சிங்கத்தின் கதை

உட்கார்ந்திருந்த போது
‘எனக்கொரு கதை சொல்லு’
என அடம்பிடிக்க
சிங்கத்தின் கதையொன்றை
சொன்னாய்..
விழி விரித்து
இமை கொட்டாமல்
கேட்டுக் கொண்டிருந்தேன்..
உன் குரலின் ஏற்ற இறக்கத்திற்கும்
உன் கையசைவிற்கும்
என் தலை அசைந்தது..
வீடு திரும்பிய பின்
அதைப் பற்றியே யோசித்திருந்தேன்
அன்றிரவு கனவில்
இரண்டு சிங்கங்கள்
என்னை துரத்தி வந்தது..
அதில் ஒன்றிற்கு உன்
முகத்தின் சாயல் இருந்தது..
==============================
சராசரிகளில் ஒருத்தி
குற்றத்தை சுமத்தும் அளவிற்கு
நான் குற்றமற்றவளோ
குற்றத்தை சுமக்கும் அளவிற்கு
நான் குற்றவாளியோ அல்ல..
சரியும் தவறுகளும் உடைய
சராசரிகளில் ஒருத்தி..
திருத்திக் கொள்ளச் சொன்னால்
திருத்திக் கொள்வேன்..
பொறுத்துப் போகச் சொன்னால்
பொறுத்துப் போவேன்..
எனக்கும் உன்னுடைய
கனவுகளைப் போலான
கனவுகள் வந்து போகின்றன..
நீ அடைக்காக்கிறாய்
நான் பொரித்து விடுகிறேன்..
=================================
நம்ப முடியவில்லை.
இன்றுடன் முடிவுக்கு வந்து விட்டதாக
நம்ப முடியவில்லை..
எனது சொற்களுக்கு இந்த முடிவை
தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லாமல்
போய்விட்டதை ஏற்க முடியவில்லை..
எனது கண்களுக்குள் புகும் ஒளியினை
ஒரு நிழலைப் போல உள்வாங்குகிறேன..
எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும்
ஒரு துளி கண்ணீரைப் புதைத்து செல்கிறேன்..
எதிரே வரும் உனக்கு
தெரிந்திருக்குமா?
இன்றுடன் நானும் முடியப் போகிறேனென..
===============================
வலிகளின் வலி
காதலை விட மலிவானதும்
விலையுயர்த்ததும்
ஏதுமில்லை..
எதைக் கொடுத்தும்
வாங்கி விடலாம்.
எதைக் கொடுத்தும்
பெற முடியாது..
காதல்
முரண்களின் முரண்
சுகங்களின் சுகம்
வலிகளின் வலி
=====================
- இசை பிரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )