சாலை நடுவினில்
சக்கரமொன்றில்
அடிபட்டு துடித்த
எலியினை
இன்னும் சில சக்கரங்கள்
அழுத்திச் சென்றிருக்கிறது
என் வண்டிச் சக்கரமும்
அழுத்தி நகர்ந்த போது
ஒட்டிக் கொண்டது
குற்றவுணர்வு..
*************
சாட்சிகள்
சம்பவ இடத்தின் பதிவுகள்
விசாரிக்கப்பட வேண்டியவை
குறுக்கு விசாரணைக்குட்பட்டவை
சாட்சிகள் திரிக்கப்படுகிறது
நீதியி கழுத்து நெரிக்கப்படுகிறது
சாட்சிகள் எதிர்கேள்விகள்
கேட்க அனுமதிக்கப் படுவதில்லை..
சாட்சிகள் எப்போதும்
சாட்சிகளாகவே இருக்கின்றன...
*****************
மிக நெருக்கமானவர்களுக்கு
ஒரு நாளில்
ஒருமுறையேனும்
பேசி விடுங்கள்
நேரமின்மை
நினைவின்மை
வேலைப்பளு
தொழில்நுட்பக் காரணங்கள்
இவையாவுமிருப்பினும்
ஒரு நாளில்
ஒருமுறையேனும்
எப்படியாவது பேசி விடுங்கள்
அது இருவரில்
ஒருவருக்கு
கடைசி தருணமாக இருக்கலாம்.
- இவள் பாரதி (