நான்கு சுவருக்குள்ளான
தனித்த என் இருப்பு
எவ்வித சஞ்சலத்தையும்
சலிப்பையும்
எனதாக்கியதில்லை
நீ வந்து சேர்ந்த
முதல் நாள்வரை.
பழக்கப்பட்ட இருட்டில்
எனக்கேயான அதிகாரத்
தோரணையில் பெற்ற
வெற்றிகளை என்
குதிரைகள் சுமந்து
தோரணங்களாகத்
தொங்கவிட்டிருந்தன
அறை முழுதும்.
மிகுந்த நிலப்பரப்பு
உனதென பசப்பிய
வார்த்தைகளில் சிக்கி
பூட்டிய என்னறையின்
சாவிகளைத் தேடிச்
சலித்தேன்.
குதிரைக்குக் கடிவாளம்
இடுவது ஆதிக்கப்புத்தி
எனும் உன் போதனையில்
என் குதிரைகள்
தாறுமாறாய் ஓடத்
தொடங்கின.
இருட்டு சூன்யத்தின்
அறிகுறி எனும் உன்
வாதத்தோடு தோற்றுப்
போனதில் ஒரு
தீக்குச்சி ஒளியை
அறையில் நிரப்பச்
சம்மதம் தெரிவித்தேன்.
நீ கொளுத்திய
ஒற்றைக் குச்சியில்
என் பார்வை
பறிபோகவே
என் தோரணங்களைச்
சுமந்து கொண்டு நீ
தொலைந்து போனாய்-
தீக்குச்சி இன்னும்
எரித்துக் கொண்டிருக்கிறது
என்னையும் என்
குதிரைகளையும்.
- சோமா (