ஆறாம்விரலில் தீராவிழிநீர் தடாவி
ஒருமைத்துளையூடே
உள்ளகணி கொப்பளித்த
தனிமைத் தணல் வார்த்த
ஆறாம் விரலில் தீராவிழிநீர் தடாவி
எழுதுகிறேன் ஒரு கடிதம்
என்னன்னையே உடனேவா என்னருகே!
அகாலங்களுக்குள் அநியாயமாய்
தொலைந்தவளே!
காலத்தின் எல்லாவிதமான அழுத்தங்களோடும்
மௌனத்தின் கொடும் புழுக்கங்களோடும்
வெற்றுக்கோசங்களின் ஆரவாரங்களோடுமாய்
ஓய்வுப்புள்ளியை
அண்மித்திருக்கிறது பேரலை.
வெடிகளுக்கும் வெடிக்கச் செய்யும் விரல்களுக்கும்,
அவசரக்காயங்களை அள்ளிப்பறக்கும்
அம்பியுலன்ஸ்களுக்குங்கூட
இது விடுமுறைக்காலம்;.
சதாவும் செத்தஉடல் கொத்திக் கொத்தியே
சோர்ந்துபோன காக்கைகளிப்போ
பழையபடிக்கு
முற்றத்து நெல்லுப்பாயைக்
காவலிட விரைகின்றன.
கதறலும் கண்ணீரும் பெருவலியும்
உறைந்திருக்கும்
காய்ந்த குருதிக் கறைகளுக்கு மேலே
பசுமை பரவத்தொடங்குகிறது.
போரில் உயிர்த்த கவிக்குழந்தைகளின்
வரவு கூடக் குறையத் தொடங்கியிருக்கிறது.
ஆனாலும்,
துடைக்கப் படுவதாயில்லை
காப்பகத்தில் தனித்திருக்கும் என்னில்
ஒட்டிக் கிடக்கும் பட்டம் மட்டும்.
உதவ உயர்கின்றன கரங்கள்,
கருணை ததும்ப
தலை கோதுகின்றன விரல்கள்.
ஆடையாகாரங்களில் தானும் குறையேது?
எனினும்
நீயில்லா இவை யாவுமே
நம் குடில்முற்றத்தில் உந்தன் மடியிருத்தி
நீயிட்ட நிலாச்சோற்றுக் கீடாயில்லை
அதில்நீ
ஊற்றித் தரும் அன்புமில்லை.
எனவேதான்
விரைந்து வாயேன் உன்
ஒற்றைப்பூவும் உதிருமுன்பே.
வரும்போது,
வழிப்பயணங்களின் முட்புதர்களிலும்,
மதரஸாக்களிலும்
பள்ளியிலும்,
எல்லைப்புறக் காவலரண்களிலும்
குருதி குளிப்பாட்ட,
கண்ணீர் கபனிட
துடிதுடித்துப் பிரிந்த நமது வாப்பாவையும்
கையோடழைத்துவா.
ஏனெனில்
அவரன்புக் கலிமாவிரல் பற்றி
பள்ளி சென்று கன….நாளாச்சு.
- கிண்ணியா எஸ். பாயிஸா அலி (