நான்கு வேளைகளும்
உன்னோடு பேசவில்லை
ஒரு தேநீர்
கூடுதலாய்த் தலையிடும்
அவலமும் வேறு
இரவுகளில் விழிக்கோளங்களை
மொய்க்கின்றன
உன் நினைவுகள்
என்னை மீறும் கலக்கத்தில்
ஏகாந்தவாதியாய்த் தாழிடுகிறாய்
ஒரு கோபம் உன்னுடையது
மற்றொன்றும் உன்னுடையது தான்
வீங்கிக் கொண்டிருக்கும்
காரணங்களுக்கு
ஊடலென்றா பெயரிடுவது
ஊடகமென்றால் கூட தகும்
எப்பொழுதாவது
ஒரு பைத்தியக்காரனோடு
முரண்படுகிறது காதல்
ஆனாலும் காதலைப் பித்தென்பார்
பித்தைப் பிறையாக்குவார்
சுடரின் திரியை
கவனக் குறைவாய் நீட்டிவிடும்
ஊதுபத்திக் குச்சி
முடிந்து போன ஒன்று
அறியா ஜூவாலைக்குத்
தூண்டுகோல்
தப்பித் தவறி ஏங்கும்
உள்ளத்தில்
இரண்டு மூன்று முறை
மணியடிக்கும் அலைப்பேசி
இம்சையின்
நான்காவது சாக்கில்
வெறுப்பையேனும் கொட்ட
ஒரு வாய்ப்பமையும் திருநாளில் தான்
முதன்முறைக்
காதலைத் தெரியப்படுத்தியிருந்தோம்...
- புலமி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
திருநாள்
- விவரங்கள்
- புலமி
- பிரிவு: கவிதைகள்