கீற்றில் தேட...

 

சூரியனின் உஷ்ணமற்ற மென்கீற்றுகள்
இரவுகள் தோறும் உலாவர
Loveஉன் அன்பைத் தாங்கிய நெஞ்சு
எப்படி உறக்கம் பெறும்
பனித்துளிகளாயுருகியுன் காதல்
என்னுடல் முழுதும் சிலிர்ப்பைப் பூசுகையில்
கடுங்கோடையிலும் எப்படி வியர்க்கும்
உன்னிடம் வார்த்தைகள் வாங்கி
இப்படி நான் பேசியபடியிருக்கிறேன்
தாமரைப் பூவின் தரிசனமேதுமற்ற
வேர் சேறாய்க் காத்திருக்கிறேன்

நிலாமுற்றக் கிணற்றில் நள்ளிரவில்
மிதக்கும் நிலவைக் காண்கையில்
உன்னை நினைக்கிறேன்
பசுந்தவளையாய் உன்னில் குதிக்கிறது மனது
சலனமற்ற நீரில் எப்பொழுதையும் போல நீ
மென்னடனம் ஆடுகையில் அப்படியே அள்ளிவர
எந்த வாளியாலும் இயலவில்லையென
நானும் குதிக்கிறேன்
நிலா குளித்த நீரில் உன்னுடன் மூழ்கிப் போகிறேன்