், நீதித்துறையின் ஒரு பிரிவு ஆகியவற்றுக்கு வேண்டுகோள் விடுத்தோம். அவருக்கு ஆதரவான பிரச்சார இயக்கங்களையும் கூட்டங்களையும் ஒருங்கிணைத்தோம், அவருடைய இணையர் வசந்தா அவர்களுக்கும் அவர்களுடைய மகளுக்கும் இந்தக் கடினமான காலங்களில் உறுதுணையாக நின்றோம்.
டெல்லி பல்கலைக்கழகம் அவருடைய வேலையை இந்நேரம் திரும்பத் தந்திருக்க வேண்டும், வசந்தா அவர்களும் அவர்களுடைய மகளும் அந்த உரிமையைப் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு குடிமைச் சமூகம் பணியாற்ற வேண்டியுள்ளது. கடைசியாக, சாய்பாபாவின் கனவுகளை உயிரோட்டத்துடன் தொடரச் செய்வதற்குப் பாடுபடுவதோடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்காகவும் மக்கள் சிவில் உரிமைக்கழகம் தொடர்ந்து பணியாற்றும். ஏனெனில் அவருடைய கனவுகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்ககான நீதியும் உலகுதழுவிய மனித உரிமைகளில் மையமாகப் பொதிந்துள்ள பகுதிகளே தவிர வேறல்ல. பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்கு (UAPA) எதிராக அதைத் திரும்பப்பெறக் கோரும் இயக்கத்தை மறுகட்டமைப்புச் செய்வதே உடனடிக் கடமைகளில் ஒன்றாகும்.
- கவிதா சிரிவத்சவா (தலைவர்) & வி.சுரேஷ் (பொதுச் செயலாளர்), மக்கள் சிவில் உரிமைக் கழகம்
______________________________
தமிழில்: ந.இராதாகிருட்டிணன், வழக்கறிஞர், இணைச் செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், ஈரோடு மாவட்டக் குழு.