சமூக இயங்கியலின் முழுதளாவியப் பிரதிபலிப்புகளைக் கொண்டுள்ள கலை மற்றும் அறிவியல் உள்ளடங்கிய மீப்பெருந்துறையாக தமிழ் இலக்கியப்புலம் தகவமைந்திருக்கிறது. தமிழ் இலக்கியப்புலம் குறித்து மாணவர்களுக்கான கல்வி புலம் இத்தகைய விரிந்த மதி நுட்பத்துடன் இயங்குகிறதா என்பது சந்தேகமே.
தமிழைத் தாய் மொழியாக கொண்ட குழந்தைகளுக்கு தாய்மொழி வழி கல்வியை மறுத்து அறிவு வன்முறையில் ஈடுபடுகின்ற அறிவு நாகரீகமற்ற தமிழ் சமூகத்தின் அதிகார மையமாக செயல்பட முயல்கின்ற ஒரே நாடு ஒரே போடு என்ற வன்முறை இலக்கை கொண்டுள்ள மத்திய அரசின் சனாதனக் கொள்கைக்கும் அறிவியல் கண்ணோட்டத்திற்கும் தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை.
பகுத்தறிவைத் தலைமையாகக் கொண்டுள்ள அரசு மக்களுக்குத் தலைமை ஏற்றிருந்தாலும் அறிவியல்பூர்வ அணுகுமுறையற்ற தாய்மொழி வழியற்ற கல்விமுறையின் அதிகாரத்தை துடைத்தொழிக்க முடியவில்லை. உலகெங்கும் கல்வியின் நடைமுறையாகவுள்ள தாய்மொழி வழியில் மட்டுமே கல்விமுறை என்ற அறிவியல்பூர்வமான நடைறையை உறுதிசெய்வதும் சாத்தியப்படவில்லை.
அறிவியல் கண்ணோட்டம் மற்றும் அறிவியல் பூர்வமான அணுகுமுறையில் கல்வி முறையை சாத்தியப்படுத்தும் அரசியல் மாற்றங்கள் உருவாகும் போது தமிழ் இலக்கியப் புலத்தின் பிரமாண்டமானது எளிய உழைக்கும் மக்களுக்கும் தெரியவரும் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய பலவீனமான தமிழ் இலக்கியப் புலத்தில் புதிய தலைமுறைகளான மாணவர்களுக்குத் தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் தெரியவில்லை. பெரும்பகுதி மாணவர்களுக்கு இது எதார்த்தமாக உள்ளது. இவர்களில் பெரும்பகுதி மாணவர்கள் நாட்டுப்புற சூழலில் இருந்து படிக்க வருகிறார்கள். இத்தகைய தமிழ் மாணவர்களுக்கு தம் வரலாற்றை பிரதிபலிக்கின்ற நாட்டுப்புறவியல் துறை சார்ந்த சமூக அறிவும் மிகக் குறைவு. நாட்டுப்புறவியலை தமிழ் இலக்கியப் புலத்தில் ஒரு பாடமாகவும் படிக்கிறார்கள்.
தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டங்களில் நாட்டுப்புறவியல் என்றொரு பாடம் இருக்கிறது. நாட்டுப்புறவியல் என்பது கிராமப்புற மக்களின்சமூகப்பொருளுற்பத்தி சார்ந்த வாழ்வியல், உள்ளத்தியல், கருத்தியல் மற்றும் பண்பாட்டு வெளிப்பாடுகள் குறித்த சமூகவியல் துறையாகும்.
நாட்டுப்புற மக்களின் சமூகப் பொருளுற்பத்திக்கான தொழில்நுட்பங்கள், நடனம், இசை, ஓவியம், சிற்பம் மற்றும் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டியலை முழுதளாவிய நிலையில் பிரதிபலிக்கின்ற மொழியாடல்கள் குறிப்பாக வாய்மொழி இலக்கியப் பாடல்கள், கதைப்பாடல்கள், கதையாடல்கள், பழமொழி, விடுகதை, கூத்து, நாடகம் ஆகிய அனைத்தும் நாட்டுப்புறவியலாக அறியப்படுகின்றன.
நா.வானமாமலை, தே.லூர்து போன்ற அறிஞர்கள் நாட்டுப்புறவியல் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தியலுடன் செயல்பட்டுள்ளார்கள்.
தங்களை நாகரிகமடைந்தவர்களாக கருதிக்கொண்ட மேனாட்டு அறிஞர்கள் பிற மக்களை நாட்டுப்புறம் என்பதற்கு இணையாக 'Folk lore' என்று வழங்கினார்கள்.
'Folk' எனப்படுவது மேனாட்டார் விளக்கப்படி, கல்வியறிவற்றவர், கிராமத்தில் வாழ்பவர், தாழ்ந்த சமூக நிலையில் உள்ளவர் என்பதாக விளக்கம் பெறுகின்றது.அடுத்து 'lore' என்ற சொல்லை, 'படைப்பு' எனக் கொள்ளலாம்.அது வழங்கப்படும் சூழல், பாடம் (Text), அமைப்பு இவற்றைக் கொண்டு முடிவு செய்யப்படலாம் என்பதாக விளக்கம் பெறுகின்றது.
ஆலன் டண்டி என்பார் 'Folk' என்னும் மக்கள்; காட்டுமிராண்டி நிலையிலுள்ள அல்லது நாகரிக முதிர்ச்சியற்ற மக்களுக்கும், நாகரிகமடைந்துள்ள அல்லது கல்வியறிவு பெற்ற மக்களுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கூறுகின்றார்.
மேனாட்டறிஞர்களின் இக்கருத்தாடல் எளிமையான உழைக்கும் மக்களின் படிமலர்ச்சி பெற்ற பண்பாட்டு மரியாதையை அவமதிப்பதாக அமைந்துள்ளது. இத்தகைய சமூக அவமரியாதையை துறைசார்ந்த பெயராக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற சமூக மரியாதைக்கான பொறுப்பின் அடிப்படையில்தான் நா.வானமாமலை, தே.லூர்து போன்ற அறிஞர்கள் நாட்டுப்புறவியல் என்ற சொல்லிற்கு மாறாக நாட்டார் வழக்காறு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று வழியுறுத்தும்படி தொடர்ந்து செயல்பட்டுள்ளார்கள்.
இத்தகைய மதிப்பார்ந்த செயல்பாட்டின் அடையாளமாக பாளையங்கோட்டையிலுள்ள தூய சவேரியர் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் 1987ல் நிறுவப்பட்டு இயங்கிவருகிறது. ஆனால், பொதுப்பார்வையில் எளிய உழைக்கும் மக்களின் சமூக மரியாதையை அலட்சியப்படுத்தும் விதமாக நாட்டுப்புறவியல் என்ற சொல்லாடல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதை கல்விப்புலங்களின் பாடத்திட்டத்திலேயே காண முடிகின்றது. இன்னும் பல பல்கலைக்கழகங்களிலும் நாட்டுப்புறவியல் என்பது துறையின் பெயராகவே வழங்கப்பட்டும் வருவதையும் அறிய முடிகின்றது.
இச்சூழலில் இலக்கிய அறிவியலின் சமூக விஞ்ஞான அணுகு முறையின் அடிப்படையில் நாட்டுப்புறவியல், நாட்டார் வழக்காற்றியல் என்ற இரண்டு சொல்லாடல்களில் எத்தகைய பெயரை நிலைப்படுத்துவது சாலச்சிறந்ததாகும் என்பதை மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது. நாட்டுப்புறவியல், நாட்டார் வழக்காற்றியல் என்ற இரண்டு சொல்லாடல்களும் அறிவியல் தத்துவ நிலைப்பாட்டில் எத்தகைய கருத்தாடல்களுக்கு ஆட்படுகின்றன என்பதை மதிப்பிடுவது அவசியமாகின்றது.
நாடு + புறம் + இயல் = நாட்டுப்புறவியல்
நாட்டுப்புறவியல் என்பதன் கருத்தாடலை காடு x நாடு என்ற முரண்பாட்டை விளக்கப்படுத்துவதிலிருந்து தொடங்கலாம்.நாடு என்பது காட்டிற்கு முரணாகும்.காடு என்பது மனித திட்டமிடலுக்கு உட்படாத தான்தோன்றித்தனமான இயற்கையின் பரிபூரண வெளிப்பாடாகும்.நாடு என்பது மனிதர்களால் திட்டமிட்டு பண்படுத்தப்பட்ட இயற்கை மீதான உணர்வுப்பூர்வமான செயல்பாட்டு வெளியாகும்.காடு என்பது மனித செயல்களால் பண்படுத்தப்படாத இயற்கை வெளி எனில் நாடு என்பது மனித செயல்களால் பண்படுத்தப்பட்ட செயற்கை வெளியாகும்.
புறம் என்பது வெளியே எனப் பொருள்படுவதால் நாட்டுப்புறம் என்பது நாட்டிற்கு வெளியே என்பதாக விளக்கம் பெறுகின்றது.காடு என்ற பரிபூரண இயற்கையின் மீது இயற்கையின் அங்கமாகிய மனிதர்களால் திட்டமிட்ட உழைப்புச் செயல்பாடுகள் நிகழ்த்தப்பட்டு நாடு உருவம் பெற்றுள்ளது.காட்டிலிருந்து படிப்படியாக வரலாற்று நிலையில் பண்படுத்தப்பட்டு உருப்பெற்றுள்ள நாட்டிற்கு புறம் என்பது பண்படுத்தலுக்கு உட்படாத இயற்கையாகிய காடாக விளக்கம் பெறுகின்றது.நாடு தன்னிலிருந்து காடு நோக்கிய கண்ணோட்டத்தை விளக்கப்படுத்துவதாக நாட்டுப்புறம் விளக்கம் பெறுகின்றது.
இயல் என்பது இயங்குல் எனப் பொருள்படுவதால் காடு நோக்கிய பண்பாட்டு வெளியில் வாழும் மக்களின் இயல்புகள் குறித்த அறிவியலாகும். நாடு என்ற பண்படுத்தப்பட்ட உயர்ந்த மட்டத்திலிருந்து காட்டிலிருந்து படிப்படியாக நாடு நோக்கிய வளர்ச்சிக்குப் பாதையாக அமைந்த பண்பாட்டு நிலைகளையும் அவற்றின் அசைவியக்கங்களையும் ஓர் அறிவு சார்ந்த துறையாக விளக்கப்படுத்துகின்றது.அதாவது, நேற்றைய நாடு இன்றைய நாட்டுப்புறமாகிறது. இன்றைய நாடு நாளைய நாட்டுப்புறமாகின்றது.
மேனாட்டார் விளக்கத்தின்படி, கல்வியறிவற்றவர், கிராமத்தில் வாழ்பவர், தாழ்ந்த சமூக நிலையில் உள்ளவர், காட்டுமிராண்டி நிலையிலுள்ளவர், நாகரிக முதிர்ச்சியற்றவர் ஆகியோரை நாட்டுப்புறம் என்றால் என்ன பொருள்?
நாகரிகமடைந்துள்ள அல்லது கல்வியறிவு பெற்ற மக்களை நாட்டின் அடையாளமாக அளவிட்டுக்கொண்டு அவ்வளவீட்டை எட்டாமல் பின்தங்கிய பண்பாட்டில் தகவமைந்துள்ள மக்களை நவீன நாகரிகத்திற்கு வெளியே இருப்பவர்களாக விளக்கப்படுத்தும்படி நாட்டுப்புறம் என்ற சொல்லாடலை பயன்படுத்தியுள்ளார்கள் என்பது பொருள்.
LIFCO தமிழ் அகராதியில் நாட்டுப்புறம் என்ற சொல்லிற்கு பட்டிக்காடு என்பதாக விளக்கம் இருக்கின்றது.அகராதியை அச்சிடுகின்ற நவீன அச்சு எந்திரத்தின் நடைமுறையானது உற்பத்தி மீதான வணிக நாகரிக வரலாற்றுக் கட்டத்தின் வெளிப்பாடாகும்.ஆலன் டண்டி போன்ற மேனாட்டறிஞர்களும் இத்தகைய வரலாற்று காலத்தின் பிரதிநிதிகளே ஆவர். ஆனால், பட்டிக்காடு என்ற சொல்லானது கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் என்ற வரலாற்றுக் கட்டத்தின் மதிப்புமிக்க சொல்லாடலாகும்.
பட்டிக்காடு என்ற சொல்லாடல் காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகத்திலிருந்தும் வேட்டை நாகரிகத்திலிருந்தும் முன்னேறி கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகமாக நிலைபெற்ற வரலாற்று கட்டத்தின் பண்பாட்டுச் சொல்லாடலாக விளக்கம் பெறும். ஆடு மாடு போன்ற கால்நடைகளைச் சொத்தாகப் பராமரித்து பட்டியில் அடைத்துப் பாதுகாக்கின்ற சமூக நடைமுறையை வெளிப்படுத்துகின்ற கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தின் மதிப்புமிக்க அடையாளமாகும். காட்டின் இயற்கையிலிருந்து அறுபடாமலும் பட்டி என்ற நவீன சொத்தாதிக்கப் புதுமையைக் கொண்டாடுவதாகவும் பட்டிக்காடு என்ற சொல் விளக்கம் பெற்றுள்ளது.
கல்வராயன் மலையாளிகளின் பட்டித்திருவிழாவில் பட்டி என்ற சொல்லின் பண்பாட்டு மதிப்பை கண்டுணர முடியும். மாடுகளைப் பட்டியில் அடைத்து பொங்கலிட்டு சடங்குகளை மேற்கொள்வார்கள். அச்சடங்கில் “மாடாயிரம் கண்டாயிரம் புலியோ புலி… மாடாயிரம் கண்டாயிரம் புலியோ புலி…” என்று முழங்குவதாக அச்சடங்கு நடைபெறுகிறது.
அப்பழங்குடிகள் கால்நடைகளைச் சொத்தாக பராமரித்த காலத்தில் புலி போன்ற வேட்டை மிருகங்களிடமிருந்து கால்நடைகளைப் பாதுகாக்கும் எச்சரிக்கை உணர்வுடன் பட்டியிலடைத்து பராமரித்த வரலாறை இச்சடங்கு நினைவில் ஆழ்த்தியிருக்கிறது. பட்டிக்காடு என்பது அன்றைய கால்நடை மந்தை வளர்ப்பு வரலாற்றின் நவீன நாகரிகமாகும். ஆனால், இன்று பட்டிக்காடு என்பது நாகரீகமற்றதன் அடையாளமாக மாறியிருக்கின்றது.
கால்நடை மந்தை வளர்ப்பின் நாகரீகப் புதுமையாக விளங்கிய பட்டிக்காடு விவசாய நாகரிகத்தை எட்டியபோது நாகரிகப் பழமையாகவும் நவீன விவசாய நாகரிகத்திற்கு புறமானதாகவும் விளக்கம் பெறுகின்றது. விவசாய நாகரிகம் கடந்து உற்பத்தி மீதான வணிகம் மற்றும் வணிக இலாபத்திற்காகவே உற்பத்தி என்ற வரலாற்றுக் கட்டங்களிலும் நிதிமூலதன இலாபவெறிக் கட்டமாகிய சமகாலத்திலும் பட்டிக்காடு என்பது நவீன நாகரிகத்திலிருந்து நெடுந்தொலைவிற்கு வெளியில் விலகியுள்ள பழமையின் குறியீடாக மாறியிருக்கின்றது.
நாடு + புறம் + இயல் = நாட்டுப்புறவியல் என்பது ‘நவீன நாகரீகத்திற்கு வெளியே’ என்பதாக விளக்கம் பெறுகின்றது.
மனித செயல்களால் பண்பாடு தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதால் நாடு என்பதே நவீன நாகரீகத்தின் சின்னமாக தொடர்ந்து பொருள்படுகின்றது. நாட்டுப்புறம் என்பது நவீன நாகரீகத்தால் புதுப்பிக்கப்படாமல் காடு நோக்கிய பழைமையாக விரவிக்கிடக்கின்ற பண்பாடாக அறியப்படுகின்றது.
1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பிழந்த சமூகம்)
மேற்கண்ட மனித வரலாற்று படிநிலையில் விளக்குவதென்றால் வணிக இலாபத்திற்காகவே உற்பத்தி செய்தல் என்ற ஆறாம் கட்ட நாகரித்திலிருந்துகொண்டு வணிக இலாபத்தின் பிரதிநிதிகளாகிய கல்வியாளர்கள் 5, 4, 3, 2, 1ம் கட்டங்களை நாகரிகத்திற்கு வெளியே இருப்பவை என்று பொருள்படும்படியாக நாட்டுப்புறம் என்றச் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார்கள். அதாவது உற்பத்தி மீதான வணிகம், விவசாயம், கால்நடை மந்தை வளர்ப்பு, வேட்டை மற்றும் காடுசார்ந்த பொருள் சேகரிப்பு ஆகியவற்றின் பண்பாடுகளில் வாழும் மக்களை நாட்டுப்புறத்தார் என்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.
நாட்டுப்புறவியல் என்பது நவீன நாகரிக பண்பாட்டாளர்களால் நவீன நாகரீகத்திற்கு வழிமுறையாக அமைந்த பழமையின் பண்பாட்டாளர்களை அறிவதற்கான நடைமுறை அறிவியலாக கட்டமைந்திருக்கின்றது. இவ்வறிவியலைப் பொருளாகப் பிரதிபலிக்கின்ற நாட்டுப்புறவியல் என்ற சொல்லாடல் நாகரிகத்தின் வழிமுறையாக திகழ்ந்த மக்களை நாகரிகத்திற்கு வெளியே என்று அந்நியப்படுத்தி அவமரியாதை செய்யும் பண்பற்ற சொல்லாடலாகவே விளக்கம் பெறுகின்றது.
நா.வானமாமலை, தே.லூர்து போன்ற அறிஞர்கள் அறிவுறுத்துகின்ற நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லாடலின் கருத்துநிலைப்பாடானது நாட்டுப்புறவியலுக்கு முற்றிலும் முரணாக விளக்கம் பெறுகின்றது.
நாட்டார் + வழக்கு + ஆ(ற்)று + இயல் = நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லாடல் பழைய பண்பாட்டிற்கு உரிய மக்களை நாகரீகத்திற்கு வெளியில் இருப்பவர்கள் என்பதாக அவமானப்படுத்தாமல் நாகரீகத்தின் முன்னோடிகள் அல்லது நாகரீகத்திற்கு உரியவர்கள் என்பதாக பொருள்படுத்துகின்றது.
நாட்டார் என்பது காடு என்ற பரிபூரண இயற்கையின் மீது திட்டமிட்ட பண்படுத்தல்களில் ஈடுபட்டு நாட்டை உருவாக்கியவர்கள், நாட்டிற்கு உரியவர்கள், நாகரிகத்திற்கு உரியவர்கள், நவீன நாகரீகத்திற்கு வழியமைத்தவர்கள் இவ்வாறாக நவீன நாகரிகத்தை எட்டாமல் நேற்றையப் பழைய நாகரிகங்களில் நிலைபெற்ற மக்களின் வாழ்வியல் மீதான சமூக மரியாதையை நிலைநாட்டுகின்ற கருத்துநிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றது.
வழக்கு என்பது வழக்கம் எனப் பொருள்படுவதால் மக்கள் எத்தகைய பண்பாட்டைத் தொன்றுதொட்டுப் பழகி வழக்கமாக்கிக் கொண்டார்கள் என்பதை சமூகளாவிய நிலையில் விளக்கப்படுத்துவதாக அமைகின்றது.
ஆறு என்பது பாதை அல்லது வழி என பொருள்படுவதால் மக்களின் பண்பாட்டு வழக்கங்கள் எத்தகைய வரலாற்று பாதையில் தகவமைந்துள்ளன என்பதை ஆராய்ந்து விளக்குகின்ற துறையாக விளக்கம் பெறுகின்றது.
ஆற்று என்பது ஆற்றுதல் அல்லது செயலாற்றுதல் அல்லது செயலைச் செய்தல் என்பதாகப் பொருள்படுவதால் எத்தகைய செயல்பாடுகளால் மக்களின் பண்பாட்டு வழக்காறுகள் தகவமைந்தன என்பதை ஆராய்ந்து விளக்குகின்ற துறையாக விளக்கம் பெறுகின்றது.
இயல் என்பது இயங்குல் எனப் பொருள்படுவதால் நாட்டார் மக்களின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அசைவியக்கங்களைப் பற்றிய அறிவியலாக விளக்கம் பெறுகின்றது.
நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லாடலை முழுதளாவிய நிலையில் நோக்கினால் நாட்டுப்புறவியல் என்ற சொல்லாடலுக்கு முற்றிலும் முரண்பாடாக வினையாற்றுகிறது.
மக்களின் பழைய பண்பாட்டை நவீன நாகரிகத்தின் அறிவியல் கலை இலக்கிய உச்சத்திலிருந்து அணுகும்போது நவீன நாகரிகத்திற்கு வெளியே உள்ள மக்களின் பண்பாட்டை அணுகுதல் என்பதாக கருதுவது தவறாகும். மாறாக, நவீன நாகரிகம் உருப்பெருவதற்கு வழியாக அமைந்தவர்களின் அல்லது நவீன நாகரீகத்திற்கு உரிமையுடையவர்களின் அல்லது நவீன நாகரீகத்தின் முன்னோடிகளின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அசைவியக்கங்களை அணுகுதல் என்பதாகக் கருதுவதே சாலச்சிறந்ததாகும்.
நிறைவாக, மக்களின் பழைய பண்பாடு குறித்த அறிவுத்துறையை நாட்டுப்புறவியல் என்று வழங்குவதைத் தவிர்த்து நாட்டார் வழக்காற்றியல் என்று வழங்குவதே அறிவுத்துறைகளின் மாண்பிற்கு பொருத்தமுடையதாகும்.
நாட்டார் என்பது தனித்த சாதியை அல்லது இனக்குழுவை குறிப்பதல்லவா என்ற குழப்பம் தேவையில்லை. ஏனெனில் புரிதலுக்கான சமூகத் தேவையிலிருந்தே சொற்பொருளுக்கான கருத்து நிலைப்பாடு கட்டமைகின்றது.
தமிழ் என்ற ஒரு பெயர் ஒரு மொழியைக் குறிப்பதாகவும் ஒரு குழந்தையைக் குறிப்பதாகவும் நடைமுறையில் வழங்கப்படலாம். நடைமுறையில் அச்சொல்லாடல் மீதான புரிதலுக்கான சமூகத் தேவையிலிருந்து மொழியப்படுகின்ற தமிழ் என்ற சொல் குழந்தையின் பெயரா? அல்லது மொழியின் பெயரா? என்ற கருத்து நிலைப்படுகின்றது. இத்தகைய கருத்து நிலைப்பாடு நாட்டார் வழக்காற்றியலுக்கும் பொருந்தும்.
நாட்டுப்புறவியல் என்பது சமூகத்தாழ்வு
நாட்டார் வழக்காற்றியல் என்பதே சால்பு
துணை செய்தவை
1.நாட்டுப்புற இயல் ஆய்வு – டாக்டர் சு.சக்திவேல். மணிவாசகர் பதிப்பகம்
2.தமிழ் நாட்டுப்புறவியல் – டி.தருமராஜ். கிழக்கு பதிப்பகம்
3.பட்டித்திருவிழா – சு.குமார்.புதுச்சேரிமொழியியல்பண்பாட்டுஆராய்ச்சிநிறுவனம்.புதுச்சேரி
4.இலக்கியஅறிவியல்.புதியவன்.https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
5.மார்க்சியமும்மொழியியலும். வி.ஐ.லெனின், ஜோ.ஸ்டாலின்.2017.புதுமை பதிப்பகம்.
6.மனித சாரம் – ஜார்ஜ் தாம்சன். நியூ செஞ்சூரி புக் ஹவுஸ்
7.தமிழுக்குப் பேர் அழகா?அறிவா? - https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47311-2024-10-17-06-41-56
8.கற்றல் கற்பித்தல் நடைமுறையில் காலத்தின் திசைவழி எது? https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47418-2024-11-10-15-10-19
- முனைவர் கே.சிவக்குமார், SSM கலை மற்றும் அறிவியல்கல்லூரி, திண்டுக்கல்