எங்கள் தெருமுனை
பொட்டல் திடலிற்கு
மேகங்களை அதிரவைக்கும்
தொண்டர்களின் கூட்டத்தோடு
பெரியார் ஒரு சமயம்
வந்திருந்தார்
நடுக்கூடத்தில் அமர்ந்தவாறு
நானும் சின்னு பாட்டியும்
சொற்பொழிவை
கேட்டுக்கொண்டிருந்தோம்
இரண்டு நாள் திருமணம்
இரண்டு மணி நேரத்தாம்பத்யம்
இறுதி யாத்திரைக்குத்தயாரான
மாப்பிள்ளை
அருகதை இல்லை என்றாயிற்று
நடைமுறை வாழ்க்கை
சின்னு பாட்டிக்கு
ஒரு வேளை உணவு
ஈர்ப்பற்ற சாம்பல் நிறத்தில்
இரண்டே புடவைகள்
இறப்பை நேசிக்கவைக்கும்
ஒரு தயார் நிலை
கூட்டம் முடிந்தவுடன்
நெடு நேரம் மௌனமாயிருந்த
சின்னு பாட்டி
முதன் முதலில்
என் அம்மாவிடம் கேட்டாள்
அடுத்த தடவை
அழுத்தமான அரக்கு நிறத்தில்
பார்டர் போட்ட புடவை
வேண்டுமென்று
அன்று எங்கள் வீட்டிற்கும்
பெரியார் வந்திருந்தார்
- பிரேம பிரபா (