எப்போதும் குனிகின்ற
மைபூசிய பெருவிரல்கள்
தலையை உயர்த்தியதற்காக
எரிக்கப்பட்ட வரலாற்றினை
சேற்றுக்குள் புதைந்து
படித்துக் கொண்டிருக்கிறோம்.
விரல்கள்
விரல்களாக மட்டும் இருப்பது
விரல்களுக்கு நல்லதென்கிறான்
முதுகெலும்புகளில்
நாட்டுத் துப்பாக்கி தயாரிக்கும்
ஆலை நடத்தியவன்.
வயல் நீரில் முகம் பார்க்கத்
தடைசெய்யப்பட்ட மகளிர்
வசவுச்சொற்களில் கர்ப்பம் தரிக்கிறார்கள்
பற்றியெறியும் சேலைகளைக் கண்டு
கண்பொத்தி ஓடும் சிறார்களின்
விலா எலும்புகளைக் கூராக்குகின்றன
ஆணிக்கால் செருப்புகள்.
நிலங்களுக்குள் புதைந்திருந்த
பெருவிரல்கள் கூடி
முஷ்டியாக உயர்ந்த அன்று
வானத்தின் பட்டுத்திரைகளைக்
கிழித்துப் பரவியது சிவப்பு.
துண்டிக்கப்பட்ட கைகளிலிருந்து
பொங்கிய குருதியால்
வயலின் சிவப்பை
மூச்சுத்திணறக் கொன்றபின்
சாணியைக் கரைத்து ஊற்றிய வீடுகள்
நெல்மூட்டைகள் அழுகாமல் இருக்க
பிணமருந்தை அடிக்க ஆரம்பித்தன.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
தீச்சொல்லை முளைக்க விட்டு வந்துவிட்டோம்.
அடிவேரில் எப்போதுமிருக்கும் கதறல் ஒலிகள்
நள்ளிரவில் அச்சுறுத்தும் என்று நம்புகிறோம்.
இப்போதெல்லாம் நாங்கள்
விரல்களை ஒன்று சேர்த்து
உயர்த்துவதில்லை
பூமியைத் தோண்டிக் கொண்டிருக்கிறோம்
எரிமலைக்குழம்பு ஊற்றி
உணவு பரிமாறும் நாளில்
அவசியம் எல்லோரும் வர வேண்டும்.
- இரா.கவியரசு
கீற்றில் தேட...
விரல்களின் கதை
- விவரங்கள்
- இரா.கவியரசு
- பிரிவு: கவிதைகள்