எப்போதும்
மிச்சப்படுவதுண்டு
மனதிற்குப் பிடிக்காதவர்களுக்காக
ஒதுக்கப்பட்ட சில வார்த்தைகள்
அவைகளை
தனக்குத் தானே
உச்சரிக்கும்
நிமிடங்களின் கடினத்தன்மை
புன்னகைகளை மீதமின்றி
உடைத்தெறிகிறது
அதன் மேலிருக்கும்
வானில்
இரண்டாகப் பிளந்து கிடக்கும்
நிலவொன்றின் நெற்றியில்
மேகத்து திருநீர் பூசி
கடந்து செல்லும்
தென்றலின் வலி
வளைந்த கடலலைகளில்
மரணத்தை வருடி
சிதறுகையில்
எவரிடமும்
தெரிவிக்காமல்
நீண்டுகொண்டே செல்கிறது
அன்றைய இருளின் நிழல்
அங்கு
மனதிற்குப் பிடிக்காதவர்களுக்கான
அந்த வார்த்தைகளின்
அருகாமையில்
அந்தப் பொழுதிற்கான மரணம்
புன்னகை வீசியபடி
நின்றுகொண்டிருக்க
அதை சற்றும் கவனிக்காமல்
மையின் ஈரமற்ற பேனாவோன்று
மௌனித்த வெற்றிடத்தில்
கவிதைகள்
கிறுக்கிக்கொண்டிருந்தது ....
- கலாசுரன் (