இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ரயில்வே துறை முக்கியமான ஒன்றாகும். போக்குவரத்து, வேலைவாய்ப்பு, பண்டங்கள் பரிமாற்றம் என பல்வேறு விஷயங்களில் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு ரயில்வே முக்கிய பங்கு வைக்கிறது. இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் 16.04.1853 அன்று மும்பைக்கும் தானேவிற்கும் இடையே இயக்கப்பட்டது. அன்று, அப்பாதையின் நீளம் 34 கிலோமீட்டர் மட்டுமே. தற்போது (2024) இரும்பு பாதையின் மொத்த நீளம் 68,584 கிலோமீட்டர்கள். மொத்தம் 8,702 ரயில்கள், ஆண்டுக்கு சுமார் 500 கோடி மக்கள் இடம் பெயர்கிறார்கள், 27 மாநிலங்களையும் 3 யூனியன் பிரதேசங்களையும் இணைக்கிறது என புள்ளி விவரங்கள் கூறுகிறது. தொலைதூர, புறநகர், மெட்ரோ ரயில் சேவை ஆகியவை இந்திய ரயில்வேயின் கீழ் வருகிறது.railway track 700மொத்த ரயில் இயக்கத்தில் சுமார் 94 விழுக்காடு மின்சார ரயில்களாகும். இது ரயில்வேயில் மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும். ரயில்வேக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அதிவிரைவு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் எல்லா தரப்பு மக்களும் தங்களின் வருவாய் நிலைக்கு ஏற்ப ரயிலில் பயணிக்க கூடிய சூழலும் இருக்கிறது என்பது பாராட்டத்தக்கது. அதே சமயம், பயணிகளின் சேவையில் இன்னும் முன்னேற்றம் முன்னேற்றம் அடைய வேண்டிய நிலையும் உள்ளது. முக்கிய ரயில் நிலையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இருக்கலாம். ஆனால் எல்லா ரயில் நிலையங்களிலும் குடிநீர் வசதி, கழிவறை வசதி, பொது தொலைபேசி வசதி இருக்கிறதா, பயணிகளுக்கான பாதுகாப்பு இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும். பல ரயில் நிலையங்களில் பெயருக்கு குடிநீர் கழிவறை இருக்கிறது பயன்பாடு இல்லை.

மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள், வந்தே பாரத் போன்று தொலைதூரம் செல்லும் விரைவு ரயில்களில், முக்கியமாக இரவு நேரங்களில் அடுத்த நிறுத்தம் வருவதற்கான ரயில் முன்அறிவிப்பு வசதி ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது. பகல் நேரங்களில் நாம் தூங்குவதில்லை. ஜன்னல் வழியாக பார்த்து தெரிந்து கொள்கிறோம். பதட்டம் இல்லாமல் இறங்கி விடுகிறோம். ரயில் பயணங்களில் இரவு நேரங்களில் நமக்கு ஏன் முன்னறிவிப்பு வசதி இல்லை இன்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா?

விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. ஒவ்வொரு பெட்டியிலும் முன்னறிவிப்பு வசதி பயணிகளுக்கு எவ்வளவு வசதியாக இருக்கும். சிலர் கூறுகையில் நமது கைப்பேசியில் அந்த வசதி உள்ளது அதில் பதிவு செய்தால் அந்த இடம் வரும்போது அது நம்மை எழுப்பி விடும் என்று கூறுகிறார்கள். இது சரிதானா, எல்லோருக்கும் அந்த வசதி இருக்குமா, எல்லோராலும் அதை பயன்படுத்த முடியுமா, எல்லோருக்கும் இது சாத்தியமா என்று சிந்திக்க வேண்டும். பயணிகளின் வசதிக்காக ஆங்கிலத்தில், அந்தந்த மாநில மொழிகளில் இரவு நேரங்களில் பயணிகளின் வசதிக்காக இதமான முன் அறிவிப்பு வந்தால் விழிப்புடன் இருப்பர், பதட்டம் இருக்காது, தங்களின் பொருட்களை மறக்காமல் எடுத்துக்கொண்டு செல்வார்கள், அன்றைய பயணமும் இனிதாய் அமையும். இந்த அடிப்படை சிந்தனை ஏன் ரயில்வே துறைக்கு இன்னும் வரவில்லை.

எனது அனுபவத்தை இங்கு கூற வேண்டிய கட்டாயம் உள்ளது. நான் பாண்டியன் அதிவிரைவு ரயிலில் 01.12.2024 அன்று இரவு 10.05 க்கு திண்டுக்கல் அம்பாத்துறை ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டேன். அது மறுநாள் (02.12.2024) காலை 5 மணிக்கு விழுப்புரம் மாம்பழப்பட்டு ரயில் நிலையத்தில் வந்து சேர்ந்தது. தற்போதைய புயல் மழை காரணமாக அருகில் வெள்ளம் அபாய அளவுக்கு மேல் செல்வதால் எங்கள் ரயில் நிறுத்தப்பட்டது என்று அருகில் உள்ளவர்கள் சொன்னதை வைத்து தெரிந்து கொண்டேன். பின்பு, நாங்கள் வந்த ரயிலை போன்று 3 ரயில்களும் நின்று கொண்டிருப்பதை பார்த்தேன். எங்களது தொடர் வண்டி நான்கு மணி நேரம் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது.

சிலர் குறட்டை விட்டு தூங்குவதும், பலர் உணவுக்காக, காபி, டீ, குடிநீருக்காக, இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருப்பதையும் கவனித்தேன். காரணம் அந்த ரயில் நிலையத்தில் எந்த வசதியும் கிடையாது. உணவு, குடிநீருக்காக இரண்டு கிலோமீட்டர் பயணிக்க கூடிய இடம். வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள், நேரத்தில் சாப்பிட வேண்டியவர்கள் அவதிப்பட்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது. பணம் உள்ளவர்கள் மகிழ்வுந்து பதிவு செய்து அதிலிருந்து புறப்பட தயாரானவர்கள். ஒரு பக்கம் அலுவலகம் செல்ல தாமதமாகிறது என்ற புலம்பல். சிலருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தனர். சிலர் பணம் பையில் இல்லாமல் கவலைக்குள்ளாகினர்.

நேரம் கடந்தது. காலை 9.30 மணி அளவில் பயணச்சீட்டு பரிசோதகர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒவ்வொரு பயணியிடமும் வந்து ரயில் நிறுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிவித்தார். சிலரிடம் மட்டும் பயணிகள் வசதிக்காக பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது நீங்கள் அதில் ஏறி சென்னை செல்லலாம் என்று சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு சீட்டுக்கும் சொல்லிக் கொண்டு செல்வதற்கு பதிலாக ரயில் நிர்வாகம் ஒலிபெருக்கி வாயிலாக எல்லோருக்கும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அவ்வப்போது முன்னறிவிப்பு செய்திருந்தால் பலருக்கு திட்டமிடுதலுக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். பின்பு காலை 9.30 மணிக்கு பேருந்து வந்தது.

வழக்கம்போல் இடம் பிடிப்பதற்காக பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். பேருந்து செல்லும்போதே 70 வயது முதியவர் ஐயா எனக்கு பசிக்கிறது காலையிலிருந்து இன்னும் சாப்பிடவில்லை. சாலையோரத்தில் உள்ள கடையில் நின்றால் ஏதாவது சாப்பிடுவேன் இன்று பரிதாபமாக கூறினார். பெரியவரின் வேண்டுகோளுக்கிணங்க பேருந்து காலை 11 மணியளவில் சாலையோர தேனீர் கடை அருகில் நிறுத்தப்பட்டது. அங்கு டீ ஸ்நாக்ஸ் மட்டும் கிடைக்கும். தொடர் மழை காரணமாக, சில பேருந்துகள் தொடர்ந்து வந்ததன் காரணமாக அதற்கும் கூட்டம் அலை மோதியது. கிடைத்தது போதும் என்ற எண்ணத்தில் காபி பிஸ்கட்டுடன் பலர் வண்டியில் ஏறினர். பேருந்து புறப்பட்டு சென்னை தாம்பரம் பிற்பகல் 1.30 க்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து உள்ளூர் பேருந்து பிடித்து இருப்பிடம் வந்து சேர மாலை 4 மணி ஆகிவிட்டது.

நான் அலுவலகம் போக முடியவில்லை. அன்றைய நிலை கருதி ஒரு நாள் விடுப்பு எடுத்து விட்டேன். அந்த ரயிலில் பயணித்தோர் பலருக்கு உணவு, மருத்துவம், வேலைவாய்ப்பு, கல்வி என பல பாதிப்புகள் இருக்கவே செய்தன. இயற்கை காரணங்கள் தவிர்க்க முடியாதது தான். ஆனால் ரயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்திருந்தால் பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளது. சில இடங்களில் பயணிகள் ரயில் வெள்ளத்தில் சிக்குவதையும், விபத்து ஏற்படுவதும், பயணிகளின் பாதுகாப்பு குறைவு நிலை ஏற்பாடுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இயற்கை காரணங்களால் ரயில் நிறுத்தப்பட்டால் அதற்கான சரியான காரணத்தை முறையாக தெரிவித்துவிட்டு பயணிகளுக்கு குறைந்தபட்ச வசதியை செய்து கொடுப்பது ரயில்வே நிர்வாகத்தின் கடமையாகும்.

ஒவ்வொருவரிடம் கைப்பேசி இருக்கலாம், ஆனால் பயணிகளின் வசதிக்காக முன் அறிவிப்பு வசதி ரயிலில் இருந்தால் மக்களின் உயிர், உடைமை, மற்ற பொருள் சேதம், விபத்து போன்றவை தவிர்க்க வாய்ப்பு உள்ளது. எல்லோருக்கும் திட்டமிடலுக்கு வழிவகுக்கும். சில ரயில்களில் பாதுகாப்பு அதிகம், சில ரயில்களில் பாதுகாப்பு வசதியே இல்லாதது போன்று இருக்கிறது. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? அனைத்து ரயில்களிலும் பயணிகளின் பாதுகாப்பு வசதியை உறுதி செய்யலாம்.

வெள்ளம் புயல் போன்ற இயற்கை காரணங்களால் ரயில் இடைநிறுத்தம் செய்யப்பட்டால் அவர்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது மிக அவசியம். இது கருணை அல்ல, பயணிகளுக்கான உரிமையும் கூட. ரயில் செல்லக்கூடிய தூரம், இடம், வேகம் போன்ற தகவல்கள் எல்லோரும் அறிந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாக்கலாம். இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியில் இது சாத்தியமாகாதா என்ன? விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை, பொருள் சேதத்தை கடந்த ஆண்டோடு ஒப்பிடுவதை விட எந்தவித உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்படவில்லை என்ற தகவல் தான் ரயில்வே துறையின் வெற்றி அடங்கி இருக்கிறது.

ரயில்வே ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்யக்கூடிய சூழல் உருவாக வேண்டும். ரயில் பயணிகள் அமர்வதற்கு, தூங்குவதற்கு, குளிர்சாதன வசதியுடன் செல்வதற்கு என தங்களின் வசதிக்கேற்ப கட்டணங்களை செலுத்தி ரயிலில் பயணிக்கின்றனர். கட்டணங்கள் இல்லாமல் இலவசமாக பயணிக்க முடியாது. அந்த ரயில் கட்டணத்திற்கான சேவையை நூறு விழுக்காடு உறுதி செய்வது ரயில்வேயின் கடமையும், பயணிகளின் உரிமையும் கூட. ரயில்வேயில் ஆள் பற்றாக்குறை, தொழில்நுட்ப வசதியின்மை, நிர்வாக சிக்கல்கள் என பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதனை சீர்செய்து, ரயில் பயணத்தை இனிதாக்குவது அரசின் தலையாய கடமையாகும். அதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

அரசின் ஒவ்வொரு சேவையும் பொது மக்களின் வரிப்பணம் அடங்கியுள்ளது. ரயில்வே சொத்துக்களை பாதுகாப்பது பொது மக்களின் சமூக பொறுப்பாகும். பயணிகளின் சேவையில் குறைபாடு ஏற்படும்போது ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கும் உரிமை ஒவ்வொரு பயணிக்கும் உண்டு. அதனை வெகு சிலர் மட்டும் பயன்படுத்துகின்றனர். பலர் நமக்கு ஏன் இந்த வம்பு என்று ஒதுங்கி செல்கின்றனர். பயணிகளின் நியாயமான கேள்விகள் முறையாக கேட்கும் போது குறைகள் களையப்பட வாய்ப்புள்ளது.

வெவ்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் விபத்தை தடுக்கக் கூடியதாகவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ரயில் பயணிகளின் சேவை இன்னும் மேம்படும்போது இந்திய ரயில்வே உலகிற்கே முன்னுதாரணமாக விளங்கும். எனவே ரயில் சேவை இன்னும் மேம்படட்டும்!

- முனைவர் இல.சுருளிவேல், உதவிப் பேராசிரியர், டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி - 601204