அப்பா காலத்திலிருந்தே
வாடகை வீட்டிலேயே
வசிப்பு
ஒவ்வொரு வீடும்
ஒவ்வொரு மாதிரி
எல்லாம் நிறைந்த வீடாக
எதுவுமில்லை
அதிக பட்சம் ஒரு வருடம்
அல்லது இரு வருடங்கள்,
வாடகை வீட்டில்
வாழ்ந்ததை விட
வீடு தேடிய காலமே
அதிகம்
வீட்டுக்காரரும் குடியிருப்பவரும்
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாதிரி
ஒருபோதும்
ஒத்துப் போவதில்லை
ஆணி அடிக்கவும்
அனுமதி தேவை
முன்பு கனவாக இருந்தது
சொந்த வீடு
இப்போது கனவும் இல்லை,
ஒவ்வொரு வாடகை வீட்டிலும்
ஓர் உயிர் இழப்பு
ஒரு வீட்டில் அம்மா
ஒரு வீட்டில் அப்பா
ஒன்றில் அத்தை
நல்லவையும் நிகழ்ந்ததுண்டு,
குறிப்பாக மகள் திருமணம்
இப்போதும் வாடகை வீடே
எதில் பிரியுமோ
என் உயிர்