கீற்றில் தேட...

lonely lover 333

மேசையில் வந்தமர்கின்றன
பிடிலின் இசையுடன்
ததும்பும் உனது நினைவுகள்
ஒரு சூடான தேநீர்க் குவளையைப் போல.

துயரொன்றை வரைந்து
அதில் மௌனங்களை
நிறம் தீட்டினாய்
எதிர் கொள்கிறேன்
இப்போது கடைசி விழியசைவில்
நீ வெளிப்படுத்திய பிரிவை.

வனத்தை விட்டுப் பறக்க
தயாராகிய இறக்கைகளைப் போல
நீ எங்கோ
இழுத்துச் சென்றாய்
காதலின் மொத்த சந்தோசங்களையும்
பிறகு நீ வனத்திற்குத்
திரும்பவே இல்லை.

நீ சென்றாய்
காற்று பலமாய் அடித்தது
அல்லது
காற்று பலமாய் அடித்ததைப் போல இருந்தது
வானம் இடிந்து
மரங்கள் சரிந்தன.

மீதமாய் இருக்கும் ஆயுளுக்காய்
அதீத கலவரத்தில்
தனித்து அலைகிறேன்.
எனது அறையுள் நுழைகிறது
மீதமாய் இருக்கும்
ஒப்பனைகளற்ற
உனது ஆதி நினைவுகள்
அல்லது பிரிவின்
மொழிபெயர்ப்புகள்.

- ஏ.நஸ்புள்ளாஹ்