சற்று முன் பேசிய வார்த்தைகள்
டைனிங் டேபிள் பரப்பெங்கும்
இறைந்து கிடக்கிறது.
அவை பசித்திருக்கவும் கூடும்.
குறைநீர்க் கண்ணாடி டம்ளரின்
விளிம்பில் வந்தமரும் ஈயொன்று
உதடுகளின் முணுமுணுப்புகளை
அதன்
ரேகை வரிகளில் வாசித்து
எங்கோ பறந்து செல்கிறது
யாரிடமோ சொல்ல...
மேஜை விரிப்பின் ஒரு மூலையில் பின்னப்பட்ட
ஒற்றை ரோஜாப் பூ
பச்சை இலைகளற்று
தொங்கியபடி காற்றிலசைவதை
குறிப்பெடுக்கிறது
சுவற்றிலிருந்து சலனமற்று நோக்கும்
ஓவியக் கண்கள்.
உணவு அருந்தும் அறையெங்கும்
உரையாடல்கள் உறைந்து
குளிர்கின்றன
அதிகப்படியான ஏ.சியால்.
மனிதர்கள் புழுக்கம் சேகரிக்க
வாசல்வரை சென்றுவிட்டனர்..
யாரையோ வழியனுப்பும் பொருட்டு..!
- இளங்கோ (