எப்பொழுதுமாய் அனுமானக்காரர்கள்
மீண்டும் தங்கள் நிஜங்களை உதிர்த்த படி
ஆணிவேரற்ற ஓர் ஈச்ச மர நிழலுக்கருகாமையில்
கணத்தில் கை நழுவிய தங்க இறகுகளை நொந்த படி
கனவுப் பானங்களை கையிலேந்திக் கிடந்தார்கள்
கழிந்த கருமாந்திரங்களை புகைந்த படியாயும்
பாதை மாறிச் சேர்ந்த ராகு கேதுக்களை கனன்றபடி
தங்கள் தொண்டையைச் செருமிக் கொண்டார்கள்
கனவு நதிகளில் நீந்திய காலன்களை
நன்றாய் பந்தாடிய தருணங்களை
செவியோரமாய் ஓலமிட்டுக் கிடந்த கோட்டான்களை
உதட்டூதலால் வென்ற கதைகளையும்
இனி எப்பொழுதுமே இதைப் போல் கேட்கப் பட்டிருக்காத
இனியும் கேட்கப்படலாம் எனப்படாத
அனுமானங்களை அவிழ்த்துக் கிடந்தார்கள் அனுமானிகள்
உணர்வீர்ப்புத் திசைகளில் உள்ளமுங்கிப் போகாத
வழமையில் முடிந்திடவும் செய்யாத
புதுக் கிரகணங்களை கொணர்ந்து விடுகிறார்கள் ஒற்றை இரவில்
அடர் பச்சையான அவர்கள் இரவுகளை
வெளுத்து மஞ்சனித்த அவர்கள் பகல்களை
விரல் ரேகைகளில் வடிவமைத்து விடுவதென்றும்
இயலாத் தருணங்களில் நிறமிகள் கண்களில் செத்து விட்டதாயும்
கோளாறி சொல்லித் திரிவர்கள் அந்த அனுமானிகள்.
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ (