கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தியாவில் புரட்சி என்பது அவ்வளவு எளிதானதன்று. அதை அம்பேத்கர் இப்படி சொல்கிறார், "இந்திய நாட்டில் சமூக சீர்திருத்தத்திற்கான வழி சொர்க்கத்திற்கு செல்லும் வழியைப் போலவே கரடு முரடானது" என்கிறார். ஆம் புரட்சி நிகழ முதலில் மக்களிடம் இருக்கும் அழுக்குகளைத் துடைத்தெறிய முற்பட வேண்டும். பிறகு பண்பாடு மாற்றம், ஒற்றுமை பிறகு இணைந்து அரசியல் களம் கண்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என மிகத் தெளிவாக அணுகுகிறார்.ambedkar 452புரட்சி என்றதும் ஆயுதம் ஏந்தி போராடுவது என்பதல்ல, ஆயுதம் ஏந்தாத அறிவு புரட்சி இது. இந்திய ஜாதி சமூகத்தில் ஆயுதம் ஏந்தி போராடுவதைவிட அணித்திரட்டுவது அறிவுப் புரட்சியைச் சாதிப்பது என்பது ஆகப் பெரிய வேலை. யாரும் செய்ய முன்வராத இப்பணியைத்தான் கரடு முரடானது என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், என்பதற்கு முதன்மை முட்டுக்கட்டை ஜாதி தான். இந்த “ஜாதி அமைப்பு முறை தொழில்களை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் பிரிக்கிறது" என்கிறார் அம்பேத்கர். இந்து மதம் தொழிலையும் தொழிலாளர்களையும் பிரித்து ஒன்றுக்கொன்று ஒற்றுமையற்ற எதிர் துருவங்களாக நிலை நிறுத்தும்போது தொழிலாளர் ஒற்றுமை எவ்வாறு சாத்தியம்? என்கின்ற கேள்வி எழுப்புகிறார். தொழிலாளர் ஒற்றுமையே சாத்தியமில்லாதபோது தொழிலாளர் புரட்சி எவ்வாறு சாத்தியம் என்கிறார். இம்முறையில்தான் ஒற்றுமையற்ற சமுதாயம் நிலவ பார்ப்பனியம் இம்மண்ணில் வேத பண்பாடுகளையும், புராண நெறிமுறைகளையும், மதம் எனும் சட்ட திட்டத்தையும், ஜாதி என்னும் பரவலாக்களையும் கையாண்டு வெற்றி கொண்டது. இந்தியாவில் தொழிலாளர் புரட்சி ஏற்பட வேண்டும் என்றால் தொழிலாளர்களின் ஒற்றுமை மிக முக்கியம். ஆனால் ஜாதியெனும் கோட்பாட்டால் தொழிலாளர்கள் ஒற்றுமையே சாத்தியமில்லாதபோது, தொழிலாளர்கள் ஒன்று திரள முடியாதபோது புரட்சிக்கு வாய்ப்பே இல்லை. இந்த ஒற்றுமையற்ற நிலையையே பார்ப்பனியம் இம்மக்களிடம் ஜாதி கட்டுப்பாடு, சம்பிரதாயம் எனும் பெயரில் பயிற்றுவித்துள்ளது. உரிமை பெற புரட்சி ஏற்பட வேண்டுமெனில் முதலில் ஒற்றுமையற்ற தன்மை ஒழிய வேண்டும். ஒற்றுமையற்ற தன்மை ஒழிய வேண்டுமானால், ஜாதியும், மதமும் (பார்ப்பனியமும்) ஒழிய வேண்டும். இந்தியாவில் பார்ப்பனியம் ஒழியாமல் எந்தப் புரட்சிக்கும் சாத்தியமில்லை என்பதே உண்மை.

நமது நேரடி எதிரிகள்

"எனது கருத்துப்படி இந்நாட்டின் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளை முறியடிக்க வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம் இரண்டாவது முதலாளித்துவம் என்ற இரண்டு எதிரிகள் தான் அவை" என்றுரைத்து தொழிலாளர் பிரிவினைக்கான மூலப் பிரச்சனை என்று வெளிப்படுத்துகிறார். மேலும் பார்ப்பனியம் என்பதை தனக்கே உரித்தான ஆய்வுகளின் அடிப்படையில் இப்படி விளிக்கிறார்; "பார்ப்பனர்கள் பெற்றுள்ள அதிகாரம், சலுகைகள், சுயநலன்கள் போன்றவை மட்டுமல்ல பார்ப்பனியம். விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உணர்வுகளை மறுப்பதே பார்ப்பனியம்" என்று மிகத் தெளிவாக அதன் அடிப்படைத் தன்மையை உணர்த்துகிறார் அம்பேத்கர். பார்ப்பனியம் ஒற்றுமை, விடுதலை, சமத்துவ கருத்துக்களை எப்போதும் ஆதரிக்காது. ஆகவே பார்ப்பனிய கருத்துக்களில் இருந்தோ, அல்ல பார்ப்பன பண்பாடுகளின் தாக்கங்களிலிருந்தோ இந்த மண்ணில் தொழிலாளர் ஒற்றுமையை எதிர்பார்க்கவே முடியாது என்பதே உண்மை. பார்ப்பனியம் ஒழிதலே ஒற்றுமைக்கான ஒரே வழி என்கின்ற சிந்தனையை மிகத் தெளிவாகக் கொண்டிருக்கிறார் அம்பேத்கர். நாம் ஒற்றுமை பெற முடியாத சமூகமாக இருப்பதே பார்ப்பனியத்தின் வெற்றி. பார்ப்பனியம் ஒற்றுமைக்காக ஒரு வழியைக் கூட மக்களுக்குச் சொல்லித் தரவில்லை. மாறாக ஒற்றுமையற்ற தன்மைக்காக ஆயிரம்வழிமுறைகளைக் கற்பிப்பதும், கற்பித்து வருவதுதான் பார்ப்பனியமும், மனுதர்மமும். ஆகவே ஒற்றுமையற்ற வேத பொய்மைகளை கட்டமைத்து அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனியம் தான் மக்கள் சமத்துவத்திற்கு எதிரான முதல் எதிரி என்கிறார் அம்பேத்கர்.

தொழிலாளர்களின் இரண்டாம் எதிரி முதலாளித்துவம் என்பதில் பல்வேறு பொறுப்புணர்வுகளை வெளிப்படுத்துகிறார். "தொழிற்சங்கங்கள் மிகவும் தேவையான நாடு இந்தியாவாகத் தான் இருக்க முடியும். ஆனால் இன்று தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இருக்கும் பகைமையை காட்டிலும் தொழிற்சங்களுக்கிடையில் மிகத் தீவிரமான பகைமை இருக்கும் ஒரு வெட்கக்கேடான நிலையில் நாம் உள்ளோம்" என்கின்ற உண்மையை உரைக்கிறார். "தொழிற்சங்கங்களின் தலைமை பதவிக்கு வர வேண்டும் என்கின்ற போட்டி தான் சங்கத்திற்குள் உள்ளதே தவிர தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லாமல் போகிறது" என்றும் விவரிக்கிறார். இந்நிலைக்கான காரணம் ஒருவகை பார்ப்பனிய ஆதிக்கத்தன்மையே என்று உணரலாம். தொழிற்சங்கங்கள் தங்கள் உரிமையைக் கேட்பதை தவிர்த்தாலும் தன் ஜாதிக்கு ஒரு தொழிற்சங்கம் நிறுவுவதை தவிர்த்ததே இல்லை. கட்சிக்கு ஒரு தொழிற்சங்கம் என்றிருப்பதை தவிர்ப்பதே இல்லை. இந்த இரண்டு வகை தொழிற்சங்கங்களும் அரசியல் நலனில் பயணிக்கக் கூடியவைகளே தவிர தொழிலாளர் நலனில் அல்ல. ஏனென்றால் முதலாளித்துவத்தை எதிர்ப்பதும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதும்தான் தொழிலாளர்களின் உரிமை மீட்கும் இடமாகும். மாறாக முதலாளித்துவத்தை வளர்க்கும் அரசியலும், உழைப்பு சுரண்டலையும், பிரிவினையை ஊக்குவிக்கும் ஜாதி அமைப்பு முறையும் ஒருபோதும் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தாது. ஜாதி அமைப்பு முறையும் அரசியலும் ஒன்றுக்கொன்று இணக்கமானவை என்கின்ற நடைமுறை புரிதலிலிருந்து அணுக வேண்டும். தொழிலாளர் ஒற்றுமை ஏற்படாததற்கு அடிப்படை காரணம் பார்ப்பனிய இந்து மதத்தின் ஜாதி அமைப்பு முறைதான். 

கட்சிக்கு ஒரு தொழிற்சங்கம் இருக்க வேண்டாம் என்பதல்ல அம்பேத்கரின் நோக்கம். தொழிலாளர்களின் பிரச்சனையின்போது கூட அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபடாமல் ஜாதி ரீதியாக, கட்சி ரீதியாகத் தனித்தனி தொழிலாளர்களாகப் பிரிந்து கிடப்பதே அம்பேத்கரின் வருத்தம். ஜாதி, மதம், கட்சிகளை விட்டுவிட்டு தொழிலாளர்களின் ஒற்றுமையை, தொழிலாளர் உரிமையை வென்றெடுக்க இவைகள் தடையாய் இருக்கும் என்றால் தடை இல்லாமல் போராட முன்வரவேண்டுமென்பதே அவரின் கருத்து.

வசியப்படுத்தும் பார்பனீயம்

"மக்கள் மனதில் பதிந்திருக்கும் இந்த மதம் என்ற தவறான கருத்தை நீக்குங்கள். மதம் என்று தங்களுக்கு கூறப்பட்டது மதமே அல்ல. சட்ட விதிகளே என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ளச் செய்யுங்கள். இப்பணியை செய்து முடிந்ததுமே மதம் எனக் கூறப்படும் இச்சட்ட விதிகளைச் சீர்திருத்தியாக வேண்டும் அல்லது அடியோடு அழித்து விட வேண்டும். இது போன்ற ஒரு மதத்தை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள் மதத்திற்கு எதிரானவை அல்ல, சட்டத்திற்கு மதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த முகத்திரையை கிழித்தெரியுங்கள் இதுவே உங்கள் தலையாய கடமை" என்கிறார் அம்பேத்கர். தலையாய கடமை என்று சொல்லும் அளவிற்கு பார்ப்பனிய இந்து மதமும், வேத தத்துவ ஜாதி அமைப்பு முறையும் மக்களை ஒன்றுபட விடாமல் மூவாயிரம் ஆண்டுகாலமாக மடமையை நம்மீது சுமத்தியுள்ளது என்பதை நினைவில் வையுங்கள். மேலும் இந்தியாவில் பார்ப்பனியம் ஏன் பூண்டோடு அழிக்கப்பட்ட வேண்டும் என்பதை தொழிலாளர் என்கின்ற நிலையிலிருந்து விளக்குகிறார்;

"இந்தியாவில் ஆளும் வகுப்பினர் யார் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. முக்கியமாகப் பார்ப்பனர்களே இந்தியாவில் ஆளும் வகுப்பினர் ஆவார்கள். பார்ப்பனர்கள் ஒரு காலத்தில் தங்களை 'பூவேதர்கள்' (பூகோள கடவுள்கள்) என்று வர்ணித்துக் கொண்டனர். ஆனால் இக்கால பார்ப்பனர்கள் தங்கள் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுவதை மறுப்பது வேடிக்கையாக உள்ளது. பார்ப்பனர்கள் எப்போதுமே பிற வகுப்பினரை தம் கூட்டாளிகளாக வைத்துக் கொள்வர். அவர்கள் இவர்களுக்கு அடங்கி ஒத்துழைக்க அணியமாய் இருந்தால் அவர்களுக்கு ஆளும் வகுப்பிலும் தகுதி நிலையைத் தரவும் தயாராக இருந்தனர் என்பதை வரலாறு காட்டுகிறது. புராதணக் காலத்திலும், மத்திய காலத்திலும் சத்திரியர்கள் எனப்படும் போர் வீரர் வகுப்புடன் அவர்கள் இப்படியொரு கூட்டணி கண்டனர். இருவரும் பெரும்பான்மை மக்களை அடக்கி ஆண்டனர் சொல்லப் போனால் அவர்களை நசுக்கி ஒடுக்கினர். பார்ப்பனர் எழுதுகோலை கொண்டும் சத்திரியர் வாலை கொண்டும் இதைச் செய்தனர். இப்போது பணியாக்கள் எனப்படும் வைசிய வகுப்புடன் பார்ப்பனியர் கூட்டணி வைத்துள்ளனர். இந்தக் கூட்டணி சத்திரியரிடமிருந்து பணியாவுக்கு மாறியிருப்பது இயல்பானது. வணிகம் கோலொச்சுகிற இந்தக் காலத்தில் வாலை விடவும் பணமே முக்கியம் என்பது கூட்டணியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு இது ஒரு காரணம். ஆகவே ஆளும் வகுப்பு என்கிற நிலையிலிருந்து பணியாவை விலக்கி வைக்கப் பார்ப்பனரால் முடியாது. பணியாவுடன் அவர்கள் நிறுவி உள்ள கூட்டணி வசதியானது மட்டுமல்ல, சுமுகமானது ஆகும். இதன் விளைவு என்னவென்றால் பார்ப்பன சத்திரிய கூட்டுக்குப் பதிலாக - பார்ப்பனிய பணியா கூட்டு இந்தியாவில் ஆளும் வகுப்பாக உள்ளது" என்று மிகத் தெளிவாக உணர்த்துகிறார். பார்ப்பனியமும் முதலாளித்துவமும் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு வகையில் வளர்ச்சி பெற்றுவருவதும், தேவை என்றால் அவ்வளர்ச்சிக்கு மற்றவரைப் பயன்படுத்துவது என்பதும் இயல்பாகி போகிறது. அப்படித்தான் தொழிலாளர் ஒற்றுமைக்கும், மக்களினுடைய ஏற்றத்திற்கும் முதல் எதிரியாக இருப்பது பார்ப்பனியமும் அதனோடு எப்போதும் உறவில் இருப்பதற்காகப் படைக்கப்பட்ட முதலாளித்துவமும் தான் நம் முதல் எதிரி என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

பாட்டாளி வர்க்கமும்மக்களாட்சியும்

பார்ப்பனர் ஆதிக்கத்தில் ஜனநாயகமோ அல்லது மக்களாட்சியோ எப்போதும் நிலை பெறாது என்பதே அம்பேத்கரின் கூற்று. உழைக்கும் தொழிலாளி மக்கள் அதிகாரத்தை வென்றிட வேண்டும் என்பதே முதலாளித்துவத்தை எதிர்த்து முழங்கும் பாட்டாளி மக்களின் மீதான அம்பேத்கரின் பார்வை. "பாட்டாளி மக்களின் விடுதலை உணர்வு புதுவகையானது. பாட்டாளி மக்களின் விடுதலை உணர்வு என்பது அடிமைத்தனத்திற்கு எதிரானது மட்டுமல்ல, தங்களுக்கு நாடாளுமன்ற முறையில் தேர்தலில் வாய்ப்பு கிடைப்பது பற்றி மட்டுமல்ல, பாட்டாளி மக்கள் விரும்பும் விடுதலை என்பது புரட்சிகரமானது. இது மக்களாட்சி தத்துவத்தின் மீது அமைந்துள்ளது. மக்களாட்சி என்பது நாடாளுமன்ற ஜனநாயகம் அல்ல. நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது அரசின் ஒரு முறை, இந்த முறையில் மக்கள் வாக்களித்துத் தங்களை ஆளும் முதலாளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஆட்சியில் அமர்த்துவார்கள். இது பாட்டாளி மக்களுக்கு ஏற்புடையது அல்ல. மக்களாட்சி என்பது பெயரளவில் மட்டுமில்லாமல் செயல் முறையில் இருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் சம உரிமையை உருவாக்கித் தருவதாக இருக்க வேண்டும். மக்கள் அவர்கள் தளத்தில் விரும்பும் வகையில் தேவையின் அடிப்படையில் அவர்களுக்கானதை முழுவதுமாக நிறைவேற்றித் தருவதே பாட்டாளி மக்கள் எதிர்நோக்கும் மக்களாட்சியாக இருக்கும்" என்று உரைக்கிறார். இதன் நிலை பார்ப்பன ஆதிக்கம் நீங்கி, முதலாளித்துவம் தொழிலாளர்களை நசுக்கும் நிலை மாறி, ஜனநாயகம் எனும் அரசியல் தீர்வு பாட்டாளி மக்கள் விடுதலைக்கு சாத்தியப்படுமேயானால் அதுவே ஜனநாயகம் என்றுரைக்கிறார் அம்பேத்கர். ஆனால் இன்றைய தொழிலாளர்களின் நிலை என்பது பொறியில் அகப்பட்ட எலிப்போலப் பார்ப்பனியத்திடமும் முதலாளித்துவத்திடமும் அகப்பட்டுத் தம் உரிமைகளையும், ஒற்றுமையும் இழந்து வருகிறது. முதலாளித்துவத்தின் கைகளிலும் பார்ப்பன ஆதிக்கத்தின் கைகளிலும் ஆட்சி இருப்பதை விடப் பாட்டாளி மக்களே மக்களாட்சியை மிகச் சரியாகக் கையாளுவார்கள் என்பதில் அம்பேத்கர் நம்பிக்கையோடு இருக்கிறார்.

ஜாதி எனும் முட்டுக்கட்டை

அம்பேத்கர் ஜாதிய படிநிலை தொழிலாளர்களின் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் எந்த வகையில் இந்திய சமூகத்தில் இடையூறாக உள்ளது என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறார். "ஜாதிய படிநிலையானது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகவும், இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றது. அது உழைப்பையும், மூலதன பெயர்வையும் தடுத்து விடுகின்றது. உற்பத்திக்கான தளத்தில் இந்த இடப்பெயர்வானது திறமையின்மை என்கின்ற கருத்துகளை நிறுவக் காரணமாக அமைகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி தேக்க நிலையை அடைகிறது. சமூக மற்றும் தனிநபரின் திறன்களைப் பயன்படுத்தி ஒருவர் தமக்கு விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வழிவகை செய்தல் வேண்டும். ஆனால் இந்த மனுதர்ம கொள்கை சாதிய அமைப்பு முறையில் இவ்வழிவகை மீறப்படுகிறது. ஒருவரின் பிறப்பு அடிப்படையில் மரபு ரீதியான தொழிலில் மட்டும் ஒருவரை திணிக்கின்றது. பெற்றோரின் சமூகத் தகுதியின் அடிப்படையில் தொழில்முறை தீர்மானிக்கப்பட்டு விடுகிறது".

இவ்வகை தீர்மானங்கள் தான் சாதியை இறுக பற்றிக் கொள்வதற்கும், ஜாதியின் பெயரால் பெரும்பான்மை மக்கள் உழைத்துப் போடுவதற்கும், ஆதிக்கம் செலுத்தி அதன் மூலம் பயன் பெறுகிற மேல்ஜாதி சிறுபான்மையின மக்கள் மேலும் மேலும் தங்களின் வளர்ச்சியைப் பெருக்கிக் கொள்ள முதலாளித்துவம் என்கின்ற பொறுப்பைக் கொடுத்திருக்கிறது பார்ப்பனியம். பொருளாதார வளர்ச்சி ஒரு சாரருக்கு வளர்ச்சியாகவும், ஒரு சாரருக்கு வளர்ச்சியற்ற நிலையில் இருப்பதையும் அம்பேத்கர் விளக்குகிறார்.

"பொருளாதார வளர்ச்சி என்பது சமூகப் பொருளாதார அமைப்பு முறைகளில் தொடர்ச்சியான மாற்றம் நிகழ வேண்டும் இதுவே பொருளாதார வளர்ச்சி. ஆனால் சாதி அமைப்பு முறை என்பது மரபு ரீதியான பாரம்பரிய தொழில் சார்ந்த சமூகப் பொருளாதாரப் பிரிவில் ஒருவரின் வாழ்வை நீடித்து நிலைபெறச் செய்கிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் ஒரு சாராருக்கு தடை செய்யப்படுகிறது". அதாவது உடலில் அனைத்து பகுதிகளும் வளர்ந்தால்தான் அது வளர்ச்சி மாறாக ஒரு இடத்தில் மட்டும் அதிக வளர்ச்சி இருந்தால் அதன் பெயர் வீக்கம் என்பது போன்று பார்ப்பன ஜாதி அமைப்பின் மூலம் இந்தியாவில் ஒருசாரார் பொருளாதார வீக்கம் தான் ஏற்பட்டுள்ளாதே தவிர அனைத்து மக்களுக்கான வளர்ச்சி ஏற்படவில்லை என்கிறார். இதனால் கீழ்நிலை மக்கள் எப்போதும் தொழிலாளர் நிலையிலிருந்தும், பொருளாதாரத்தை எண்ணிப் பார்க்கக் கூட அவர்களுக்கான உரிமை இல்லாத நிலையைத் திட்டமிட்டு உருவாக்கி வைத்துள்ளது சாதி அமைப்பு முறை. இன்னார்க்கு இது தான் என்பதை வரையறுத்து வைத்ததன் மூலம் தொழிலாளர்கள் அதைத் தாண்டி யோசிப்பதே இல்லை. இந்த யோசனை எப்போதும் இவர்களுக்கு எட்டி விடக் கூடாது என்பதற்காகத்தான் பார்ப்பனியத்தால் படைக்கப்பட்ட கடவுள், ஜாதி, மதம், புராணம், இதிகாசம், போன்ற வேத நூல்கள் எல்லாம் என்பதை தொழிலாளர்கள் உணர்தல் வேண்டும்.

அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனை என்பது பார்ப்பனியம், முதலாளித்துவம், அரசு சார்ந்தது மட்டுமல்ல. சமூக ரீதியில் மக்கள் பிரச்சனையை மையமாகக் கொண்ட ஆழமான சிந்தனையே அம்பேத்கரின் பொருளாதார சிந்தனை. அம்பேத்கரின் இத்தகைய சிந்தனைதான் தொழிலாளர்களின் உண்மை நிலையறிந்து ஒன்றுபடக்கூடிய செயல் திட்டமாக அமையும். மாற்றாக அரசியல், ஜாதி சார்ந்த சிந்தனை மட்டும் இருந்து, சமூகத்தின் மீதான பார்வை இல்லாமல் போவதும், சமூகத்தின் மீதான பார்வை இருந்து, பார்ப்பனிய, முதலாளித்துவம் ஆகியவற்றின் மீதான எதிர் தாக்குதல் இல்லாமல் போவதும் நமக்கு யார் எதிரி என்பதை நிலைநிறுத்தாமல் செல்வதற்காண வீண் செயலகவே அமையும். மார்க்ஸ் கூறியவாறு, "மக்களுக்கான அரசை வர்க்கப் போராட்டத்தின் மூலமாகத்தான் வென்றெடுக்க முடியும்". என்பதை உறுதியுடன் ஒப்புக்கொண்டாலும், புரட்சிகர மாற்றம் என்பது அரசு எனும் அமைப்பில் நிகழ்கிறபோதுதான் அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்கைகளும் தொழிலாளர் ஒற்றுமையும் நடைமுறையில் சாத்தியமாகும் என்பதே நிதர்சனமான உண்மை. அதற்கு நம்மிடையே பார்ப்பனியம் மற்றும் முதலாளித்துவம் மீதான புரிதல் அவசியம், நம்மிடம் ஒற்றுமையே அதிமுக்கிய தேவையாக இருக்கும்.

தொழிலாளர் வறுமையிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் சாதி எவ்வளவு பங்கு வகிக்கிறது என்பதை தெளிவுபடுத்திய அம்பேத்கர் அவர்கள், பொருளாதார கண்ணோட்டத்தில் மத மற்றும் ஜாதி அமைப்பு முறையை நாம் கண்டு கொள்வதில்லை என்பதையும் அறிவுறுத்துகிறார். பொருளாதார வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி நம் கண் எதிரே நடப்பதால் அவற்றின் மூலங்களை நாம் கண்டுக் கொள்ளவதில்லை என்பதே உண்மை. ஆனால் இந்து மதத்தின் ஜாதிய படிநிலையே நிலமுள்ளவன் நிலமற்றவன், இத்தொழிலை இவன் செய்ய வேண்டும், இத்தொழிலை இன்னொருவன் தான் செய்ய வேண்டும் என நிர்பந்திக்கிறது. இதன் மூலமே சமூக கட்டமைப்பில் அவரவர் ஜாதி குழுக்களை அந்தஸ்துடன் நடத்துவதும், பிறரை இழிநிலையில் நடத்துவதும் என்ற சுயமரியாதையற்ற தன்மை வளர்ச்சி பெறுகிறது. இந்த எண்ணமே அவனிடம் பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கிறது. பொருளாதார முன்னேற்றம் அடையாத ஏழை, தொழிலாளர், கீழ்நிலை சமூகம் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் மேலெழும்ப முடிவதில்லை. ஆனால் ஜாதியினால் உயர்ந்தவன் என்ற பொய்மையின் மூலமே அவனுக்கு அனைத்து வாய்ப்பும் கிடைக்கப்படுகிறது. அவ்வாய்ப்பினால் பொருளாதார வளர்ச்சியில் இருப்பவன் மேலும் வளர்ச்சி பெறுகிறான் என்பதை நம்மால் உணர முடியும். இவ்வமைப்பு முறையைக் கருத்தில் கொள்ளாமல் மறுப்பதும், அல்ல ஒன்று திரளாமல் இருப்பதும் அவரவர்களின் வளர்ச்சிக்குத் தடை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தொழிலாளர்களுக்கான இயக்கம்

தொழிலாளர்கள் இப்படி தான் செயல்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்களே முன்னுதாரணமாகவும் அமைகிறார். நகரங்களில் இருந்த தொழிற்சாலைகளில் தொழிற்சங்க போராட்டங்களை நடத்தி வந்த பொதுவுடமைவாதிகள், தலித் தொழிலாளர்கள் எல்லாம் சாதிய ஒடுக்கு முறைகளை எதிர்த்துப் போராடவில்லை. எனவேதான் "1936 ஆம் ஆண்டு சுதந்திர தொழிலாளர் கட்சி என்கின்ற அரசியல் கட்சியை அம்பேத்கர் அவர்களே தொடங்குகிறார்". பொதுவுடமைவாதிகளின் தொழிற்சங்கத்தில் நிலவிய இடைவெளிகளைக் கடந்து தொழிலாளர்களின் சுரண்டலுக்கு எதிரான முழுமையான திட்டங்களையும், செயல்பாடுகளையும் தொழிலாளர் ஒற்றுமைக்காக அம்பேத்கர் மேற்கொண்டார். உழைக்கும் மக்கள் ஜாதி வேறுபாடுகளைக் கலைந்து விட்டுத் தமக்கான உரிமை கோறும், உரிமை போராளிகளாக மாற வேண்டும் என்கின்ற எண்ணத்தில் அவரே சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கி அனைத்து நிலை மக்களுக்குமான கட்டமைப்பை உருவாக்குகிறார்.

"முதலாளிகள் உழைப்பை விழுங்கும் முதலைகளாக இருக்கும் வரை தொழிலாளர்கள் துயரத்தில் மூழ்கிக் கொண்டு தான் இருப்பார்கள்" என்று தொழிலாளர் இன்னலைச் சரியாக அளவீடு செய்கிறார் அம்பேத்கர். தொழிலாளர்களை அழுத்தும் நேரடி காரணமாக முதலாளித்துவம் உள்ளது. தொழிலாளர்களின் உரிமையை நசுக்கும் மற்றும் ஒரு அதிகாரச் சுரண்டலை அழித்தொழிக்காமல் நமக்குப் பொருளாதார விடுதலை என்பது சாத்தியமில்லை என்பதே உண்மை. அந்த வகையில் இந்தியாவில் முதலாளித்துவமாதல் மற்றும் முதலாளித்துவத்திற்குநிழலாகப் பார்ப்பனியம் தான் மறைந்திருக்கிறது. ஒரு சாரார் முதலாளித்துவத்தை உருவாவதற்கும், அவர்களுக்கான தகுதி பிறப்பின் அடிப்படையில் நிர்மாணிக்கப்படுவதற்கும், கீழ் சாதி மக்கள் எப்போதும் தங்கள் இழிநிலை வேலைகளை விட்டு அவ்வேலைகளை செய்யவே கூடாது என்று நிர்பந்திக்கும் மனுவாதியாகத் தான் பார்ப்பனியம் இந்த மண்ணில் நிலை பெற்றுக் கொண்டிருக்கிறது. நம் இருவரில் ஒருவர் ஏழையாகவும் மற்றொருவர் பணக்காரராகவும், நிலம் படைத்தவராகவும் இந்தியாவில் இருப்பதற்கு முதலாளித்துவம் என்கின்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் பார்ப்பனியமே காரணம். முதலாளித்துவத்தை மட்டும் எதிர்த்துப் போரிடும் முற்போக்காளர்கள் பார்ப்பனியத்தை பற்றித் தவறி கூட வாய் திறப்பதில்லை, என்று நடு மண்டையில் ஆணி அடித்ததை போன்று சொல்கிறார் அம்பேத்கர்.

தொழிலாளர் அரசை நிறுவுவோம்

பார்ப்பனியம் இந்தியாவில் தொழிலாளர்களை எவ்வாறு பிரிக்கிறது என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறார் அம்பேத்கர். "இனம் மதம் என்ற காரணங்களைக் காட்டி ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளிமீது பகைமையை கொண்டிருப்பதற்கான காரணங்களை அகற்றுவதே, தொழிலாளர் ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கான உண்மையாக வழி" என்கிறார் அம்பேத்கர். பார்ப்பனியம் புராணங்களையும், வேதங்களையும், இதிகாசங்களையும் சொல்லிப் பிறவி அடிப்படையில் தொழிலாளிகளாக மக்களைப் பிரிக்கிறது. பார்ப்பனியம் தொழிலை மட்டுமல்ல தொழிலாளர்களையும் பிரிக்கிறது. அப்படி பிரிப்பதற்கான காரணங்களை நீங்கள் தேடுங்கள் அது பார்ப்பனியத்தில்தான் முடியும். அப் "பார்ப்பனியத்தை அகற்றுவதே ஒற்றுமைக்கான வழி" என்கிறார் அம்பேத்கர். மேலும் தொழிலாளர்களின் ஒற்றுமைக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அம்பேத்கர் பல்வேறு முன்னெடுப்புகளை முன்னெடுத்து உள்ளார்.

கொங்கணிப் பிரதேசத்தில் கோட்டுகள் எனப்படும் சாதியினர் நூற்றாண்டு காலமாக நிலவுடமையாளர்களாக இருந்து தொழிலாளர்களைச் சுரண்டி வந்திருக்கிறார்கள். இவர்களிடமிருந்து விவசாய தொழிலாளர்களை மீட்பதற்காக 1937 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பம்பாய் மாகாண சட்ட மன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வருகிறார். நிலத்தின் மீதான கோட்டுகளின் உரிமை ரத்து செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு அதற்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். நிலங்களில் உழைத்து வந்த விவசாய தொழிலாளர்களுக்கு அந்நிலங்கள் வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அம்மாசோதாக்கள் அம்பேத்கர் அவர்களால் கொண்டுவரப்பட்டது. அன்று இருந்த மாநில அரசு அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தி அலைக்கழித்து வந்தது. எனினும் தொழிலாளர் உரிமைக்காக முதன் முதலில் சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்தவர் அண்ணல் அம்பேத்கரே ஆவார்.

1938 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் நாசிக் மாவட்டத்தில் மன்மத் என்னுமிடத்தில் மகா இந்திய தீபகற்ப ரயில்வேயில் பணிபுரிந்து வந்த தலித் தொழிலாளர்களின் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் தான் "தொழிலாளர்கள் பார்ப்பனிய முதலாளித்துவம் ஆகியவைகளை எதிர்த்து நிற்க வேண்டும்" என்று அம்பேத்கர் முழங்குகிறார். மேலும் "பிரிட்டிஷார் இந்த நாட்டை விட்டு வெளியேறியப்பிறகு முதலாளித்துவத்தை எதிர்த்துத் தொடர்ந்து நாம் போரிட வேண்டி இருக்கும் அதற்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் அறிவுறுத்துகிறார்.

1938 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று தொழிலாளர்களுக்கு எதிரான தொழில் தகராறுகள் சம்பந்தமான தீர்மானத்திற்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று டெக்ஸ்டைல் தொழிலாளர் சங்கமும், அம்பேத்கர் அவர்களால் நிறுவப்பட்ட சுதந்திர தொழிலாளர் கட்சியும் சேர்ந்து முடிவு செய்தன. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கம்கர் மைதானத்தில் அன்று மாலை நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்த தொழிலாளர்களைப் பாராட்டினார் அம்பேத்கர், “தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றாத வரையில் அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது" என்று தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

தனித்தனியே பிரிந்து கிடப்பதை கைவிட்டுவிட்டு, அனைத்து தொழிற்சங்கங்களும் தமது தனிப்பட்ட வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு போராட வேண்டி இருக்கும் என்று எடுத்துக்காட்டியதும் இந்தப் போராட்டம் தான். இத்தகைய ஒற்றுமையையே அம்பேத்கர் விரும்புகிறார். விரும்பியது மட்டுமின்றி களத்தில் நின்று தொழிலாளர் ஒற்றுமையை நிலைநாட்டிக் காட்டியவர் அம்பேத்கர். தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திலிருந்து, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பின்வாங்காதவராக இருந்தார் அம்பேத்கர். 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதியன்று பம்பாய் மாகாண தொழிலாளர் கூட்டமைப்பு அண்ணல் அம்பேத்கரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளச் செய்த கூட்டத்தில், "ஒரு பொதுவான தொழிலாளர் கட்சியை உருவாக்குவதற்கும், தொழிலாளர் அரசைக் கொண்டு வருவதற்கும் நாம் முயல வேண்டும். இது எவ்வளவு விரைவில் நடைபெறுகின்றதோ அந்த அளவுக்குத் தொழிலாளர்களின் தேவைகளைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும்" என்று தொழிலாளர்கள்மீதான நம்பிக்கையைப் பறைசாற்றுகிறார்.

 அம்பேத்கரின் இந்த நம்பிக்கை முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்கு ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து முதலாளித்துவத்தின் மூலதனம் பார்ப்பனியத்தை சாடுவதற்காக ஒன்று திரள்வதான நம்பிக்கையாகவே நாம் பார்க்கிறோம். அந்த நம்பிக்கை இன்னும் இந்தியாவில் எட்டப்படவில்லை என்பது தான் வேதனைக்குரிய ஒன்று.

வேளாண்மையில் பொதுவுடமை திட்டங்கள்

தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையையும் போராட்டத்தையும் விட ஏகாதியபத்திய எதிர்ப்பே முக்கியமானது என்று கருதிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் போக்கைக் கண்டனம் செய்கிறார். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எண்ணியது போன்றே பிரிட்டிஷார் இந்த நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் முதலாளித்துவத்தை எதிர்த்து நாம் போரிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. இந்தியாவில் முதலாளித்துவம் என்பது வெறும் முதலாளித்துவம் மட்டும் சார்ந்ததாக இருக்கவில்லை. மாறாக முதலாளித்துவத்தின் பின்னே சாதி, மதம், பெரும்பான்மை வாதம், ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையில் தொழில்களும், தொழிலாளர்களும் என்று பிண்ணி பிணைந்துள்ளது. இந்தப் பிணைப்பையே தொழிலாளர்கள் முதன்மையாக எதிர்க்க வேண்டும் என்று அம்பேத்கர் எண்ணுகிறார். ஆனால் தொழிலாளர்களும், தொழிலாளர் சங்கங்களும் முதலாளித்துவம் என்னும் ஒரு பக்கத்தைத் தான் எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்களே தவிர, இந்தியாவில் முதலாளித்துவத்திற்கான அடித்தளமான பார்ப்பனியத்தை இன்னும் கண்டு கொள்ளவே இல்லை. அதைப் பற்றிப் பேசவே இல்லை என்கின்ற நிலை உள்ளது.

இந்தியாவில் சமூக, அரசியலில் முதலாளித்துவமும், பார்ப்பனியமும் பிண்ணி பிணைந்துள்ளது என்பதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் "சிறு நில உடமையாளர்களின் பிரச்சினையைப்" பற்றிய கருத்துக்கள் இன்றளவிலும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. "பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் பொருளியலின் தன்மைக்கும் நிலயுடமையின் அளவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்றார். நிலங்களைப் பொருளியல் தன்மை உள்ளதாகப் பார்ப்பதற்கு காரணம் வேளாண்மையின் தீவிரமான உற்பத்தியும், நிலத்தின் மீது செய்யப்படுகிற முதலீடும், அதிகபட்ச அளவில் நிலத்தில் இடும் இடுபொருள்களும், உழைப்புமே என்றார். கடந்த 10 ஆண்டுகளில் உலகமயமாக்களினால் நிலங்களை ஒருங்கிணைத்துக் கூட்டுரிமை ஆகும் வேளாண்மை தொழிலுக்கு அம்பேத்கரின் பகுப்பாய்வு வலுவான மாற்றாக அமைகிறது. மேலும் நிலங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்வைக்கப்படுகின்ற விவாதத்தில் முழுமையான சீர்திருத்தத்தை அம்பேத்கர் முன்வைக்கிறார். அரசின் பங்களிப்பின் மூலமாக அடிப்படை விவாதங்களை நடைமுறைப்படுத்தும் வழிகளையும் கூறுகின்றார்.

1927 அக்டோபர் 10 அன்று பம்பாய் மாகாண சட்டமன்ற அவையில் "சிறு நில உடமையாளர்களின் துயர் துடைக்கும் சட்டம் முன் வரைவு வாதத்தில் தலையிடுதல்" என்கின்ற கட்டுரையைச் சமர்ப்பித்து வேளாண்மை பற்றிய விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார். மேலும் "கூட்டுப் பண்ணை விவசாய முறையை" அறிமுகம் செய்து அதில் சிறு விவசாயிகளைப் பங்கு கொள்ளுமாறு வலியுறுத்த வேண்டும் என்கிறார். மேலும் நிலங்களைத் தேசிய உடைமையாக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். நிலங்களை விவசாயிகளுக்குக் குத்தகை விடுமாறும், கூட்டுப் பண்ணை வேளாண்மை மூலம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்றும், மக்களின் அன்றாட பொருளாதார வாழ்க்கைக்கான தேவைகளை ஒரு அரசு திட்டமிட வேண்டும் என்றும், உள்ளே நுழைகின்ற தனியார் துறையின் முயற்சிகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிறார். தனியார் துறைகளைப் புறக்கணித்து அதிகபட்ச உற்பத்திக்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும், செல்வங்களை அவரவர் தேவைக்கேற்ப சமத்துவ பங்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அம்பேத்கர் பல நல்ல பொதுவுடைமை திட்டங்களை முன்வைக்கிறார்.

தனியார்மையமாக்கல்

சட்டத்திலும், சட்ட அமைச்சராகியும் பல்வேறு தொழிலாளர் சார்ந்த திட்டங்களைத் தீட்டிய தலைவர் அம்பேத்கர் என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியம். 1942 ஆம் ஆண்டிலிருந்து 1946 ஆம் ஆண்டுவரை இந்தியாவின் தொழிலாளர் நல அமைச்சராகப் பணிபுரிந்து வந்த அம்பேத்கர், தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு அடிப்படையான பல சட்ட மசோதாக்களை கொண்டு வந்தார். 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று தொழிலாளர் நல மாநாட்டின் சிறப்பு கூட்டத்தின்போது, "முதலாளித்துவ அமைப்பில் செயல்பட்டு வருகின்ற நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இரண்டு விஷயங்கள் மிகவும் அபாயகரமானவை என்று நான் கருதுகிறேன். உழைப்பவர்கள் வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள். உழைக்காதவர்கள் மாபெரும் மூலதனத்தை வைத்திருக்கிறார்கள். அரசியல் ரீதியான சமத்துவம் நிலவுகின்ற அதே நேரத்தில், பொருளாதார ரீதியான ஏற்றத் தாழ்வும் நிலவி வருகிறது. தொழிலாளர்களுக்கு வீடுகளோ, உடைகளோ, உணவோ, உடல்நலமோ இவை எல்லாவற்றையும்விட மேலாக, ஒரு கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கையோ கிடைக்கவில்லை என்றால், சுதந்திரம் அடைவதில் எந்த அர்த்தமும் இல்லை. தொழிலாளர்களுக்குப் பணி பாதுகாப்பும், தேசிய சொத்தில் ஒரு பங்கும் கண்டிப்பாக உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்" என்று தொழிலாளர்களின் நலனைப் பற்றி நாள்தோறும் சிந்தித்து செயலாற்றக்கூடிய ஒப்பற்ற தலைவராக அண்ணல் அம்பேத்கர் திகழ்ந்தார்.

நாடு விடுதலை அடையும் முன்பே இத்தகைய பிரச்சனைகள் இந்தியாவில் நடைமுறையில் சந்திக்கப் போகிறோம் என்பதை அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் நாடு விடுதலை அடைந்தபின் நசுக்கப்படுகின்ற தொழிலாளர் வர்க்கம் இன்னும் நசுக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. பார்ப்பனியம், முதலாளித்துவம், அரசியல் அதிகாரம், தனியார் மையம் என்று புதிய புதிய சுரண்டல்கள் புதிய வழிகளில் அதிகாரம் என்கின்ற போர்வையில் இம்மக்களை அழுத்திக் கொண்டு தான் இருக்கிறது. “இந்தியாவை விரைவான தொழில் மையமாக மாற்றுவதற்கு அரசு சோசலிசம் கட்டாயம் தேவை, இதைத் தனியார் துறை செய்யாது என்றும் செய்வதற்கு அது முனைந்தாலும் செல்வப் பகிர்வில் ஏற்றத்தாழ்வையை உருவாக்கும் என்றும் ஐரோப்பாவில் தனியார் முதலாளித்துவம் உருவாக்கிய அத்தனையும் இந்தியர்கள் பாடமாகக் கற்றுக் கொள்ள வேண்டும்“ என்று, அன்றே எடுத்துரைக்கிறார் அம்பேத்கர். அம்பேத்கர் சொல்லுகின்ற தொழிலாளர் ஒற்றுமையும், முதலாளித்துவ வேரறுப்பும், தனியார் துறைக்கே இந்தியாவை விற்று விடும் அவலம் தற்போது நடந்து கொண்டிருக்கும் சூழலை நினைவில் கொள்க. “தனியார் பயன்பெறும் லாப நோக்கம் கொண்ட சமூகப்பொருளாதார அமைப்பு முறை என்பது இச்சமூகத்தின் ஒரு அத்துமீறல்” என்றார்.

தொழில்துறை தற்சார்புடன் நடைபெற வேண்டும். ஓர் அரசு தான் இதைச் செய்ய வேண்டும். அரசு இதைச் செய்யாவிட்டால் தனியார் தொழிலாளி செய்து விடுவார். இன்னும் சொல்லப்போனால் "ஓர் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட உரிமையின் மறு பெயர் தான் தனியார் துறை முதலாளிகளின் சர்வாதிகாரம்" என்கிறார். அந்தச் சர்வாதிகார தன்மையை நோக்கியே நாம் சென்றுகொண்டிருக்கிறோம். இந்நிலைகளை உணர்ந்தாவது தொழிலாளர் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதை காலத்தின் கட்டாயம்.

அம்பேத்கரின் சிந்தனைகளில் அழுத்தம் பெறுகின்ற நிலச்சீர்த்திருத்தம், கூட்டுப் பண்ணை விவசாய வேளாண்மை, அதிகபட்ச இடுப்பொருட்கள் பயன்பாடு, விரைவான தொழில் மயமாக்கம் உள்ளூர் சார்ந்த பொருளாதார வளர்ச்சி, ஆயுள் காப்பீட்டு முறைகள்மூலம் அணி திரட்டப்படுகின்ற மக்கள் மூலதனம், இயற்கை மூலதாரங்களை பொதுவாக்குவது, இன்று உள்ள மக்கள் இயக்கங்கள் ஒன்றிணைந்து அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வர்க்கப் போராட்டங்களால் மட்டுமே இவற்றை நடைமுறைப்படுத்த முடியும் என்று கூறினாலும், அம்பேத்கரின் பொருளாதார சிந்தனைகளுக்குரிய உண்மையான பொருத்தம் என்பது அனைத்து தரப்பு மக்களும் இணைந்து, சமூகத்தின் ஏற்றத்தாழ்வையும் ஜாதி, தீண்டாமைக்கு எதிரான, கொடுமைகளை ஒழிப்பதையும் முன்னிறுத்தினால் மட்டுமே பார்ப்பனியத்தையும், முதலாளித்துத்தையும் மண்மூடி போகச் செய்ய முடியும். அம்பேத்கர் கூறுகின்ற பொருளியல் மாற்றமும், அரசியல் அதிகாரக் கைப்பற்றலுக்கு இடையூறாக இருப்பது தான் முதலாளித்துவமும், பார்ப்பனியம். இவற்றை உணர்ந்து செயல்பட்டால் தான் தொழிலாளர்களின் உரிமையும், ஒற்றுமையும் நம்மால் வென்றெடுக்க முடியும் என்பதில் ஆணித்தரமாக நிற்கிறார் அம்பேத்கர்.

தொழிலாளர்களின் பாதுகாவலன் அம்பேத்கர்

தொழிலாளர் ஒற்றுமைபற்றிப் பேசினாலும், தொழிலாளர் அமைப்பு தொடங்கி போராடி வந்தாலும் கூட அம்பேத்கர் அவர்களுக்குக் கிடத்த வாய்ப்பை அவர் தவறவிடாமல் தொழிலாளர் நலனுக்காகப் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளார். அந்தச் சட்டதின் மூலம் தான் நாம் அனைவரும் உரிமைகோரவும், பாதுகாப்பாகவும், இருக்க முடிகிறது . அம்பேத்கர் கொண்டுவந்த தொழிலாளர் சட்டங்கள் தான் தொழிலாளர்களின் பாதுகாவலன் எனலாம். ஆங்கிலேய ஆட்சியாளர்களால், அம்பேத்கருக்கு அப்போதிருந்த வைஸ்ராய் கவுன்சிலில் ‘தொழிலாளர் நலத்துறை அமைச்சராக’ 1942ம் ஆண்டுப் பதவி வழங்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி முழுக்க முழுக்க தொழிலாளர் நலன்களுக்காகவே செயல்பட்டார் அம்பேத்கர். அவற்றில் சில;

பிரிட்டீஷ் இந்தியாவிலேயே 8 மணிநேர வேலையை முதலில் அரசாணை வரக் காரணமானவர். பெண் தொழிலாளர்களுக்கான பேருகால விடுப்பிற்கு காரணமானவர். இந்திய தொழிலாளர்களுக்கான பி.எஃப். முறைக்குக் காரணமானவர். தொழிலாளர்களுக்கான ESI திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர். தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து பேச இரு தரப்பு பேச்சுவார்த்தையாக இல்லாமல், முத்தரப்பு பேச்சுவார்த்தையாக (அரசையும் உள்ளடக்கி) மாற்றியவர். இன்றைக்கு இந்திய தொழிலாளி வர்க்கம் அனுபவிக்கும் சட்டப்பாதுகாப்புகளுக்கு காரணமானவர். என்று பல்வேறு தொழிலாளர் சட்டங்களை இயற்றியவர். தொழிலாளர்களுக்கான சட்டங்கள் ஒரே சீராக அமைவதன் அவசியம், காகித கட்டுப்பாட்டு ஆணை, இந்திய தேயிலை கட்டுப்பாடு மசோதா, தேர்ச்சிபெற்ற மற்றும் பகுதி தேர்ச்சி பெற்ற பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு நிலையங்கள், தொழிலாளர்களுக்குக் கிராக்கிப்படி வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பு, தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர் நலன்கள்பற்றிய திட்டத்தில் சமூக பாதுகாப்பு, சம்பளம், வாழ்க்கை நலம், மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) மசோதா, சுரங்க மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா, இந்திய தொழிற்சங்கங்கள் (திருத்த) மசோதா, தொழிற்சாலைகள் (திருத்த) மசோதா, ஆலைத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள், ஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா சுரங்க தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா, தொழிற்சாலைப் பணியாளார் நலக் காப்பீடு இந்திய தொழிற்சாலைப் பணியாளார்களுக்கான வீட்டு வசதித் திட்டம், தொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா, தொழிலாளர்கள் மறுவாழ்வுத் திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் தொடர்பான விவாதங்களை மத்திய நாடாளுமன்றதில் தொழிலாளர்களுக்கான அன்றே கொண்டு வந்தவர் அம்பேத்கர்.

“இந்தியாவில் தொழில் வளர்ச்சியை நமது குறிக்கோளாகக் கொண்டிருப்பது மட்டும்போதாது. இத்தகைய எந்தத் தொழில் வளர்ச்சியும் சமூக ரீதியில் விரும்பத் தக்க அளவிலேயே பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் மென்மேலும் அதிகமான செல்வத்தை உற்பத்தி செய்து குவிப்பதில் நமது ஆற்றல்களை, முயற்சிகளை ஒருமுகப் படுத்துவது மட்டும் போதாது. அனைத்து இந்தியர்களுக்கும் இந்தச் செல்வத்தில் பங்கு கொள்ள உரிமை உண்டு என்பதை நாம் ஏற்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தகைமைமிகு ஏற்றமிகு வாழ்க்கை வாழ்வது சாத்தியமாகும். மேலும் அவர்களுக்குப் பாதுகாப்பற்ற அவல நிலைமை ஏற்பட்டுவிடாதபடி தடுப்பதற்கான வழிவகைகளையும் நாம் காண வேண்டும்” என்கிறார் அம்பேத்கர். இப்படியாகத் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் வாழ்வு மேம்பட, குரலற்ற மக்களுக்கான குரலாக விளங்கிய அம்பேத்கரின் பங்கு அளவிட முடியாதது என்பதை உணரலாம். தொழிலாளர் தோழர்களின் எதிரிகளை அடையாளம் கண்டு அவை தனிமை படுத்தப்பட வேண்டும். ஜாதி மத வேறுபாடுகளை விட்டொளித்து, ஒன்றுபட்டு பார்ப்பனியத்தையும், முதலாளித்துவத்தையும் எதிர்த்துக் களமாடுவதே நம் விடுதலைக்கான வழியாக அமையும் என்பதில் உறுதி கொள்வோம். 

"தொழிலாளர் அணி ஒன்றுபடுவதற்குப் பார்ப்பனியத்தை - தொழிலாளர்களிடையே நிலவும் உயர்வு, தாழ்வு மனப்பான்மையை நாம் வேரோடு கிள்ளி எறிய வேண்டும்" - அம்பேத்கர்.

- த.மு.யாழ் திலீபன்