இங்கு பெரும் குளமிருக்கிறது
ஆனால் நீருக்கு
என்றோ ஒரு நாள் மழைபெய்ய
வேண்டுதல் தூவப்படுகிறது
என்றேனும் தேங்கிய கழிவுநீராகிய
மழையின் எச்சங்களில்
மீன் பிடிக்கும் கூட்டமும் உண்டு...
அதன் அகலப் பரப்பில்
கால் பரப்பிக் கொண்டேயிருக்கும்
கள்ள மௌனமானது
வெடிப்புகளாய் வற்றிக் கிடக்கிறது..
கொஞ்சமேனும் நீர்மைக்குப்
பழக்கப்பட்டவர் கல்லெறிந்துவிட்டுக்
கடந்திருக்கக் கூடும் கடைசியாய்
அலைகளாய் விரியுமதன்
குறுநகையினை...
கரையோரங்களில் ஒன்றன்பின்
ஒன்றாக மீட்டிச் செல்கின்றன
மந்தை ஆடுகளின் குளம்படிகள்
அதன் காலங்களைச் சலித்தபடிக்
கைவிட்டுப் போகிறது
அக்குளத்தின் வட்ட வாக்குறுதி.....
பராமரிப்பிற்கெனக் காத்திருக்கும்
அதன் ஏக்கங்கள்
சுற்றிலும் கருவேல மரங்களாய்
விக்கித்து வேரூன்றினும்
விறகுகளாய் வீழ்ந்தன....
அசுத்தங்களைச் சேகரிக்கும்
இயலாமையினை
வெகுநாட்களாய் கிரகித்திருக்கும்
வாழிடத்தில் தகவமைக்கிறது
அரசின் மெத்தனப் போக்கு...
இப்படித்தான்
ஐந்நூறும் ஆயிரமும் செல்லாதென
அறிவித்த போது
குளம் தூர்ந்த கதையினில் மண்டினர்
ஓரிரவு ஏழைகள்
கருப்பு முதலைகளைத் தேட....!
- புலமி
கீற்றில் தேட...
ஓரிரவில் ஏழைகளாய்....!
- விவரங்கள்
- புலமி
- பிரிவு: கவிதைகள்