தமிழ்நாட்டின் அரசியலுக்கும், திரைத்துறைக்குமான தொடர்பு சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஒட்டுமொத்த தமிழக அரசியல் வரலாறும் சினிமாவோடு பின்னிப்பிணைந்து இருக்கின்றது.

திரைத் துறையைத் தேர்ந்தெடுக்கும் பலரும் சினிமாவில் நடித்து மக்களிடம் சமூக மாற்றத்திற்கான கருத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைத் தாண்டி அதை ஒரு பெரும் பணம் ஈட்டுவதற்கான கருவியாகவும், மக்களிடம் எளிமையாகச் சென்றடைய முடியும் என்பதாலும், அதை வைத்து ஒருநாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறிவிடலாம் என்ற பெரும் கனவிலும்தான் சினிமாத் துறையைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்.

அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், கார்த்திக், சீமான், சரத்குமார், கருணாஸ், கமல்ஹாசன், மன்சூர் அலிகான் வரை பலரும் அரசியல் களத்தில் முதலமைச்சர் கனவோடு களம் இறங்கியவர்கள். ஆனால் இதில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.actor vijay 619இதில் ஜெயலலிதா வளர எம்ஜிஆர் காரணமாக இருந்தார். தற்போதுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவரது தந்தை கலைஞர் கருணாநிதி காரணமாக இருந்தார்.

சினிமாவில் வெற்றி பெற்று விட்டால் மட்டும்தான் அரசியலிலும் வெற்றி பெற முடியும் என்றில்லை. உதயநிதி போன்று சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் அரசியல் செல்வாக்கும் பணபலமும் இருந்தாலும் வெற்றிபெற முடிகின்றது.

அப்படிப்பட்ட சூழலில் நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் களமாட வந்திருக்கின்றார். சினிமாக் கூத்தாடிகள் நாடாள ஆசைப்படலாமா? என்று நாம் கேட்டு கேட்டு அலுத்துப்போன சூழலில் மக்களும் தங்களுக்கான தலைவனை திரையில் மட்டும்தான் தமிழ்நாட்டில் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொண்டே நாம் அரசியல் பேச வேண்டி இருக்கின்றது.

நடிகர் விஜய்யால் தமிழக அரசியல் களத்தில் வெற்றி முடியுமா? அதற்கான ஓட்டு வங்கியும் மக்கள் செல்வாக்கும் அவருக்கு இருக்கின்றதா என்பதைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளைச் சுற்றியே அரசியல் களம் அமைந்து வந்திருக்கின்றது. மற்ற கட்சிகள் எல்லாம் இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி வைத்தே தங்களைக் காப்பாற்றி வந்திருக்கின்றன.

ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரின் மறைவுக்குப் பின் இந்த பிரதான கட்சிகளின் வாக்கு வங்கியில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக - 26.93%, அதிமுக - 20.46%, பாஜக - 11.24%, நாம் தமிழர் - 8.19%, காங்கிரஸ் - 10.67%, பாமக - 4.4%, தேமுதிக - 2.59%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2.15%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2.5% வாக்குகள் பெற்றன.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது 53 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. ஆனால் இந்தத் தேர்தலில் அதே 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் திமுக கூட்டணி 46.97 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றது.

அதேபோல், தனிப்பட்ட முறையில் கடந்த 2019-ல் 33.53% வாக்குகள் பெற்ற திமுக, இந்தத் தேர்தலில் 26.93% வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளுக்குள் திமுக மக்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்பதையும், மக்களின் எதிர்ப்பை மட்டுமே சம்பாதித்து இருக்கின்றது என்பதையுமே இது காட்டுகின்றது.

தமிழக மக்கள் மக்களவைத் தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதிரியும் ஓட்டளிக்கின்றார்கள் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அதிமுக மாநிலத்தை ஆளும்போது கூட்டணியோடு 53 சதவீத வாக்குகளை திமுக வாங்கியதற்குக் காரணம், அதிமுக மீது மக்களுக்கு இருந்த வெறுப்புதான். அந்தத் தேர்தலில் கூட பிஜேபி 3.62 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது.

ஆனால் திமுக திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பின் நடந்த மக்களவைத் தேர்தலில் 3.62 சதவீதமாக இருந்த பிஜேபியின் ஓட்டு வங்கி 11.24 சதவீதமாக உயர்ந்திருக்கின்றது. அதே போல நாம் தமிழர் கட்சியின் ஓட்டு வங்கியும் 6.6 சதவீதத்தில் இருந்து 8.19 சதவீதமாக  மாறி அது மாநிலக் கட்சி என்ற தகுதியையும் பெற்றிருக்கின்றது.

ஒரு பக்கம் திமுகவின் செல்வாக்கு குறைந்துவரும் அதேவேளையில் பிஜேபி மற்றும் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு உயர்ந்திருப்பதையே கள நிலவரங்கள் காட்டுகின்றன.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து 37.70 சதவீதமும், கூட்டணியோடு 45.38 சதவீதமும் ஓட்டு வாங்கியது. அதே போல அதிமுக தனித்து 33.29 சதவீதமும் கூட்டணியோடு சேர்ந்து 39.72 வாங்கியது.

ஆட்சிக்கு வருவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளுக்குப் பின்பு நடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குசதவீதம் திமுகவிற்கு குறைந்திருக்கின்றது.

அதே சமயம் இந்த சரிவு இன்னும் நீடிப்பதற்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஓட்டு வங்கியில் பலத்த அடி விழுவதற்குமே வாய்ப்பு அதிகம்.

திமுக அரசு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கை இழந்து வருகின்றது. சாராய சாம்ராஜ்ஜியமும், ஊழலும், ரவுடியிசமும், கூலிப்படை கொலைகளும் இந்த அரசு முற்றுமுழுக்காக தோற்றுப் போய்விட்டதையே காட்டுகின்றது.

திமுக, அதிமுக மீது மக்களுக்கு எப்போதுமே ஒரு அதிருப்தி இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இந்த இரண்டு கட்சிகளையும் எதிர்த்து 234 தொகுதிகளிலும் தனித்து ஆட்களை நிறுத்தி வெற்று பெறும் அளவிற்கு எந்த ஒரு கட்சியாலும் முடியவில்லை.

இந்த இரண்டு கட்சிகளிடமும் இருக்கும் பண பலமும், ஏற்கெனவே அது உருவாக்கி வைத்திருக்கும் குறுநில மன்னர்களையும் தாண்டி எந்த ஒரு புதிய கட்சியாலும் சோபிக்க முடியவில்லை.

வேறு கவர்ச்சிகரமான மாற்று இல்லாததால் பேய்க்கு ஓட்டு போட வேண்டும், இல்லை என்றால் பிசாசுக்கு ஓட்டு போட வேண்டும் என்ற நிலையே தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளாக நீடித்து வந்தது.

ஆனால் சீமானின் அரசியல் வருகையும் தமிழகத்தில் பிஜேபியின் வளர்ச்சியும் இதை தற்போது கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது. திராவிட எதிர்ப்பு அரசியல் மக்களிடம் எதிர்ப்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதைத்தான் இந்த கட்சிகளின் வளர்ச்சி காட்டுகின்றது.

மக்களவைத் தேர்தலில் நாதகவும் பிஜேபியும் பெற்ற வாக்குகள் ஏறக்குறைய அதிமுக தனித்து பெற்ற வாக்குகளுக்கு சமம். இதை சாதாரணமான மாற்றமாக நாம் கடந்து போக முடியாது.

திராவிடம் பேசிய திமுகவும், அதிமுகவும் அதற்கு நேர்மையாக நடந்திருந்தால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது. இரண்டு கட்சிகளிலும் உள்ள முக்கிய தலைவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தாலே இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியும்.

தமிழ்நாட்டு மக்களிடம் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் மீதும் ஏற்பட்டிருக்கும் வெறுப்பு ஒரு மலையாக வளர்ந்து நிற்கின்றது. விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கிய போது மக்கள் பெருமளவில் அவர் பின்னால் சென்றார்கள். ஆனால் கலைஞர் மற்றும் ஜெயலலிதா என்ற இருவரால் விஜயகாந்த்தின் எழுச்சியைத் தடுத்து நிறுத்த முடிந்தது. இன்று தேமுதிக இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. அதிமுக கலகலத்துப்போய் கிடக்கின்றது. அது கவுண்டர் அணி, முக்குலத்தோர் அணி எனப் பிரிந்து கிடக்கின்றது. நிச்சயம் வரும் தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா, சாவா என்ற நிலையில்தான் இருக்கும்.

இப்போது அதிமுகவை கைகழுவிட்டு அதற்கு மாற்றாக ஒரு கட்சியைக் கொண்டுவர அதை ஆதரித்து நிற்கும் நிலவுடமை மற்றும் புது பணக்கார வர்க்கம் விரும்பும். அது நிச்சயம் நடக்கத்தான் போகின்றது. அதே சமயம் திமுகவின் மக்கள் விரோத குடும்ப ஆட்சியின் மீதான மக்களின் வெறுப்பு வரும் ஆண்டுகளில் கொதிநிலைக்க்ச் செல்லும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதைத்தான் காட்டுகின்றது.

இந்நிலையில் அரசியல் அறிவற்ற இளைஞர்கள், லும்பன்கள், மற்றும் கீழ்த்தட்டு மக்களிடம் விஜய்க்கு இருக்கும் கவர்ச்சிகர பிம்பம் அவருக்கு நிச்சயம் ஒரு கணிசமான வாக்கு வங்கியை பெற்றுத் தரும். சேர்ந்தார் போல நாதக மற்றும் பிஜேபியில் இருப்பதால் எந்த மாற்றமும் அரசியல் ஆதாயமும் கிடைக்காது என நினைப்பவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் மக்களிடம் திமுக பெற்றிருக்கும் அதிருப்தியும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாகவோ, இல்லை எதிர்க்கட்சியாகவோ தமிழக வெற்றிக் கழகத்தை கொண்டுவந்து நிறுத்த வாய்ப்பிருகின்றது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி எதிர்க்கட்சியாக மாறலாம் அல்லது இப்போது இருக்கும் எதிர்க்கட்சி காணாமல் போகலாம்.

மற்றபடி ஏன் விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்பதையோ, அல்லது திராவிடத்தையும் தமிழ்த் தேசியத்தையும் எப்படி ஒன்றாக பார்க்க முடியும் என்ற சீமானின் சீற்றத்தையும் நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை.

எல்லாவற்றிலும் சில அரசியல் கணக்குகள் இருக்கின்றன. தேர்தல் பாதையில் சித்தாந்தங்களைவிட நாயக பிம்பத்திற்கே செல்வாக்கு அதிகம் என்பதை தமிழக மக்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றார்கள். தமிழக மக்களின் நாடியைப் பிடித்து பார்த்தால் நிச்சயம் தெரியும் ஒரு மாற்றம் 2026 இல் நடக்கும் என்று.

- செ.கார்கி