இன்னும் கொஞ்சக் காலம்
இப்படியே செல்கிறது காலம்

அடைதலும் பின் சடைதலுமாய் வாழ்க்கை
தெருப்படுதலும் பின் உருப்படுதலும்
இப்படியே உச்சிக்கும் உள்ளங்காலுக்குமாய்
ஏற்றி இறக்கி
இறக்கி ஏற்றி
சந்தியோடு சேர்த்து காலமும் சிரித்தலைகிறது
பட்டதும் பற்றுந் தீயாய்
உரைத்ததும் பெருகுந் தீதாய்
உணர்வில் கலந்த உரிமைகளாய்
உருவில் கலந்த உயிர்களாய்
வாரியணைத்துப் பின் வாரும் விரோதிகளாய்
காய்த்து மறத்துதிர்ந்த மறதிகளாய்
இதைத் தாண்டியும் வேடப்படும் அது
உருண்டு திரண்ட உருளைக் கண்களும்
அகன்று வரிந்த மடை திறந்த வாயுமதன் வசம்
என்றாலும் காதுகளில்லை அதற்கு
பாவப்பட்ட மழுங்கிய கூப்பாடுகள்
படுப்பதில்லை அதன் பக்கமும்
நிரம்பிய குளம் சாடிச் செல்லும்
முங்கியெழ திராணியற்றவனாய்
நின்று துணிய சாமானியத்தனமின்றி
நாலு பேராய் நாமும் சொல்லியலைகிறோம்
காலம் பொல்லாததென்று
ஓங்கி நீண்டு செல்லும் அதன் கடிவாளம் பற்றி
சுண்டியபடியிருக்குமொருவனை மறந்து.