முன்னுரை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைத் தமிழ் மக்கள் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரு வகைப்படுத்தினர். இதில் அக வாழ்வை அறவாழ்வுப் படுத்துகிறார் வள்ளுவர். ‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’ என்பார். இந்த அற வாழ்வை அருள் வாழ்வாக மாற்றுவர் நாயன்மார்களும் ஆழ்வார்களும். ஆக அருள் வாழ்வுக்கும் அற வாழ்வுக்கும் அடிப்படையாக அமைவது அக வாழ்வே ஆகும். அக வாழ்வுக்கு அரண் செய்வது அறமாகும். புறமாகிய உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றையும் அகவாழ்வுக்கு அறநெறிப்படுத்தி இல்லறமாக வகுக்கிறார் வள்ளுவர். இம்முத்தேவையின் தேடலுக்கான ஒழுக்கநெறிகளையும் அவற்றைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுப்பதற்கான அறநெறிகளையும் எவ்வாறெல்லாம் வள்ளுவர் எடுத்துரைக்கிறார் என்பதை ஆய்வாதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வள்ளுவர்
திருவள்ளுவர் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர் ஏனென்றால் மற்றப் புலவர்கள் எல்லாம் அகமும் புறமும் பாட இவரோ அகவாழ்வுக்குள்ளும் புறவாழ்வுக்குள்ளும் இருந்த அறநெறியை அறிந்து அறம் பொருள், இன்பம் எனப் பிரித்து அறநெறியைத் தனித்துக் காட்டுகிறார். இவர் தொல்காப்பியர் கண்ட ‘இன்பமும் பொருளும் அறனும் எனும் இலக்கணத்திற்கு குறள் எனும் இலக்கியம் காணுகிறார். தொல்காப்பித்தையும் சங்க இலக்கியத்தையும் உளங்கொண்டு தொல்காப்பியர் கூறும் கலி, பரிபாடல் ஆகிய அகப்பாடலுக்குரிய இலக்கணத்தை உடைத்து, சங்கப் புலவர்கள் அகத்தை ஆசிரியப்பாவில் பாட அதையும் உடைத்த வள்ளுவர் குறள் வெண்பாவால் இன்பத்துப் பாலை பாடுகிறார். சங்கப்புலவர் தொல்காப்பியரின் இன்பம், பொருள் ஆகிய இரண்டிற்கும் இலக்கியம் காண திருவள்ளுவரோ விடுபட்ட அறத்தையும் சேர்த்து அறம், பொருள், இன்பம் என இலக்கியம் இயற்றினார் என்பது எனது துணிபு.
இல்லறம்
இல்லறம் எனும் சொல்லை இல்+அறம் எனப் பிரித்தால் இல் எனும் சொல் இல்லத்தையும் ‘இல்லை’ என்பதையும் குறிக்கும். இல்லம் என்பது கணவன், மனைவி, குழந்தை ஆகியோரை குறிக்கும். இல்லாள் இல்லையேல் இல்லம் இல்லை. வீட்டிற்கு இல்லாள் என்பது போல் இல்லான் எனும் சொல் இல்லை, இல்லான் என்றால் இல்லாதவன் எனும் பொருள்படும.;
“இல்லானை இல்லாளும் வேண்டாள்” (நல்வழி பா.34)
என்பது ஒளவையாரின் கூற்றாகும். இன்பத்தைப் படைக்கச் செய்வதும் துன்பத்தை உடைக்கச் செய்வதும் அறமாகும். இன்பம், துன்பம் என்பது உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றையும் சார்ந்து வருவதாகும். இதை,
“அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்.” (மணிமேகலை-27-29)
என அறத்தை வரையறை செய்கிறது மணிமேகலை. இல்லத்தில் கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூவரும் சேர்ந்து செய்வதே அறம் தனிமனிதனாக இருந்துகொண்டு செய்தால் துறவறம் அதனால்தான் கண்ணகி,
“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்துஎதிர் கோடலும் இழந்த என்னை.” (கொலைக்களக்காதை-71-73)
என்று குடும்பத்தில் கணவனைப் பிர்ந்து இருப்பதால் அறம் செய்ய முடியாமல் தவிக்கிறதை மட்டும் அவள் கூறவில்லை, குழந்தைபேறு இல்லாத உணர்வோடும் இப்படிக் கூறுகிறாள். ஒருவரையும் துணைக்கு வைத்துக்கொள்ளாமல் அறம் செய்வது துறவறமாகும். இதை மணிமேகலை செய்தாள். கண்ணகிக்கு துணை இல்லாமல் அறம் செய்ய முடியவில்லை மணிமேகலைக்கோ துணை தொடர்ந்து வருவதால் அறம் செய்ய முடியவில்லை என்பதை அறியமுடிகிறது. இல்லத்தில் இருந்து அறம் செய்ய விரும்புவது இல்லறமாகும். இல்லத்தில் இல்லாமல் இல்லத்திற்கு அறம் செய்ய விரும்புவது துறவறமாகும்.
உள்ளறத்தூய்மையே இல்லத்தூய்மை
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் நீக்கி இல்லத்தில் இருந்துகொண்டு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றையும் பிறர்க்குச் செய்வது இல்லறமாகும் என்பார் வள்ளுவர் இதை,
“அழுக்காறு அவவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.” (குறள்-35)
இவ்வாறு அறம் செய்து வாழ்வதே தமிழர் கண்ட இல்லறவாழ்வாகும். அறம் செய்து வாழ்வதால் என்ன பயன் கிடைக்கும் என்றால் இன்பம் கிடைக்கும்,
“அறத்தால் வருவதே இன்பம்” (குறள்-39)
என்பது வள்ளுவரின் வாக்கு. வறுமையில் வாடி, பாடி பரிசாகப் பெற்றதைக் கொண்டு வந்து பெருஞ்சித்தனானர் தன் மனையாளிடம் கொடுத்து,
“இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைக்கிழ வோயே.” (புறம்-163)
என வறுமைப்பட்ட நிலையிலும் அறம் தவறாது வாழ்ந்திருக்கின்றார். இதனையே இல்லறவியலில் வள்ளுவரும் வலியுறுத்திச் செல்கிறார்.
இல்லற வாழ்விற்கான தகுதி
இல்வாழ்க்கை வாழ்பவர்கள் துறவோர், வறுமையுற்றவர், ஆதரவற்றோர், இறந்த முன்னோர், வழிபடு தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், ஆகியோரிடம் அன்பைக் காட்டி; பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகியவற்றைத் தன்னிடத்தில் நீக்கி அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய உதவிகள் செய்து வாழ்வதே இல்லற வாழ்வாகும். அவ்வாறு வாழ்பவர்களே வானத்தைப் போன்று உயர்வாக மதிக்கப்படுபவர் ஆவார் என்பார் வள்ளுவர்.
குழந்தைப்பேறு
இல்லற வாழ்வின் ஒருபகுதியாக வாழும் இல்லாள் தன் கணவனை உயர்வாக எண்ணி அவன் வழி நின்று நெறிப்படுத்திச் செல்லும் நற்பண்புடையவளாகத் திகழ்ந்தால் வீடும் மாண்பைப் பெற்று மங்கல மகிழ்ச்சி பெறும். இம்மகிழ்ச்சிக்குள்தான் தங்களைப் போன்று அன்பும் அறனும் உடைய குழந்தையைப் பெறமுடியும். இவ்வாறு பெற்றக் குழந்தையே தாய் தந்தையர்க்குச் சான்றாக நின்று சான்றோன் ஆக்கப்படுகிறான் என்பதனை,
“ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.” (குறள்-69)
எனச் சான்றோன் ஆவதற்கு சான்று தருகிறார். அறவழியில் குழந்தையை உருவாக்குவதின் முக்கியத்துவத்தை அறிய முடிகின்றது. கணவன் மனையாள் மீதும் மனையாள் கணவன் மீதும் செய்கின்ற அன்பிலேயே அறம் தோன்றுவிடுகிறது.’அறத்திற்கே அன்பு சார்பு’ என்பார் வள்ளுவர்.அன்பு அறத்தைச் சார்ந்தே இயங்கும். அன்பில்தான் உயிர் தோற்றம் பெறுகிறது ‘அன்பின் வழியது உயிர்நிலை’ (குறள்-80) உயிர்பெற்ற குழந்தையின் மீது தாய் தந்தையர்க்கு அன்பு தோன்றும்.அக்குழந்தைக்கு பெற்றோர் மீது அன்பு தோன்றும். இம்மூவருக்குள்ளும் அன்பு உடைமையாகிறது. இம்மூவரும் பிறரிடம் அன்பு செலுத்தத் தொடங்கும் இடத்தில்தான் இல்லறம் சமுதாய அறமாக மாற்றமடைகிறது.இதனையே வள்ளுவர்,
“இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு.” (குறள்-81)
எனக் கூறி இல்லறத்தை சமுதாய அறமாக மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார். அன்பு குடும்பத்தில் தோற்றம் பெற்றுச் சமுதாயத்தில் அறமாகப் பயணம் செய்கிறது. சுற்றத்தாரையும் விருந்தினரையும் இனிய முகத்தோடு இன்சொற்களால் கூறும் தன்மையே அறமாகும் என்பார் வள்ளுவர். தனக்கு உதவி செய்தவரை மறப்பது என்பதும் அறமாகாது நன்றி மறப்பது நன்றன்று என்பார்.எனவே தனக்கு உதவியவரை மறவாமல் இருப்பதே அறமாகும்.
அறம் தவறாமை
ஒருவன் நடுநிலையோடு நின்று செயல்படுவானாகின் அவனே அறச்சான்றோன் ஆவான் அடக்கத்தையும் ஒழுக்கத்தையும் உடைமையாக்கிக் கொள்ளுதலே அறமாகும்.ஒருவன் ஒருத்தியோடு வாழ்தலே அறமாக்கப்படுகிறது. இவர்களே உண்மையுடையவர்களாக உயர்கிறார்கள்.
பிறர் செய்யும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளுதல், பிறரிடம் பொறாமை செய்யாது இருத்தல், பிறர்பொருளைக் கவராமை, மற்றவரிடத்தில் குற்றம் காணாமை, பயனில்லாச் சொற்களைச் சொல்லாது இருத்தல், தீமை செய்வதற்கு அஞ்சுதல் போன்ற பண்புகள் அறமாக்கப்படுகின்றன. இவ்வாறான பண்புடையவர்களே இல்லத்தில் மதிப்புடையவர்களாகவும் சமுதாயத்தில் நம்பிக்கை உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.
கொடையும் ஈகையும்
பிறர்க்கு உதவ கொடைகொடுக்கும் பேரறிவாளனின் பெருஞ்செல்வம் பேரறமாகும்.தான் பெற்ற உணவை பலரோடு பகுத்து உண்ணும் பழக்கம் அறத்திற்குரியவையே என்பார் வள்ளுவர்.பலருக்கும் பகுத்தளிப்பதற்காகவே செல்வத்தைத் தொகுத்துவை என்கிறார் பண்டைய புலவரான காப்பியாற்றுக்காப்பியனார்.
“பகுத்தூண் தொகுத்த ஆண்மை
பிறர்க்கென வாழ்திநீ ஆகல்மாறே.” (பதிற்றுப்பத்து-38)
இச்சிந்தனை இல்லத்திற்கு இல்லறமாகவும் சமுதாயத்தில் நல்லறமாகவும் உள்ளது.இதுவே அரசியலுக்குரிய அடிப்படை அறமாகவும் ஆக்கப்படுகிறது.
புகழுடைய வாழ்வு
மேற்கூறப்பட்ட அறச்செயல்களைக் கடைபிடித்து இல்வாழ்க்கையில் தோன்றின் (வாழ்ந்தால்)புகழோடு தோன்றுக(வாழ்க)அப்படி இல்லையென்றால் நீ இல்வாழ்க்கை வாழாமல் இருப்பதே நல்லதாகும் என்பதை,
“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று” (குறள்-236)
என வள்ளுவப் பெருந்தகை இல்லறத்தின் புகழை அமைத்துக்காட்டுகிறார். அறநெறியில் நின்று இல்லத்தின் இன்பத்தைப் பெறுதலே புகழுடைய வாழ்வாகும் அறத்தோடு பொருந்தாமல் வாழ்வதெல்லாம்; புகழ் இல்லாதவையாகும் என்பதைனையே,
“அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல.” (குறள்-39)
என புகழுடைய வாழ்வு என்பதே இல்லறத்தோடு வாழ்வதேயாகும். இல்லறத்தைப் பின்பற்றி வாழ முடியவில்லையென்றால் இல்லறத்திற்கு அடுத்து துறவ அறத்தையாவது பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே இல்லறவியலுக்கு அடுத்து துறவறவியலை அமைத்துக் காட்டுகிறார் வள்ளுவர். வள்ளுவரின் இல்லறநெறியைப் பின்பற்றி வாழ்பவர் மிகச் சிலரே, பின்பற்றாது பல துன்பங்களையும் சந்தித்து வருபவர் மிகப் பலரே என்பது இல்லறவியலின் வழி அறியமுடிகிறது.
முடிவுரை
அறம் என்பது இயற்கை நெறி அடிப்படையில் பண்டைய தமிழ் மக்கள் தம்மை ஒழுங்குபடுத்துவதற்கு வகுக்கப்பட்ட மரபுச்சட்டம் ஆகும். இம்மரபைத் தம் அகவாழ்வுக்கும் புறவாழ்க்கைக்கும் பொதுமைப்படுத்தி வைத்துள்ளனர்.அகவாழ்வான இல்வாழ்வுக்கு உரிய அறம் வகுக்கப்பட்டு கணவன், மனைவி, குழந்தை, சுற்றம், சமுதாயமாக அறம் வளர்ந்து மேலும் அரசியலுக்குரியதாக மாறுகிறதை வள்ளுவரின் வழி அறியமுடிகின்றது.அவர் கூறும் இல்வாழ்க்கைக்கு சேர்க்க வேண்டியதைச் சேர்த்தும் நீக்க வேண்டியதை நீக்கியும் வாழ்ந்தால் இயற்கை படைப்பில் மானிடப் பிறப்புச் சிறப்படையும் என்பதில் ஐயமில்லை எனலாம்.
- முனைவர் மு.கருப்பையா, தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர், எஸ்.எஸ்.எம்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்