குரு பீடமொன்று காலியாக இருக்கிறது
என்று அறிந்தேன்.
அதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன்.
தலைமைக் குருவாகிற தகுதிகள்
எல்லாமும் எனக்குண்டு.
ஒரு வாய்ப்பு கிடைத்தால்
மெய்ப்பிக்கிறேன்.
என்னைப் பற்றி
.....................................
உண்மையில் நான் கடவுளை நம்பவில்லை.
கடவுள் பற்றிய பயமுமில்லை.
என்றபோதும்
ஆத்திக வேடம் பூணுபவன்.
உண்மை பேசும் குணம்
கிஞ்சித்தும் எனக்கில்லை.
உண்மையற்ற தைரியனாய்
ஒரு பயமுமின்றி
எந்தக் கடவுளையும் உயர்த்திப் பிடிக்க
நான் சம்மதிக்கிறேன்.
கல்வித் தகுதி
..............................................
மனிதர்களை வைத்து விளையாடும்
நிஜவிளையாட்டு எனக்கு
கைவந்த கலை.
குருதி கொப்பளிக்கும்
மீறல்நிலங்களில்
ஆவேச வாள் வீசிப் பெரும்பழக்கம்
எனக்குண்டு.
விளையாட்டுக்கள்
,...............................................
ஏமாற்றுவதை பிறரறியாமல் செய்து
பழகியிருக்கிறேன்.
வெறும் கைகளைக் காற்றில் சுழற்றி
பழைய சாமியார்களைப் போல்
மிட்டாயும் கொடுக்க மாட்டேன்
பொருளெதையும் எடுக்க மாட்டேன்.
பிற ஈடுபாடுகள்:
.............................................
எல்லோரும்
வாய்பிளக்கும் வண்ணம்
மெமரி கார்டுகளையும்
ப்ளூடூத் டிவைஸ்களையும்
ஆப்பிள் ஃபோன்களையும்
வரவழைத்துக் கொடுப்பேன்.
கொஞ்சம் செலவுதான்.
இருந்த போதிலும் அவற்றைப்
பெற்றுக் கொள்பவர்கள்
என் உற்ற நண்பர்களே
செயல்திட்டம் 1
............................................
ஹைடெக் ஸ்வாமிஜி என்று
என்னை அழையுங்கள்.
கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளையும்
பெருந்தனவந்தர்களையும்
அரசுபதவியாளர்களையும்
அரசியல்வாதிகளையும்
காத்திருக்கச் செய்யாமல்
என் வரவேற்பறைக்குள்
அனுமதித்து விடுங்கள்.
அவர்கள் நல்லவர்கள்.
பக்தர்கள் காத்திருக்கக் கூடாது.
வாய்ப்பிழந்த நடிகைகளையும்
ஏமாறக்கூடிய பெண்களையும்
தனியறையில் காத்திருக்கச்செய்யுங்கள்.
பக்தைகள் காத்திருத்தல் கூடும்.
செயல் திட்டம் 2
..................................................
சர்ச்சைகளில் இருந்து சுலபமாக
வெளியேறி விடுவேன்.
மாட்டிக்கொள்ளாமல் பாவம் செய்வது
எப்படி என்னும்
சர்வதேச சாமியார் மேன்யுவல்
(ஒற்றைப் பிரதி தான் உள்ளது உலகிலேயே)
என் கைவசம் உள்ளது
அப்புத்தகத்தின் திருட்டுப் பிரதி ஒன்று.
செயல் திட்டம் 3.
.......................................................
பக்தர்களின் கூட்டங்களில்
அற்புதங்களை நிகழ்த்துவேன்.
கூட்டத்தைப் பெருக்குவதன் மூலம்
பெருஞ்செல்வத்தை உருட்டிப்புரட்டுவேன்.
மிகவும் தெரிந்தவர்களுக்கு
வட்டிக்கும் கொடுத்துதவுவேன்
நூற்றுக்கு ஒருவட்டி தான்.
அடுத்தவர் தந்தை செல்வம்
அரை வட்டி கூட லாபம்.
உறுதிமொழி
..............................
எல்லாவற்றுக்கும் மேலாக
நான் வென்றே தீருவேன் என
உறுதியாகக் கூறுவதற்கு
இன்னுமொரு காரணம் இருக்கிறது.
கையொப்பம்
..........................................
அதையும் சொல்லுகிறேன்.
தயவு செய்து என்
விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு
தலைமை சாமியாராக
என்னை நியமித்து விடுங்கள்.
இந்தியா
ஒரு ஜனநாயக நாடு.
சாமியார்கள்
இங்கே விட்டால்
வேறு எங்கே வாழ்ந்து ஜெயிக்க..?