கீற்றில் தேட...

உவமைக்கு கொள்கிறாய்
உருகுதலுக்கும் தான்
உன்னதமென பொருள் சேர்க்க
உள்ளம் நிரம்பிய வாசமெனவும் தான்
உணர் மனிதா
உதிர்தலும் சேர்த்தி தான்
பூத்ததன் அடையாளம்

*
அவன் எழுதிய கவிதையை
அவள் பதிகிறாள்
நூற்றுக்கணக்கில் விரல் மழைகள்
அவள் எழுதி அல்லோகலப்பட்ட ஒன்றை
அவன் பதிகிறான்
கண்கள் வறண்ட பாலைவனம்

*
எப்படியும் கண்ணில் பட்டு விடுகிறது
ஒரு யாரோவென
கடந்து விடவும் முடிவதில்லை
அதே மான்குட்டி முகப்பு படத்தில்
கைவிடப்பட்ட ரயில் பெட்டியென
அக்காவின் முகநூல் பக்கம்
அக்காவின் சில பதிவுகளுக்கு இட்ட
எதிர் கருத்துகளை
எங்கிருந்தோ வந்தமரும் நடக்கத்தோடும்
விரல்களின் தொடர் விக்கலோடும்
ஒவ்வொரு முறையும்
அழித்துக் கொண்டிருக்கிறேன்
அக்காவின் மரணத்தை அழித்து விட
வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை

- கவிஜி