அந்தப் புதர் குறித்தும்
புதருக்கு அப்பால் உள்ள
மலை குறித்துமான
என் தேடல் நீள்கிறது.
அந்தப் புதருக்குள்
இரண்டு பாம்புகள்
ஒன்றையொன்று தழுவியபடி
மயங்கிக் கிடக்கலாம்.
ஒரு சிற்றெறும்பு அல்லது
ஒரு கட்டெறும்பு
தன் உணவுக் கிடங்கைப்
பாதுகாத்து வைத்திருக்கலாம்.
புற்களின் வேர்க்கால்கள்
அகோர தாகத்துடன்
பூமிக்கு அடியில்
தண்ணீரைத் துழாவிக் கொண்டிருக்கலாம்.
தேன் கிடைக்கப்பெறாத வண்ணத்துப் பூச்சிகள்
மலையின் உச்சி நோக்கிப்
பறந்து கொண்டிருக்கலாம்.
நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே
புதர்
பூதாகரமாய் வளர்ந்து
மலையை மறைத்தது.
கீற்றில் தேட...
புதருக்கு அப்பால்…
- விவரங்கள்
- மனுஷி
- பிரிவு: கவிதைகள்