வெளியெங்கும் விரவிய காற்றின்
நிதானங்களற்ற மென் வன் விசைகளை
காகிதத்தில் மீட்டெடுக்க பிரயாசையுற்றான்
பின் நவீனத்துவ கவிஞனொருவன்
நாணறுந்த வீணையின் துர் ஓலங்களாயும்
புயற் சுழற்சியின் மையப் புள்ளியில் ஆட்பட்ட
வழி தவறிச் சேர்ந்த அனாதைச் சிறகுகளென்றும்
வார்த்தைகளில் வதைத்தான் அக்காற்றை!
வெளியின் தனக்குண்டான ஆளுகைகளை
அகன்ற விரல்களின் ஒற்றை நுனியில் அடக்கிய
இச்சராசர பிரபஞ்சங்களின் சூட்சமங்களை
எல்லார் காதுகளில் ஓதிய படி
திரிந்தலைந்தது தெருவெங்கும் அது
மாலையென தலைகள் தொங்கும் அரக்கனாய்
விடைத்த மார்பு கொண்ட அடங்காத் திமிறனாய்
கணத்தில் களவோட்டிச் செல்லும் கள்வனாய்
இன்னும் சித்தரித்தான் கவிஞன்
ஆவென அப்படியே விழுங்கிச் செறிப்பதாய்
மீறிப் பிரவேகித்த காற்றின் சலசலக்களில்
சிதறிப் பறந்த கவிஞனின் கவிதைகளை
முழுப் பிரபஞ்சங்களும் ஒன்றாய் கூடி பிரசுரித்தன.
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ (