கீற்றில் தேட...

இதழ் திறந்த சிசுவொன்று
இனம் தெரியாமல் சிரிக்கையில்
தொலைந்து போன புன்னகை
தேடி வந்தது

புற அழகு ரசித்திருக்கையில்
மொழி தெரியாத கடலலை
பிணமான மீனைத் தள்ள,
தொலைந்து போன வலி
தேடி வந்தது.

பிரிவின் அர்த்தம் விளங்கும் காலத்தில்
பிரிவொன்று சந்தித்திருக்கையில்
முத்தமிட்ட குழந்தை
தொலைந்து போன பாசத்தைத்
தேடித் தந்தாள்.

உணர்வின் எச்சம் ஒழுகியபோது
பந்தமில்லா பறவைகள்
தொலைந்து போன கவிதையைத்
தேடித் தந்தார்கள்.

இவ்வாறு
ஒவ்வொன்றுமாய் தேடி வருகையில்
முகவரி தொலைத்திடாமல்
காத்துக் கொண்டிருந்தது
அகன்று விரிந்த என் மனம்.