கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஆய்வுக் கட்டுரை குறித்த அறிமுகம் 

பல்வேறு துறைகளில் ஆழங்காற்பட்ட ஆளுமை கொண்டவராக குறமகள் விளங்கியிருந்தாலும் கூட அவரது மிக முக்கியமான பணி “யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு” என்கிற அவரது ஆய்வு நூலே. தனது டிப்ளோமா படிப்பிற்காக எழுதிய “பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையிற் பெண்கல்வி” என்கிற கட்டுரை பெற்ற வரவேற்பும் மதிப்பீடும், பெண்ணியம் தொடர்பாக அவருக்கு இயல்பாக இருந்த அக்கறையுடன் இணைந்து இந்த நூலை எழுதுவதற்காக முதலாவது விதையாக அமைந்தது என்று குறமகள் தனது முன்னுரையில் பதிவு செய்கின்றார். இந்த நூலானது ,

vallinayagi book1.  யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப் பாரம்பரியம்: 18 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை

2.  சைவமும் தமிழும் வளர்த்த செல்வி பார்வதியம்மையார்

3.  காந்திய வழி சமூக சேவையாளர் “தமிழ் மகள்” மாசிலாமணி மங்களம்மாள்

என்கிற மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது.

இதன் முதலாவது பகுதி ஐரோப்பியர் வருகையின் பின்னர் அவர்களால் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட கல்விமுறை பற்றியும், பெண்களுக்கான கல்வி என்பது எத்தகைய விடாமுயற்சிகளூடாக சாத்தியமானது என்றும் ஆராய்கின்றது. இந்தக் கட்டுரை “யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப் பாரம்பரியம்: 18 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை” என்கிற அந்த முதலாவது பகுதியைப் பற்றிச் சுருக்கமாக எடுத்துக் கூறி அந்தக் கட்டுரையையும், நூலையும் வாசிப்பதையும் அது குறித்து உரையாடுவதையும் ஊக்குவிக்கும் நோக்குடன் எழுதப்படுகின்றது.

போர்த்துக்கேயர் காலத்தில் பெண்கள் கல்வியென்பது மிகச் சிறிய அளவிலேயே நடைபெற்றது என்ற போதிலும் இக்காலத்தில் மதமாற்றத்துக்காக தருவிக்கப்பட்டிருந்த கத்தோலிக்கத் திருச்சபையினருக்கு போர்த்துக்கேய அரசு ஆதரவு அளித்தமையும், அதன் பலத்தால் இந்தத் திருச்சபையினர் நடைமுறைப்படுத்திய கட்டாய மதமாற்றம், திருச்சபை நிகழ்வுகளில் பெண்களும் கலந்துகொள்ளவேண்டும் என்பது போன்ற வற்புறுத்தல்களும் சமூக ஒழுங்கில் ஒரு திறப்பை உருவாக்கின என்று குறமகள் குறிப்பிடுகின்றார். அவர் சொல்கின்ற முக்கியமான சில மாற்றங்களை இங்கே பட்டியலிடுகின்றேன்:

  • பிரசங்கங்கங்களின் பின்னர் ஊர்வலமொன்று அமைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் உலாப்போகும் போது ஆண்கள் முன்னே வரிசையாக நடக்கப் பெண்கள் பின்னே வரிசையாகச் செல்வார்கள்
  • சிறுமிகளுக்குப் பாடசாலைகளில் ஆரம்பக்கல்வி கற்பிக்கப்பட்டது
  • எட்டு வயதின்மேல் பெண்களைப் பாடசாலைக்கு அனுப்பப் பெற்றோர் தயங்கியமையால் இரண்டாம் நிலைக்கல்வி நடைபெறவில்லை.
  • காலையின் ஆண்களுக்கும் மாலையில் பெண்களுக்கும் தேவாலயங்களில் சமய வகுப்புகள் நடைபெற்றன.
  • பெண்களுக்கென தனிப்பாடசாலைகள் நடைபெறவில்லை

இன்று சமூகநீதி பற்றிய உரையாடல்களின்போது ஈழத்தவர்கள் பலரும், ஈழத்தில் இருந்த பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள், சாதியப் பாகுபாடுகள் பற்றிய உரையாடல்கள் வரும்போதெல்லாம், அதனைப் பூசி மறைத்து உரையாட முற்படுவதே வழக்கமாக இருக்கின்றது. ஆனால் அன்றை சமூகநிலை பற்றி, தமிழ்மொழியில் பாண்டித்தியம் பெற்ற மதகுருவான போல்டியஸ் சுவாமிகள் (Baldeus) எழுதிய இலங்கை வர்ணனை (Description of Ceylon} என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பதை குறமகள் மேற்கோள் காட்டியிருப்பது முக்கியமானது;

“மேல் சாதியினர் கீழ் சாதியினரை வெகு மேட்டிமையோடு நடத்தி வருகின்றார்கள். இப்படியே ஆண்களெல்லாம் பெண்களை மிகத் தாழ்வாக மதித்து நடத்துகிறார்கள். பெண்கள் ஆண்களோடு இருந்து உண்பதற்குக் கூட அனுமதிக்கப்படார். வீட்டின் பின்புறத்தேதான் அவர்கள் வதிவார்கள். தாம் உண்ட எச்சிற் கலத்திலேயோ இலையிலோதான் தனியேயிருந்து உணவருந்த விடப்படுவார்கள்”

அதுமட்டுமல்லாமல் ஒல்லாந்தர் கட்டாயக் கல்வி முறையை புகுத்தியிருந்தபோதும் சமுதாயம் பெண் கல்விக்கு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. சமூகத் தலைமைகளாக இருந்த ஆண்கள் கூட பெண்கல்விக்கு ஒத்துழைக்காமல் இருந்ததோடு, தமது வீட்டுப்பெண்கள் கல்வி கற்பதையும் தடுத்தே வந்துள்ளனர். குறமகள் தனது ஆய்வில் 1757 ஆம் ஆண்டுக்குரிய யாழ்ப்பாணப் பாடசாலை அறிக்கையில் வண. ஜோன்ஸ் பாதிரியார் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்;

“தலைமைப் பதவிகளை வகிக்கின்ற பெயர்பெற்று விளங்குகின்ற சுதேசிகளது பெண்பிள்ளைகள் பாடசாலைகளுக்கோ, பரீட்சைகளுக்கோ சமூகமளிப்பது கிடையாது. அது மாத்திரமல்ல, தேவாலயங்களில் நடைபெறுகின்ற ஞானஸ்தானம், திருமணம் போன்றவற்றிற்கும்கூட சமூகமளிப்பதில்லை. பதிலாக அவர்களது அடிமைச்சிறுமிகள் அவர்களது பெயரில் அனுப்பிவைக்கப்பட்டு பங்குகொள்ளச் செய்யப்படுவார்கள்” (ஆதிக்கசாதியினருக்கு குடிமைகளாக இருந்தவர்களையே ஒல்லாந்தர்கள் அடிமைகள் என்று குறிப்பிடுகின்றனர்)”

போர்த்துக்கேயர் ஆட்சிக்காலம் போலவே ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் பெண்கல்வி தொடர்பாக முன்னேற்றமோ, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயங்களோ இடம்பெறவில்லையென்றாலும் மதமாற்றத்தாலும், அதன் நடைமுறை விளைவுகளாலும் சமூக இறுக்கத்தில் சிறிதளவிலான சில திறப்புகள் ஏற்பட்டே இருக்கின்றன.

அதேநேரம் 1734, 1739 ஆகிய இரண்டாண்டுகளில் பெற்றுக்கொண்ட தரவுகளின் படி அன்று இயங்கிய தனியார் பாடசாலைகளிலும் அனாதைப் பாடசாலைகளிலும் இருந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் குறமகள் இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகின்றார். அந்தத் தரவுகளின் படி குறித்த இரண்டு வகை பாடசாலைகளிலும் கல்விகற்று வந்த ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையானவர்கள் என்பதை அறிய முடிகின்றது.

 

1734

1739

ஆண்கள்

பெண்கள்

ஆண்கள்

பெண்கள்

அனாதைப் பாடசாலை

47

21

52

47

தனியார் பாடசாலை

33

27

31

34

இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய 34 கோவில்பற்றுப் பாடசாலைகளில் 20,000 மாணவர்கள் கல்விகற்றார்கள் என்கிற விபரம் கிடைக்கின்றது என்றாலும் அதில் ஆண்கள் எத்தனைபேர், பெண்கள் எத்தனைபேர் என்கிற விபரம் கிடைக்கவில்லை என்கிறார் குறமகள். இந்த எண்ணிக்கைகளை வைத்துப் பார்க்கின்றபோது ஒல்லாந்தர் காலத்தில் இந்தக் கட்டுரையில் குறமகள் குறிப்பிடுகின்ற

“ஒல்லாந்தர் பெண்கல்விக்கெனச் சிறப்பாக எதையும் செய்யாதுவிடினும் மதமாற்றம் மூலமும் வீட்டிலடைந்து கிடந்த பெண்ணை வெளியே கொண்டுவந்து சமூகப் பழக்கங்களூட்டி முன்னேற்றமடையச் செய்தனர். கிறித்தவப் பெண்களுள் நடுத்தர வகுப்பினர் கணிசமான நியமக்கல்வியைப் பெற்றிருக்கவேண்டும். பிற்காலத்தில் வந்த பாதிரிமார் இதனை மறுத்தாலும் ஆரம்பக் கல்வியைச் சிறிதளவாயினும் பெற்றிருக்க முடியுமென்பது ஒல்லாந்தக் குருமாரின் அறிக்கைகளிலிருந்து பெறக்கூடியதாக இருக்கின்றது”

என்பது நுட்பமான ஓர் அவதானமாக அமைகின்றது.

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் அவர்கள் அறிமுகப்படுத்திய மகிழ்ச்சி வரி (Joy Tax)யின் தாக்கத்தினாலும், அப்போதைய தேசாதிபதி பிரடெரிக் நோத் பொருளாதார லாபத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாரேயன்றி பெண்கல்வி குறித்து அக்கறைப்படவில்லை என்பதாலும், பெண்கல்வியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. நோத்தைத் தொடர்ந்து தேசாதிபதியான தோமசு மெயிற்லண்ட் (Thomas Maitland) பெண்கள் கல்வி தொடர்பில் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்குப் பாரபட்சம் காட்டி சிங்களப் பகுதிகளுக்கு சலுகைகளையும் புதிய வசதிகளையும் உருவாக்கிக் கொடுத்தார். 1806 இல் அவர் மகிழ்ச்சி வரியை வடக்கு மாகாணத்துக்கு மாத்திரமே வசூலித்துக்கொண்டு சிங்களவர் அதிகம் வாழ்ந்த மேற்கு மாகாணங்களுக்கு நீக்கிவிடுகின்றார். இதற்குக் காரணம் மேற்குப் பகுதியில் இருந்த பெண்களின் கல்வியார்வமே என்று சிங்கள கல்வியாளர் ஒருவர் வியாக்கியாசனம் செய்தபோதும், அதனை மறுத்துரைத்து 1800 - 1805 வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் 10,000 ரிக்ஸ் டொலர் (Rixdollar) மகிழ்ச்சி வரியாக வசூலிக்கப்பட்டது. இது இதர மாகாணங்கள் அனைத்தையும் சேர்த்து அறவிடப்பட்ட மகிழ்ச்சி வரியைவிட அதிகமானதென்பதைச் சுட்டிக்காட்டி அந்த வருவாயை இழக்க விரும்பாததாலேயே வடக்கு மாகாணத்தில் மகிழ்ச்சி வரி நீக்கப்படவில்லை என்ற வாதத்தை குறமகள் முன்வைத்துள்ளார்.

1808 ஆம் ஆண்டிலேயே பெரும்பாலான பிரதேசங்களில் இந்த மகிழ்ச்சி வரி நீக்கப்பட்டபோதும் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, வன்னி ஆகிய இடங்களில் 1865 நவம்பர் 24 இலேயே இந்த வரி நீக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். ஒப்பீட்டளவில் வடக்கு மாகாணத்தவரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்திருப்பதை மகிழ்ச்சி வரி குறித்த இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன, அதேநேரம் வடக்கு மாகாணத்தவரின் பணவருவாய் மூலங்கள், உள்நாட்டு உற்பத்திகள் என்ன போன்ற கேள்விகளையும் இது எழுப்புகின்றது. வடக்கு மாகாணத்தவர்கள், குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்கள் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் அரச பதவிகளைப் பெற்றதன் மூலமே பணவசதியைப் பெருக்கிக்கொண்டார்கள் என்கிற ஒரு கருத்து புலமை வட்டத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுவருகின்றது; ஆனால் பிரித்தானியர் வந்திறங்கியபோதே வடக்கு மாகாணத்திலிருந்து வசூலிக்கப்பட்ட வரியானது ஏனைய பிற மாகாணங்களிலிருந்தும் வசூலிக்கப்பட்ட மொத்த வரியைவிட அதிகமாக இருந்தது என்பது புதிய ஆய்வுகளுக்கான வெளிகளைத் திறந்துவைக்கின்றது.

1812 முதல் 1820 வரை தேசாதிபதியாக இருந்த ரொபர்ட் பிரவுன்ரிக் (Robert Brownrigg) காலத்தில் காலி, மொறட்டுவ போன்ற பிரதேசங்களில் பெண் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் வடக்குக்குப் பாராமுகம் காட்டப்பட்டதாகக் குறிப்பிடும் குறமகள் ஆயினும் ரொபர்ட் பிரவுன்ரிக் தெரிந்தோ தெரியாமலோ யாழ்ப்பாணத்துக்குச் செய்த பெரும் சேவையாக, பிரபலமான பிற சமயக் குழுக்களோடு அமெரிக்க சமயக்குழுவையும் (அமெரிக்க மிஷனரி) யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியமையைக் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணத்தின் கல்வி வளர்ச்சியிலும் நவீனமயகாக்கத்திலும் மிகப்பெரும் செல்வாக்கைச் செலுத்திய அமெரிக்கன் மிஷனின் யாழ்ப்பாண வருகை திட்டமிடாமல் அமைந்ததோர் நற்பேறென்றே சொல்லவேண்டும்.

அமெரிக்கன் மிஷனரியினர் 6 மாதகாலமாகப் பயணம் செய்து இந்தியாவை அடைந்தபோதும், அவர்களுக்கு அங்கே தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது (அவர்கள் சென்றடைந்த பிரதேசத்தில் அப்போது கிழக்கிந்தியக் கம்பனியுடன் இணைந்த பிரித்தானியரின் கூட்டாட்சியே நடைபெற்றுக்கொண்டிருந்தது). இதனால் இலங்கையில் தரையிறங்க அமெரிக்கன் மிஷனரியினர் கேட்ட அனுமதியை பிரவுன்ரிக் 2 நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்கின்றார்;

1. அமெரிக்கன் மிஷனரியினர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டுமே சேவை செய்யலாம்,

2. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் யாழ்ப்பாணம், பருத்தித்துறை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அவர்கள் புதிய நிலையம் ஒன்றையும் அமைக்காமல் ஏற்கனவே ஒல்லாந்தக் குருமார்களால் அமைக்கப்பட்ட தேவாலயங்களில் மட்டுமே குடியேறலாம்.

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் நுழைந்த அமெரிக்கன் மிஷன் பெண்கள் கல்விக்குச் செய்த காத்திரமான பணிகள் குறித்து இந்தக் கட்டுரையில் குறமகள் விபரமாகவும் செறிவாகவும் கூறியுள்ளார். (அமெரிக்கன் மிஷன் இலங்கையில் செய்த கல்விப்பணிகள் குறித்து அறியப் படிக்கவேண்டிய முக்கியமான நூல் கலாநிதி எஸ்.ஜெபநேசன் எழுதிய “இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்கன் மிஷன்”. இந்நூல் குமரன் பதிப்பக வெளியீடாகும்.)

இந்த நூலில் குறமகள் மேற்கோள் காட்டியுள்ள அமெரிக்க மிஷனரியின் பாதிரியார் வண. மெயிக் யாழ்ப்பாணத்தில் அன்று (1816) நிலவிய பெண்களின் கல்விநிலை பற்றிய பின்வரும் கூற்று நாம் நான் ஆழ்ந்த கவனிக்கவேண்டியதொன்று.

“கோவில்களில் பாட்டுக்கள் பாடி நாட்டியம் ஆடுகின்ற நாட்டியப் பெண்களைத் தவிர மற்றையோரில் தமிழை எழுத வாசிக்கத் தெரிந்த இரு பெண்களை மாத்திரம் யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.”

இதில் வண. மெயிக் “கோவில்களில் பாட்டுக்கள் பாடி நாட்டியம் ஆடுகின்ற நாட்டியப் பெண்களைத் தவிர” என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டிருப்பதால் குறித்த சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்வியறிவு அதிகமானவர்களாகவும் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது புலனாகின்றது. ஈழத்துத் தேவதாசிகளில் ஒரு பிரிவினரான உருத்திர கணிகையர் பற்றி க. அஞ்சுகம் எழுதிய “உருத்திரகணிகையர்” நூலிலும் தேவதாசிகளின் கல்வியறிவு பற்றிய விபரங்கள் பெரிதும் உள்ளடக்கப்படவில்லை. இது குறித்த மேலதிக ஆய்வுகளும் புலமை மட்டத்திலான உரையாடல்களும் அவசியம்.  

பெண்களுக்குக் கல்வி தேவையில்லை என்றும், பெண்கள் கல்விகற்றால் அவர்களுக்கு திருமணம் செய்துவைப்பது கடினமாகிவிடும் என்றும் பழமைவாத எண்ணங்கள் குடிகொண்டிருந்த அன்றைய சூழலில் பெண்கல்விக்காக மிஷனரிமார் எடுத்த பெருமுயற்சிகளையும் எதிர்கொண்ட தடைகளையும் பற்றிய பல்வேறு செய்திகளை இந்நூலில் குறமகள் தொகுத்துள்ளார். ஆசியாவின் பெண்களுக்கு மாத்திரமான முதலாவது விடுதிப்பாடசாலையான “Missionary Seminary and Female Central School” இனை (தற்போதையை பெயரான உடுவில் மகளில் கல்லூரி என்ற பெயரிலேயே இக்கட்டுரையில் தொடர்ந்து பிரயோகிக்கப்படுகின்றது) நிறுவிய ஹரியற் வின்சிலோ அம்மையாருடன் தொடர்புடைய சம்பவமொன்று பெண்கள் கல்விக்கு அன்றிருந்த தடைகளை எடுத்துக்காட்டுகின்றது. ஹரியற் வின்சிலோ அம்மையார் தங்கியிருந்த இடத்தினை வந்து எட்டிப்பார்ப்பது, விளையாடித் திரிவதுமாக இருந்த மல்லாகத்தைச் சேர்ந்த வைரவி வள்ளியம்மை, வைரவி சின்னாச்சி என்கிற இரண்டு சிறுமிகளின் தந்தையிடம், அச்சிறுமிகள் தனக்கு உதவியாக இருந்தால், தான் அவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பேன் என்கிறார். அதற்கு என்ன வேதனம் கொடுப்பீர்கள் என்று தந்தை கேட்க, உடுப்பும் படிப்பும் கொடுத்து தையல் பின்னலும் பழக்கி உணவுங்கொடுப்பேனென ஹரியற் வின்ஸ்லோ கூறுகிறார். அதற்குத் தந்தை “அவர்கள் உங்களோடு உண்ண மாட்டார்கள். பசித்தால் பழங்கள் ஏதாவது கொடுங்கள், ஆனால் மாலையில் வீட்டுக்கு அனுப்பவேண்டும்” என்கிறார். (அவர்கள் உங்களோடு உண்ண மாட்டார்கள் என்பதற்குப் பின்னால் இருக்கின்ற சாதிய, பாலபாட த்தில் கற்பிக்கப்பட்ட சனாதன உணர்வே இருந்திருக்கின்றது)

ஆயினும் ஒருநாள் இடிமின்னல், பெருங்காற்றுடன் அடைமழை பெய்கின்றது. இதனால் இச்சிறுமிகள் இருவரும் வீடு செல்லமுடியாமல் ஹரியற் வின்சிலோவுடனேயே தங்கி மறுநாள் வீடுசெல்கின்றனர். இதற்காக அவர்களைக் கிராமமே சாதிப் பிரஷ்டம் செய்துவிட , ஜூன் 29, 1822 முதல் இந்தச் சிறுமிகள் இருவரும் ஹரியற் வின்சிலோவுடனேயே தங்கி வாழவேண்டிய நிலை உருவாகின்றது. 1824இல் உடுவில் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே நிகழ்ந்த இந்தச் சம்பவம் உடுவில் மகளிர் கல்லூரி ஒரு விடுதிப்பாடசாலையாக ஆரம்பிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

தனது கட்டுரையில் குறமகள் சுட்டிக்காட்டுகின்ற இன்னொருவிடயம் சுவாரசியமானது; மிஷனரியில் சேர்ந்து கல்விகற்ற முதலாவது பெண்ணாகிய மிராண்டா செல்லாத்தை ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தபோதும், அவர் கல்விகற்று முடிந்த பின்னர் அவரது கல்வியையும் குணநலனையும் கருத்திற்கொண்டு ஆதிக்கசாதியைச் சேர்ந்த, கல்வி கற்ற ஒரு ஆணுடன் திருமணம் நடக்கின்றது. இது கல்வியால் விவாகம் தடைப்பட்டுவிடும் என்று ஐயுற்று வந்த மக்களுக்குத் தெளிவைத்தந்து பெண்கல்வியை ஊக்குவிக்கும் காரணிகளில் ஒன்றாக அமைந்தது என்கிறார் குறமகள். அதுமட்டுமல்லாமல் பெண்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு 1825 ஆம் ஆண்டு முதல் உணவு, உடை, கல்வி ஆகியவற்றை இலவசமாக வழங்கியதுடன் அவர்கள் திருமணஞ் செய்யும்போது 75 ரூபாய் (4 பவுண்ட் 10 ஷில்லிங்) பெறுமதியான பணத்தை அல்லது அதற்கு நிகரான பொருட்களை சீதனமாகவும் வழங்கியது.

அமெரிக்க மிஷனரியின் நிர்வாகத்தினர் வெவ்வேறு காலப்பகுதிகளில் பாடசாலைகள் மதமாற்றத்தில் எவ்வளவும் வெற்றிகரமாக இயங்கியுள்ளன என்பதை ஆராய்ந்து பாடசாலைகளின் வேலைத்திட்டத்தில் குறுக்கீடுகளைச் செய்தபோதும் அர்ப்பணிப்பும் சமூகநோக்கும் கொண்ட அதிபர்களும் ஆசிரியர்களும் வாய்க்கப்பெற்றதால் அவர்களால் சமூகமாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. தொடக்ககாலங்களில் மொழி, மதக்கல்வி ஆகியவற்றுடன் மனையியலே (Home Science) கற்பிக்கப்பட்டாலும் 1846 இல் எலிசா அக்நியூ (Eliza Agnew) அதிபராக வந்த பின்னர் உடுவில் மகளிர் கல்லூரியிலும் வானசாஸ்திரம், பூமி சாஸ்திரம், சரித்திரம், சுகாதாரம், உடற்கூற்றியல் போன்றா பாடங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும் மிஷனரியினர் கூட உள்ளூர் மக்களின் அழுத்தத்துக்கும் அவர்களிடம் இருந்த சாதிய மனப்பான்மைக்கும் பலவிடங்களிலும் அடிபணிந்துபோகவேண்டிய நிலையே நிலவியிருக்கின்றது. குறிப்பாக உடுவில் மகளிர் கல்லூரியின் தொடக்க காலத்தில் “சொத்துடமையோடு கூடிய நல்ல குடும்பத்தும் பெண்கள்” தான் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக வேளாள சமூகம், கோவிய சமூகம், கரையார சமூகம் ஆகிய சமூங்களைச் சார்ந்த பெண்கள் மாத்திரமே சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 1897இல் நளவ சமூகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பிரவேசப் பரீட்சை எழுதி வெற்றிபெற்று, நுழைவுக் கட்டணத்தையும் கட்டிவிடுகின்றார். மிஷனரியினரும் அவரை அனுமதிப்பதில் பரிபூரணமாக உடன்படுகின்றபோதும் இது பிற மாணவர்களின் பெற்றோரிடமும், மாணவர்களிடமும் அங்கு பணிபுரிந்த பிறரிடமும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. தாம் உண்ணும் உணவை அந்தப் பெண்ணும் உண்பதா? தமது புழங்குவெளிகளில் அந்தப் பெண்ணும் புழங்குவதா என்று அவர்கள் ஆத்திரம் அடைகின்றனர். பலர் பிள்ளைகளை வீட்டிலேயே மறித்துவிடுகின்றனர், சிலர் தமது பிள்ளைகளை வேம்படி மகளிர் கல்லூரிக்கு மாற்றிவிடுகின்றனர். அந்தப் பெண் அங்கு படிப்பதால் அங்கே படிக்கின்ற பிற பெண்களது உடைகளைச் சலவை செய்தாலும் கூட மக்கள் அவர்களது உடைகளை சலவை செய்வதற்குத் தம்மிடம் தரமாட்டார்கள் என்று 6, 7 சலவைத் தொழிலாளர்களும் விலகிச் சென்று விடுகின்றனர். பாடசாலை வேலி கொழுத்தப்படுகின்றது. ஆயினும் மிஷனரியினர் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக இருக்கின்றனர், அதனால் ஆசிரியர்களின் ஆதரவும் அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கின்றது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகளின் பின்னர் 1900 முதல் சகல சமூகங்களைச் சேர்ந்த பெண்களையும் உடுவில் மகளிர் கல்லூரி ஏற்றுக் கொள்ளத் தொடங்குகின்றது.

ஐரோப்பியர் இலங்கையில் அறிமுகப்படுத்திய கல்விமுறை முதல், அவர்கள் ஆரம்பித்த பாடசாலைகள் உட்பட அனைத்தும் மதம் பரப்புதலை மூலநோக்காகக் கொண்டவையாகவும், தமது நிர்வாகத்தை இலங்கையில் உறுதியாக நிலைநிறுத்த அந்தக் கட்டமைப்பின் கீழ் பணியாற்றவுமானவர்களை உருவாக்குவதை நோக்கிய கல்வி அது என்பதையும் ஏற்றுக்கொள்கின்ற குறமகள், அதே நேரம் நாவலர் முன்னெடுத்த தேசியகல்வி முயற்சிகள் பெண்கள் பற்றிய எந்தக் கரிசனமும் இல்லாதவையாகவும், அதற்கு எதிரானவையாகவும் இருந்தன என்பதையும் எடுத்துரைக்கின்றார். கல்விகற்ற கிறித்தவ ஆண்கள் சைவப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளுகின்றபோது அந்தக் குடும்பங்கள் பின்னர் சைவக் குடும்பங்களாகவே தொழிற்படுவது வழமையாக இருந்ததால் ஒல்லாந்தர் காலத்தில் சைவப் பெண்களை திருமணம் செய்கின்ற கிறித்தவ ஆண்களுக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் இருந்தது. ஆயினும் கூட ஒல்லாந்தர்களால் நினைத்த அளவு கிறித்தவக் குடும்பங்களை உருவாக்கமுடியவில்லை. இதனை ஒரு படிப்பினையாக எடுத்து பெண்களும் மதமாற்றம் செய்யப்பட்டு, கிறித்தவ பண்பாடு தெரிந்தும் இருந்தாலே கிறித்தவ குடும்பங்கள் உருவாகும் என்கிற திட்டமிடலே பெண்கள் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு மிஷனரியினருக்கு உந்துதலாக அமைந்தது. ஆனால் ஆறுமுகநாவலர் போன்ற சுதேச சைவத்தலைவர்கள் தமிழ்ப் பெண்கள் மீது இன்னும் கடுமையான அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதன் மூலமே மதமாற்றத்தை எதிர்கொள்ளத் தொடங்கினார். பெண்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகளை அவர் ஒழுக்க விதிகளாக எழுதிப் பரவலாக பிரசாரம் செய்தார். அதன் பொருட்டு அதுவரை இலங்கையில் இல்லாமல் இருந்து இந்தியாவில் வழக்கத்தில் பிராமணப் பெண்கள் மத்தியில் இருந்த அடக்குமுறைகளையும், அடிமைத்தனத்தையும் இலங்கைக்கு இறக்குமதி செய்தார். இந்தத் தரவுகளை தர்க்கபூர்வமாக முன்வைத்து விமர்சனப் பார்வையுடன் காத்திரமானதாக தனது வாதத்தை குறமகள் முன்வைத்துள்ளார்.

அமெரிக்க மிஷனரியின் 1846 ஆம் ஆண்டு அறிக்கையில் “அதுவரை உடுவில் பெண் பாடசாலையில் படித்து வெளியேறிய பெண்களுள் 70 பேர், 70 கிறிஸ்தவர்களை மணம் செய்து 70 கிறிஸ்தவக் குடும்பங்களை அமைத்துக்கொடுத்து கிறிஸ்துவுக்கு மகிமைகொடுக்கும் 70 தலைமுறைகளாக விளங்கினரெனவும், ஒரு சிலரே தமது வீட்டுச் சூழலுக்குப் போனதும் அவ்விட நிர்ப்பந்தத்தை எதிர்க்கும் சக்தியின்றி விசுவாசத்தை விட்டு விட்டனரெனவும்” குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் குறமகள் கட்டுரையின் பிறிதொரு இடத்தில் “ஆறு ஆண்களை மதம் மாற்றுவதிலும் பார்க்க ஒரு பெண்ணை மதம் மாற்றுவது தான் மிக முக்கியமானதும் பிரயோசமானதுமாகும் என 1820களில் மிஷனரிமாருக்குத் தெரிந்த உண்மை சைவசமயப் புத்திஜீவிகளுக்கு ஏன் தெரியாமல் போயிற்று” என்றும், “தமிழையும் சைவத்தையும் வளர்க்கவும் காக்கவும் என்று மிஷனரிமார்களிடமிருந்து புதிது புதிதாக நுணுக்கங்களை உள்வாங்கிக்கொண்டு செயற்பட்ட ஆறுமுகநாவலர், அந்த நோக்கத்துக்காகத் தன்னும் பெண்கள் கல்வியைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்தது ஏன்” என்கிற பொருத்தமான கேள்வியையும் எழுப்புகின்றார். மிஷனரிமார் பெண்கள் கல்விவளர்ச்சிக்கு இத்தனை விடயங்களைச் செய்து, அதனூடாக கல்வி கற்ற முதற் தலைமுறைப் பெண்கள் ஆசிரியர்களாகவும், பாடசாலை நிர்வாகிகளாகவும், பாடசாலை விடுதி மேற்பார்வையாளார்களாகவும் கடமையாற்றத் தொடங்கிவிட்ட காலப்பகுதியில் கூட ஆறுமுகநாவலர் பெண்கள் கல்விகுறித்தும் எந்த அக்கறையும் எடுக்காமல் இருந்ததுடன் பெண்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகிக்கும் விதமான சனாதனக் கருத்துகளை தனது பாலபாடம் நூலிலும் வெளிப்படுத்திவந்துள்ளார். ஆறுமுகநாவலர் 1848ம் ஆண்டில் சைவப்பிரகாச வித்தியாசாலையைத் தொடக்குகின்றார். அவரது கொள்கைகளை வரித்துக்கொண்ட அவரது மாணவர்கள் சில பாடசாலைகளைத் தொடங்குகின்றார்கள். 1885 இல் இவ்வாறு தொடங்கப்பட்ட 4 பாடசாலைகளில் 5000 மாணவர்கள் கற்றபோதும் அவற்றில் எந்த ஒரு பாடசாலையிலும் பெண்கள் கற்றதற்கான சான்றுகள் ஏதுமில்லை என்று குறமகள் குறிப்பிடுவதையும் இதே கட்டுரையின் இன்னொரு இடத்தில் 1850 இல் அமெரிக்கன் மிஷன் பாடசாலைகளில் கல்விகற்ற 4000 மாணவர்களில் 1000 பேர் பெண்கள் என்று குறிப்பிடுவதையும் ஒப்புநோக்கவேண்டும். 1879இல் ஆறுமுகநாவலர் இறக்கும் வரை யாழ்ப்பாணத்தில் சைவப் பெண் பாடசாலைகள் எதுவுமே ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும் அவர் இறந்த அடுத்த ஆண்டே (1880) இல் சைவப் பெண்பாடசாலை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனைகளைத் தொடங்கி அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த சேர்.பொன். இராமநாதனிடம் மகஜர் ஒன்றைக் கையளிக்கின்றனர். இவை இரண்டு சுயாதீனமான நிகழ்வுகள் என்று பார்க்க முடியாது என்றே நான் கருதுகின்றேன்.

“யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப்பாரம்பரியம்: 18 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை” என்கிற இந்தக் கட்டுரை

  1. 19 ஆம் நூற்றாண்டுவரை ஓர் ஆய்வு (1800-1900)
  2. பிரித்தானியர் ஆட்சியில் பெண் கல்வி (1810 வரை)
  3. பெண் கல்வி 1830 - 1865
  4. பெண் கல்வி நிலை 1865 - 1900 வரை
  5. 1800-1900 வ்ரையிலான பெண் கல்வி ஏற்படுத்திய சமூகத் தாக்கம்
  6. பெண்கள் பாடசாலைகளின் அதிபர்கள் சிலர்

ஆகிய 6 கட்டுரைகளை உள்ளடக்கியது. இவற்றின் ஊடாக பெண் கல்வி வரலாற்றையும், அமெரிக்க மிஷன் பெண்கள் கல்விக்கு அளித்த பங்களிப்பையும் உள்ளூர் மக்களின் சாதிய மனப்பான்மையையும், பெண் கல்வி பற்றிய அக்கறையின்மையையும் மிஷனரியினரின் கல்விக் கொள்கைகளுடனும் மதமாற்றம் என்கிற நோக்குடனும் இடைவெட்டி நிற்கின்ற பொருளாதாரப் பின்புலங்கள் குறித்தும் காத்திரமான வாசிப்பொன்றையும் அதனூடாக புதிய தேடல்களையும் தூண்டுகின்றது.

- அருண்மொழிவர்மன்