முன்புபோலவே
இப்போதும்
தூங்க முடிவதில்லை எம்மால்

இடையில் யாரோ
அடையாள அட்டை கேட்டு
மிரட்டுவதான பிரமை
இன்னும் தொடர்கிறது

பின்னிரவில்
விமானக்குண்டு வீச்சும்
கண்ணி வெடிச்சத்தமும்
காதுகளைப் பிளந்து
உணர்வுகளை உலுக்குகின்றன

சிதறிக்கிடக்கும்
இரத்த்துளிகளுக்கும்
எலும்புக்கூடுகளுக்கும் நடுவில்
சாவின் வாசற்படியில்
கால்கள் வேர்பிடித்து நிற்பது
நிழலா..? நிஜமா..?

இழந்து போன உறவுகளின்
கதறும் குரல்கள்
நினைவுகளின்
வெற்றிடங்களை தின்றபடி

முகவரியில்லாத ஏதோ ஒரு
தேசத்தின்
மூலையொன்றில்
புலம்பெயர்ந்து வந்து
ஆண்டுகள் பல கரைந்து போயின

இருந்தும்
ஈழமண்ணில்
தூக்கமின்றி தத்தளித்தது போலவே
இப்போதும்
தூங்க முடியவில்லை எம்மால்....