* முடிவற்றதாகவோ தொடக்கம் எதுவென்று தெரியாததாகவோ தொடரும் மௌனங்களுக்கு அர்த்தங்கள் ஏராளம் சொல்வதற்கு சலனமற்ற மொழிகளை கையாளும் கண்கள் நிதர்சனமாய் கண் முன் தெரிபவையனைத்தும் பதியும் விழித்திரையை பொருட்படுத்தாது சிந்தனைகளை சிதைத்து பிரம்மையில் இளித்துக்கொண்டிருக்கும் மரணமற்ற மனம் பார்வை எட்டும் தூரத்தின் எல்லையில் நுண்ணிய ஒரு புள்ளியிலிருந்து புறப்படும் கனவுகள் வேகத்தின் உச்சம் கொண்டு பிரம்மாண்டமான உருவம் பெற்று கண்களில் மோதி துகள்களாகச் சிதறிப்போகின்றன அதன் அகோரங்களில் இதழோரத்து சிறு புன்னகை ஒன்று எவருக்கும் தெரியாமல் இறந்து விடுவதுண்டு அதற்காக ஒதுக்கப்பட்ட மனப்பகுதியை இரத்தம் வழிய கடித்து தின்றுகொண்டிருக்கிறது மூர்க்கமான ஒரு கற்பனையின் சிரிப்பு சப்தம் .... பள்ளமான உள்ளம் கையில் தேக்கி வைத்த நிம்மதியின் நீரை கருணையின்றி பருகும் ஒரு காரணமற்ற வெறுப்பின் புழுக்கம் மீண்டுமொரு மௌனத்தின் எல்லையில் தூக்கில் போடப்பட்ட மூன்று கனவுகளின் சடலங்கள் கண்முன் தொங்கியபடி நிற்கின்றன அதில் ஒன்றாவது வாழ்வைப் பார்த்தும் இரண்டாவது மௌனத்தைப் பார்த்தும் மூன்றாவது நிகழ்காலத்தைப் பார்த்தும் சிரித்துக்கொண்டே இருக்கிறது * *** - கலாசுரன்
கீற்றில் தேட...
மூன்று கனவுகளின் சடலங்கள்
- விவரங்கள்
- கலாசுரன்
- பிரிவு: கவிதைகள்