“எண்களையும் எழுத்துகளையும் நான் அறைக்குள் கற்றேன். பிற அனைத்தையும் மக்களிடமிருந்தே கற்றுக் கொண்டேன். பாட்டாளி வர்க்க வாழ்க்கை முறையில் இழப்பதைத் தவிர வேறு ஏதுமில்லை. நான் விவசாயத் தொழிலாளியின் மகன். என் சக மனிதனின் பாடுகளையே பாடல்களாக்கியிருக்கிறேன்.

களத்தில் என் உடம்பை அசைத்த, உணர்வுகளை உலுக்கிய, கண்களைக் குளமாக்கிய கொடுமையான காட்சிகள் எனக்குள் கோபமாக இறங்கி வெளிப்பட்ட கலவையே எனது பாடல்கள். எனது பாடலுக்குள் சாராயம் இல்லை, காமம் இல்லை, கஞ்சா புகையிலை இல்லை, பேரமில்லை ஒப்பந்தமில்லை...dalit subbaiahஎன் சக மனிதர்களின் கண்ணீரும் கவலையும் காயமும் அழுகையும் அவமானமும் புறக்கணிப்பும் கழுத்தறுப்பும் பாலியல் வன்கொடுமைகளும் தற்கொலை உணர்வுகளும் அவர்களின் விடுதலை வேட்கையும் எனது பாடல்களுக்குள் தேங்கி நிற்கின்றன... என்ற வலிநிறைந்த மக்களுக்கான விடுதலைக் குரலாய் ஒலித்தவர் தோழர் லெனின் சுப்பையா.

இந்தியாவின் சாதி அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பில் தனது இளம் வயதிலிருந்தே சாதிய ஒதுக்கல்களை, ஒடுக்குமுறைகளை எதிர் கொண்டவர். சாதியக் கட்டுமானத்தின் அடிப்படையிலான சமூக அமைப்பில் உருவாகும் சிக்கல்கள், ஏற்றத்தாழ்வுகள், வன்முறைகள் என அனைத்துக்கும் அடித்தளமாக இருப்பது பார்ப்பனிய நால்வருணக் கோட்பாடு என்பதை மிகவும் தெளிவாகப் புரிந்துசெயல்பட்டவர். மக்களைப் பிளவுபடுத்தும் பிற காரணிகளான வர்க்க வேறுபாடுகளையும், முதலாளித்துவ சுரண்டல்களையும் எதிர்த்தே தன் இறுதி காலம் வரை போரிட்டவர்.

1990-களில் தமிழ்நாட்டில் சில தலித் அறிவுஜீவிகள் பெரியாரையும் அம்பேத்கரையும், எதிர் எதிர் முனைகளில் நிறுத்தி பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களின் தலைவர் என்கிற தங்களுக்கான அறிப்பை தீர்த்துக் கொண்டனர். பெரியார் இஸ்லாமிய எதிர்ப்பாளர், தலித் எதிர்ப்பாளர், வைக்கம் போராட்டம் தீண்டப்படாதவர்களுக்கானது அல்ல, தலித்களுக்கு பெரியார் எதுவும் செய்யவில்லை, ஆதிக்க ஜாதிகளுக்கே பெரியார் ஆதரவு நிலை எடுத்தார் என்றெல்லாம் பெரியார் எதிர்ப்பில் ஊறிநின்றனர். அரைத்த மாவையே அரைப்பது போல பதில் சொல்லப்பட்ட அவைகளுக்குக கேட்ட கேள்வியே கேட்டுக் கொண்டிருந்தனர். சில தலித் இயக்க மேடைகளில் பெரியார் கடுமையாக விமர்சிக்கப்பட்ட காலம். அப்போது அதே மேடைகளில் “பெரியாரைப் பாடாமல் எனது இசை நிகழ்ச்சி நடக்காது” என்று உரத்த குரல் எழுப்பியவர் லெனின் சுப்பையா. சாதி, மத எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பெண் விடுதலை, அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ்  உள்ளிட்ட இலட்சிய முழக்கங்களோடு பொதுவுடைமை அடையாளங்களையும் இணைத்து தனது உணர்ச்சி மிகுந்த குரால் மக்களிடம் “இசைப் போர்" நடத்திய இலட்சியப்  போராளி.

டெல்லியில் தலித் தனித்தொகுதி உரிமைக் கேட்கும் மாநாட்டுக்கு இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு, தனது குழுவினருடன் அவர்த் தொடர் வண்டியில் பயணமாகும் போது காஞ்சி ஜெயேந்திரர் கொலை வழக்கில் கைதான செய்தி கிடைக்கப்பெற உடனே, இதற்கு ஒரு பாடலை எழுதி பண் அமைத்து டெல்லி மாநாட்டில் அரங்கேற்ற முடிவு செய்து ஒரு பாடலை எழுதி பண் அமைத்தார். 'மாட்டிக்கிட்டாரு அய்யர் மாட்டிக்கிட்டாரு' என்ற பாடலை மேடையில் குழுவினருடன் பாடிய போது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்து போனது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வி.பி.சிங் மொழித் தெரியாத காரணத்தால், 'கரவொலி’ஏன்? என்று விசாரித்தபோது பாடல் வரிகள் அவருக்கு விளக்கப்பட்டன. உடனே வி.பி.சிங் உற்சாகமடைந்து மீண்டும் அந்தப் பாடலைப் பாடச் சொல்லி மேடையிலேயே 5000 ரூபாய் நன்கொடையும் வழங்கினார். தனது இசைப் போர் நூலிலேயே இந்த வரலாறை லெனின் சுப்பையா பதிவு செய்துள்ளார்.

பெரியார் தான் என்னைப்  படிக்க வைத்தாரா ? என் அப்பாவை அவர்தான் படிக்க வைத்தாரா ? அப்படியெனில் திருவள்ளுவரைப் படிக்க வைத்து யார் ? என்றெல்லாம் முட்டாள் தானமாக கேள்வி எழுப்புவோருக்கு அவர் பாணியில் சொல்லும் பதிலே பொருத்தமானதாக இருக்கும்.

“ பெரியார் எனக்கு என்ன மாட்டு 'லோன்' வாங்கிக் கொடுத்தாரா? ஆட்டு 'லோன்' வாங்கிக் கொடுத்தாரா? வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்தாரா பட்டம் வாங்கிக் கொடுத்தாரா? பெரியார் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதையும் செய்யவில்லை என்று சிலர் சொல்கிறார்கள்.

ஆனால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை? மாபெரும் மனிதர்கள் வரலாற்றின் போக்கைத் திருப்புவார்கள். துக்கடா அரசியல் வாதிகளைப் போல். மாட்டு லோன் வாங்கித் தரலை, ஆட்டு லோன் வாங்கித் தரலை, என்று இப்படியா பேசுவது? மார்க்ஸ் யாருக்கு ஆட்டு லோன் மாட்டு லோன் ரேஷன் கார்டு வாங்கிக் கொடுத்தாரு? அவர் வரலாற்றின் போக்கை மாற்றியவர். அதுபோல், தமிழ்ச் சமுதாயத்தின் வரலாற்றின் போக்கை மாற்றியவர் பெரியார். அப்படித்தான் பார்க்க வேண்டும்! இந்து மதம் எனக்குப் பிடிக்காத மதம் அதன் அயோக்கியத்தனத்தை நான் விரும்புவதில்லை என்றார் டாக்டர் அம்பேத்கர். அதனால்தான் மதம் மாறச் சொன்னார். மதம் மாறுவதான் என்ன பலன் என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். இந்திய சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பலன் என்று கேட்டார் அம்பேத்கர். பெரியாரும் அம்பேத்கரும் இந்துத்துவத்தை எதிர்த்து அடித்த அடியால்தான் அது பலவீனமானது. நாம் நிமிர்ந்து நிற்கிறோம்” இதுதான் இன்றைக்கு முக்கிய செய்தி அதை விடுத்து பெரியாருக்கு எதிராக மக்களை திசைதிருப்பும் பார்ப்பனக் கைகூலிகளை அன்றைக்கே தோலுரித்துக்காட்டியவர் லெனின் சுப்பையா அவர்கள்.

பெரியார் என்ன செய்தார் ? எதைச் சாதித்தார்? என்பவருக்கு, “ பெரியார் எங்கேயாவது வன்னியர்களுக்குத் தலைவர், செட்டியார்களுக்குத் தலைவர் என்று எந்தச் சாதிக்காவது தலைவர் என்று உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? வ.உ.சிதம்பரனாரை சாதித் தலைவராக்குகிறார்கள். காமராசரை சாதித் தலைவராக்குகிறார்கள். பெரியாரை அப்படி நீங்கள் காட்ட முடியுமா? ஒருவர் எழுதுகிறார் பெரியாரை இரவல் சிந்தனையாளர் என்று. தோழர்களே! நான் ஒரு மாதத்துக்கு 18 தமிழ்ப் பத்திரிகைகளையும் 6 ஆங்கிலப் பத்திரிகைகளையும் வாசிக்கிறேன். ஆனால் ஒரு காலத்தில் நான் பிற படிக்கக் கேட்ட சமூகம், பிறர் பாடக் கேட்ட சமூகம். இன்று நாங்கள் பாடுகிறோம் சமூகம் கேட்கிறது. இதற்கு அடித்தளமிட்டவர் யார்? தமிழ்நாட்டில் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு தலித் இயக்கங்கள் அம்பேத்கரை அறிமுகப்படுத்தின. ஆனால் அதற்கு முன்பே தமிழ்நாட்டில் அம்பேத்கரை அறிமுகப்படுத்தியது யார்? பெரியார். அம்பேத்கரின் 'சாதியை ஒழிக்க வழி நூலை தமிழில் அச்சிட்டு, மக்களிடையே பரப்பியவர் யார்? பெரியார்” என்று தந்தை பெரியாரின் உழைப்பின் மூலமே பதிலடி தந்தார்.

சமூகத்தில் நிலவும் சாதிக் கொடுமைகளை, சமத்துவமின்மையை, இந்துத்துவச் சதியைக் களைய தன் இசையால் களத்தில் நின்று போராடியவர் தோழர் க.சுப்பையா அவர்கள். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோரின் கருத்துகளை ஏற்றுக் கொண்டு தன்னலமின்றி செயலாற்றி வந்தவர். இவரின் எழுத்துக்களில் வெளியாகும் வீரியம் , பாடலின் எழுச்சி சுயமரியாதை உணர்வை, சாதி ஒழிப்பு உணர்வை, பெரியார், அம்பேத்கர் வழியில் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

புரட்சிப் பாடகர் தோழர். லெனின் சுப்பையா அவர்களுக்கு அவரது சமூகப் பங்களிப்பைப் பாராட்டி 2016-ஆம் ஆண்டு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் திராவிடர் திருநாள் விழாவில் பெரியார் திடலில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் பெரியார் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. அந்த விருதினைப் பெற்றுக் கொண்டு மேடையில் அவர் ஆற்றிய ஏற்புரையில், அதற்கு முன் தனக்கு வழங்க விரும்பிய 13 விருதுகளை மறுத்த அவர், "வரலாற்றுத் தகுதி வாய்ந்தவர்கள் வழங்குவதும் கொள்கை வழி வாழ்ந்து காட்டுவோர் வாங்குவதும் தான் விருதுக்குப் பெருமை. இது அப்படிப்பட்ட விருது. நானும் அப்படியொரு வாழ்க்கையை என் குடும்பத்துடன் கொள்கை ரீதியாக வாழ்ந்துள்ளேன்” என்று உரையாற்றினார்.

இந்துத்துவ எதிர்ப்பிலிருந்து சற்றும் விலகாமல் நம் விடுதலைகக்கான பாதையையில் இவரின் பாடல்கள் பெரும் பேசுபொருளாக இருந்துள்ளது. அவற்றில்,

"தமிழகத்தின் அழகிய முகம் அந்த முகம் யார்? அவர் தமிழருக்கு முகவரி தந்த பெரியார்"

"அந்தரத்தில் தொங்குதடா இந்துமதம் – அதைத் தூக்கிலிட்ட பெரியாருக்கு செவ்வணக்கம்"

“சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா – அம்பேத்கர் சந்தித்த விவரம் கேளுங்கடா”

“வெல்ல முடியாதவர் அம்பேத்கர் – அந்த வேங்கையை போல் போராடிய வீரன் யார், வேறு யார்”?

“தியாகிகளே தியாகளே ஜாதி போர்த் தியாகிகளே”

“மாட்டிக்கிட்டாரு அய்யர் மாட்டிக்கிட்டாரு – ஜெயேந்திரர் மாட்டிக்கிட்டாரு” உள்ளிட்ட பல்வேறு உணர்ச்சிமிகு பாடல்களை ஜாதி ஒழிப்பு களத்தில் நமக்கு கொடுத்து சென்ற ஜாதி ஒழிப்பு போராளி. தோழர் லெனின் சுப்பையா அவர்கள் உடல்நலக் குறைவால் 2022 பிப்ரவரி 16 ல் விடுதலைக் குரலின் முழக்கத்தை முடித்துக் கொண்டார். ஜாதி ஒழிப்புக் களத்தில் தோழர் லெனின் சுப்பையாவின் அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்வோம். பார்ப்பனத் திமிர் அடக்கும் களத்தில் இவர் பாடலை ஆயுதமாக்குவோம்.

- த.மு. யாழ் திலீபன்