கீற்றில் தேட...

எந்த டீமின் ஆட்டக்காரர்
ரன்-அவுட் ஆனாலும்,
தான் அவுட் ஆனதுபோல
சோகமாய் கண்களைத்
தாழ்த்திக் கொள்கிறான்.

எந்த டீமின் ஆட்டக்காரர்
சிக்ஸர் அடித்தாலும்,
தான் அடித்ததுபோல்
கைகளை பெருமிதத்துடன் உயர்த்துகிறான்.

எந்த டீம் விக்கெட் இழந்தாலும்,
தான் அவுட் ஆனதுபோல்
மண்ணை உதைத்துக் கொள்கிறான்.

எந்த டீம் கேட்ச் பிடித்தாலும்,
தான் பிடித்ததுபோல்
வானைக் குத்துகிறான்.

இன்னும் யாரோ ஒருவன்,
சிறியதோ பெரியதோ
எல்லா கிரிக்கெட் மைதானங்களிலும்
பாரபட்சமின்றி வேடிக்கை
பார்த்துக் கொண்டே இருக்கிறான்.

எல்லா ஆட்டங்களின் முடிவிலும்,
யாரையும் வென்றதாகவும்,
யாரும் தோற்றதாகவும் எண்ணாமல்
ஜெயித்தவர்களை விடவும் திருப்தியாக
வீடு திரும்புகிறான்.

ஆட்டங்களில் மட்டுமல்ல,
வாழ்க்கையிலும்
வெற்றியும் தோல்வியும்
அவனை வித்தியாசப்படுத்துவதில்லை.

காற்றில் பிடித்தமான
ஷாட் விளையாடிக்கொண்டு,
பிடித்தமான சைகையில்
பவுலிங் போட்டுக் கொள்வது போல,
வாழ்விலும் தனக்குப் பிடித்த எல்லாமுமாய்
இருப்பதாய் நினைத்து வாழ்கிறான்.

இருப்பதைப் பிடித்துக் கொண்டு,
இல்லாததை நிரப்பிக் கொள்வது,
பேனாவில் மை நிரப்புவது போல –
அவ்வளவு எளிதென
அவனுக்கும், எனக்கும் மட்டுமே தெரியும்.

- அ.சீனிவாசன்