தமிழுக்காக

உன்னை வைத்து(நினைத்து) சிலர்
சிலர் அவர்களின் முகங்களை
அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள்
சிலர் அவர்களுக்குத் தேவையான
ஆதாயம் தேடுகிறார்கள்
சிலர் கட்டாயத்தால் உன்னை
கசக்கி காயப்போடுகிறார்கள்
சிலர் பழமையைச் சொல்லி
பயமுறுத்துகிறார்கள்
சிலர் நீ தோன்றிய காலம் சொல்லி
கலக்கமடைய வைக்கிறார்கள்;
உன்னை விவாதித்து அரசியல்
நடக்கிறது
உன்னை விற்று வியாபாரம்
நடக்கின்றது
ஆனால் உன் உண்மை
உருவை யாராலும் உணரமுடியவில்லை.
நான் உணர்ந்துவிட்டேன்
பாத்திரம் தகுந்து மாறும் நீரைப் போன்றவள்
பச்சைக் குழந்தை நா முதல்
பாழும் கிழவன் நா வரை
பக்குவமாக பவனிவரும்
பட்டாம்பூச்சி நீ
தோன்றிய நாள்முதல்
நிலை மாறாமல் இருக்கும் கல் அல்ல- நீ
கல்லை சிற்பமாக மாற்றி
உயிரூட்டும் உன்னத படைப்பாளி – நீ
அன்று கல் குகையில் வாழ்ந்தான்
அவனுக்கு கடினமாக இருந்தாய்.
இன்று கணிணியுகத்தில் வாழ்கிறான்
அதனால் நவீனமாக நளினமாக இருக்கிறாய்.
இதில் வியப்பதற்கும் ஒன்றுமில்லை
அதில் விவாதிப்பதற்கும் ஒன்றுமில்லை
உருவம் மாறியதால்
உருக்குலையவில்லை
பெரிய கடல் ஆவியாகி பின் மழைத்துளியாய்
மண்ணில் விழுந்து மனிதனை உயிர்காப்பதுபோல்
நீயும் உன்னை உருமாற்றி ஒலி மாற்றி
மனதை உணரவைக்கிறாய்
நான் நினைக்கும் அவன்
முதல் சந்திப்பில்....
அறிமுகமான சில நொடியில்
அடிக்கடி பார்த்த முகமாய் என்
அடிமனதில் ஆழமாய்!
பழகிய சில நாளில்...
நான் நினைக்கும்
நன்பனாய்
என்னிடம் பேசுவதைவிட
எனக்காக பேசுபவனாய்!
கடிதம் எழுதவேண்டும்
என்று எதிரில் அமர்ந்து
என்னுள் எழுதிய கடிதம்!
திடீர் மாற்றம் என்னுள்..
புரியாத எண்ணங்கள்
விளக்க முடியா உணர்வுகள்!;
காற்றில் சிக்கிய காகிதமாய்...
என் மனம் படபடப்பாய்!
2
இடைவெளியில்.....
மறந்தும் கூட
மறக்கவில்லை
அவ(ரி)னின் முகத்தை
நினைவில்
நிமிடங்கள்
இடைவெளியில்
இணை உணவாய்
அவனின்
நினைவுகள்
மின்னல் போன்று
பளிச்சென்று
சில வினாடி
மின்னிக்கொண்டுதான்
இருக்கிறது
கையை வைத்து மறைத்தாலும்
கை இடுக்கில் வழிந்தோடும்
ஒளியாய் இதோ
3
நீண்ட இடைவெளிக்குப் பின்
மீண்டும் அந்த குரல்
என்னுள் அதே மாற்றங்கள்!
நம்ப முடியவில்லை
இத்தனை இடைவெளிக்குப் பின்னும்
புத்துயிர் பெற்ற மாற்றங்கள்
என்னுள் ஆச்சர்யமாய்!
ஏதோ ஒரு தூண்டுதல்
என்னை அழைத்துச் சென்றது
மனம் மட்டும்
ஏனோ பறந்து சென்றது!
புன்னகை மந்திரம்....
மீசைக்குள்
புதைந்து
முகத்தை மட்டும்
காட்டும் அந்தப்
புன்னகை
சொல்ல வந்த
வார்த்தைகள்
தொண்டைக் குழியில்
சிக்கிக்கொண்டு
வர மறுக்கின்றன
இப்பொழுது
வார்த்தைகளை விட
உணர்வுகள்தான்
பேசுகின்றன
எண்ணங்களின்
அலைவரிசை
ஒரே மாதிரி
இருந்தால்
நினைக்கும் போதே
தொலைபேசி
அழைக்கும்
உண்மைதானா?
இன்றைய மனநிலை
அறிக்கை
புயலின் பாதிப்பால்
தினசரி வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளது............